வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கொலு பொம்மைகள்

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கொலு பொம்மைகள்

காஞ்சிபுரத்தில் தயாராகும் நவராத்திரி கொலு பொம்மைகளை துபை, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இணையம் வாயிலாக

காஞ்சிபுரத்தில் தயாராகும் நவராத்திரி கொலு பொம்மைகளை துபை, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இணையம் வாயிலாக விரும்பி வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் அருகில் பொம்மைக்காரத் தெரு உள்ளது. பெயரிலேயே பொம்மையைத் தாங்கியுள்ள இத்தெருவில் 10-க்கும் மேற்பட்ட பொம்மை தயாரிப்பு மற்றும் விற்பனை கடைகள் உள்ளன.
 இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகளில் ரசாயனம் கலக்காத பொம்மைகள் தயாரிக்கப்பட்டு ரூ.300 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
 வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பெரும்பாலோர் இத்தகைய நவராத்திரி கொலு பொம்மைகளை இணையம் வாயிலாகப் பதிவு செய்து வாங்கி வருகின்றனர். பொம்மைக்கு தேவையான பணத்தை சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தி விடும் நிலையில், வெளிநாட்டில் தேர்வு செய்த பொம்மைகள் பாதுகாப்பான பேக்கிங் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 இதுகுறித்து பொம்மை தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையத்தைச் சேர்ந்த என்.பாஸ்கரன் கூறியது:
 நாங்கள் 4 தலைமுறைகளாக பொம்மை தயாரிப்புத் தொழிலை செய்து வருகிறோம். நான் 40 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். தொடக்கத்தில் திருவிழாக் காலங்களில் மட்டும் தான் பொம்மைகள் விற்பனையாகும். ஆனால் இப்போது இணையம் வழியாக எப்போது வேண்டுமானாலும் தேவையான பொம்மைகளை வெளிநாட்டில் வசிப்பவர்கள், நாட்டின் பல பகுதிகளில் நவராத்திரி கொலு பொம்மைகளை வழிவழியாக வைத்து வருபவர்கள் வாங்குகின்றனர்.
 மீனாட்சி திருக்கல்யாணம், வள்ளி திருமணம், தெய்வானை திருமணம், ருக்மணி மற்றும் அபிமன்யு திருக்கல்யாண பொம்மைகள், தமிழர்களின் இல்லங்களில் நடைபெறும் திருமண நிச்சயதார்த்தம், திருமண வரவேற்புகள், வளைகாப்பு நிகழ்ச்சிகள் போன்றவைகளையும் ஒவ்வொரு செட்டாக தயாரித்து விற்கிறோம்.
 இந்த ஆண்டு அத்திவரதர் பொம்மைகளுக்கு அதிகமான அளவில் முன்பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவை அதிக எண்ணிக்கையில் தயாரித்து விற்பனை செய்யப்பட்டன. நவராத்திரி நாள்களில் களிமண்ணால் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்ட தெய்வச்சிலைகளை வாங்கி, கொலு வைத்து, 9 நாள்களும் விரதம் இருந்தால் நாம் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை இந்துமதத்தினரிடம் பரவலாக இருப்பதை அடுத்து பண்டைய காலங்களைக் காட்டிலும் தற்போது நவராத்திரி கொலு வைப்பது அதிகரித்து வருகிறது. இது எங்கள் தொழிலுக்கு புத்துயிரை ஊட்டியுள்ளது என்றார் என்.பாஸ்கரன்.
 - சி.வ.சு.ஜெகஜோதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com