சங்கீதம்: மரபும் கற்பனையும் என் பலம்!

கர்நாடக சங்கீதத்தை உள்நாட்டு மேடைகளிலும் வெளிநாட்டு மேடைகளிலும் பாடிவரும் இளம் குயில், நம்பிக்கை நட்சத்திரம் டி.எம்.கிருஷ்ணா. அவர் பாடுவதைக் கேட்கும்போது நமக்கு ஏற்படும் புத்தனுபவம், அவருடன் பேசும்போத
சங்கீதம்: மரபும் கற்பனையும் என் பலம்!

ர்நாடக சங்கீதத்தை உள்நாட்டு மேடைகளிலும் வெளிநாட்டு மேடைகளிலும் பாடிவரும் இளம் குயில், நம்பிக்கை நட்சத்திரம் டி.எம்.கிருஷ்ணா. அவர் பாடுவதைக் கேட்கும்போது நமக்கு ஏற்படும் புத்தனுபவம், அவருடன் பேசும்போதும் நமக்கு ஏற்படுகிறது.

வட அமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் கர்நாடக இசையை ஒலித்திருக்கும் கிருஷ்ணா, மியூசிக் அகாடமியில் 5 விருதுகள், யுவகலா பாரதி, சங்கீத கலா பாரதி, இசைப் பேரொளி, நாதபூஷணம், சங்கீத சிரோமணி, சங்கீத நாடக அகாடமியில் உஸ்தாத் பிஸ்மில்லாகான் நினைவாக வழங்கப்படும் "யுவ புரஸ்கார் அவார்ட்' போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இனி... இசையால் வசமாக்கும் கிருஷ்ணாவின் பேச்சு!

  

உங்கள் குடும்பத்தில் எல்லோருமே தொழில்துறையில் இருக்கின்றனர். உங்கள் சித்தப்பா டி.டி.கே. வாசு ஒரு பெரிய தொழிலதிபர். அப்படியிருக்க நீங்கள் மட்டும் எப்படி இந்த இசைத்துறைக்கு வந்தீர்கள்?



 நீங்கள் கூறுவது உண்மைதான். ஆரம்பத்தில் எங்கள் குடும்பத்தில் எனது தாய் பிரேமா ரங்காச்சாரி மட்டும்தான் சங்கீதம் பாடுவார். இசையில் பி.ஏ., பட்டம் முடித்தவர். அவருக்கு சங்கீதம் சொல்லிக் கொடுக்க எனது குரு சீதாராம சர்மா வீட்டுக்கு வந்து வகுப்பெடுப்பார். அப்பொழுது 3 வயதான நான் ஒரு பெரிய குச்சியை வைத்துக் கொண்டு அதனைத் தம்புராவாக மீட்டி பாடுவது போல் செய்வேணாம். அதைப் பார்த்துத்தான் பிறகு எனக்கு சங்கீதம் வரும் என்று கற்றுக் கொடுத்திருக்கின்றனர். 5 வயதிலிருந்து நான் குரு சீதாராம சர்மாவிடம் சங்கீதம் படிக்கத் தொடங்கினேன்.

அப்பல்லாம் மியூசிக் அகாடமியில் "ஸ்பிரிட் ஆப் மியூசிக்' என்று கொண்டாடினார்கள். அதில் என்னை சித்தப்பா டி.டி.கே. வாசு பாடச் செய்தார். 1988-ல் நான் பாடிய அதுதான் எனது முதல் நிகழ்ச்சி. அடுத்து 1989-ல் ஒரு கச்சேரியில் பாடினேன். அவ்வளவுதான் எனது ஆரம்ப நிகழ்ச்சிகள். அப்பொழுது நான் சின்னவன். எனது பால்ய

நண்பர்கள் உன்னிகிருஷ்ணன், சஞ்சய் சுப்ரமண்யம் போன்றவர்கள்  எல்லா கச்சேரிகளையும் கேட்டு, எனது கேள்வி ஞானத்தையும் வளர்த்துக் கொண்டேன். அப்பொழுது ஒய்.எம்.சி.ஏ. என்ற இளங்கலைஞர்கள் அசோசியேஷனில் பல கச்சேரிகள் நடக்கும். அதில் விஜயசிவா, உன்னிகிருஷ்ணன், சஞ்சய் சுப்ரமண்யம், சங்கீதா போன்றவர்களுடன் சேர்ந்து கச்சேரிகளைக் கேட்பேன். 1988 முதல் 1992 வரை நான்கு வருடம் நான் கேள்வி ஞானத்தை வளர்த்துக் கொண்டதால் எனக்கே சங்கீதத்தின் மீது பெரிய ஆர்வம் வந்துவிட்டது. அதன்பிறகுதான் நான் இந்த சங்கீதத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்.

