சந்திப்பு: பாரதிய சங்கீதம்தான் பரூர் பாணி!

வயலின் மேதை பேராசிரியர் பரூர் எம்.எஸ்.அனந்தராமன், பரூர் சுந்தரம் ஐயர் பாகீரதி தம்பதியர்க்கு மகனாக 1924ஆம் ஆண்டில் பிறந்தவர். இவரது தகப்பனார் சுந்தரம் ஐயர் மிகப்பெரிய வயலின் மேதையாக இருந்ததால் அவரிடமே
சந்திப்பு: பாரதிய சங்கீதம்தான் பரூர் பாணி!

வயலின் மேதை பேராசிரியர் பரூர் எம்.எஸ்.அனந்தராமன், பரூர் சுந்தரம் ஐயர் பாகீரதி தம்பதியர்க்கு மகனாக 1924ஆம் ஆண்டில் பிறந்தவர். இவரது தகப்பனார் சுந்தரம் ஐயர் மிகப்பெரிய வயலின் மேதையாக இருந்ததால் அவரிடமே பாட்டும், வயலின் வாசிக்கவும் கற்றுத் தேர்ந்தார். இவரது இளைய சகோதரரே பரூர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆவார்.

  ஏழு வயதில் தன் தந்தையுடன் இணைந்து வயலின் வாசிக்கத் தொடங்கியவர் அனந்தராமன். இன்றைக்கும் மகன்கள், பேரன்களோடு சேர்ந்து வாசித்து, பரூர் பரம்பரையை நிலைநாட்டி வரும் அந்த இசை மேதையை நாம் சந்தித்தோம். பிரவாகமாய் அவரின் பதில்கள் இதோ...

 உங்கள் ஊர் எங்கே இருக்கிறது?

 பரூர் என்பது எங்கள் ஊர். அது கேரள மாநிலத்தில் ஆல்வாய் பக்கம் காலடிக்கு அருகில் உள்ளது. அங்கே ஓர் அழகான ஆறு உள்ளது. ஆற்றுக்கு இந்தப்புறம் காலடி, அந்தப்பக்கம் பரூர் இருக்கும். ஆனால் எங்கள் தகப்பனார் காலத்திலேயே நாங்கள் பரூரில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டோம். நான் பிறந்ததே மைலாப்பூர் அப்பர்சாமி கோயில் தெருவிலுள்ள இந்த வீட்டில்தான்.

உங்கள் தகப்பனாரின் குரு யார்?

எங்கள் தகப்பனார் சங்கீதம் படித்தது எல்லாம் கேரளாவில் திருவனந்தபுரத்தில்தான். அப்பொழுது திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் சங்கீத வித்வானாக இருந்தவர் திருவனந்தபுரம் ராமசாமி பாகவதர். அவர் வாய்ப்பாட்டிலும், வீணை, வயலின், புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகளை வாசிப்பதிலும் மேதையாக இருந்தார். அவரது மகன் நாராயண பாகவதரும் சமஸ்தானத்தில் வயலின் வித்வானாக இருந்தார். அவர்கள் குருகுலத்தில் இருந்து சங்கீதமும், வயலின் வாசிக்கவும் கற்றவர் என் தந்தை. பின்பு அவரிடம் இருந்துதான் நாங்கள் வயலின் வாசிக்கக் கற்றுத் தேர்ச்சி பெற்றோம்.

 ஆரம்ப காலத்தில் உங்களின் இசை வளர்ச்சி எப்படி இருந்தது?

   அந்தக் காலத்தில் சென்னை மைலாப்பூரில் இருந்த எங்கள் வீட்டிற்கு எனது தகப்பனாரைப் பார்க்க பெரிய சங்கீத வித்வான்கள் எல்லாம் வருவதுண்டு. மைசூர் வாசுதேவாச்சாரி, அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், டைகர் வரதாச்சாரி, பாபநாசம் சிவன், மதுரை மணி ஐயர், ஜி.என்.பி., செம்மங்குடி, முசிறி என்று எல்லோரும் இங்கு வந்து பாடுவதுண்டு. அப்பொழுது அதையெல்லாம் நான் கற்றுக் கொண்டதுடன், அவர்களோடு சேர்ந்து நான் வயலின் வாசித்தும் பயிற்சி செய்வேன்.

