அதிக லாபம் தரும் சிங்கி இறால் மீன் வளர்ப்புத் தொழில்

விளாத்திகுளம் அருகேயுள்ள சிப்பிகுளம், கீழவைப்பாறு கடலில் குறைந்த செலவில் மிதவை கூண்டுகள் அமைத்து அதன் மூலம் அதிக எண்ணிக்கையில் சிங்கி இறால் மீன்களை வளர்த்து மீனவர்கள்
அதிக லாபம் தரும் சிங்கி இறால் மீன் வளர்ப்புத் தொழில்

விளாத்திகுளம் அருகேயுள்ள சிப்பிகுளம், கீழவைப்பாறு கடலில் குறைந்த செலவில் மிதவை கூண்டுகள் அமைத்து அதன் மூலம் அதிக எண்ணிக்கையில் சிங்கி இறால் மீன்களை வளர்த்து மீனவர்கள் அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர்.
 கடலில் மிதவை கூண்டுகள் அமைத்து மீன் வளர்க்கும் தொழில்நுட்பத்தை மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையம் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
 இந்தியாவில் உள்ள கடலோர நகரங்களான கொச்சி, கார்வார், கோவா, விராவல், விசாகப்பட்டினம், சென்னை, மண்டபம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் கூண்டுகளில் மீன் மற்றும் சிங்கி இறால் வளர்ப்பு முறையை மீனவர்கள் செய்து வருகின்றனர்.
 மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் தூத்துக்குடி மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 மிதவை கூண்டுகள் அமைப்பதற்கு கடல் தண்ணீர் தெளிவாகவும், அலைகள் குறைவாகவும் இருக்க வேண்டும். இந்த சீதோஷ்ண அமைப்புகள் தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்பிகுளம், கீழவைப்பார், சிங்கிதுறை ஆகிய இடங்களில் உள்ளன.
 எனவே அந்தப் பகுதிகளில் இரும்பு மிதவை கூண்டுகளில் சிங்கி இறால் மீன் வளர்ப்பு முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 இப்பகுதியில் 17 மிதவை கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 40 முதல் 60 கிராம் எடையுள்ள சிங்கி இறால் மீன் குஞ்சுகளை கூண்டுகளில் விட்டு மீனவர்கள் வளர்க்கின்றனர். மீனவர்களுக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகள் அளித்து வருகின்றனர்.
 15 நாள்களுக்கு ஒருமுறை கூண்டுகளில் உள்ள சிங்கி இறால்கள் கண்காணிக்கப்படுகின்றன. 90 நாள்களில் சிங்கி இறால்கள் சராசரியாக 225 கிராம் எடை அளவுக்கு வளர்கிறது. சிங்கி இறால் மீன்கள் 1 கிலோ எடை வரை வளரும் தன்மையுடையது. ஆனால் 200 முதல் 400 கிராம் எடை வரையிலான சிங்கி இறால்களுக்கு தான் உலகளவில் வரவேற்பு உள்ளது.
 எனவே கீழவைப்பாறு, சிப்பிகுளம் கடலில் 90 நாள்களுக்கு ஒருமுறை கூண்டு வளர்ப்பு சிங்கி இறால் அறுவடை அமோகமாக நடைபெற்று வருகிறது. கூண்டுக்குள் வைத்து சிங்கி இறால் வளர்க்கப்படுவதால் இனப்பெருக்கம் அதிகரித்து அதிகளவில் சிங்கி இறால் மீன் குஞ்சுகள் கிடைப்பதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
 இதுகுறித்து மீனவர் ரெக்சன் கூறியது: கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் 4 முதல் 5 மீட்டர் ஆழம் உள்ள பகுதிகளில் 200 முதல் 300 மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து மிதவை கூண்டுகள் அமைத்து அதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கி இறால் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து வருகிறோம்.

 மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வளர்க்கப்படும் சிங்கி இறால்கள் சுவையுடனும் நல்ல தரத்துடனும் இருப்பதால் அவற்றிற்கு வெளிநாடுகளில் நல்ல மவுசு உள்ளது. ஒரு கிலோ சிங்கி இறால் ரூ.1, 500 முதல் 2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
 இங்கு அறுவடை செய்யப்படும் சிங்கி இறால்கள் மலேசியா, சிங்கப்பூர், சீனா, ஆஸ்திரேலியா, ஹாங்காங், தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார் அவர்.
 மீனவர் ஜேசு கூறியது: சிப்பிகுளம், வைப்பாறு கடல் பகுதி பெரும்பாலும் அமைதியாகவும், தெளிவான நீரோட்டத்துடனும் காணப்படும்.
 இதனால் இயற்கையாகவே ஆழ்கடலில் உள்ள சிங்கி இறால்கள் குஞ்சு பொரிக்க இந்த கடல்பகுதிக்கு வருவது வழக்கம். அதே கடல் பகுதியில் தான் நாங்கள் மிதவை கூண்டு அமைத்துள்ளோம். எனவே கூண்டுகளில் வளர்க்கப்படும் இறால்களுக்கும் இயற்கையான சூழல் கிடைக்கிறது.
 புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் வெளிநாடுகளில் கொண்டாடப்படும் பண்டிகைகளையொட்டி இங்கு அறுவடை செய்யப்படும் மிதவை கூண்டு சிங்கி இறால்களுக்கு விலை அதிகமாக கிடைக்கிறது என்றார் அவர்.
 - எஸ். சங்கரேஸ்வர மூர்த்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com