வியாபாரிகள், பெரும் வணிகர்களை காக்கும் காப்பீடுகள்!

சிறு கடைகளை நடத்தும் வியாபாரிகள் முதல், பெரிய தொழில் நிறுவனங்கள், ஆலைகள் போன்றவற்றை நடத்துபவர்கள் வரை, ஏதேனும் இடர் ஏற்பட்டால் அதிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள காப்பீடு செய்து
வியாபாரிகள், பெரும் வணிகர்களை காக்கும் காப்பீடுகள்!

சிறு கடைகளை நடத்தும் வியாபாரிகள் முதல், பெரிய தொழில் நிறுவனங்கள், ஆலைகள் போன்றவற்றை நடத்துபவர்கள் வரை, ஏதேனும் இடர் ஏற்பட்டால் அதிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள காப்பீடு செய்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
பொதுவாக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், ஆலைகள் நடத்துபவர்கள் வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால் மட்டும் வங்கிகள் மூலமாக காப்பீடு செய்து கொள்வது வழக்கம். மற்றபடி தாங்களாக முன்வந்து கடைகள், தொழில்நிறுவனங்கள், ஆலைகளுக்கு காப்பீடு செய்துகொள்வது கிடையாது. 
வியாபாரிகள், வணிகர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு ஏதேனும் இடர் ஏற்படும் பட்சத்தில் தங்களையும், நிறுவனத்தையும் காத்துக்கொள்ள தேவையான காப்பீடுகளை எடுத்துக்கொள்வது நலம்.
பொதுவாக காப்பீடுகளில் தீ காப்பீடு மிக முக்கியமானதாகும். தீ காப்பீடு என்பது கடைகள் மற்றும் ஆலைகள் தீப்பிடித்தால் மட்டுமே இழப்பீட்டை ஈடு செய்யும் என்பது கிடையாது.
தீ காப்பீடு எடுத்தால், தீ , மின்னல், மின் கசிவு, வெளி வெடித்தல் (EXPLOSION), உள் வெடித்தல் (IMPLOSION), விமானம் மூலம் ஏற்படும் சேதம், கலவரம், புரட்சி, வன்செயல் போன்றவற்றால் ஏற்படும் இழப்பு, புயல், பெருங்காற்று, வெள்ளம் , வெள்ளத்தில் மூழ்குதல் அல்லது அடித்துச் செல்லப்படுதல், மிருகங்களால் அல்லது வாகனங்களால் ஏற்படுத்தப்படும் சேதங்கள், பாறை அல்லது நிலச்சரிவு, தண்ணீர் தொட்டி மற்றும் அதன் குழாய் ஆகியவற்றில் ஏற்படும் வெடிப்பு ஆகியவற்றால் ஏற்படும் சேதம், ஏவுகனை சோதனைகளால் ஏற்படும் சேதங்கள், தானியங்கி சிதறல் மூலம் தெளிப்புகளில் ஏற்படும் கசிவு, புதர், காடு ஆகியவற்றால் ஏற்படும் தீ விபத்து உள்ளிட்ட அபாய கூறுகளும் இதில் அடங்கும்.
பூகம்பம், பயங்கரவாதிகள் தாக்குதல் போன்ற அசாதாரண நிகழ்வுகளுக்கு பிரீமியம் தொகை சற்று அதிகம் செலுத்த வேண்டியது இருக்கும்.
ஆபத்தான தொழில்கள் நிறைந்த வணிக வளாகங்கள், வெடிமருந்து விற்பனைக் கூடங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மர அறுவைக் கூடங்கள், சுரங்கங்கள் போன்றவற்றுக்கு பிரீமியம் தொகை சற்று கூடுதலாக இருக்கும். 
இதர காப்பீடுகள்: கடைகளில் உள்ள இருப்பு பொருள்கள், நிறுவனத்தில் உள்ள உற்பத்திப் பொருள்கள், இயந்திரங்கள், மூலப்பொருள்கள் போன்றவை திருடு போய்விட்டால், அந்த இழப்பை ஈடு செய்ய காப்பீடு செய்ய முடியும்.
கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கையிருப்பாக வைத்திருக்கும் பணம், வங்கியில் செலுத்துவதற்காக வாகனங்களில் கொண்டு செல்லும் பணம் போன்றவற்றுக்கும் காப்பீடு செய்ய முடியும்.
பணியாளர்களுக்கு பணியின் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் அதை ஈடு செய்யும் வகையில் விபத்து காப்பீடு செய்ய முடியும். 
அவர்களுக்கு மருத்துவச் செலவு ஏற்பட்டால் அதை ஈடு செய்யும் வகையில் மருத்துவக் காப்பீடு செய்ய முடியும். பணியாளர்கள் எவரேனும் நிறுவனத்தில் பெரிய அளவில் மோசடி செய்துவிட்டால், அதனால் ஏற்படும் இழப்பை காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் பிடலிட்டி கேரண்டி என்ற காப்பீடு செய்ய முடியும். 
திருமண மண்டபங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள் போன்ற அதிக மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு ஏதேனும் இடர் ஏற்பட்டால், அவர்களுக்கு இழப்பீடு கிடைக்க வழி செய்யும் வகையில் பப்ளிக் லயபிலிட்டி என்னும் காப்பீடு செய்ய முடியும். தங்கள் கடைகள், நிறுவனங்களுக்கு வெளியே உள்ள விளம்பர போர்டுகள், கண்ணாடி பொருள்கள் போன்றவற்றுக்கும் காப்பீடு செய்ய முடியும். இது போன்று எண்ணற்ற காப்பீட்டு திட்டங்கள் உள்ளன.
எனவே, வியாபாரிகள், பெரிய வணிகர்கள் தங்களையும், தங்கள் நிறுவனங்களையும் காத்துக்கொள்ள, தங்களுக்கு தேவையான காப்பீடுகளை, அரசு பொதுக்காப்பீட்டு நிறுவனங்களிலோ, தனியார் பொதுக்காப்பீட்டு நிறுவனங்களிலோ எடுத்து பயன்பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com