நூற்றாண்டு பழைமை வாய்ந்த தோவாளை மலர் சந்தை

கன்னியாகுமரி மாவட்டத்தின் அடையாளமாக கடல் நடுவே 133 அடி வள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப் பாலம் என எத்தனை அடையாளங்கள் சொன்னாலும்
நூற்றாண்டு பழைமை வாய்ந்த தோவாளை மலர் சந்தை

கன்னியாகுமரி மாவட்டத்தின் அடையாளமாக கடல் நடுவே 133 அடி வள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப் பாலம் என எத்தனை அடையாளங்கள் சொன்னாலும், குமரி மாவட்டத்தின் தவிர்க்க முடியாத மற்றொரு அடையாளம் தோவாளை மலர் சந்தை. இந்த சந்தை ஓசையின்றி பல நூறு குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
 நூற்றாண்டை கடந்த பாரம்பரியம் மிக்க இந்த சந்தையை கொண்ட தோவாளையில், பூ கட்டும் தொழில்தான் பல குடும்பங்களை வாழவைக்கும் கைத்தொழில். பொறியியல் படித்து விட்டு, பூ கட்டும் இளைஞர்கள் கூட இங்கு சர்வ சாதாரணம்.
 அதற்கு காரணம் இங்கு பூ கட்டும் தொழிலில் ஈடுபடுவோர் குறைந்தது நாள் ஒன்றுக்கு ரூ.500 சம்பாதித்து விட முடியும் என்பதால் தான்.
 தினமும் அதிகாலையிலேயே வியாபாரம் வேகமெடுத்து விடுகிறது. இந்த சந்தைக்கு உள்ளூர் விவசாயிகள் கொண்டு வரும் பூக்கள் போக, தமிழகத்தின் பல்வேறு சந்தைகளில் இருந்தும் டன் கணக்கில் பூக்கள் வந்து இறங்குகின்றன.
 மல்லிகைப் பூ, பிச்சிப்பூ, வாடாமல்லி, சம்பங்கி, அரளி என பூக்களின் வாசத்தை மிஞ்சி, அவற்றின் விற்பனைக்கு கேட்கும் சத்தமும் காலைப் பொழுதை இதமாக்குகின்றன.
 இங்கிருந்து பூக்கள் பல்வேறு பகுதிகளுக்கும், கேரள மாநிலத்தின் தென்பகுதி முழுமைக்கும் மொத்த வியாபாரத்துக்கு அனுப்பப்படுகிறது. கேரளத்துக்கு ஓலை கொட்டானில் பூக்களை நிரப்பி அனுப்பி வைக்கின்றனர்.
 சில்லறைக்கு பூக்களை வாங்கியவர்கள் ஒரு பக்கம் இருந்து அவற்றை கட்டிக் கொடுத்துகொண்டு இருப்பர். மாலை, சரம், மல்லிகை நெருக்கி கட்டுதல், இடைவெளி விட்டு கட்டுதல் என வகை, வகையாய் பூ கட்டும் வேலை நடைபெறும். இவற்றை வியாபாரிகளிடம் கொடுத்து பூ கட்டுக்கான ஊதியத்தை பெற்றுக் கொள்கிறார்கள்.
 இச்சந்தையின் பாரம்பரியம் குறித்து பூ மொத்த வியாபாரி ஐயப்பன் கூறியது: குமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு சேர்ந்திருந்தபோது, அரண்மனைத் தேவைக்காகவும், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் பூஜைக்காகவும் பூ சாகுபடி செய்ய இடம் தேடியிருக்கிறார் மகாராஜா. அப்போது, தோவாளை கிராமம் தான் பூ சாகுபடிக்கு உகந்தது என கண்டுபிடித்து, இங்கே இருந்த காலநிலையை கணக்கிட்டு விவசாயத்தை ஆரம்பித்துள்ளனர்.
 அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஆரல்வாய்மொழி, குமாரபுரம், பழவூர், மருங்கூர், ஆவரைக்குளம் என பக்கத்து கிராமங்களிலும் பூ சாகுபடி பரவியது. இப்போது இங்குள்ள அத்தனை பேரையும் "பூ' தொழில் தான் வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது.
