கல்லுக்குள் காதல்

இயற்கையைத் தெய்வமாக வழிபட்டவர்கள் அந்த இயற்கைக்கு உருவங்கள் கற்பித்து வழிபடலாயினர். இறைவனின் பலவித ஆற்றல்களை, குணங்களை, உணர்வுகளைத் திருவுருவங்களாகப் படைத்தார்கள்.
கல்லுக்குள் காதல்

காதல், காமம் என்னும் சொற்கள் ‘காத்தல்’ என்னும் செயலைக் குறித்த ‘கா’விலிருந்து தோன்றியவை. நாளடைவில் காதல் என்பது அன்பையும், காமம் என்பது புணர்ச்சி மோகத்தையும் குறிப்பதாயிற்று. தொல்காப்பியர் வரையறுத்த உடலில் தோன்றும் எட்டு மெய்ப்பாடுகளில் உவகை (புணர்வு) என்ற உணர்ச்சியும் அடங்கும். இது காணப்படும் பொருளில் காண்போர் மனதில் உண்டாகும் உணர்வாகும்.

இயற்கையைத் தெய்வமாக வழிபட்டவர்கள் அந்த இயற்கைக்கு உருவங்கள் கற்பித்து வழிபடலாயினர். இறைவனின் பலவித ஆற்றல்களை, குணங்களை, உணர்வுகளைத் திருவுருவங்களாகப் படைத்தார்கள். அவற்றுள் அன்பின் அடையாளமாகக் கருதப்படும் இறையுருவங்கள் மன்மதன், இரதி திருவுருவங்களாகும். இவர்களுக்காக அமைக்கப்பட்ட ஆலயங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், விழாக்கள் சங்க காலம் முதற்கொண்டு காண முடிகிறது. சிலப்பதிகாரத்தில் தேவந்தி கண்ணகியிடம் “காமவேள் கோட்டம் சென்று வழிபட்டால் கணவனுடன் இன்புறுவாய்” என்று கூறினாள். கண்ணகி “தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழு தெழுவாள்” என்னும் கற்பின் திறத்தால் ஊன்றி நின்று மறுத்துவிடுகிறாள். காமன் வழிபாடு சுமார் இரண்டாயிரம் ஆண்டு கால பழமை வாய்ந்ததாகும்.

கண்ணால் காண முடியாத ஒரு பொருளைத் தம் அறிவால் உணர்ந்து அவ்வுணர்வினைக் கலைவடிவாய்க் காண்பவர் கண்முன் கொணர்வது இந்திய நாட்டுச் சிற்பக் கலையின் சிறப்பியல்பாகும். அயல்நாட்டுச் சிற்பங்கள் உள்ளது உள்ளவாறே அமைவதாகும். இந்தியச் சிற்பங்கள் வெறும் அழகிய காட்சிப் பொருளாக மட்டுமல்லாமல் காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் ஊட்டுவனவாகும்.

காதல் என்னும் உணர்வின் அடையாளச் சின்னம் மன்மதன், இரதி திருவுருவங்களாகும். காமன், காமவேள், மாரன், மலர்க்கணையோன் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். தன் கையிலுள்ள மலர்க்கணையால் மனத்தைப் பிளப்பவன் (காதலுணர்வை உண்டாக்குபவன்) என்ற பொருளில் மன்மதன் என அழைக்கப்படுகிறார். இவர் திருமாலின் மனதில் பிறந்தவராவார். இவரது சகோதரன் சாமன்; துணைவியார் இரதிதேவியாவார்.

