மரப் பொருள்கள் தயாரிப்பில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு

குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வருவதை அடுத்து, பிறக்கும் குழந்தைகளுக்கான தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தத் தேவைகளை அறிந்து தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான
மரப் பொருள்கள் தயாரிப்பில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு

குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வருவதை அடுத்து, பிறக்கும் குழந்தைகளுக்கான தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தத் தேவைகளை அறிந்து தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான பொருள்களுக்கு சந்தை வாய்ப்பும் பெருகி வருகின்றன.
 அதன் வரிசையில் குழந்தைகள் நடைபழகத் தேவையான நடைவண்டிகள், விளையாடப் பயன்படுத்தும் மரக் குதிரைகள், மரப் பொம்மைகள் ஆகியவற்றின் தேவைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
 ஆனால், தமிழகத்தில் இத்தகைய பொருள்கள் தயாரிப்பில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், வேலூர் அருகே காங்கேயநல்லூரைச் சேர்ந்த ஏ.ஆறுமுகம் (65) என்பவர், குழந்தைகளுக்கான நடைவண்டி, மரக்குதிரைகள், பொம்மைகள் தயாரிக்கும் தொழிலை நடத்தி வருகிறார்.
 இந்தத் தொழில்கூடத்தில் தயாரிக்கப்படும் நடைவண்டி, மரக்குதிரைகள், பொம்மைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமின்றி, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. இதன்மூலம், ஆறுமுகம் மட்டுமின்றி மாற்றுத் திறனாளிகள் உள்பட 3 பெண்கள், 3 ஆண்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
 இதுகுறித்து ஆறுமுகம் கூறியது:
 கடந்த 30 ஆண்டுகளாக இத்தொழிலை நடத்தி வருகிறோம். இங்கு தயாரிக்கப்படும் நடைவண்டி, மரக்குதிரைகள், பொம்மைகள் காதி கிராஃப்ட் விற்பனையகங்களுக்கும், தனியார் விற்பனைக் கூடங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இதற்கு தேவையான மா, கொடுக்காய் மரங்களை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து கொள்கிறோம்.
 இந்த மரங்களை வெட்டி குழந்தைகளுக்கான பொருள்களை தயாரித்து மரக்குதிரைகள் ரூ. 800 முதல் ரூ. 1000 வரைக்கும், நடைவண்டி ரூ.350-க்கும், பொம்மைகள் ரூ.80-க்கும் விற்பனைக் கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மாதம் ரூ.75 ஆயிரம் அளவுக்கு பொருள்கள் தயாரித்து அனுப்புகிறோம். குழந்தைகளுக்கான பொருள்களின் தேவைகள் அதிக அளவில் உள்ளன.
 கூடுதல் முதலீடும், இட வசதியும் இருந்தால் இன்னும் அதிக அளவில் பொருள்களைத் தயாரித்து அனுப்ப முடியும்.
 இத்தொழிலுக்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் முதலீடும், குறைந்த அளவில் ஆட்களும் போதுமானது. எல்லா செலவுகளும் போக மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வருவாய் ஈட்ட முடியும். குடிசைத் தொழில் என்பதால் இதற்கு வங்கிகளில் மானியக் கடனுதவிகளும் கிடைக்கிறது என்றார் அவர்.
 சிறிய முதலீடும், குறைந்த இட வசதியும், பணியாளர்கள் தேவையும் உள்ள இதுபோன்ற குழந்தை களுக்கான பொருள்கள் தயாரிப்பில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை அடையாளம் கண்டு முழு முயற்சியுடன் பணிகள் மேற்கொண்டால் இங்கு எல்லோரும் தொழில் முனைவோர்தான்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com