தலைமுறை: ரக்தியும் விரக்தியும்!

தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்துக்கு அருகாமையில் உள்ள ஊர் செம்பனார்கோயில். நாகஸ்வர உலகில் ரக்திமேளம் என்று சொன்னவுடனேயே ரசிகர்களின் மனக்கண் முன்பு தெரிவது இந்த ஊர்தான். ஐந்து தலைமுறைகளுக்கு முன்னால் வைத்த
தலைமுறை: ரக்தியும் விரக்தியும்!

தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்துக்கு அருகாமையில் உள்ள ஊர் செம்பனார்கோயில். நாகஸ்வர உலகில் ரக்திமேளம் என்று சொன்னவுடனேயே ரசிகர்களின் மனக்கண் முன்பு தெரிவது இந்த ஊர்தான். ஐந்து தலைமுறைகளுக்கு முன்னால் வைத்தியநாத பிள்ளை என்ற பெரும் நாகஸ்வரக் கலைஞர் இவ்வூரில் வாழ்ந்து வந்தார். இவர் கடினமான பல்லவிகளை மிகவும் சிறப்பாக நாகஸ்வரக் கச்சேரிகளில் வாசித்து பல்லவி வைத்தியநாத பிள்ளை என்று புகழ்பெற்று வாழ்ந்தார். இவரது வழி வந்த கொள்ளுப் பேரனான எஸ்.ஆர்.டி. வைத்தியநாதன் இந்த செம்பொன்னார்கோயில் பரம்பரையின் பெருமையை இன்றும் சிறப்பாக காப்பாற்றி வருகின்றார். எண்பது வயதைக் கடந்த இந்த நாகஸ்வரக் கலைஞர் இன்றும் ரக்தி மேளத்தைப் பற்றிப் பேசுவதும், அதனைப் பாடுவதும், வாசிப்பதுமாக இருக்கின்றார். அவரது ரக்தி மேளத்திற்கு முன்புபோல் இப்பொழுது அவ்வளவாக ஆதரவு கிடைக்கவில்லை என்பதை விரக்தியாக நம்மிடம் தெரிவித்தார்.

அவரது குடும்பம் ஐந்து தலைமுறைகளாக நாகஸ்வரக் கச்சேரிகளைத் தொடர்ந்து செய்வதாகவும், எல்லோரும் ரக்திமேளம் வாசித்துப் புகழ்பெற்று விளங்குவதாகவும்  விவரிக்க ஆரம்பித்தார்.

""எங்கள் கொள்ளுத் தாத்தா பல்லவி வைத்தியநாத பிள்ளைதான் பரம்பரையின் முதல் நாகஸ்வர வித்துவான். இவரது மகனாக செம்பொன்னார்கோயில் வி.ராமஸ்வாமி பிள்ளை (1880-1923) அடுத்துத் தோன்றியவர். இவர் தந்தையிடமும் பின்னர் கோட்டை சுப்பராய நாகஸ்வரக்காரரிடமும் நாகஸ்வரம் கற்றார். இவரது கடினமான ரக்திகளும், பல்லவிகளும் பெரும்புகழை அந்நாளில் இவருக்குக் குவித்தன. தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் போன்ற மடங்களில் ஆதீன வித்வானாக இருந்தார். ராமநாதபுரம், சேத்தூர், சிவகிரி, உடையார்பாளையம், சிங்கம்பட்டி, கன்னிவாடி ஜமீன்களிலும் இவர் பெரிதும் கெüரவிக்கப்பட்டுள்ளார்.

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை, கோனேரிராஜபுரம் வைத்தியலிங்கம் பிள்ளை ஆகியோரின் மேளங்கள் நிகழ்ச்சி ஒருசமயம் நடைபெற்றது. தொடர்ந்து அங்கு ராமசாமி பிள்ளை ரக்திமேளத்தை கனல் பறப்பது போல் வாசித்து எல்லோரையும் மகிழ்வித்தார். திருவீழிமிழலைக் கோயிலில் மன்னார்குடி சின்னபக்கிரிப் பிள்ளையும்,  தாத்தா ராமசாமி பிள்ளையுமாக மாறிமாறி போட்டி போட்டுக்கொண்டு வெகுசிறப்பாக நாகஸ்வரக் கச்சேரி செய்தனர். அவர் மாயவரம் மாணிக்க நாகஸ்வரக்காரரின் மகளான குட்டியம்மாளை திருமணம் செய்துகொண்ட பின்பு, மனைவியின் ஊரான மாயவரத்துக்கே எல்லோரும் வந்துவிட்டனர். அதன்பின்னால் வந்தவர்கள் எல்லாம் மாயவரத்தில்தான் தங்கி இருந்தனர் என்றாலும் ஒரு பெயருக்காக செம்பொன்னார்கோயில் என்று போட்டுக் கொண்டனர்.

