நெசவுத் தொழிலில் உச்சம் தொட்ட காதல் ஜோடியின் கதை!

காஞ்சிபுரத்தில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த குமாரவேல் - கலையரசி குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டு இன்று நெசவுத் தொழிலில் சாதனையாளர்களாகத் திகழ்கின்றனர். 
குமாரவேல் - கலையரசி
குமாரவேல் - கலையரசி



காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தோப்புத்தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் மகன் எஸ்.குமாரவேல்(37). 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளளார். காஞ்சிபுரத்தில் ஓரிக்கை பகுதியில் அரசு நகரில் வசித்து வந்த ஜெயக்குமாரின் மகள் கலையரசி(34) பிஎஸ்சி., பி.எட்., படித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 

இருவரும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக பழகி வந்து, பின்னர் காதலர்கள் ஆகினர். இருவரும் பேசிக்கொள்வதை கலையரசியின் பெற்றோர்கள் கண்டித்ததால் இருவரது பெற்றோர்களுக்கும் தெரியாமல் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணத்தை பதிவு செய்து கொண்டு இருவரும் தனித்தனியாக அவரவர் வீடுகளில் வசித்து வந்திருக்கின்றனர். பின்னர் ஓராண்டுக்குப் பிறகு உறவினர்கள் இருவரின் உதவியுடன் திருமணம் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் என்றாலே காமாட்சியும், பட்டுச்சேலையும்தான் நினைவுக்கு வரும். இப்பெருமைக்குரிய காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலைகளில் சுவாமிகள், மணமக்கள், தலைவர்களின் தோற்றங்கள் போன்றவற்றை நெய்து கொடுத்து நெசவுத் தொழிலில் உச்சம் தொட்டிருக்கின்றனர். அவர்களது சுவை மிகுந்த காதல் கதையை அவர்களே சொல்லக் கேட்போம். 


எஸ்.குமாரவேல் கூறியதாவது: 

காஞ்சிபுரம் நகரில் ஓரிக்கையில் ஒரு நபரிடம் நெசவுத் தொழிலில் கூலிக்கு வேலை செய்து வந்தேன். அடுத்த வீட்டில் கலையரசி வசித்து வந்தார். நண்பர்களாகத்தான் இருவரும் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தோம். இப்படிப் பேசுவதை கலையரசியின் பெற்றோர்கள் எதிர்த்தார்கள். எனவே, நாங்கள் முதலில் எங்களது திருமணத்தை 2006 ஆம் ஆண்டு பதிவு செய்து கொண்டு இருவரும் தனித்தனியாக பேசாமல் அவரவர் வீடுகளில் ஓராண்டுகளாக இருந்து வந்தோம். 2007 ஆம் ஆண்டு உறவினர்கள் இருவரின் உதவியுடன் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டோம்.

அதே நாளில் எனது பெற்றோர் காஞ்சிபுரத்தில் புதிய வீடு கட்டி நிலைவாசல் வைக்கும் விழா நடந்து கொண்டிருந்தபோது, என் உறவினர்கள் பலரும் அவ்விழாவிற்கு வந்திருந்த நேரத்தில் திருமணம் முடித்த கையோடு நானும் என் மனைவியும் அந்த வீட்டுக்குள் நுழைந்தோம். அதுவரை நான் காதலித்தது என் பெற்றோர்களுக்கு தெரியவே தெரியாது. பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அனைவரும் எங்களை ஆசீர்வதித்தார்கள்.

நாங்கள் திருமணம் செய்தது கலையரசி வீட்டுக்கு தெரிய வந்ததும் அவளது பெற்றோர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். அவர்களது பெற்றோர்கள் இருவரும் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள். உறவினர்கள் பலரும் அதிகாரிகளாக இருந்தார்கள். வசதியான குடும்பம், அவர்களது சமூகம் வேறு, எனது சமூகம் வேறு, இதனால் மனைவி வீட்டில் பெரும் போராட்டமே வெடித்தது. 'நல்லாப் படிச்சிருக்கிற நீ பத்தாவது படிச்சிருக்கிற பையனைப் போய் கல்யாணம் பண்ணலாமா?' என்று மனைவியிடம் கேட்டார்களாம். மனைவியின் பெற்றோர்கள் யாரும் எங்களை வந்து பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை. எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். இதைக் கேள்விப்பட்டதும் பேரனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் முதலில் என் மாமனார் வந்து விட்டார். பேரனையும் பார்த்து ஆசீர்வதித்தார். 