மன்மதனை ஓர் “இயற்கையெழில் தெய்வம்” என்று அழைக்கலாம். இவரது பாசறை வனப்புத் திகழும் கண்கவர் நீர்நிலை, மாலை, பூஞ்சோலை, மங்கையர் சேனை, தென்னம்பாலை கவரி, மல்லிகை மலர் காளாஞ்சி (தாம்பூலம்), தாழை மடல் வாள், தென்றல் தேர், வாகனம் கிளி குதிரை, இருட்டு யானை, கடல் முரசம், குயில் எக்காளம், சந்திரன் குடை, கொடி மீன், வில் கரும்பு, நாண் வண்டு, அரவிந்தம், அசோக மலர், மாம்பூ, முல்லை மலர், நீல மலர் ஆகிய ஐவகை மலர்கள் கணை என அனைத்தும் இயற்கையாகவே அமைந்துள்ளன. இவரது மலர்க்கணைகள் ஐந்தும் காதலுடன் தொடர்புடைய காமம், பசலை, உணவை வெறுத்தல், படுக்கையிற் கிடத்தல், மரணம் ஆகியவற்றை முறையே குறிப்பால் உணர்த்துவனவாகும்.

மன்மதன், இரதிதேவியின் திருவுருவங்களுக்கும் புராணப் பின்னணி உண்டு. முற்பிறப்பில் காமன் மன்னனாக தன் மனைவியுடன் வேட்டைக்குச் சென்றபோது ஓர் இருடி வளர்த்த மானைக் கொன்று சாபத்திற்குள்ளாகினான்.

சிவன் மோகத்திலிருக்கையில் காமன் தனது மலர்க்கணையைச் செலுத்தியமையால் சிவனது நெற்றிக்கண்ணிற்குப் பலியாகி சாம்பலானான். இரதியின் வேண்டுகோளுக்கிணங்கி அவளது விழிகளுக்கு மட்டும் காணலானான். பிறகு பார்வதி தேவியின் திருவருளால் புத்துயிர் பெற்றான்.

காமத்தை அடக்கி வெல்லுதல் வேண்டும் என்பது இத்திருவுருவின் பொருளாகும். இச்சமய போதனையை உணர்த்தவே காமமூட்டித் திருவிழா (காமனை எரித்தல்) கொண்டாடப்படுகிறது. இவ்விழா ஏழு நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் லாவணியும் கவாலிப் பாடல்களும் பாடுவர். இல்லறம் நல்லறமாக அமைய மக்கள் காமனை வழிபடுகின்றனர். தான தருமங்களும் நடைபெறும். இவ்விழாவின் சிறப்பினை இலக்கியங்கள் புகழ்கின்றன. இராசசிரி நகரில் நடைபெற்ற காமன் விழாவில் காமன் தோட்டத்தில் பதுமாவதி உதயணனைக் கண்டு விரும்பலாயினள் என்று பெருங்கதை கூறுகிறது.

அழகின் அதிதேவதைகளான மன்மதன், இரதிதேவி சிற்பங்களும் ஓவியங்களும் தமிழக அழகுக் கலைகளில் இடம்பெறலாயின. சோழ மன்னன் இரண்டாம் இராசராசனின் (பொ.ஆ. 1146 – 1173) தாராசுரம் கோயில் இராசகம்பீரன் மண்டபத்து அடித்தளத்துப் பகுதியில் காமனை எரித்த கதை தொடர் சிற்பக் காட்சிகளாகக் காணப்படுகின்றன. நடராசர் மண்டபத்தில் இரதி, மன்மதன் கதை பல சிற்பங்களில் விளக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் அரண்மனைக் கலைக்கூடத்திலுள்ள மன்மதன், இரதிதேவி சோழர்கால கற்சிற்பத்தில் இருவரும் குதிரை பூட்டிய ரதத்தில் பவனி வரும் காட்சி அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. இக்காட்சியை உள்வாங்கியே கரும்புவில் படத்தின் “மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்” என்ற பாடல் வரி அமைந்ததோ என்ற வியப்பு ஏற்படும். இச்சிற்பத்தில் மன்மதன் தனது இடது கையில் கரும்பு வில்லைக் கொண்டு, தனது வலக்கரத்தால் தனது வலப்புறம் நின்ற இரதிதேவியின் இடையை அணைத்தவாறு காண்பவரைக் கிறங்க வைக்குமாறு அமைந்துள்ள சிற்பியின் திறமையைப் புகழாமல் இருக்க முடியாது. மன்மதனின் காதல் புன்னகையும் இரதிதேவியின் நாணமும் காதலின் மேன்மையைப் பறைசாற்றும்.