   இவ்வாறு நான் பல சங்கீத வித்துவான்களிடமும் கேட்டு சங்கீதத்தை வளர்த்துக் கொண்டேன்.

 உங்களின் கச்சேரி அனுபவங்களைக் கூறுங்களேன்..?

   முதலில் எங்கள் தகப்பனார் பரூர் சுந்தரம் ஐயர் தனியாக வயலின் கச்சேரிகளைச் செய்துவந்தார். தென்னிந்தியாவைப் போலவே வட இந்தியாவிலும் இவரது கச்சேரிகள் நடப்பதுண்டு. இவர்தான் முதன்முதலில், 1906-ல் பம்பாயில் வயலின் வாத்தியத்தை அறிமுகம் செய்தவராகும். அங்கு பண்டிட் விஷ்ணு திகம்பர் பலுஸ்கார் என்ற இந்துஸ்தானி சங்கீத மேதை "கந்தர்வ மகா வித்யாலயா' என்னும் சங்கீத நிறுவனத்தை முதல்வராக இருந்து நடத்தி வந்தார். அவருடன் சேர்ந்து பல இடங்கில் இவர் வயலின் வாசித்தார். அப்பொழுதுதான் பம்பாயில் வயலின் வாத்தியத்தைப் பற்றி எல்லோரும் தெரிந்து கொண்டார்களாம். அங்கு பல நாட்கள் தங்கி, இந்துஸ்தானி சங்கீதத்தையும் என் தந்தை கற்று தேர்ச்சி பெற்றிருந்தார். எனது மூத்த சகோதரிகளான சீதாலட்சுமி, முக்தாம்பாள், மரகதம், ராஜி என்று அனைவருமே நன்றாக வயலின் வாசிப்பார்கள். எனவே அப்பாவும், அக்காள் சீதாலட்சுமியும் சேர்ந்து முதலில் வயலின் டூயட் வாசித்தார்கள். பிறகு நானும் சேர்ந்து மூன்று வயலினாக வாசித்தோம். பிறகு அப்பா, நான், என் தம்பி எம்.எஸ்.ஜி. என்று சேர்ந்து மூன்று வயலின் கச்சேரிகளாகச் செய்து வந்தோம்.

 எழுபது, எண்பது வருடங்களுக்கு முன்பே பெண்கள் வயலின் வாசித்தார்களா?

   நாங்கள் அந்தக் காலத்திலேயே "ஆல் லேடீஸ் ஆர்கெஸ்ட்ராவை' நடத்தினோம். 4 பேர் வீணை, 2 பேர் வயலின், ஒருவர் புல்லாங்குழல், ஒருவர் மிருதங்கம் என்று எல்லோருமே பெண்கள் வாசிக்க, உடன் நானும் என் தந்தையும் சேர்ந்து அதில் வயலின் வாசித்து வந்தோம். மும்பையில் "ஓபேரா ஹவுஸ்' என்ற இடத்தில்தான் எங்கள் வாத்தியவிருந்தா கச்சேரி நடக்கும். தொடர்ந்து மாதக் கணக்கில் அங்கு கச்சேரி செய்துள்ளோம்.

 அப்பாவோடு சேர்ந்து நீங்கள் வெளிநாடுகளுக்கும் சென்று கச்சேரிகளைச் செய்துள்ளீர்களா?

