சிறுகதை: புளிய மரத்து மனிதன்

ஊரை உலுக்கியெடுத்த புயல் ஓய்ந்து ஒரு மணிநேரமே ஆகியிருந்தது. வாட்டியெடுத்த கவலையுடன் மகள் வீட்டிலிருந்து தன் குடிசை நோக்கி விரைந்து வந்த ரங்கசாமி, அந்த தெருமுனையில் நுழைந்தபோதே தான் கண்ட காட்சியை நம்பம
சிறுகதை: புளிய மரத்து மனிதன்

ஊரை உலுக்கியெடுத்த புயல் ஓய்ந்து ஒரு மணிநேரமே ஆகியிருந்தது. வாட்டியெடுத்த கவலையுடன் மகள் வீட்டிலிருந்து தன் குடிசை நோக்கி விரைந்து வந்த ரங்கசாமி, அந்த தெருமுனையில் நுழைந்தபோதே தான் கண்ட காட்சியை நம்பமுடியாமல் அதிர்ந்தார்.

  வேரோடு பெயர்ந்து விழுந்து கிடந்தது புளியமரம். பச்சை மலையை பெயர்த்தெடுத்து வந்து குறுக்கே போட்டாற்போல அது தெருவை அடைத்துக் கிடந்தது.

  அடிவயிற்றிலிருந்து அடக்க முடியாத துக்கம் கிளம்பி தொண்டையை அடைத்ததில், கண்ணீர் பொங்க அந்த புளியமரத்தை புருவம் சுருக்கி கூர்ந்து பார்த்தபடி ஒரு கணம் திடுக்கிட்டு நின்றார். தன் குடிசையின் நிலவரம் என்னவாகியிருக்கும் என்ற கவலையை விட புளியமரம் விழுந்து கிடப்பதுதான் பெருங்கவலையை எழுப்பியது.

  பொலபொலவென வழிந்த கண்ணீர் கன்னங்களில் இறங்கி நரைத்த தாடியை நனைத்தது. வெற்றுடம்பின் தோளில் கிடந்த துண்டால் கண்களை துடைத்துக் கொண்டே நடந்தார்.

  எழுபத்தைந்து வயதில் எத்தனையோ புயல் வெள்ளங்களைப் பார்த்திருந்த போதிலும், எந்தப் புயலும் ஏற்படுத்தியிராத சோகத்தை இந்தப் புயல், அந்தப் புளிய மரத்தை வீழ்த்தியதன் மூலம் இயற்கையின் பலத்தையும், இதயத்தில் இடிதாக்கிய வலியையும் உணர்த்தியதில் உடைந்து  போனார்.

  எப்படியும் ஐம்பது ஆண்டுகளைத் தாங்கி நின்ற அம்மரத்தையொட்டியே வாழ்நாளின் பெரும்பகுதி ஓடிவிட்ட நிலையில், தன் மரணமும் ஒரு நாள் அம்மர நிழலில் வெகு சாதாரணமாய் நிகழக்கூடும் என்று அடிக்கடி ரங்கசாமி நினைத்துப் பார்ப்பதுண்டு.

  உதிர்ந்து விழும் இலைகள், பூக்கள், பிஞ்சுகள், பழங்கள் என ஆண்டுதோறும் பருவங்கள் மாறிமாறி ஓடுமே தவிர, ரங்கசாமியின் ஓய்ந்த பொழுதுகள் மாறாமல் புளியமரத்தடியில்தான் மையம் கொண்டிருந்தன.

  உச்சியைப் பிளக்கும் வெயில் அடித்தாலும் சூரியனின் ஒரு கதிர்கூட ஒற்றை நாணயமென தரையில் விழாத வண்ணம், அடர்ந்திருக்கும் புளிய மரத்து நிழலில் கயிற்றுக் கட்டிலில் மல்லாந்துக் கிடக்கும் வேளைகளில், வாழ்க்கைப் பாதையில் தான் ஓடிவந்த நாட்களை அசை போடுவதுதான் அவரது ஆசுவாசம்!