உங்களின் முதல் கச்சேரியைப் பற்றி கூறுங்களேன்?

1992-ல் பன்னிரெண்டாம் வயதில் சாஸ்திரி ஹாலில் நான் பாடிய வர்ணம் கச்சேரிதான் எனது முதல் கச்சேரி. அதில் ஆரம்பம் முதல் முடியும் வரை பல வர்ணங்களை எடுத்து ராகம், கற்பனை சுரம் பாடி முழு கச்சேரி போலப்பாடினேன். அந்த கச்சேரிக்கு வந்திருந்த எல்லா பிரபல வித்வான்களும் என்னை வந்து பாராட்டினார்கள். அடுத்தும் வேறு ஒரு கச்சேரியை அந்த இடத்திலேயே பாடினேன். அதன்பிறகுதான் நான் தொடர்ந்து பல கச்சேரிகளைச் செய்ய ஆரம்பித்தேன். இப்பொழுது 18 வருடங்களாகத் தொடர்ந்து பாடி வருகின்றேன்.

  

உங்களின் குரு யார்?

நான் தொடக்கத்தில் குரு சீதாராம சர்மாவிடமும் செங்கல்பட்டு ரங்கநாதனிடம் மனோதர்ம சங்கீதப் பயிற்சியும் செம்மங்குடி சீனிவாச ஐயரிடம் ஏழு வருடங்கள் சங்கீதம் படித்தேன். மற்றபடி கேள்வி ஞானமும் எனக்கு மானசீக குருவாக இருக்கிறது.

  

 உங்களின் கச்சேரிகள் எல்லாம் பாரம்பரிய எல்லைக் கோட்டுக்குள்ளேயே இருக்கிறது. செம்மங்குடியின் மாணவர் என்பதால் அவர் வழியைப் பின்பற்றிப் பாடுகிறீர்களா?

அப்படியில்லை. பொதுவாகவே சம்பிரதாய வழிதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். நமது சங்கீதத்தில் பாடுவதற்கு என்ன இல்லை? பொதுவாக ரசிகர்கள் கச்சேரி கேட்க எதுக்காக வர்றாங்க? அவங்க காதுக்கு கச்சேரி இனிமையா இருக்கணும்; மனசுக்கு ஒரு சாந்தி கிடைக்கணும்; கச்சேரியில் ஒரு புதிய அனுபவம் கிடைக்கணும்; மனசு மகிழ்ச்சியாக இருக்கணும்... இந்த நான்கு காரணங்களுக்காகத்தான் கச்சேரி கேட்க வர்றாங்க. இதை மனதில் கொண்டுதான் நான் கச்சேரி செய்கிறேன். மரபும், கற்பனை வளமும்தான் என்னுடைய இசையின் பலம்.

  

உங்களின் கச்சேரி அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?

வயதானவர்களைப் போலவே சிறியவர்களும் என் கச்சேரியைக் கேட்டு சந்தோஷப்படுகிறார்கள். கேரளாவில் என் குருநாதர் செம்மங்குடி சீனிவாச ஐயர் பாடவேண்டிய கச்சேரிக்கு வயதான காரணத்தால் அவர் போகமுடியாமல் போய்விட்டது. அது தெரியாமல் நான் அங்கு சென்று அந்த கச்சேரியில் பாட வேண்டியதாகிவிட்டது. சின்னவனான என்னபை பார்த்து முதலில் ஏளனம் பேசியவர்கள் கச்சேரியைக் கேட்டு என்னைப் பெரிதும் பாராட்டியதுடன் என் குருநாதருக்கும் ஃபோன் பேசி பாராட்டச் செய்தார்கள். அது எனக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

  பெங்களூரில் ஓர் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களுக்கு முன்னால் ஒரு நிகழ்ச்சி. சுமார் 800 பேர் அமர்ந்திருந்தனர். கர்னாடகக் கச்சேரி என்பதால் ஆர்வமில்லாமல் இருந்தார்கள். நான் ஒரு மாணவரை எழுப்பி காரணம் கேட்டதற்கு, ""கர்நாடக சங்கீதம் இஸ் வெரி வெரி ஸ்லோ... ஒரே போரிங்... இதில் எந்த த்ரில்லிங்கும் இருக்காது...'' என்று கூறினார். அனைவரும் கைதட்டி அவரை ஆதரித்தனர்.

 ""நான் ஒரு பாடறேன். பிடிக்கவில்லை என்று நீங்கள் சொல்லிவிட்டால் நான் கச்சேரி பாடுவதை நிறுத்திவிடுகிறேன்'' என்று சவால் விட்டேன்.

  மாணவர்களும் சரி என்றனர்.