 குமாரவேல் - கலையரசி வடிவமைத்த காஞ்சிபுரம் பட்டு சேலை 
 குமாரவேல் - கலையரசி வடிவமைத்த காஞ்சிபுரம் பட்டு சேலை 

எனது மாமியார் மட்டும் 8 ஆண்டுகளாக எங்களுடன் பேசாமல் இருந்து வந்தார். பல நிகழ்வுகளில் சந்தித்தாலும், பார்த்தாலும் என் மனைவியோடு பேசவே மாட்டார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு என் மாமியார் எங்களோடு பேசினார். இப்போது எங்களுக்கு திருவரங்கன்(14) என்ற மகனும், நித்ய திருமகள்(7) என்ற மகளும் உள்ளனர். நாங்கள் இருவருமே தரமான பட்டுச்சேலைகளில் மணமக்களின் உருவங்கள், அரசியல் தலைவர்களின் படங்கள், சுவாமிகளின் உருவங்கள் ஆகியனவற்றை வடிவமைத்துத் தருகிறோம். காஞ்சிபுரத்தில் தரமான பட்டுச்சேலைகள் செய்பவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என முடிவு செய்து பட்டுச் சேலைகளில் விலங்குகள், பறவைகள், மனித உருவங்கள், கலைச் சிற்பங்கள் ஆகியனவற்றை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறோம்.

இந்த வடிவத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டுச் சேலைகளை வடிவமைத்துள்ளோம். ஏராளமான ஆடர்கள் வந்து குவிகின்றன. கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கும், மலேசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் செய்து அனுப்பி வருகிறோம். எங்கள் காதலுக்கு எதிர்ப்பாக இருந்த என் மனைவியின் பெற்றோர்கள் இன்று எங்கள் தொழிலுக்கு பேருதவியாக இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகவும் பல ஆடர்கள் வருகின்றன. எங்கள் வெற்றிக்கு அவர்களே ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறார்கள். சுருங்கச் சொன்னால் எதிரிகளே நண்பர்களாகி இருவரின் இதயங்களிலும் குடிவந்து விட்டார்கள் என்றார் எஸ்.குமாரவேல்.

கலையரசி கூறுகையில், 'நான் அவரை திருமணம் செய்து கொண்டதை கேள்விப்பட்டதும் 'ஒரு கிலோ அரிசி என்ன விலை என்று கூட உனக்கு தெரியாது. வசதியாக வாழ்ந்து விட்டாய், அங்கே போய் நீ கஷ்டப்படப் போகிறாய்' என்று மனைவியின் உறவினர்கள்  சொல்லி இருக்கிறார்கள். திருமணம் செய்த நாளிலிருந்து இன்று வரை என்னை அரிசி வாங்கவோ, மளிகைச் சாமான்கள் வாங்கி வரவோ என் கணவர் என்னை அனுமதிக்க மாட்டார். நான் வாங்கியதும் இல்லை. என் வீட்டில் எப்படி வசதியாக இருந்தேனோ அதேபோல என் கணவர் இன்று வரை நன்றாக பார்த்துக்கொள்கிறார்.

'பத்தாவது படிச்சிருக்கிற பையனைப் போய் கல்யாணம் செய்திருக்கிறாய், அவருக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடும்' என்றும் சொன்னார்கள். ஆனால் என் கணவரோ படிப்புதான் பத்தாம் வகுப்பே தவிர பல திறமைகள் உடையவர். தரமான பட்டுச்சேலைகள் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர், பட்டுச்சேலைகளில் பல உருவங்களை வடிவமைக்கும் சிறந்த வடிவமைப்பாளர். பிறருக்கு உதவி செய்யும் குணமுடையவர், ஒரு நபரிடம் இத்தனை திறமைகளும் இருப்பது சந்தேகமே. அந்த வகையில் அவர் எனக்கு கணவராக அமைந்தது நான் செய்த பெரும் பாக்கியம்.

இப்போது எங்களிடம் 10-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள். இருவரும் இணைந்தே சேலைகளுக்கான படங்களை கணினியில் வடிவமைப்போம். ஆடர்கள் வாங்குவது, அதனை குறித்த நேரத்தில் கொடுப்பது, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது என தொழில் சார்ந்த சிலவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன். காதலிப்பவர்கள் யாராக இருந்தாலும் அதை எதிர்ப்பவர்களுக்கு முன்பாக ஒரு சாதனையாளராக மாறிக் காட்டுங்கள். அப்படி சாதித்த பின்பு அவர்கள் முன்பு நின்றால் கண்டிப்பாக வாழ்த்துவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். தடம் பார்த்து நடப்பது வாழ்க்கையல்ல, தடம் பதித்து நடப்பதே வாழ்க்கை' பெருமிதத்துடன் கூறுகிறார் கலையரசி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com