  தாத்தா ராமசாமி பிள்ளையின் மகன்களே செம்பொன்னார்கோயில் எஸ்.ஆர்.கோவிந்தசாமி பிள்ளை (1897-1955), எஸ்.ஆர்.தட்சிணாமூர்த்தி பிள்ளை (1904-1976) ஆகிய நாகஸ்வரக்காரர்களாகும். இவர்கள் இருவரும் சாம்பமூர்த்தி என்பவரிடம் வாய்ப்பாட்டும், வண்டிக்காரத் தெரு ராமையா பிள்ளையிடம் நாகஸ்வரமும் கற்றுத் தேர்ச்சி பெற்றார்கள். பதினாறு வயது முதல் இவர்கள் நாகஸ்வரக் கச்சேரி செய்யத் தொடங்கினார்களாம். பரம்பரைப் பொக்கிஷமான ரக்தி வாசிப்பதில் இவர்கள் பெரிதும் புகழ் பெற்று விளங்கினார்கள்.

பெரியப்பா எஸ்.ஆர். கோவிந்தசாமி பிள்ளை ராகம் வாசிப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். இவர் ஆலாபனை செய்து விட்டதும், அந்த ராகத்தையே சிறிது நேரம் வாசித்துவிட்டுப் பல்லவியோ, ரக்தியையோ ஒன்றை அப்பா தட்சிணாமூர்த்தி பிள்ளை தொடங்குவதும், பின்பு இருவருமாக மாறி மாறி அதிலேயே விளையாட்டுக்களை நடத்தி முடிப்பதும், கேட்போருக்குப் பெரிய இசை விருந்தாக இருக்கும்.

பெரியவர் கோவிந்தசாமிக்கு மூன்று மனைவிகளும், 13 பிள்ளைகளும் இருந்தனர். இதில் முதல் மனைவி தங்கம்மாள் மூலம் பிறந்தவர்களே நாகஸ்வர வித்துவான்களான எஸ்.ஆர்.ஜி.சம்பந்தம், எஸ்.ஆர்.ஜி. ராஜண்ணா சகோதரர்கள். இவர்களும் சிறந்த நாகஸ்வர வித்வான்களாவர். சின்னவர் எஸ்.ஆர்.தட்சிணாமூர்த்தி பிள்ளையின் மகன்களே கோபாலசாமி, முத்துக்குமாரசாமி, வைத்தியநாதன், செல்வரத்தினம் ஆகிய நாங்கள் நான்கு பிள்ளைகள். இவர்களில் நானும் எஸ்.ஆர்.டி.முத்துக்குமாரசாமியும் இணைந்து செம்பொன்னார்கோயில் சகோதரர்களாக ஜோடி சேர்ந்து நாகஸ்வரம் வாசித்து வந்தோம்.

தந்தையாரைப் போல நாங்களும் வண்டிக்காரத் தெரு ராமையா பிள்ளையிடம்தான் நாகஸ்வரம் வாசிக்கப் பயிற்சி பெற்றோம். பின்பு அம்மாசத்திரம் கண்ணுசாமிப் பிள்ளையின் மூத்த மகனான மாயவரம் திருவிழந்தூர் ஏ.கே.கணேச பிள்ளையிடம் வாய்ப்பாட்டும், நாகஸ்வரமும் கற்றுத் தேர்ந்தோம். பதினான்கு வயதில் மாயவரம் ஸ்ரீமயூரநாதர், ஸ்ரீ அபயாம்பிகை கோயிலில் சகோதரர்களின் முதல் அரங்கேற்றக் கச்சேரி நடந்தது. பின்னர், எங்களின் நாகஸ்வரக் கச்சேரிகள் தென்னிந்தியாவைப் போலவே வட இந்தியாவின் பல பகுதிகளிலும் நடந்துள்ளன.

ஒருமுறை தில்லியில் பிரபல பத்திரிகையான "சங்கர்ஸ் வீக்லி' இதழ் நிறுவனர் வீட்டு திருமணத்தில் வாசித்தபொழுது மேதகு பிரதமர் ஜவஹர்லால் நேரு என் இசையில் மயங்கி, கச்சேரி முடிந்ததும், நாகஸ்வரத்தைத் தன் கையில் வாங்கிப் பார்த்து வியந்து என் இசைத்திறனைப் பாராட்டியது மறக்க முடியாத நிகழ்ச்சி.

  எனது தந்தை எஸ்.ஆர்.தட்சிணாமூர்த்தி பிள்ளையுடன் தில்லியில் கச்சேரி வாசிக்கச் சென்றிருந்தபோது அப்போதைய இந்திய ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணன் முன்னால் ஜனாதிபதி மாளிகையில் வாசித்தோம்'' என்று பெருமையாகக் கூறுகின்றார் வைத்தியநாதன்.

