மண் வளத்தை மீட்டெடுக்கும் மண்புழு உரம்

தமிழர்களின் வாழ்வியல் விவசாயம். தமிழன் பண்டைய காலத்தில் இயற்கை விவசாய முறையால் பல சாதனைகள் செய்து வந்த நிலையில், நவீனஅறிவியல் வளர்ச்சியால் வேதிப்பொருள்கள்
மண் வளத்தை மீட்டெடுக்கும் மண்புழு உரம்

தமிழர்களின் வாழ்வியல் விவசாயம். தமிழன் பண்டைய காலத்தில் இயற்கை விவசாய முறையால் பல சாதனைகள் செய்து வந்த நிலையில், நவீனஅறிவியல் வளர்ச்சியால் வேதிப்பொருள்கள் கலந்த உரம் பயன்படுத்தத் தொடங்கியதையடுத்து மண்ணும் மலடாகி, விளைபொருள்களை உண்ணும் மனிதர்களும் மலடாகும் நிலை உருவாகியது. இந்நிலையில் தமிழர்கள் மீண்டும் இயற்கை விவசாயத்தில் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.
 இயற்கையாக கிடைக்கும் பொருள்களைக் கொண்டு உரம் உள்ளிட்டவற்றைத் தாங்களே தயாரித்து வயலில் பயன்படுத்தி வந்த விவசாயிகள், உரங்கள் வந்தபின் அடுத்தவரை எதிர்பார்த்து நிற்கும் நிலை ஏற்பட்டது. அதோடு விளை பொருளுக்கும் அடுத்தவர் விலை நிர்ணயம் செய்யும் நிலை உருவாகிவிட்டது.
 மண்புழு விவசாயிகளின் நண்பன் என்று கூறிய காலம் போய், இன்றைய குழந்தைகள் மண்புழு என்றால் என்ன என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விளைநிலத்தில் வேதி உரங்கள் இட்டதால் மண்ணில் உருவாகும் மண்புழுக்கள் அழிந்து மண்ணும் மலடாகிவிட்டது. மண்புழு இருந்தால் அவை மண்ணில் உள்ள வளத்தை மீட்டுருவாக்கும் பணியைச் செய்யும். மண்புழு இல்லாததால் தொடர்ந்து அனைத்து விதமான சத்திற்கும் வேதி உரத்தை நாடவேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
 மண்புழு உரம் என்று அழைக்கப்படும் இயற்கை உரம் தயாரிப்பில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த வரதராஜன். இவர் ஒரு மாதத்தில் 3 முதல் 4 டன்அளவுக்கு மண்புழு உரம் தயாரித்து வருகிறார்.

 இதுகுறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டது: அப்பாவின் நெசவுத் தொழிலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வந்ததையடுத்து கைத்தறி மற்றும் இயந்திரத் தறி தொழிலை செய்துவந்தேன். அந்த வேளையில் ஆழ்வார்குறிச்சியில் நடைபெற்ற மண்புழு உரம் தயாரிப்பது குறித்த கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அதில் சுற்றுச்சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமி மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் முறை குறித்து அறிந்து கொண்டேன். பின்னர் தேனியில் ஒவ்வொரு தெருவிலும் விவசாயிகள் மண்புழு உரம் தயாரிப்பதை நேரில் பார்த்து வந்தேன்.
 அதைப் பார்த்த பின்னர் நாமும் முழுமையாக மண்புழு உரம் தயாரிக்கலாம் என்ற உறுதி வந்தது. இதையடுத்து முழுமையாக மண்புழு உரம் தயாரிப்பில் ஈடுபட்டேன்.
 வீரவநல்லூரில் உள்ள எங்களது தோட்டத்தில் மண்புழு உரம் தயாரிக்கும் கட்டமைப்புகளை உருவாக்கினேன். அங்கு 2 அடி உயரம் 2 அடி அகலம் 10 அடி நீளம் கொண்ட தொட்டிகளை அமைத்தேன். அதன்மூலம் மண்புழு தயாரித்து வழங்கி வருகிறேன்.
 மண்புழு உரம் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட தொட்டியின் அடியில் குளத்து மண்ணை போட்டு அதன் மேல் தென்னங்கூந்தலைப் போட்டு அதன்மேல் சாணத்தைக் கரைத்து மெழுக வேண்டும். இதன் மேல் 100 கிலோ இலை தழைகளை சேகரித்து போடவேண்டும். அதில் மண்புழுக்களை போட்டு 10 நாள்கள் தொடர்ந்து காலையும் மாலையும் தண்ணீர் தெளித்து ஈரப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இது போன்று மூன்று முறை 100 கிலோ இலை தழைகளைப் போட்டு ஈரப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அப்படி செய்யும் போது மண்புழு இலை தழைகளைத் தின்று மேலே வந்து கழிவை போட்டுச் செல்லும். தொடர்ந்து இலை தழைகள் முழுவதும் உரமாகும் வரை ஈரப்படுத்தி வரவேண்டும். அதன் பின்னர் ஒரு தொட்டியின் ஒரு ஓரத்தில் சாணத்தைக் கரைத்து ஊற்றினால் தொட்டியில் ஆங்காங்கே இருக்கும் மண்புழுக்கள் அனைத்தும் சாணத்தின் வாடைக்கு சாணம் கரைத்து ஊற்றிய பகுதிக்கு வந்துவிடும். பிறகு தொட்டியில் உள்ள உரத்தை சேகரித்து சல்லடை கொண்டு சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் அளவு எடுத்து கவரில் போட்டு சீல் வைத்துக் கொடுக்க வேண்டும்.
 மண்புழு உரம் காற்றோட்டமாக இருந்தால்தான் அதில் காற்றிலுள்ள ஈரப்பதத்தால் நுண்ணுயிரிகள் உயிருடன் இருக்கும். நேரடியாக சாணத்தை வயலில் போடுவதை விட மண்புழு உரமாக மாற்றிப்பயன்படுத்தினால் வயலில் பயிருக்கு நடுவே களைகள் உருவாகாது. நேரடியாக சாணத்தைப் போடும்போது கால்நடைகள் உள்கொண்ட பயிர்களின் விதைகளும் அதனுடன் சேர்ந்து இருக்கும். எனவே சாணத்தில் உள்ள விதைகள் முளைத்து களைச் செடிகள் அதிகமாக வளரும். மண்புழு உரத்தில் சாணத்தில் உள்ள வேறு செடிகளின் விதைகளை மண்புழு நன்றாக தின்று செமிக்கச் செய்வதால் அந்த விதைகள் முளைப்பது கிடையாது.
 மண்புழு உரத்தில் விவசாயத்திற்குத் தேவையான 16 சத்துகளில் இரும்பு, துத்தநாகம், போரான், போராக்ஸ் உள்ளிட்ட 14 சத்துகள் உள்ளன. மேலும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா சேர்த்துக் கொண்டால் முழுமையாக 16 சத்துகளும் கிடைக்கும்.
 மண்புழு உரம் இடுவதால் நெல்லின் எடை அதிகரிக்கிறது. 60 கிலோ கிடைக்கும் இடத்தில் 75 முதல் 80 கிலோ வரை நெல் உற்பத்தியாகிறது.
 பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை அதிகாரிகள் அழைப்பை ஏற்று சிறையில் உள்ள கைதிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பது குறித்து விளக்கமளித்தேன்.
 ரசாயன உரங்கள் பயன்படுத்தி நமது மண்ணை இறுக வைத்துள்ளோம். மண்புழு உரம் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் மீட்டெடுக்கப்படுகிறது. ஒரு பருவம் முடிந்தபின் முந்தைய பருவத்தில் பயிரிட்ட பயிரின் மிச்சத்தை மண்புழு உரம் நன்கு செமிக்கச்செய்து அதையும் உரமாக்குகிறது.
 இயற்கை விவசாயத்திற்கு மாறுவோம். விவசாயத்தையும் மண்ணையும் உடல் நலத்தையும் காப்போம் என்றார் அவர்.


 - கு.அழகியநம்பி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com