சரக்குப் போக்குவரத்தில் முதன்மை நாமக்கல்

உலகில் எங்கிருந்தாலும், நாமக்கல் பெயரைச் சொன்னால், அவர்கள் மனக் கண் முன் தோன்றுவது முட்டையும், லாரியும் தான்
சரக்குப் போக்குவரத்தில் முதன்மை நாமக்கல்

உலகில் எங்கிருந்தாலும், நாமக்கல் பெயரைச் சொன்னால், அவர்கள் மனக் கண் முன் தோன்றுவது முட்டையும், லாரியும் தான். ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்துடன் இருந்தவரை, நாமக்கல்லைப் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1997-ஆம் ஆண்டு தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட பின், நாமக்கல் என்ற பெயர் சர்வதேச அளவில் பிரபலமாகி விட்டது என்றே கூறலாம். உழைப்பில் சிறந்தவர்களான இப்பகுதி மக்கள், தாங்கள் செய்யும் ஒவ்வொரு தொழிலையும் அதனை மற்றவர்கள் திரும்பி பார்க்க வைக்க வேண்டும் எனப் போராடுபவர்கள்.
அந்த வகையில், லாரித் தொழிலானது இந்த மாவட்டத்தில் அபரீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. டாரஸ், எல்பிஜி டேங்கர், டிரெய்லர், ரிக், மணல் லாரிகள் என சரக்குப் போக்குவரத்துத் தொழிலுக்கு முதன்மையான மாவட்டமாக நாமக்கல் விளங்குகிறது. தற்போதைய சூழலில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் லாரித் தொழில் இயங்கி வருகிறது.

லாரித் தொழில் பிறந்த கதை...
முட்டை உற்பத்தியில் நாமக்கல் எவ்வாறு அசுர வளர்ச்சி பெற்றதோ, அதற்கு ஈடாக வளர்ந்த மற்றொருத் தொழில் லாரி போக்குவரத்து என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழகத்தில் 6 லட்சம் லாரிகள் ஓடுகின்றன என்றால் அதில், நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேலான லாரிகள் இயக்கப்படுகின்றன. இத் தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. டாரஸ் வகையாக இருந்தாலும், எல்பிஜி டேங்கர் வகையாக இருந்தாலும், மணல் லாரிகள், டிரெய்லர் லாரிகள் என அனைத்தும் இயக்கப்படும் நகரமாக நாமக்கல் உள்ளது. 
கடந்த 1945-ஆம் ஆண்டு, நாமக்கல்- சேலம் சாலை சந்திப்பில், அப்பு என்பவர் தனது மூன்று சகோதரர்களுடன் இணைந்து சேரன் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் முதலாவதாகத் தொடங்கினார் எனக் கூறப்படுகிறது. அதன்பின், ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, பல ஆயிரம் லாரிகள் ஓடும் நகரமாக உருவாகியுள்ளது. இவை மட்டுமின்றி, கிளீனராக பணிக்கு சேர்ந்து பின் ஓட்டுநராகப் பயிற்சி பெற்று, அதைத் தொடர்ந்து சொந்தமாக லாரிகளை வாங்கி, தற்போது பல லாரிகளுக்கு அதிபர்களாக இருப்பவர்கள் இங்கு ஏராளம். 1955 காலக்கட்டங்களில் ஓரிரு லாரிகள் மட்டும் இயங்கிய நிலையில், நாமக்கல் பகுதியைச் சேர்ந்தவர்களின் உழைப்பு, முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் போன்றவை அவர்களை இத்தொழிலின் உச்சத்துக்கு அழைத்துச் சென்றது. 
இம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் லாரிகள், நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் மட்டுமின்றி, கேரளம், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம் உள்ளிட்ட தென் மண்டலங்களுக்கு லாரித் தொழிலில் ஒரு மையப் புள்ளியாக நாமக்கல் விளங்குகிறது. பிற மாநிலங்களைக் காட்டிலும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில்தான் ஆழ்துளைக் கிணறு போடும் ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகம்.
மேலும், லாரிக்கான கூண்டு கட்டும் பட்டறைகள் அதிகம் கொண்ட மாவட்டமாகவும் விளங்குகிறது. லாரித் தொழிலில் பல்வேறு நெருக்கடிகள் வந்தபோதும் மத்திய, மாநில அரசுகளிடம் போராடி தங்களது தொழிலை வளர்த்து வருகின்றனர். மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம், தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கம் போன்றவற்றின் முடிவு அடிப்படையிலேயே, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. எந்தச் சூழலிலும் முட்டை, லாரித் தொழில், நாமக்கல்லில் இருந்து பிரிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

லாரித் தொழிலை மேம்படுத்த முயற்சி
மத்திய, மாநில அரசுகளுக்கு தனித்தனியாக சாலை வரி செலுத்தியபோதும், சுங்கக் கட்டணம் அதிகளவில் வசூலிக்கப்படுவதுதான் லாரி உரிமையாளர்களை விரக்தியடையச் செய்கிறது. ஓட்டுநர் உரிமத்துக்கு 8-ஆம் வகுப்பு தோல்வியடைந்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு மட்டுமே அவர்களுக்கு மகிழ்ச்சியானதாக உள்ளது. இருப்பினும், வருவாயை விட செலவினங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பது தான் ஒரு குறையாக உள்ளது. இதேபோல், லாரி கூண்டு கட்டும் தொழிலிலும் புதியதாக கொண்டு வரப்பட்டுள்ள, மனித முயற்சி அல்லாமல் இயந்திர உதவியுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும், பொது இடங்களில் பட்டறைகள் செயல்படக்கூடாது போன்ற மத்திய அரசு அறிவிப்புகள், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.லாரித் தொழிலை மேம்படுத்தவும், அதனை நம்பியிருக்கும் உரிமையாளர்களையும், தொழிலாளர்களையும் காப்பாற்ற, இந்தத் தொழிலுக்கென தனி நலவாரியம் ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையிலோ அல்லது அதிகாரிகள் தலைமையிலோ குழுக்கள் அமைத்து, 6 மாதங்களுக்கு ஒரு முறை லாரி உரிமையாளர்களிடம் பிரச்னைகள் தொடர்பாகக் கேட்டறிய வேண்டும். நாமக்கல்லில் லாரிகளை நிறுத்தவும், வாகனங்களை பழுது நீக்கவும் தனிப்பகுதி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முன் வைக்கின்றனர் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com