மண் மணம் மாறாத மணப்பாடு பனை ஓலை கலைப் பொருள்கள்

மண் மணம் மாறாத மணப்பாடு பனை ஓலை கலைப் பொருள்கள்

கற்பகவிருட்சம் என்று அழைக்கப்படும் பனை மரத்தில் இருந்து பெறப்படும் அனைத்து பொருள்களும் பயன் உள்ளவை என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக பனை ஓலையில் இருந்து

கற்பகவிருட்சம் என்று அழைக்கப்படும் பனை மரத்தில் இருந்து பெறப்படும் அனைத்து பொருள்களும் பயன் உள்ளவை என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்கள் அனைத்து சுப நிகழ்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
 பனை ஓலையில் இருந்து பயனுள்ள கலைப்பொருள்கள் தயாரிக்கும் பணியில் மணப்பாடு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூடை, தட்டு வகைகள், குப்பைக் கூடை, வெங்காய கூடை, விசிறிகள், பூக்கூடைகள், அலங்காரப் பொருள்கள், தொப்பி, பாய், குழந்தைகளை மகிழ்விக்கும் கிலுக்குகள், பேனா வைக்கும் கூடுகள் என சுமார் 25 வகையான பொருள்களை தயாரிக்கின்றனர்.
 பனை ஓலை கூட்டுறவு தொழிற்சங்கம் சார்பில் தயாரிக்கப்படும் இப்பொருள்கள், சென்னை, மும்பை, மதுரை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 இச்சங்கத்தின் மூலம் உடன்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேகரிக்கப்படும் பனை ஓலைகள், சங்க உறுப்பினர்களாக உள்ள 750 பெண்களுக்கும் வழங்கப்படுகிறது. அவர்கள் அதை வீட்டில் வைத்து வண்ணங்கள் தீட்டி கலைநயமிக்க பொருள்களாக உருவாக்குகின்றனர். பின்னர் அவை கூட்டுறவு சங்கம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
 மணப்பாடு பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு நேரடியாக வந்து பனை ஓலைப் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.
 இப்பணியில் ஈடுபட்டுள்ள சீதா,செல்வம்மாள் கூறியது: பனை ஓலைப் பொருள்கள் தயாரிக்கும் பணியின் மூலமாக தினமும் ரூ.300 வரை வருவாய் கிடைக்கும். கூட்டுறவு சங்கம் மூலம் ஆண்டுக்கு ஒரு முறை இந்த பணத்தை தருவார்கள். அவை திருமணம், படிப்பு செலவுகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும். மீன்பிடித் தடைக் காலங்களில் எங்களுக்கு மிகவும் பயன் தருவது இந்த தொழில்தான் என அவர்கள் தெரிவித்தனர்.

கூட்டுறவு சங்க மேலாளர் பெலிசிட்டா கூறியது: பனை மரங்களை வெட்டுவது அதிகமாக உள்ளதால் ஓலைகள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே பனை மரங்களை வெட்டுவதற்கு அரசு தடை விதிக்க வேண்டும்.
 பிளாஸ்டிக் பொருள்களுக்கு அரசு தடை விதித்திருப்பதால், இறைச்சி, சுவீட், காரம், மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை மக்கள் பனை ஓலை பொருள்களில் தான் வாங்கிச் செல்கின்றனர். பனை ஓலை பொருள்களில் உணவுப் பொருள்கள் வாங்கிச் செல்லுகையில், அதில் ஒரு வித மணம் நிறைந்திருக்கும். அதற்காகவே மக்கள் தற்போது பனை ஓலை பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். மக்கள் பனை பொருள்களை தினசரி பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது அதிகரிக்க வேண்டும் என்றார் அவர்.
 பனைத் தொழிலும், பனை சார்ந்த கிராமப்புற தொழில்களும் மேம்பட தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே இத்தொழிலில் ஈடுபடுவோரின் கோரிக்கையாக உள்ளது.
- டி.செல்வகுமார்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com