பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதித்தால் நூற்பாலை தொழில் செழிக்கும்

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட அன்னூர் வட்டத்தில், கரியாம்பாளையம், அச்சம்பாளையம், குருக்கிலியாம்பாளையம்,
பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதித்தால் நூற்பாலை தொழில் செழிக்கும்

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட அன்னூர் வட்டத்தில், கரியாம்பாளையம், அச்சம்பாளையம், குருக்கிலியாம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாதாரண ஜின்னிங் பேக்டரி முதல் நவீன ஜின்னிங் பேக்டரிகள் சுமார் 45 உள்ளன.
 இங்கு பருத்தியிலிருந்து, பஞ்சு தனியாகவும், பருத்திக் கொட்டைகள் தனியாகவும் பிரிக்கப்படுகிறது. அதன் பிறகு பஞ்சு மட்டும் நூற்பாலைகளுக்கு அனுப்பப்படுகிறது. அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 110 ஸ்பின்னிங் மில்கள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தியாகும் நூல்கள், வெளிமாவட்டம், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
 இந்த நூற்பாலைகளில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
 அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் நூற்பாலைகள் துவங்கப்பட்டுள்ளதால் உள்ளூரில் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை.
 ஒடிஸா, மேற்கு வங்கம், பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
 இருந்தும் தொழிலாளர் பற்றாக்குறை இருந்து கொண்டுள்ளது. திருப்பூரைப் போல், அன்னூர் வட்டாரத்தில் ஏராளமான இடங்களில், "ஆள்கள் தேவை' போஸ்டர்கள், தட்டிகள் காணப்படுகின்றன. தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வருவோருக்கு நூற்பாலை நிர்வாகங்கள் கமிஷன் வழங்கும் அளவுக்கு தட்டுப்பாடு உச்சத்தில் உள்ளது.
 இதுகுறித்து ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் கூறியதாவது :
 வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு மில் வளாகத்தில் இலவச விடுதி வசதி செய்து தருகிறோம். தினசரி சம்பளமாக ரூ. 290 வழங்கப்படுகிறது. இருந்தும் வேறு இடத்தில் 10 ரூபாய் அதிகமாக கிடைத்தாலும், அங்கு சென்று விடுகின்றனர். இதனால் தொழிலாளர் பற்றாக்குறை தொடர்கிறது. மில்லுக்கு தொழிலாளர்களை அழைத்து வருவதற்காகவே ஆள்களை நியமித்துள்ளோம். ஆனால் அந்த வேலைக்கும் ஆள் கிடைப்பதில்லை. சில மில்களில் தொழிலாளர் பற்றாக்குறையால், மூன்று ஷிப்டுக்கு பதில், இரண்டு ஷிப்ட் மட்டும் இயக்கப்படுகின்றன என்றனர் .
 வீரிய ரகப் பருத்தி விதையைக் கண்டுபிடிக்க வேண்டும்
 நாட்டில் உள்ள பஞ்சாலைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் சுமார் 3.75 கோடி பேல்கள் பஞ்சு தேவைப்படுகிறது. தமிழகத்துக்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி பேலுக்கும் மேல் பஞ்சு தேவைப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் சுமார் 6 லட்சம் பேல்கள் பஞ்சு மட்டுமே உற்பத்தியாகிறது.
 இதனால் தமிழகத்துக்கு தேவைப்படும் பஞ்சில் சுமார் 90 சதவிகிதம் மகாராஷ்டிரம், தெலங்கானா, குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் ஒரு பொதி பஞ்சின் (356 கிலோ) விலை ரூ.38,500 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பருத்தி சீசனில், புதிதாக அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலைக் கொள்கையின்படி ஒரு பொதி ரூ.45 ஆயிரத்தில் இருந்து தொடங்கியது. இந்த நிலையில் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வந்த பஞ்சு விலை, தற்போது ஒரு பொதி ரூ.46 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனால் நூல் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது.
 அதனால் அரசு பருத்தி உற்பத்தி செய்வோரை ஊக்கப்படுத்தும் விதமாக பருத்தி உற்பத்திக்கு மானியங்கள் வழங்க வேண்டும்.
 மேலும் பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும், அப்போதுதான் செயற்கையான பருத்தி தட்டுப்பாட்டையும், விலையையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும். மேலும் புதிதாக வீரிய ரகப் பருத்தி விதையைக் கண்டுபிடித்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் பருத்தி உற்பத்தி அதிகரிக்கும்.
 மேலும் இந்திய பருத்திக் கழகம் பருத்தியை மொத்தமாக கொள்முதல் செய்து சுமார் 3 அல்லது 6 மாதங்கள் வரை நிலையான விலையில் நூற்பாலைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். அப்போதுதான் வியாபாரிகள் பருத்தியைப் பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பதை தடுக்க முடியும் என்று நூற்பாலை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 - கே.எஸ்.பாபு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com