புகழ் மணக்கும் திருச்செந்தூர் சுக்கு கருப்பட்டி

கற்பக விருட்சமான பனைமரம் நுனி முதல் அடி வரை பல்வேறு பயன்களை கொண்டது. பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் மிகுந்த சுவையுடன், மருத்துவக் குணம் நிறைந்து காணப்படும்.
புகழ் மணக்கும் திருச்செந்தூர் சுக்கு கருப்பட்டி

கற்பக விருட்சமான பனைமரம் நுனி முதல் அடி வரை பல்வேறு பயன்களை கொண்டது. பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் மிகுந்த சுவையுடன், மருத்துவக் குணம் நிறைந்து காணப்படும்.
 பதநீரிலிருந்து கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனமிட்டாய், பனங்கூழ் போன்ற உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. கருப்பட்டி பல்வேறு வகைகளில் தயாரிக்கப்பட்டாலும், சுக்கு கருப்பட்டி தயாரிப்பதில் திருச்செந்தூர் பகுதி சிறந்து விளங்குகிறது.
 கருப்பட்டியின் வகைகள்: பதநீரை நன்கு காய்ச்சி குறிப்பிட்ட பதத்தில் கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. இந்த கருப்பட்டியை தேங்காய் சிரட்டையில் ஊற்றி வட்டக் கருப்பட்டியாகவும், கருப்பட்டியுடன் சுக்கு, மிளகு, இஞ்சி போன்றவை சேர்ந்து சுக்கு கருப்பட்டி, புட்டுக்கருப்பட்டி மற்றும் சில்லுக்கருப்பட்டி ஆகியனவும் தயாரிக்கப்படுகின்றன.
 திருச்செந்தூரில் தயாரிக்கப்படும் சுக்கு கருப்பட்டி மிகவும் புகழ் பெற்றதாகும். திருச்செந்தூரில், பயணியர் விடுதி சாலையில் ம.ராஜா ஐயம்பெருமாள் என்பவருக்குச் சொந்தமான சுக்கு கருப்பட்டி தயாரிக்கும் ஆலை உள்ளது. அனுபவமிக்க பெண்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
 பனைமரத்திலிருந்து இறக்கப்படும் பதநீரை கொண்டு, இங்குள்ள கொதிகலன்களில் குறிப்பிட்ட பக்குவத்தில் காய்ச்சி, கருப்பட்டியாக்கி, அதை தேங்காய் சிரட்டைகளில் ஊற்றி காய வைக்கின்றனர். இவையே வட்டக் கருப்பட்டி என்று அழைக்கப்படுகிறது. வட்டக் கருப்பட்டிகள் வீடுகளில் தேநீர் போடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் பழமை வாய்ந்த தின்பண்டங்கள் தயாரிப்பதற்கும், கருப்பட்டி மிட்டாய் (ஏணிப்படி மிட்டாய்) போன்றவற்றை தயாரிப்பதற்கும் இவை மூலப்பொருளாகும்.
 சுக்கு கருப்பட்டி: காய்ச்சி பக்குவப்படுத்திய கருப்பட்டியுடன் குறிப்பிட்ட அளவு சுக்கு, இஞ்சி மற்றும் மிளகு சேர்த்து சரிவிகித கலவையாக்கி, அதை குறிப்பிட்ட வடிவிலான அச்சுகளில் ஊற்றி காய வைக்கின்றனர். காய்ந்த பிறகு அச்சில் இருந்த கருப்பட்டிகள் சேகரிக்கப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
 உடல் ஆரோக்கியம்: இத்தகைய கருப்பட்டி வகைகள் அனைத்தும் நீண்ட நாள்களுக்கு கெட்டுப்போகாமல் இருப்பதுடன் அதே சுவையுடன் இருக்கிறது. கருப்பட்டி வகைகளை உண்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது.
 பக்தர்கள் விரும்பி வாங்கும் கருப்பட்டி வகைகள்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், இங்கு கடைகளில் விற்பனை செய்யப்படும் கருப்பட்டி, சுக்கு கருப்பட்டி, சில்லுக்கருப்பட்டி, புட்டுக்கருப்பட்டி ஆகியவற்றை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதனாலேயே திருச்செந்தூர் வெல்லத்துக்கு பெயர் பெற்று விளங்குகிறது.
 -க.சுப்பிரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com