முத்திரை பதிக்கும் பழையபேட்டை பித்தளைப் பாத்திரங்கள்!

தமிழர்களின் பாரம்பரிய பாத்திரங்களில் பித்தளைக்கு தனி முக்கியத்துவம் உண்டு. பண்டிகை, கோயில் விழாக்களில் பித்தளைப் பாத்திரங்களில் பொங்கலிடுவது புனிதமாக கருதப்படுகிறது.
முத்திரை பதிக்கும் பழையபேட்டை பித்தளைப் பாத்திரங்கள்!

தமிழர்களின் பாரம்பரிய பாத்திரங்களில் பித்தளைக்கு தனி முக்கியத்துவம் உண்டு. பண்டிகை, கோயில் விழாக்களில் பித்தளைப் பாத்திரங்களில் பொங்கலிடுவது புனிதமாக கருதப்படுகிறது.
 தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் சீர்வரிசையிலும், தாய்மாமன் சீர், பெண் வீட்டு சீர் வரிசையிலும் பித்தளைப் பாத்திரங்களே முன்வரிசையில் உள்ளன.
 திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள வாகைகுளம் பித்தளை விளக்குகளில் தனிமுத்திரை பதித்து வருகிறது. அதேநேரத்தில் பித்தளைப் பாத்திரங்கள் தயாரிப்பில் திருநெல்வேலி அருகேயுள்ள பழையபேட்டை தொழிலாளர்கள் சத்தமின்றி சாதித்து வருகின்றனர்.
 பழையபேட்டையில் 50-க்கும் மேற்பட்ட பித்தளை பாத்திர பட்டறைகள் உள்ளன. குடம், பானை, உருளி, பானா, எம்.எஸ்.பானை, வாளி, குவளை, அண்டா, சர்வம், மைசூர்அடுக்கு, குண்டான், காபிசட்டி, பீப்பா, அப்பள டப்பா உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் பொங்கல் பண்டிகைக்கான உருளி பானைகளே 90 சதவீதம் தயாரிக்கப்படுகின்றன.
 இதுகுறித்து பித்தளைப் பாத்திர தயாரிப்பு தொழிலாளி முருகன் கூறியது: பழையபேட்டை நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பித்தளை பாத்திரங்கள் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. திருப்பூர், ஈரோடு பகுதிகளில் இருந்து செவ்வக வடிவ பித்தளை பிளேட்டுகள் வாங்கப்படுகின்றன. முதலில் அதனை கட்டிங் தொழிலாளிகள் வெட்டும் பணியில் ஈடுபடுவர். சட்டைகளுக்கு அளவீடு செய்து வெட்டுவது போல், ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு அளவில் பிளேட்டுகளை வெட்ட வேண்டும். பின்னர் பிளேட்டுகள் பொருள்களுக்கு ஏற்றவாறு ஒட்டப்படும். மூன்றாவதாக ஈயம் பூசும் தொழிலாளர்கள் பூசத்தொடங்குவார்கள்.
 பித்தளையை நேரடியாக பாத்திரமாக மாற்ற முடியாது. ஏனென்றால் பித்தளையில் தண்ணீர் மட்டுமே வைக்க முடியும். பால் உள்ளிட்ட இதர உணவுப் பொருள்களை தயாரித்தால் மனிதர்களுக்கு ஒவ்வாமையை உருவாக்கிவிடும். அதனால்தான் பித்தளை பாத்திரங்களின் உள்பகுதியில் ஈயம் பூசப்படுகிறது. வெள்ளி மற்றும் காரீயம் ஆகியவற்றை சேர்த்து முதலில் ஈயம் உருவாக்கப்படுகிறது. அவை பாத்திரத்தின் உள்பகுதியில் பூசப்படுகிறது.
 பித்தளைப் பொருள்களில் ஈயம் பூசும் பணி முடிந்ததும் அடிவேலை பணிக்கு அனுப்பப்படும். ஒரு பானை என்றால் முதலில் அதன் மேல்பகுதி வேலை முடிக்கப்படும். இறுதியாக அடிவேலைகள் செய்யப்படும். அந்தப் பணி முடிந்ததும் வெல்டர், ரன்னர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் பானையின் உறுதித்தன்மைக்கு தேவையான வேலையை செய்வார்கள். இறுதியாக தேய்ப்பு மற்றும் பாலீஷ் பகுதிக்கு அனுப்பப்படும். அங்கு இரும்பின் உதவியோடு பித்தளைப் பொருள்கள் பாலிஷ் செய்யப்படும்.
 திருநெல்வேலி மாவட்டத்தில் பித்தளைப் பாத்திரம் மற்றும் விளக்கு தயாரிப்பில் 2000 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். எவர்சில்வர் பாத்திர வருகைக்குப் பின்னர், பித்தளைப் பொருள்கள் பயன்பாடு குறைந்துள்ளதால் வேலைவாய்ப்பும் குறைந்துள்ளது.
 ஆனால், இப்போது மக்களிடம் மீண்டும் மாற்றம் உருவாகி வருகிறது.
 செம்பு, பித்தளைப் பொருள்களால் கிடைக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு உருவாகி வருவதால், வருங்காலங்களில் பித்தளைப் பொருள்களின் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்றார் அவர்.
 -கோ.முத்துக்குமார்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com