 செவ்வந்தி, மரிக்கொழுந்து, ரோஜா, வாடாமல்லி, கேந்தி , அரளி, பிச்சிப் பூ இப்படி ஏகப்பட்ட பூக்களுக்கு இந்த மண்ணும் பருவநிலையும் சரியாக அமைந்துள்ளது.
 இங்குள்ள சந்தைக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மட்டுமல்லாமல், திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை, சேலம், மாவட்டங்களில் இருந்தும், ஓசூரில் இருந்தும் அதிகமாக பூக்கள் வருகின்றன.
 இந்தச் சந்தைக்கு வார விடுமுறை கிடையாது. தோவாளை சந்தைதான் கேரள மாநில பூக்களோட விலையை நிர்ணயிக்கிறது.
 இந்த சந்தைக்கு நூற்றாண்டைக் கடந்த வரலாறு உண்டு. திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் தோவாளையில் இருந்து பூக்களை நடந்தே பத்மநாபசுவாமி கோயிலுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். முன்பு பூக்களை வியாபார பொருளாக பார்க்காமல், பூஜைப் பொருளாக மட்டுமே பார்த்துள்ளனர்.
 தோவாளை அருகே இப்போது குடியிருப்பு பகுதிகளாக உள்ள பண்ணவிளை, கமல் நகர் அனைத்துமே முன்பு பூந்தோட்டங்களாக இருந்தவைதான்.
 இப்போது இந்த சந்தைக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 7இல் இருந்து 10 டன் வரைக்கும் பூக்கள் வரும்.
 முகூர்த்த நாள்கள், பண்டிகை காலங்களில் 50 டன் வரை பூக்கள் வரும். இந்த சந்தையில் 150 வியாபாரிகள் உள்ளனர். அவர்களைச் சார்ந்து 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடி வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மறைமுகமாகவும் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்றார் அவர்.
 தோவாளையில் வீட்டுக்கு வீடு பூ கட்டும் தொழில் நடைபெறுகிறது. மொத்த வியாபாரிகளிடம் இருந்து பூக்களை வாங்கும் பெண்கள் தங்கள் வீடுகளில் வைத்து அவற்றை கட்டுகின்றனர். வியாபாரிகளே நேரில் வந்து அதை பெற்றுக் கொள்கின்றனர்.
 தோவாளையின் தெக்கூர், வடக்கூர், அருகே உள்ள செண்பகராமன்புதூர், தாழக்குடி, மருங்கூர் என சுற்றுவட்டாரம் முழுவதும் பூ கட்டும் தொழில் நடைபெற்று வருகிறது.
 தோவாளை பகுதி பூக்களை மையமாகக் கொண்ட பகுதி என்பதால், இங்கு அரசின் மலரியல் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இந்த நிலையத்தின் மூலம் பூ சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி, பூச்சிக் கட்டுப்பாடு உள்பட பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
 இதன் சார்பில் ஹெலிகோனியா என்னும் அழகு பூ சாகுபடியும் இப்போது குமரி மாவட்டத்தில் பரவலாகியுள்ளது.
 இதில் ட்ராபிக்ஸ், வேகினேரியா (ரெட்),வேகினேரியா (மஞ்சள்), அங்குஸ்டா, தக்கோமி, கென்யா ரெட் என 50-க்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன. இதில் சில ரகங்கள் தினசரி பூக்கும். சில வாரம் ஒரு முறையும், சில 6 மாதங்களுக்கு ஒருமுறையும் பூக்கும். ஒரே ரகத்தை நடவு செய்தால் சந்தை வாய்ப்பு இருக்காது. அதே நேரத்தில் பல ரகங்களையும் கலந்து நடவு செய்தால் ஆண்டு முழுவதும் சந்தை வாய்ப்பு இருக்கும்.
 இந்த பூக்கள் பெருநகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன. வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.
 இவை இப்போது குமரி மேற்கு மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது.
 - பி.எஸ்.மீனாட்சிசுந்தரம்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com