  சமீபகாலமாய் தன் அந்திமப் பொழுதுகள் பற்றியே அதிகம் நினைத்துக் கொண்டிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு கட்டிலில் கிடந்த போது, மார்பின் மீது விழுந்த புளியம் பிஞ்சுகளை வாய்க்குள் போட்டு குதப்பிக் கொண்டு தன் மரணம் பற்றி நினைக்கையில், தான் படுத்திருக்கும் இதே இடத்தில் உயிரற்ற தன் உடல் கிடத்தப்பட்டிருப்பதையும், புளியமரத்தைச் சுற்றிலும் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் உற்றார் உறவினர்கள் அமர்ந்திருப்பதையும் மனச்சித்திரமாய் பார்த்தபோது கூட தன் மீது வைக்கப்பட்டிருந்த மாலைகள், மலர்களிடையே பெருமளவில் உதிர்ந்து விழுந்த பழுத்த இலைகள் மூலம் அந்த புளியமரமும் தனக்கு அஞ்சலி செலுத்தியதான அக்காட்சியே அவருக்கு பெரும் நிறைவைத் தந்திருந்தது.

  தன் மனக்காட்சி, காற்று கலைத்துப் போன கோலமாகியதை விழுந்துக் கிடந்த அந்தப் புளியமரம் அமைதியாய் அறிவித்துக் கொண்டிருக்க, சோகம் சுமந்த முகத்துடன் அங்கு வந்து நின்றார் ரங்கசாமி.

  தன் குடிசையை சுவாதீனமாய் ஒரு பார்வை பார்த்தார். புயல், குடிசையின் சில கீற்றுக்களை மட்டுமே நகர்த்தி இழுத்துப் பார்த்ததைத் தவிர தன் குடிசைக்கு வேறெந்த சேதாரமும் இல்லை என்பதை புரிந்து கொண்டு மீண்டும் புளியமரத்தில் தன் சோகப் பார்வையை பதித்தார்.

  மரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஆளாளுக்கு ஆச்சரியங்களை அள்ளி இரைத்தபடி இருந்தனர்.

  ""என்னய்யா இது? இந்தப் புளியமரம் இப்படி விழும்ன்னு நான் கொஞ்சம்கூட நெனச்சுப் பார்க்கலே!''

  ""யார்தான்யா நெனச்சாங்க? ரெண்டாளு சேர்ந்து அணைச்சாலும் அணைக்க முடியாத கனம் இருக்கின்ற இந்த மரம், இப்படி திடுதிப்புன்னு விழும்னு யாருமே நெனக்கலே!''

  ""அட, அதெல்லாம் இருக்கட்டும்யா! மரம் எப்படி விழுந்துக் கெடக்குதுன்னு பார்த்தீங்களா? ரோட்டுப் பக்கம் தவிர மத்த மூணு பக்கத்துல எந்தப் பக்கம் விழுந்திருந்தாலும், நாலைஞ்சு வீடுங்க தரை மட்டமாயிருக்கும்!''

  ""அதோட போயிருக்குமா? புயலுக்கு பயந்து வீட்டுக்குள்ளே அடைஞ்சுக் கெடந்த மக்க உசிரையுமில்லே காவு வாங்கியிருக்கும்.. நல்லவேளை யார் செஞ்ச புண்ணியமோ அப்படி ஒண்ணும் ஆகலே!''

  ""இதுல இன்னொரு ஆச்சரியம் பார்த்தீங்களா? அடிச்ச புயலுக்கு நம்ம பகுதியில மரம் மட்டைங்க எல்லாம் மேற்கால சாய்ஞ்சுக் கெடக்குதுங்க. இந்தப் புளியமரம் என்னன்னா, கெழக்காலல்லே விழுந்திருக்கு!''

  ""அட, ஆமாய்யா...!''

  அப்போதுதான் ரங்கசாமியும் அந்த உண்மையை யோசித்தார். வீசிய புயலுக்கு விழுந்த மரங்கள் மேற்கு நோக்கி சாய்ந்திருக்க, புளிய மரம் மட்டும் விதிவிலக்காக கிழக்கு நோக்கி ஏன் விழவேண்டும்? தன் குடிசையை காப்பாற்றத்தானோ? பூவும் பிஞ்சுமாக விழுந்துக் கிடந்த புளிய மரத்தையே வெறித்துக் கொண்டிருந்தார்.

  போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாதபடி தெருவை சீர் செய்யும் பொறுப்புடன் புளிய மரக் கிளைகளை அரிவாளால் கழித்துக் கொண்டிருந்தான் மருகானந்தம். அவனுடன் மேலும் சிலரும் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  அந்த முருகான்ந்தம் இதே புளியமரத்தில் தொட்டில் கட்டிப் போட்டு தாலாட்டில் தூங்கிய கைக்குழந்தையாக இருந்த அந்தக் காலங்களையும் பார்த்தவர்தான் ரங்கசாமி. அப்போதல்லாம் ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்த ஆற்றங்கரை தெருவிலிருக்கும் குடிசைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ரங்கசாமியின் குடிசைக்கு அருகே நிழல் பரப்பிக் கொண்டு நின்றிருந்த அந்த ஒற்றைப் புளிய மரம்.

  மத்தியான வெயிலுக்கு அதன் நிழலில் தஞ்சமடைய குடிசாவாசிகள் வந்து அமரும் போதெல்லாம் ரங்கசாமி வீடு களை கட்டியிருக்கும். ஊர்க்கதை, உறவுக் கதை என்று சலசலப்பும் கலகலப்புமாக இருக்கும் அந்த இடம். இரவு நேரங்களிலோ புளிய மர சிலு சிலு காற்றுக்கு வரிசைக் கட்டிக் கொண்டு பாய், தலையணையுடன் படுக்கைக்கு தயாராகிவிடுவர் சிலர்.

  இருட்டிய பின் புளிய மரத்தில் அடையும் பறவையினங்கள் கூட அடங்கிவிடும். பாய் விரித்துப் படுக்க வந்தவர்கள் வாய் மட்டும் ஓயாமல் நள்ளிரவு தாண்டியும் சலசலத்தபடி இருக்கும்.

  அப்படியொருநாள் உறவுக்கார வீட்டுக்கு விருந்தினனாக பாய் விரித்துப் படுக்க வந்தவன்தான் யூசுப்! புளியமரத்துப் படுக்கைவாசிகளின் சுதந்திரம் பறிக்க வந்தவன் என்பது யாருக்குத்தான் அப்போது தெரியும்?

  அந்தத் தெருவில் குடியேற ரங்கசாமியிடம் அவன் கெஞ்சிக் கூத்தாடியதில், தன் குடிசைக்கு அருகே அவனும் ஒரு குடிசைப் போட்டுக் கொள்ள அனுமதி தந்தார். அப்போதே விழத் தொடங்கிவிட்டது புளிய மரத்தடி மகிழ்ச்சிகளுக்கான முதல் அடி!

  விசாலமான மரத்தடி மெல்ல மெல்ல யூசுப்பின் ஆக்கிரமிப்புக்கு ஆளானதில், மரத்தடி கூட்டம் குறையத் தொடங்கியது. ஒவ்வொரு முறை குடிசைக்கு கீற்று மாற்றும் போதெல்லாம், யூசுப்பின் குடிசை நீளம், அகலமென வளரத் தொடங்கியதில் அவன் வீட்டோரம் ஓடிய புளியமர வேர்கள் வெட்டப்பட்டன.

  அந்த இடம் பறிபோவதை விடவும், புளியமரத்து கிளை வேர்கள் வெட்டப்படுவதற்காகவே யூசுப்பிடம் வரிந்துக் கட்டுவார் ரங்கசாமி. ஒருசமயம், வேரை வெட்டியதற்காக யூசுப்புக்கும் கிழவருக்கும் சண்டை முற்றியதில் தெருவே கூடிவிட்டது. வயதானாலும், ரங்கசாமியின் முறுக்கேறிய கைகளும் தோள்களும் இன்னமும் பலம் மிகுந்ததாகவே இருப்பதை அந்தத் தெருவே உணர்ந்த நாள் அன்று. யூசுப்பைப் போட்டுப் புரட்டி எடுத்துவிட்டார். யூசுப்புக்கு எதிராக தெரு சனமும் கிளர்ந்தெழுந்ததில், அன்றோடு அடங்கத் தொடங்கியது யூசுப்பின் கொட்டம். ஆனாலும் புளியமரத்தடியின் பழைய நாட்கள் திரும்பிய பாடில்லை. தெருவே மாறிப் போனது கால ஓட்டத்தில்.

