பாக்கு மட்டைத் தட்டுகள் தயாரிப்பில் லாபம் 

இது துரித உணவுக் காலம். தட்டின் மீது பிளாஸ்டிக் தாளை வைத்து, நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு, தூக்கியெறிந்தபடி ஓடிக் கொண்டிருக்கிறோம். அப்படி, ஒரு முறை உபயோகித்துத் தூக்கியெறியும் தட்டுகள்
பாக்கு மட்டைத் தட்டுகள் தயாரிப்பில் லாபம் 

இது துரித உணவுக் காலம். தட்டின் மீது பிளாஸ்டிக் தாளை வைத்து, நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு, தூக்கியெறிந்தபடி ஓடிக் கொண்டிருக்கிறோம். அப்படி, ஒரு முறை உபயோகித்துத் தூக்கியெறியும் தட்டுகள் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காமலும், மலிவான விலையுள்ளதாகவும் இருக்க வேண்டுமென்றால் அதற்குப் பாக்கு மட்டைத் தட்டுகள்தான் சிறந்த வழி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாக்குமட்டைகள் மூலமாக தட்டு உள்ளிட்ட பொருள்கள் தயாரிப்பது அரிதாகவே காணப்பட்டது. தற்காலத்தில், ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாக்கு மட்டைத் தட்டுகளுக்கு கிராக்கி அதிகரித்து, பாக்குமட்டைகள் மூலமாகத் தட்டுகள், ஸ்பூன், டப்பா உள்ளிட்ட பொருள்களைத் தயாரித்து விற்பனை, ஏற்றுமதி செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ரசாயனம் இல்லாத, இலகுவாக மக்கும் தன்மை கொண்டதால் சுற்றுப்புறச்சூழலுக்கு மிகவும் ஏற்றது. குறிப்பாக, இந்தப் பொருள்களைத் தயாரிப்பதற்காக எந்த மரங்களையும் நாம் வெட்டுவதில்லை.
 எவ்வளவு முதலீடு :
 பாக்கு மட்டைத் தட்டு மற்றும் ஸ்பூன் தயாரிக்கும் இயந்திரம் ரூ.1,80,000 முதல் ரூ. 2 லட்சத்தில் கிடைக்கிறது. உணவுகளை பார்சல்களாகக் கொண்டு செல்லும் டப்பா (மூடியுடன் கூடியது) தயாரிக்கும் இயந்திரம் ரூ.3,25,000 முதல் ரூ. 3,50,000-இல் கொள்முதல் செய்யலாம். சொந்த இடத்திலேயே இரண்டு அறைகள் கட்டி இயந்திரத்தை அமைக்கலாம். மாவட்டத் தொழில் மையத்தில் பதிவு செய்து, அதன்மூலம், சிறுதொழில் எனச் சான்று பெற்று, மின் கட்டணச் சலுகை பெறலாம். இந்த இயந்திரம் வாங்குவதற்கும், மூலதனப் பொருள்கள் வாங்குவதற்கும் காதி போர்டு மூலம் கடன் பெற்றால், 35 சதம் மானியம் கிடைக்கும். பாக்கு மட்டைத் தட்டுகளை 10, 8, 6 மற்றும் 4 அங்குலங்களில் தயாரிக்கலாம். இதற்கான மூலப்பொருள்கள் சேலம், தென்காசியில் கிடைக்கிறது. சேலத்தில் உள்ள கிரீன் இண்டியா என்ற நிறுவனம்தான் இந்தத் தொழில் குறித்து பயிற்சி அளிக்கிறது. இந்த நிறுவனத்தார் மூலப்பொருள்களையும் கொடுத்து, தயாரிக்கப்பட்ட தட்டுகளையும் வாங்கிக் கொள்கின்றனர். இவர்கள் பல கண்காட்சிகளில் பங்குபெற்று சந்தைப்படுத்தவும் உதவி வருகின்றனர் .
 இத்தொழிலை மேற்கொள்வதற்கு வீட்டில் இயந்திரம் அமைக்க 10-க்கு 10 அறை போதுமானது. உற்பத்திப் பொருளை சேமிக்க தனி இடம், மூலப்பொருள்களை சேமிக்கத் தேவையான இடம் என அதிகபட்சமாக 400 சதுர அடி இடம் இருந்தாலே போதும்.
 இத்தொழிலுக்கு மும்முனை மின்சாரம் அவசியம். 10 எச்பி வரை உபயோகிப்போருக்கு மானியம் கிடைக்கிறது. மத்திய அரசின் சிறு, குறு தொழில்முனைவோரின் முன்னேற்றத்தின் அடிப்படையில் 25 சதவீதம் வரை மானியம் பெறலாம். மாவட்ட தொழில் மையத்தில் இதற்கான வழிமுறைகள் கிடைக்கப் பெறுகின்றன.
 தயாரிப்பு முறை:
 பாக்குமரத் தோப்பில் கிடைக்கும் இந்த மட்டையை சேகரித்து நமது தொழிற்சாலைக்கு கொண்டு வருவதே இந்தத் தொழிலுக்கான மூலப்பொருள். மூலப்பொருள்கள் பொள்ளாச்சி, கோயம்புத்தூர் பகுதிகளிலிருந்து மொத்தமாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. காலநிலையைப் பொருத்து மூலப்பொருள்களின் விலை அதிகரிக்கவோ, குறையவோ செய்யலாம். கொள்முதல் செய்யப்பட்ட பாக்குமட்டைகளை நன்கு உலர்த்தி பின்பு நீரில் ஊற வைக்க வேண்டும். 30 நிமிடம் ஊறிய பிறகு ஒவ்வொரு மட்டையாக எடுத்து தூசு, மண் போகுமாறு நன்றாக கழுவி சுத்தப்படுத்தி அடுக்கி வைக்கவேண்டும். 2 மணி நேரம் கழித்து, சுத்தப்படுத்தப்பட்ட மட்டைகளை இயந்திரத்தில் வைத்து அழுத்தி எடுத்தால் அழகழகான பாக்கு மட்டையினால் செய்யப்பட்ட பொருள்கள் கிடைக்கும். அவற்றை அப்படியே பேக்கிங் செய்து சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பலாம். இத்தொழிலுக்கு நம்மோடு 2 பேர் உதவிக்கு இருந்தால் போதும். மின்கட்டணம், கூலி மற்றும் உற்பத்திச் செலவு போக மாதம் ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பாக்குமட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருளுக்கு இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் பெருமளவு வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஏற்றுமதித் தொழிலில் கணிசமாக அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் பாக்கு மட்டைத் தொழிலை வீட்டிலேயே இயந்திரங்களின் உதவியுடன் அனைவரும் செய்ய முடியும் என்பது சாத்தியமே. முயற்சியும், உழைப்பும் இருந்தால் இதில் எல்லோராலும் வெற்றி பெற முடியும்.
 - வி.செல்வக்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com