மகளிருக்கு கை கொடுக்கும் மசாலாப் பொடி தயாரிப்பு

பரபரப்பான வாழ்க்கை முறையில் வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பெரிதும் கை கொடுப்பது ரெடிமேடு மசாலா பொடிகள்.
மகளிருக்கு கை கொடுக்கும் மசாலாப் பொடி தயாரிப்பு

பரபரப்பான வாழ்க்கை முறையில் வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பெரிதும் கை கொடுப்பது ரெடிமேடு மசாலா பொடிகள். அந்த வகையில் சைவம், அசைவத்துக்கு ஏற்றாற்போல், ரெடிமேடு பிரியாணி மிக்ஸ், பாயாசம் மிக்ஸ், சாம்பார், மஞ்சள் பொடி, மல்லித் தூள், மிளகுத் தூள் தயாரித்து விற்பதன் மூலம் கணிசமாக வருமானம் ஈட்ட முடியும்.
 நன்கு சமைக்கத் தெரிந்த மகளிர் இந்தத் தொழிலில் எளிதில் வெற்றி பெற முடியும். இத்தொழிலுக்கு ருசியும், தரமுமே மிக முக்கியம். நிரந்தர வருமானம் உள்ள தொழிலாக மட்டுமில்லாமல், மகளிர் தங்கள் சமையல் திறமையை தொழிலாக மாற்றினால் நமது பாரம்பரிய உணவுப் பழக்கம் பல தலைமுறைக்கும் தொடரும்.
 முதலீடும், கட்டமைப்பும்:
 அரிசி மற்றும் தானிய மசாலாப் பொருள்களை கல், மண் இல்லாமல் சுத்தம் செய்யும் இந்திரம் ரூ. 25 ஆயிரம், மசாலா பொருள்களை வறுக்கும் இயந்திரம் ரூ. 75 ஆயிரம், அவற்றைப் பொடியாக்கும் இயந்திரம் ரூ. 20 ஆயிரம் தயாரிக்கப்பட்ட மசாலாப் பொருள்களை பேக்கிங் செய்யும் இயந்திரம் ரூ.1 லட்சம் என மொத்த முதலீடு ரூ.2.2 லட்சம். இயந்திரங்கள் அமைக்க 30-க்கு 20 அடி இடமும், பொருள்களை இருப்பு வைக்க ஒரு அறையும், அலுவலக தொடர்புக்கு ஒரு அறையும் போதும். மசாலாத் தயாரிப்புக்கான மூலப் பொருள்கள் சீரகசம்பா அரிசி, சேமியா, மல்லி, மிளகாய், மிளகு, மஞ்சள் மற்றும் வாசனைப் பொருள்கள்தான். பலசரக்கு பொருள்கள் விருதுநகரிலும், வாசனைப்பொருள்கள் மதுரையிலும், மிளகு, நீலகிரி, கூடலூரிலும் குறைந்த விலையில் கிடைக்கும். அவ்வப்போது நிலவும் விலை நிலவரத்துக்கேற்ப மற்ற இடங்களிலும் இந்தப் பொருள்களைக் குறைந்த விலையில் வாங்க முடியும்.
 மாதந்தோறும், அரை கிலோ கொண்ட 2 ஆயிரம் சைவ மசாலா, 2 ஆயிரம் அசைவ மசாலா பொட்டலங்கள் மற்றும் 500 கிலோ மஞ்சள் தூள், மிளகாய் தூள் மிக சுலபமாகத் தயாரிக்க முடியும்.
 இதற்கு மூலப்பொருள்கள் செலவு, வேலையாள்கள் சம்பளம், மின்கட்டணம், வாடகை, போக்குவரத்து உள்பட உற்பத்தி செலவுக்கு ரூ. 5 லட்சம் வரை தேவைப்படும். ஒரு மாதத்தில் உற்பத்தியாகும் பொருள்களுக்கு 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை லாபம் கிடைக்கும். குறைந்த பட்சம் ரூ.70 ஆயிரம் வரை மாதம்தோறும் சம்பாதிக்க முடியும்.
 10 நிமிடத்தில் பிரியாணி:
 சமையல் தெரியாதவர்கள்கூட பிரியாணி மசாலா மூலம் 10 நிமிடத்தில் பிரியாணி தயாரிக்க முடியும். அரை கிலோ பிரியாணி மிக்ஸ் உடன் அரை கிலோ இறைச்சி சேர்த்து ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி, மூடி 2 விசில் வந்தவுடன் இறக்கி விட்டால் சுவையான பிரியாணி தயார். இறைச்சிக்குப் பதிலாக காய்கறிகள், கேரட், பட்டாணி, பீன்ஸ் பயன்படுத்தினால் சைவ பிரியாணி தயாராகிவிடும். ரெடிமேடு பிரியாணி மிக்ஸ் சமைப்பதற்கு எளிதாக உள்ளதால் வரவேற்பும் அதிகரித்துள்ளது.
 தயாரிப்பது எப்படி?:
 சைவ, அசைவ பிரியாணி மிக்ஸ் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருள்களின் அளவுகள், ஒவ்வொருவரின் கைப் பக்குவத்துக்கும், தனி முத்திரைக்கும் ஏற்றவகையில் மாற்றிக்கொள்ளலாம்.
 மல்லித்தூள், மிளகு, சுக்கு, பூண்டு, கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை, புதினா ஆகியவற்றை வறுத்து, பொடியாக்கி எண்ணெய், சீரக சம்பா அரிசியுடன் கலந்து பிரியாணி மிக்ஸ் தயாரிக்கலாம். அவற்றை அரை கிலோ வீதம் பாக்கெட் செய்து விற்கலாம். இது 6 மாதம் வரை கெடாது.
 ஜவ்வரிசி, பால் பவுடர், முந்திரிப் பருப்பு, குங்குமப் பூ, பாதாம், பிஸ்தா பருப்பு, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி சேமியாவுடன் கலந்து பாயாசம் மிக்ஸ் தயாரிக்கலாம். இவற்றை 200 கிராம் வீதம் பாக்கெட் போடலாம். மல்லி, மிளகாய்பொடி, சுக்கு, மிளகு, கடுகு, லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், மஞ்சள், சீரகம், பூண்டு ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி இறைச்சி மசாலா தயாரிக்கலாம். அவற்றை 50 கிராம், 100 கிராம் வீதம் பாக்கெட் போடலாம்.
 மல்லி, மிளகாய், துவரம்பருப்பு, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கடுகு, மிளகு, சீரகம், பெருங்காயம், மஞ்சளை வறுத்து பொடியாக்கி சாம்பார் பொடி தயாரிக்கலாம். அவற்றை 50 கிராம், 100 கிராம் வீதம் பாக்கெட்டுகளாகப் போடலாம்.
 ரெடிமேடு மசாலாப் பொடிகளுக்கு தேவை அதிகம் உள்ளதால், இத்தொழிலில் ஈடுபடும் மகளிர் தொடர்ந்து வருமானம் ஈட்ட முடியும்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com