தொழில் முனைவோருக்கு அரசின் கடன் திட்டங்கள்

படித்த இளைஞர்கள், வேலைவாய்ப்புகளுக்காக நிறுவனங்களைத் தேடி அலைவதைத் தடுக்கவும், அவர்கள் தனது சுயமுயற்சியால் வாழ்வில் முன்னேற உதவும் நோக்கத்திலும் அரசால் தொடங்கப்பட்டதுதான்
தொழில் முனைவோருக்கு அரசின் கடன் திட்டங்கள்

படித்த இளைஞர்கள், வேலைவாய்ப்புகளுக்காக நிறுவனங்களைத் தேடி அலைவதைத் தடுக்கவும், அவர்கள் தனது சுயமுயற்சியால் வாழ்வில் முன்னேற உதவும் நோக்கத்திலும் அரசால் தொடங்கப்பட்டதுதான் மாவட்ட தொழில் மையங்கள்.
 இந்த மையங்களின் உதவியால் சுயதொழில் தொடங்கி முன்னேறியவர்கள் தமிழகத்தில் ஏராளம். சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் தமிழகத்தில் பெருகி இருப்பதற்கு மாவட்ட தொழில் மையங்களும் முக்கிய காரணம்.
 படித்த இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம், உதவித் தொகையுடன் கூடியப் பயிற்சியை அளித்துவருவது குறிப்பிடத்தக்கது. பொது மேலாளர் தலைமையின் கீழ், இயங்கி வரும் மாவட்ட தொழில் மையமானது, புதிய தொழில் முனைவோருக்குத் தேவையானப் பயிற்சியை வழங்குவதோடு தொழில் ஆலோசனைகளையும் வழங்குகிறது. தொழில் வளர்ச்சியின் தேவைக்கேற்ப செயலாற்றி வருவது இம்மையத்தின் சிறப்பம்சம். எனவேதான் தொழிற்சாலைகளை நவீனப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்தின் தரத்தினை மேம்படுத்துவதற்குமான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
 வேலைவாய்ப்பினை அதிகப்படுத்துவது இம்மையத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று. இதன்மூலம், படித்த இளைஞர்கள் திசைமாறி செல்லாமல் வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கு வழிவகை செய்யப்படுகிறது.
 படித்த இளைஞர் ஒருவர் மாவட்டத் தொழில் மையத்தை அணுகினால் தொழில் தொடங்க ஆலோசனை, திட்ட அறிக்கைகள் வழங்கப்படுவதோடு, உரிய பயிற்சிக்கும் வழிவகை செய்யப்படுகின்றன.
 சுய தொழில் செய்வதை ஊக்கப்படுத்தும் பணியை மாவட்டத் தொழில் மையங்கள் சிறப்பாக செய்து வருகின்றன. அதேபோல கைவினைத் தொழில், குடிசைத் தொழில்களை ஊக்கப்படுத்துவதற்காக இத்தொழிலை, நிறுவனமாக பதிவு செய்கொள்ளும் வசதியையும் மாவட்டத் தொழில் மையம் ஏற்படுத்தி தந்துள்ளது.
 படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம், பிரதமரின் வேலைவாப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் பெற்றிட மாவட்டத் தொழில் மையம் ஏற்பாடு செய்கிறது.
 தமிழக அரசின், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க வழங்கப்படும் வங்கிக் கடனில் 15 சதவீதம் மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத் தொழில் மையம் உள்ளது. அந்தந்த மாவட்டத் தலைநகரத்தில் இம்மையம் அமைந்திருக்கும். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கும்.
 மாவட்டத் தொழில் மையத்தின் முக்கியப் பணிகள்: இணையதளம் மூலம் பதிவு செய்தல், தொழில் முனைவோருக்கு குறிப்பாணை வழங்குதல், குடிசைத் தொழில் பதிவுச் சான்றிதழ் வழங்குதல், கைத்தொழில் பதிவுச் சான்றிதழ் வழங்குதல், ஒற்றைச்சாளர முறையில் தொழில் முனைவோருக்கு சேவை அளித்தல், ஊக்கத் திட்டங்களை செயல்படுத்துதல், உற்பத்தித் திறன் சான்றிதழ் அளித்தல், வங்கிகளில் கடன் பெறுவதற்கு தொழில் ஆதார அறிக்கை அளித்தல், ஏற்றுமதிக்கு வழிகாட்டுதல், சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல்,தொழில் கூட்டுறவு சங்கங்களை ஒருங்கமைத்து பதிவு செய்தல் இப்படி ஏராளமான பணிகளை மேற்கொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மாவட்டத் தொழில் மையத்தின் சேவைகளை படித்த வேலையில்லாத இளைஞர்கள் பயன்படுத்தி வாழ்வை வளப்படுத்திக் கொள்ளலாம்.
 முத்ரா திட்டம்:
 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சிக்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதுதான் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம். இது குறுந்தொழில் மேம்பாடு மற்றும் மறுநிதி நிறுவனம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
 முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும். இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டுக்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும்.
 தனியார் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும். பத்து லட்சத்துக்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணைத் தொழில் சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு பொதுவுடைமை வங்கிகள், தேசிய வங்கிகள் மட்டும் மாநில கூட்டுறவு வங்கிகளின் மூலமாக இந்த கடன் வழங்கபடுகிறது.