  தன் மூன்று மகள்களுக்கும் இரண்டு மகன்களுக்கும் திருமண விருந்து பரிமாறியதும், தன் மனைவி தங்க பாப்புவை சவக்கோலத்தில் கிடத்தியதுமான அந்தப் புளிய மரத்தடிதான் ரங்கசாமிக்கு எல்லாமும் ஆகிப்போனது.

  இப்போது முருகானந்தம் குழுவினர், கால்பங்கு கிளைகளை கழித்து ஓரளவுக்கு பாதை ஏற்படுத்தியிருந்தனர். பொடிசுகள் விழுந்து விழுந்து புளியம் பிஞ்சுகளை சேகதித்துக் கொண்டிருந்தனர்.

  ""இந்தப் பெரிய கிளைய வெட்டுங்கடா! அதை இழுத்துப் போட்டீங்கன்னா, சுளுவா தெருவ சுத்தம் பண்ணிடலாம்!'' என்ற அந்தக் குரல் ரங்கசாமியை பழைய நினைவுகளிலிருந்து மீட்டெடுத்தது. அது யூசுப்பின் குரல்!

  ரங்கசாமியின் காது மடல்கள் சிவுசிவு என சூடேறியது.

  ""எல்லாம் இவன் செஞ்ச வேலைதான்யா! கரையான் அரிக்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா இந்த மரத்தக் கொன்னுட்டான்யா!''என கத்திக் கொண்டே, யூசுப்பை அடிக்கப் பாய்ந்தார் ரங்கசாமி. அதற்குள் சட்டென சிலர் அவரை தடுத்துப் பிடித்தனர். நாடி தளர்ந்திருந்த அந்த மனிதருக்கு அப்படியொரு ஆவேசம் வருமென யாரும் எதிர்பார்க்கவில்லை.

  வெகுதூரம் வரை யூசுப்பின் மீது வசை மழை பொழிந்தவரை, "ஏன் புயலில் வீழ்ந்த ஒரு மரத்துக்காக இந்தக் கிழவர் இத்தனை அலப்பறை செய்கிறார்?' என்ற கேள்வி முருகானந்தம் போன்ற இளசுகள் பலருக்குள்ளும் இருந்தது.

  அதுவரை வெயில் படாத நிலம், ஊர் நடப்புக்களை அலசும் விவாதக் களமாக, பழமையின் இனிமையில் இளைப்பாறுதல் தலமாக இருந்த அம்மரத்து நிழலில், இதுநாள் வரை கோலோச்சிய தன் நிலை, திடுமென சூன்யமாகிப் போனதை உணர்ந்த ரங்கசாமிக்கு கண்ணீர் கட்டுக்கடங்க மறுத்து வழிந்தபடி இருந்தது.

  அப்போது திடீரென வீசிய பலமான காற்றுக்கு உதிர்ந்துக் கிடந்த புளியமரத்து இலைகள் பறந்ததில், ரங்கசாமியின் முகத்திலும் வியர்த்திருந்த வெற்றுடம்பிலும் வந்து அப்பிக் கொண்டன.

  அது... அந்த மனிதர் மீதான அம்மரத்துக்கான கடைசி ஸ்பரிசம்!

  தோளில் கிடந்த துண்டை எடுத்து அழுத்தமாக தன் வாயைப் பொத்திக் கொண்டார் ரங்கசாமி. அதையும் மீறி வெடித்துக் கிளம்பியது அவரிடமிருந்து அந்த மரத்துக்கான அஞ்சலி அழுகை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com