நான் ஒரு பாட்டைப் பாடி அதற்கு கற்பனை சுரத்தை விறுவிறுப்பாக இரண்டு காலத்திலும் பாடி முடித்தேன். அரங்கமே கைதட்டலாம் அதிர்ந்தது. முதலில் கர்நாடக இசையை "போர்' என்று சொன்ன மாணவர், ""ஐயம் சாரி சார்'' என்றார்.

  

நீங்கள் ஜுகல் பந்தி, ஃபியூஷன் போன்று ஏதாவது சங்கீதத்தில் புதுமை செய்துள்ளீர்களா?

நிச்சயமாக இல்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை. நான் வர்ணத்தை முழு நேரக் கச்சேரியாக செய்துள்ளேன். அது புதுமை இல்லையா? இந்த வருடம் மியூசிக் அகாடமி இசை விழா நிகழ்ச்சியில் நான் கச்சேரிக்கு நடுவில் "விரிபோணி' வர்ணத்தை ராகம், கற்பனை சுரம் என்று வைத்துப் பாடி முடித்தேன். அதற்கு பல எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் கிளம்பின. வர்ணம் கச்சேரிக்கு முதலில்தானே பாடவேண்டும். கச்சேரி களை கட்டுவதற்காக (வார்ம்-அப் செய்ய) அல்லவா வர்ணம் பாடவேண்டும். நீங்கள் எப்படி அதை ஒரு உருப்படி போல் நடுவில் வைத்துப் பாடலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படியெல்லாம் எந்த சட்டமும் இல்லை. இசையின் எல்லா இசை வகைகளையும் எந்த நேரத்திலும் பாடலாம். பதம், ஜாவளி, கீதம், தேவாரம், பிரபந்தம், அஷ்டபதி என்று ஒவ்வொரு உருப்படிக்கும் ஒரு தனி அழகு இருக்கிறது. அதனை புதுமை செய்து வழங்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. (மற்ற வித்துவான்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை)

  

இசை ஆல்பம்கள் ஏதாவது வெளியிட்டுள்ளீர்களா?

இதுவரை 30 ஆல்பம் வெளிவந்துள்ளது. அதில் சில எனது நேரடிக் கச்சேரிகள். இன்னும் சில தனிப்பட்ட ஆல்பமாகவும் வெளிவந்துள்ளன.

இதுதவிர இயக்குனர் ஜெயந்திராவின் "மார்கழி ராகம்' என்ற படத்தில் கச்சேரி செய்வது போல பாடி நடித்துள்ளோம். அதில் நான் 3 தனிப் பாடல்களும் பாம்பே ஜெயஸ்ரீ 3 தனிப்பாடல்களும், இருவரும் சேர்ந்து 2 பாடல்கள், ஆக மொத்தம் எட்டுப் பாடல்களை கச்சேரி செய்வது போலவே பாடி படமாக எடுத்து வெளிவந்துள்ளது.

  

சங்கீதத்தில் ஆராய்ச்சிப் பணி எதுவும் மேற்கொண்டீர்களா?

நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். சுப்புராம தீட்சிதரின் "சங்கீத சம்பிரதாய பிரதர்ஷினி' நூலில் உள்ள பாடல்களுக்கு இசையமைத்து வருகின்றேன். ஏழு பழம்பெறும் வித்வான்களின் வாழ்க்கையை "வாய்ஸ் வித் இன்' என்னும் ஆங்கிலப் புத்தகமாக 2007-ல் வெளியிட்டுள்ளேன். பாம்பே ஜெயஸ்ரீ, சஞ்சய் சுப்ரமண்யத்துடன் இணைந்து "பேராசிரியர் சாம்பமூர்த்தி' என்னும் நூலை 2001-ல் அகாடமி மூலம் வெளியிட்டுள்ளேன்.

  

இளந்தலைமுறையினர் சங்கீதத் துறைக்கு வருவதற்கு நீங்கள் எந்த விதத்தில் உதவுகிறீர்கள்?

ஒய்.எம்.சி.ஏ.- என்ற அமைப்பு மூலமும், "மாத்ருக' என்ற அமைப்பு மூலமும் பல இளைஞர்களுக்கு சங்கீதத்தைக் கற்றுக் கொடுத்து வருகின்றோம். சென்ற வருடம் கூட பாம்பே ஜெயஸ்ரீயுடன் இணைந்து "சுவானுபவா' என்னும் அமைப்பு மூலம் கல்லூரி மாணவர்களுக்கு ஆறு நாள் பயிற்சி முகாமை வைத்து நடத்தி இசைப் பயிற்சி அளித்துள்ளோம்.

படங்கள் : ஏ.எஸ். கணேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com