புவிசார் குறியீடு எதிர்பார்ப்பில் கோவில்பட்டி கடலை மிட்டாய்

மக்களின் நாவிற்கு இனிப்பு சுவையூட்டும் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உற்பத்தியாளர்கள் மற்றும் நகர மக்கள் காத்திருக்கின்றனர்.
புவிசார் குறியீடு எதிர்பார்ப்பில் கோவில்பட்டி கடலை மிட்டாய்

மக்களின் நாவிற்கு இனிப்பு சுவையூட்டும் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உற்பத்தியாளர்கள் மற்றும் நகர மக்கள் காத்திருக்கின்றனர்.
 தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் குடிசைத் தொழிலாக கடலை மிட்டாய் தயார் செய்யப்பட்டாலும், கோவில்பட்டி கடலை மிட்டாய் என்றால் தனி ருசிதான்.
 கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் நடைபெறும் நவதானியங்கள், எண்ணெய் வித்துகள் சாகுபடி, இந்த மண்ணுக்கே உரித்தான மகிமை.
 மழைக் காலத்தில் நெற்பயிருக்கு பதிலாக கோவில்பட்டி பகுதியில் நிலக்கடலை பயிரிடுவர். தரமான நிலக்கடலை, மண்டை வெல்லம் கிடைப்பதால் கடலை மிட்டாய் உற்பத்தியில் கோவில்பட்டி சிறப்பு பெற்று விளங்குகிறது.
 தயாரிப்பு முறை: மண்டை வெல்லத்துடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து சரி பாதியாக வரும்வரை காய்ச்சி, பாகுவை தயார் செய்து கொள்கிறார்கள். பின்னர் அதில் படியும் மண்டியை அப்புறப்படுத்திவிட்டு தெளிந்த பாகுவை கடலை மிட்டாய் தயாரிக்க பத்திரப்படுத்துகின்றனர். மறுநாள் அந்த வெல்லப்பாகுவை மீண்டும் வாணலியில் போட்டு காய்ச்சும்போது, பொன் நிறமாக மாறும் பதத்திற்கு வருகிறது.
 பின்னர் 2 லிட்டர் வெல்லப்பாகு அளவிற்கு 2 கிலோ உடைத்து வைக்கப்பட்டிருந்த நிலக்கடலை பருப்பை போட்டு, வாணலியில் கிளறி மொத்தமாக கடலைப்பருப்பு வெல்லப்பாகு கலவையை உருட்டி பெரிய உருண்டையாக எடுக்கின்றனர். பின்னர் ஒரு மரப்பலகை தட்டில் வைத்து இரும்பினால் செய்யப்பட்ட உருளையால் சீராக உருட்டி பரத்துகின்றனர்.
 சுமார் 5 நிமிடங்களில் வெல்லப்பாகு நிலக்கடலை பருப்பு சேர்ந்த கலவை அந்த தட்டில் உறைந்து கடலை மிட்டாயாகிவிடுகிறது. தொடர்ந்து மரத்தட்டில் இருக்கும் மிட்டாய் தேவையான அளவில் வெட்டி எடுக்கப்பட்டு, பாக்கெட் செய்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
 சுற்றுலாப் பயணிகள், பாதயாத்திரை பக்தர்கள் கோவில்பட்டிக்கு வந்தால் கடலை மிட்டாயை மறக்காமல் வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
 இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாயை அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறவர்களும் மறக்காமல் வாங்கிச் செல்கின்றனர். இதன் மூலமே கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு சிறப்பு கிடைத்தது.
 புவிசார் குறியீடு எதிர்பார்ப்பு: தமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. மதுரை மல்லி, திருநெல்வேலி அல்வா, பழனி பஞ்சாமிர்தம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, தூத்துக்குடி மக்ரூன், திண்டுக்கல் பூட்டு என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உற்பத்தியாளர்கள் மற்றும் கோவில்பட்டி நகர மக்கள் காத்திருக்கின்றனர்.
 -ரா.சரவணமுத்து
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com