வேளாண் வருமானத்தை அதிகரிக்க ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தைப் பின்பற்றினால், உற்பத்தி செலவை குறைத்து, விவசாயப் பண்ணைகளில் வேலைவாய்ப்பை பெருக்கி, உற்பத்தியில் ஏற்படும் இழப்புகளை தவிர்த்து, விவசாயிகள் வருமானத்தை பெருக்க முடியும்
வேளாண் வருமானத்தை அதிகரிக்க ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தைப் பின்பற்றினால், உற்பத்தி செலவை குறைத்து, விவசாயப் பண்ணைகளில் வேலைவாய்ப்பை பெருக்கி, உற்பத்தியில் ஏற்படும் இழப்புகளை தவிர்த்து, விவசாயிகள் வருமானத்தை பெருக்க முடியும். ஒரு பருவத்தில் பெரும்பாலான விவசாயிகள் ஒரே பயிர்களை சாகுபடி செய்யும் போது, அறுவடை காலத்தில் அதிக லாபம் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் ஒரு பகுதியில் ஏற்படும் பூச்சித் தாக்குதல், அடுத்தத்தடுத்த பகுதிகளுக்கும் பரவுவதால் ஏற்படும் மகசூல் இழப்பும் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
 இதுபோன்ற சூழலில், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தை செயல்படுத்தும் போது, இழப்பை தவிர்த்து வருமானத்தை அதிகரிக்க முடியும் என்பதோடு, விவசாயப் பண்ணைகளில் வேலைவாய்ப்பையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் 30 முதல் 50 சதவீதம் கூடுதல் வருமானம் கிடைக்கும் என திண்டுக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் நா.மு.நாகேந்திரன் தெரிவித்தார்.
 இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தை பொருத்தவரை மானாவாரிக்கும், இறவைப் பயிர்களுக்கும் தனித் தனியாக செயல்படுத்த முடியும்.
 ஒரு ஏக்கர் இறவை நிலத்தில், ஒரே பயிரை சாகுபடி செய்வதற்கு பதிலாக, அதே பரப்பளவில் அதிக வருமானம் ஈட்டும் வகையில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். பயிர்கள் மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பு, கால்நடைகளுக்கு தேவையான புற்கள் வளர்த்தல், வேளாண் பயிர்களோடு தோட்டக்கலைப் பயிர்களையும் சாகுபடி செய்தல் ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில் கடந்த சில ஆண்டுகளாக தனித் தனியே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் கால்நடைகளிடமிருந்து கிடைக்கக் கூடிய தொழு உரம் நிலத்திற்கு இடுவது குறைந்தது. அடி உரமாக ரசாயன உரங்களை மட்டுமே அதிக அளவில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. இதனால், நிலத்தின் வளம் பாதிக்கப்படுவதோடு, விவசாயிகளுக்கான உற்பத்திச் செலவும் அதிகரிக்கிறது. இதனால், மகசூல் அதிகரித்தாலும் கூட விவசாயிகளுக்கான லாபம் குறைந்தது. இந்த இழப்பை சரி செய்வதற்கு ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டமே தீர்வு.
 இந்த திட்டத்தை ஏற்கெனவே நம் முன்னோர்கள் பின்பற்றி வந்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக அதிலிருந்து விலகிச் சென்ற விவசாயிகள், மீண்டும் அதனை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில்மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 2.5 ஏக்கர் நிலப் பரப்பில் வேளாண்மை பயிர் மட்டும் சாகுபடி செய்தால் ஒரு பருவத்தில் ரூ. 38 ஆயிரம் நிகர லாபம் விவசாயிகளுக்கு கிடைப்பதாக தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், வேளாண்மையோடு கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டால் ரூ.57,500-ம், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் கால்நடை வளர்ப்பினை ஒருங்கிணைந்து செய்தால் ரூ. 72 ஆயிரமும் வருமானம் பெற முடியும்.
 அதேபோல், வேளாண் பயிர்களுடன், பிற தொழில்களான தேனீ வளர்ப்பு, பட்டுப் புழு வளர்ப்பு, காடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் ஈடுபடுவதன் மூலம் ரூ. 47,500 வருமானம் பெறலாம்.
 மானாவாரி நிலங்களில் சூரியகாந்தி, நிலக்கடலை (ஒரு வரிசை சூரிய காந்திக்கு, 5 வரிசையில் நிலக்கடலை, 5 வரிசை நிலக்கடலை 2 வரிசை கொண்டக்கடலை, 1 வரிசை ஆமணக்கு 5 வரிசை நிலக்கடலை என்ற விகிதத்திலும் சாகுபடி செய்யலாம்). இதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, வருமானத்தையும் பெருக்க முடியும்.
 2 கறவை மாடுகள் மற்றும் 5 ஆடுகள் வளர்க்க, 0.50 ஏக்கரில் சூப்பர் நேப்பியர் புற்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடவு செய்து வளர்த்தால், நாள்தோறும் கால்நடைகளுக்கான தீவனத்தை எளிதாக அறுவடை செய்து பயன்படுத்த முடியும். இதோடு காடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பட்டுப் புழு வளர்ப்பு, நாட்டுக் கோழி வளர்ப்பு, பண்ணைக் குட்டை அமைத்து மீன் வளர்ப்பிலும் ஈடுபட முடியும். மீன் குட்டைகளுக்கு மேலே பரண் அமைத்து கோழி வளர்த்தால், அதன் எச்சம் மீன்களுக்கு உணவாகும். நாட்டுக் கோழி முட்டைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தால், விவசாயிகள் பொருளாதார ரீதியாக உறுதியாக வெற்றி பெறலாம் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com