   பம்பாயில் கச்சேரி வாசிக்கும்போதே பாகிஸ்தானில் லாகூருக்கும் சென்று வாசித்துள்ளோம். அப்பொழுதெல்லாம் சுதந்திரம் வாங்காத போது ஒரே நாடாக இந்தியா இருந்தது. ஆப்கானிஸ்தானிலுள்ள காபூலுக்கும் சென்று நாங்கள் கச்சேரி வாசித்துள்ளோம். 1974-ல் நானும் என் தம்பியும் நேபாள மன்னருடைய அழைப்பை ஏற்று அங்கு சென்று காட்மண்டு அரண்மனையில் வாசித்துள்ளோம். மிருதங்க வித்துவான் டி.வி.கோபாலகிருஷ்ணன்தான் எங்களுக்கு பக்கவாத்தியம். அப்பொழுது ராஜா எங்களைப் பாராட்டி சாலிகிராம், 1 பவழமோதிரம் மற்றும் நேபாள நாட்டு தொப்பியைப் பரிசாகக் கொடுத்து பாராட்டினார்.

 பக்கவாத்தியமாக யார் யாருக்கெல்லாம் வயலின் வாசித்திருக்கிறீர்கள்?

   நிறைய பேருக்கு பக்கவாத்தியம் வாசித்திருக்கிறேன். அரியக்குடி, செம்பை, சித்தூர், மகாராஜபுரம், முசிறி, ஜி.என்.பி., நேதநூரி, பாலமுரளி கிருஷ்ணா, கே.வி.நாராயணசாமி, டி.எம்.தியாகராஜன், மதுரை சோமு, சீர்காழி கோவிந்தராஜன், எம்.எல்.வசந்தகுமாரி, கே.பி.சுந்தராம்பாள், டி.கே.ஜெயராமன், டி.கே.பட்டம்மாள், புல்லாங்குழல் ரமணி, சிக்கல் சகோதரிகள் என்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளேன்.

   உங்களுக்குக் கிடைத்திருக்கும் விருதுகள்?

   கலைமாமணி, சங்கீத கலா நிபுணா, நாதகலாநிதி, கலைச்சுடர், திருப்புகழ்மணி, சங்கீதகலா சாகரா போன்ற பட்டங்களை வாங்கியுள்ளேன். ஸ்ரீ காஞ்சி மடம் மற்றும் அமெரிக்காவிலுள்ள பிட்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா கோயிலின் ஆஸ்தான வித்துவான் பதவிகளைப் பெற்றுள்ளேன். குடியரசுத் தலைவரிடமிருந்து சங்கீத நாடக அகாடமி விருதும் பெற்றுள்ளேன்.

 திரைப்படத்திற்கு இசையமைத்த அனுபவம் உண்டா?

   ஆரம்பகாலத்தில் பல சினிமா படங்களில் நான் வாசித்துள்ளேன். முதலில் "மீரா' படத்தில் எம்.எஸ். அவர்கள் பாடிய "காற்றினிலே வரும் கீதம்' என்ற பாட்டிற்கு வாசித்தேன். அதனைத் தொடர்ந்து பல படங்களில் வாசித்தேன். நம் குழந்தை, பூலோக ரம்பை, என்.டி.ஆரின் மல்லேஸ்வரி (தெலுங்கு), எம்.எல்.வி. பாடிய "கொஞ்சும் புறாவே' என்று பல பாடல்களுக்கு இசைக்குழுவோடு சேர்ந்து வாசித்துள்ளேன். கமலஹாசனின் "ராஜபார்வை' என்ற படத்திலும் வயலின் வாசித்த அனுபவம் உண்டு. அகில இந்திய வானொலியிலும் பல வாத்திய விருந்தாக்களை இசையமைத்தும், வாசித்தும் இருக்கிறேன்.

வயலின் வாசிப்பில் "பரூர் ஸ்டைல்' என்று ஏதாவது ஒரு பாணி இருக்கிறதா?

   எங்கள் வாசிப்பில் கர்னாடக சங்கீத பாணியும் இருக்கும். இந்துஸ்தானி சங்கீதப்பிடிகளும் இருக்கும், மேற்கத்திய இசை, கிராமிய இசை நுணுக்கங்களையும், அதிலுள்ள பிடிகளையும் கூட சேர்த்துக் கொள்வோம். மொத்தத்தில் அது ஒரு "பாரதிய இசையாக' இருக்கும்.             

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com