 தகுதியான தொழில்கள்:
 முத்ரா கடன் திட்டத்தில் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் தொடர்பானத் தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. முத்ரா கடன் பெறுபவர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். சரக்கு வேன் வாங்குவோர், பட்டுத் தொழில், சிறு உணவு விடுதிகள், பால் பண்ணை, மாடு வளர்ப்பு, மீன் பண்ணை, கோழி வளர்ப்பு, துணி வியாபாரம், முடி திருத்தும் நிலையம், தேநீர் விடுதி, தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்வோர் இக்கடன் பெற தகுதியானவர்கள்.
 ஏற்கெனவே முதலீடு செய்து நடத்தும் தொழில்களுக்கு கடன் தர வங்கிகள் முன்வருவதில்லை. அந்தத் தொழிலை விரிவுபடுத்துவதற்கோ அல்லது வியாபாரத்துக்குத் தேவையான சரக்குகளை வாங்குவதற்கு மட்டுமே கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. கடன் பணமாக கிடைக்காது. பொருள், இயந்திரம், உபகரணப் பொருள்கள், சரக்கு வண்டி என அனைத்துக்கும் அதன் விற்பனையாளரின் விலைபட்டியல் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் கடன் கிடைக்கும். உங்களின் சரியான தொழில் கடன் தேவையை நீங்கள் நிரூபிக்கும்பட்சத்தில் கடன் வழங்க வங்கி மேலாளர் இறுதி முடிவு எடுப்பார்.
 சொந்த செலவு, வீட்டு செலவு, கல்யாண செலவு போன்றவற்றுக்கு இத்திட்டத்தில் கடன் கிடைக்க வாய்ப்பில்லை. கல்விக் கடன், தனிநபர் கடன், தனிநபர் வாகனக் கடன் இதில் வராது.
 இத்திட்டத்தில் கடன் பெறுவோர், ஆண்டுக்கு 12% சதவிகிதம் வருடத்துக்கு வட்டி செலுத்த வேண்டியிருக்கும். அதாவது மாதத்துக்கு 1% வீதம் வட்டி செலுத்த வேண்டிவரும். முத்ரா கடன் பெற, ஆதார், ஓட்டுநர் உரிமம், வரி ரசீதுகள், வாக்காளர் அடையாள அட்டை, இருப்பிடச்சான்று ஆகிய ஆவணங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன.
 ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்:
 முத்ரா திட்டத்தில் கடன் பெற அருகில் உள்ள வங்கிக்கிளையில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபருக்கு 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டியது அவசியம். முத்ரா திட்டத்தில் சிசு, கிஷோர் மட்டும் தருண் ஆகிய 3 பிரிவுகளில் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்தி கொள்ளவும் கடன் வழங்கப்படுகிறது.
 இதில், சிசு திட்டம் மூலமாக ரூ.50,000 வரை கடன் பெறலாம், கிஷோர் திட்டம் மூலமாக ரூ.50,000 முதல் ரூ. 5லட்சம் வரை கடன் பெறலாம். தருண் திட்டம் மூலமாக ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இத்திட்டத்தில் அதிகபட்சமாக வழங்கப்படும் கடன் தொகை ரூ.10 லட்சம் ஆகும். நீங்கள் தெரிவிக்கும் தொழிலின் அடிப்படையில், 3 பிரிவுகளில், உங்களுக்குக் கடன் வழங்கும் பிரிவை வங்கி மேலாளர் தீர்மானிப்பார்.
 இத்திட்டத்தில் எந்தவித அரசு மானியமும் கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு தொழில் கடன் திட்டம் மட்டுமே. இந்த வகை கடனுக்கு 12% வரை வட்டி நிர்ணயக்கப்படும். நீங்கள் வாங்கும் கடனை 5 வருடம் வரை திருப்பி செலுத்தலாம்.
 கடனை மாதத் தவணை மூலம் வங்கி கணக்கிட்டு அறிவிக்கும். நீங்கள் கடனை சரியாக திரும்ப செலுத்தும் பட்சத்தில், தொழில் நன்றாக நடக்கும்போது, மேற்கொண்டு அதனை அபிவிருத்தி அல்லது நடைமுறை மூலதனம் பெற வங்கிகள் தொடர்ந்து கடன் வழங்கும்.
 ஏற்கெனவே தொழில் நடத்துவதற்கும் இக்கடன் திட்டம் உண்டு. ஆனால் அவர்களின் மீது எந்த வங்கியிலும் வாராக் கடன் இருக்க கூடாது.
 இந்தக் கடனை பெற எந்தவித சொத்து பிணையம் மற்றும் தனிநபர் ஜாமீன் தேவையில்லை. அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.
 ஒரு வங்கியின் கிளை ஆண்டுக்கு 25 குறைந்த பட்சம் நபர்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம். உங்கள் தொழில் நன்றாக நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது. அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கடன் பெறலாம். உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியிலேயே முயற்சிக்கவும்.
 விலைப் பட்டியலுடன் நீங்கள் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க கடன் பெறலாம். இந்த கடன் திட்டத்துக்கு கால நிர்ணயம் இல்லை, வருடம் முழுவதும் வங்கிகள் கடன் வழங்கும். 27 பொதுத்துறை வங்கிகள், 17 தனியார் துறை வங்கிகள், 31 மண்டல கிராம வங்கிகள், 4 கூட்டுறவு வங்கிகள், 36 நுண் நிதி நிறுவனங்கள், 25 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலமாக விண்ணப்பித்து முத்ரா திட்டத்தில் எளிதில் தொழில் கடன் பெறலாம்.
 கடன் கிடைத்த உடன் பயனாளிக்கு அதற்கான முத்ரா அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை மூலப் பொருள்கள் வாங்கும்போது கிரெடிட் அட்டை போல பயன்படுத்தலாம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com