"ரக்தி மேளத்தினை வாசித்து ஏதாவது இசைத்தட்டு வெளிவந்துள்ளதா?' என்று கேட்டதற்கு, "ஆமாம்' என்றார். ""சுமார் 75 வருடங்களுக்கு முன்பே எனது பெரியப்பா எஸ்.ஆர்.கோவிந்தசாமி பிள்ளையும், எனது அப்பா எஸ்.ஆர்.தட்சிணாமூர்த்தி பிள்ளையும் சேர்ந்து ரக்தி மேளத்தை கொலம்பியா கம்பெனியில் இசைத்தட்டாக வெளியிட்டுள்ளனர். இவர்களுக்கு பக்கவாத்தியமாக நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் அதில் தவில் வாசித்துள்ளார் என்றார். நாங்களும் சென்னை, திருச்சி, பாண்டிச்சேரி, பம்பாய், தில்லி ரேடியோ நிலையங்களில் ரக்தி வாசித்து ரெக்கார்டிங் கொடுத்துள்ளோம். இப்பொழுதும் ரேடியோ நிலையங்களில் அதனைப் போடுகிறார்கள்'' என்று கூறினார்.

ரக்தி என்றால் என்னவென்று நீங்கள் எங்களுக்கு விளக்க வேண்டும் என்று கேட்டோம்.

""ஆடல் தெய்வம் நடராஜர் காளியோடு நர்த்தனம் செய்யும் பொழுது நந்திகேஸ்வரர் சுத்த மத்தளத்தில், "தீம் தாம்' என்ற சொல்லை அமர்த்தி, "தீம்தக தத்தித்தாம்' என்னும் மிஸ்ர கதி நடையை வாசித்ததாகக் கூறுவர். இன்றும் நடராஜ பெருமான் சுவாமி புறப்படும் பொழுது சுத்த மத்தளத்தில் "தீம்தக தத்தித்தாம்' என்ற சொல்லை மிஸ்ர நடையில் வாசிக்கின்றார்கள். இந்த சொல்லை சம்பிரதாயப்படி அனேகவித லயக் கற்பனையோடு மிஸ்ர நடை அல்லது மிஸ்ர கதியில் வாசிப்பதற்கு ரக்தி என்று பெயர், இதை விளம்ப காலத்தில் ஆரம்பமாக வைத்துக் கொண்டு அமைத்து, அதற்கு அடுத்ததாக மத்தியம காலத்தில் திஸ்ர கதியாக அமைத்து, அதற்கு அடுத்து மூன்றாவது காலம் அல்லது துரித காலத்தில் சதுஸ்ர நடையாகவும், இப்படி மூன்று காலத்தில் மூன்று நடைகள் அமைத்து வாசிப்பதுதான் ரக்தி மேளமாகும்'' என்றார் அவர்.

உங்களுக்குப் பின்னால் இப்பொழுது யார் யாரெல்லாம் ரக்தியை வாசிக்கின்றார்கள் என்று கேட்டதற்கு தனது ஐந்தாவது தலை முறையைப் பற்றிக் கூறினார். ""செம்பொன்னார்கோயில் எஸ்.ஆர்.ஜி.கே. கல்யாண சுந்தரம், எஸ்.ஆர்.டி.ஜி. ராஜேந்திரன், துரை, எஸ்.ஆர்.டி.எம்.சிவராஜ், மோகன் போன்றவர்கள் இப்பொழுது நாகஸ்வரம் வாசித்து வருகின்றார்கள் என்றாலும் பழங்காலத்தைப் போன்று இப்பொழுது ரக்தி மேளத்திற்கு அவ்வளவாக வரவேற்பு இல்லையே என்று நினைக்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கின்றது'' என்று ரக்தியைக் குறித்த தமது விரக்தியை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

வைத்தியநாதன் தில்லி சண்முகானந்த சபாவின் "நாத பிரதி பிம்பம்' (1957), தமிழக அரசின் "கலைமாமணி' பட்டமும் (1981), முத்தமிழ்ப் பேரவையின் "ராஜ ரத்னா' பட்டமும் (1987), கிருஷ்ண கான சபாவின் "சங்கீத சூடாமணி' பட்டமும் (2006), ரசிக ரஞ்சனி சபாவின் "கலா ரத்னா' பட்டமும் (2004), நாத கலா மணி பட்டமும் (2006), ஜனாதிபதி வழங்கிய சங்கீத நாடக அகாடமி விருதும் தமிழிசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர் விருதும் (2008) பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com