சிதம்பரம் நடராசர் கோயில் மேற்குக் கோபுரத்தில் பெயர் பொறித்த கல்வெட்டுடன் காமதேவன் தனது துணைவியர் ரதி, பிரீத்தி ஆகியோருடன் காணப்படுகின்றார். 

விஜயநகர நாயக்கர் காலக் கோயில்களில் மன்மதன், இரதிதேவியின் சிற்பங்கள் பிரபலமடைந்தன. ஸ்ரீரங்கம் கோயில் மொட்டைக் கோபுர வாசலிலுள்ள பெரிய கல்தூணின்கீழ் இரதிதேவி அன்னத்தின்மீது அமர்ந்தவண்ணம் கண்ணாடி பார்த்து தலைமுடியில் பூச்சொருகிக்கொள்வதைக் காண முடிகிறது. நாயக்கர் கால மண்டபத் தூண்களின் நடுப்பாகத்தில் ஆளுயரத்தில் அழகின் அதிதேவதைகளான மன்மதன் இரதி சிற்பங்கள் எதிரெதிரே புஷ்ப பாணம் எய்தும் பாவத்தில் கம்பீரமான தோற்றத்துடன் காணப்படுவர். கிளியின்மீது மன்மதனும் அன்னத்தின்மீது இரதிதேவியும் அமர்ந்திருப்பர். அவர்களது கால்களை காதலுடன் தொடர்புடைய தாமரை மலர்மீது வைத்திருப்பர். கிருஷ்ணாபுரம் கோயில் உட்புற மண்டபத் தூணில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இரதிதேவி இடக்கையில் கண்ணாடியும் வலக்கையில் மலர்ப்பந்தும் கொண்டுள்ளாள். தூணின் கீழ்ப்புறம் அவளது தோழி நடனம் ஆடுகின்றாள்.

தாரமங்கலம் கோயில் சிற்பத்தில் இரதிதேவி சிற்பத்தின் அருகில் நின்று பார்த்தால் மன்மதன் தெரியாத வகையிலும் மன்மதன் அருகே நின்றால் இரதிதேவி தெரியும்படியும் அமைந்துள்ள சிற்பத்தைக் காண்கையில் சிற்பி புராணப் பின்னணியில் அமைத்திருப்பதைப் பாராட்டாதவர்கள் யாருமில்லை.

'கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்'

என்பர். ஸ்ரீவைகுண்டம் கோயில் ராஜகோபுரம் முன்புறம் தென்பக்கத்தில் கும்ப பஞ்சரக் காலின் இருபுறமும் உள்ள யானை, குதிரைகளாகத் தோன்றுவது பெண்கள் சேர்ந்து நின்ற கோலமாகும். இது ஓர் அதிசயக் காட்சியாகும். இதில் இரதி, மன்மதன் இருவரும் முறையே யானை மீதும் குதிரை மீதும் ஏறிக்கொண்டு கரும்பு வில்லுடன் மலர் அம்புகளை வீசியவாறு உள்ளதைக் காண்பவர் அதிசயிப்பர்.

ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் மாளிகையிலுள்ள ரதி மன்மதன் ஓவியம் குறிப்பிடத்தகுந்ததாகும். இதில் அழகிய மகளிர் பலர் பாங்குறச் சேர்ந்து கிளி போலவும் அன்னம் போலவும் அமைய அவர்கள் மீதமர்ந்து சேதுபதியும் அவர் தேவியும் மன்மதன் இரதி போல தங்களைப் பாவித்துக்கொண்டு காட்சியளிக்கின்றனர்.

அழகு தெய்வீகமானது என்ற உணர்வுடன் பார்த்தால் வாழ்வில் சுவையும் தூய நல்லின்பமும் கிட்டும் என்பதே மேற்காணும் படைப்புகளின் வாயிலாக அறியப்படும் உண்மையாகும். 

[கட்டுரையாளர் - கலைப்புலத் தலைவர் (ம) துறைத்தலைவர், சிற்பத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com