பரிசுக் கதை: அஸ்மிதா

எதிர்வீட்டு கோட்டைச்சுவர் மீது விழுந்திருந்த வெயில் கொஞ்சம் கொஞ்சமாக வீதியில் இறங்கியது. அஸ்மிதா, அமர்ந்திருந்த வீட்டுத் திண்ணைச் சுவர் மீது ஏறி, பிறகு திண்ணை முழுவதும் கொண்டாடி இருந்தது. காலையில் இரு
பரிசுக் கதை: அஸ்மிதா

எதிர்வீட்டு கோட்டைச்சுவர் மீது விழுந்திருந்த வெயில் கொஞ்சம் கொஞ்சமாக வீதியில் இறங்கியது. அஸ்மிதா, அமர்ந்திருந்த வீட்டுத் திண்ணைச் சுவர் மீது ஏறி, பிறகு திண்ணை முழுவதும் கொண்டாடி இருந்தது.

காலையில் இருந்து அஸ்மிதா திண்ணையை விட்டு இறங்காமல் இருந்தாள். அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத வீதியில் வெயிலும் அவ்வப்பொழுது வந்து கரையும் காக்கைகளும் மட்டுமே அஸ்மிதாவுக்கு துணையாக இருந்தன.

அஸ்மிதாவுக்கு ஐந்து வயதுக்கு மேலிருக்கும். முதல் வகுப்பு படிக்கும் அஸ்மிதாவுக்கு கலகலப்பான அவளது பள்ளிக்கூடம் ஞாபகத்திற்கு வந்தது. இந்த நேரத்துக்கு தமிழ் டீச்சர் பாடம் முடித்து, கணக்கு டீச்சர் வகுப்பை ஆரம்பித்து இருப்பார். ஓரோன் ஒன்று, ஈரோன் ரெண்டு, மூவோன் மூன்று, ஒட்டுமொத்த குரல் ஒலியில் அஸ்மிதாவின் குரல் உற்சாகமாய் ஓங்கி ஒலிக்கும். அம்மா இல்லாத வீட்டை பிடிக்கவில்லை. பள்ளி நேரங்களில் வீட்டை மறக்க முடிந்தது. இப்பொழுது அதற்கும் வழியில்லாமல் அஸ்மிதாவின் மனம் வருத்தமுற்று இருந்தது.

பள்ளிக்கு சென்று ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது. தினமும் காலையில் எப்பொழுதும்போல் அஸ்மிதா கிளம்பியதற்கும் பின்னர், அவளது தகப்பனைப் பெற்ற தாயாரான ராதிம்மா, "நாளைக்குப் போகலாம்...' என அவளைத் தடுத்து வந்தாள். வளைந்து நெளிந்து குறுகலாக செல்லும் நான்கு தெருக்களைத் தாண்டி இருக்கும் மதனிஸô நடுநிலைப்பள்ளிக்கு ராதிம்மா தான் அஸ்மிதாவை அழைத்துச் செல்லவேண்டும்.

இன்று காலை அஸ்மிதா புத்தகப் பையை எடுத்துக்கொண்டு, ""ராதிம்மா., பள்ளிக்கூடத்துக்கு வழி தெரியும் நானே போயிறட்டுமா...'' எனக் கேட்டு முடிப்பதற்குள் உச்சந்தலையில் நங்கென்று கொட்டு விழுந்தது. தலை முழுவதும் ஏற்பட்ட வலியின் அதிர்வில் அஸ்மிதா அப்படியே திண்ணையில் வந்து அமர்ந்துகொண்டாள். ""ஒழுங்கா அங்கியே ஒக்காரு. பள்ளிக்கூடம் ஒன்றும் போகவேண்டாம்...'' என ராதிம்மா வெடுக்கென கட்டளையிட்டதும் தலையைத் தேய்த்துக் கொண்டிருந்த அஸ்மிதாவுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. அதைக் கஷ்டப்பட்டு கழுத்தைப் பிடித்து அடக்கிக் கொண்டாள். அழுவது, சிரிப்பது, ஆடுவது, பாடுவது, விளையாடுவது இப்படி எல்லாமே அம்மாவுடன் முடிந்து விட்டதைப் போல அஸ்மிதா வெறுமையாய் உணர்ந்தாள்.

அஸ்மிதாவுக்குப் பின்புறமாக சென்றுவிட்ட வெயில் முன்புறமாக அவளது நிழல் உருவத்தை வினோதமாய் வேடிக்கை காட்டியது. லேசாகத் தலையை அசைத்தாள். நிழலும் அசைந்தது, கைகளை தூக்கி தலை கோதினாள். அதுவும் அவ்வாறே செய்து காட்டியது. அஸ்மிதாவுக்கு இந்த ஊமை விளையாட்டு பிடித்திருந்தது. அதில் சிறிதுநேரம் பொழுதுபோனதில் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

சிறுமிக்கான முகத்தோற்றம் மாறி இருந்தது. அப்பா, அம்மா சண்டையில் அடிவாங்கும் அம்மாவின் கால்களைக் கட்டிக்கொள்ள அஸ்மிதா ஒருமுறை குறுக்கே சென்றாள். அப்பா முரட்டுத்தனமாக அவளைப் பிடித்துத் தள்ளியதில் நெற்றியில் ஏற்பட்ட பலத்த காயம் ஆழமான வடுவாக மாறியிருந்தது. அம்மா போனபிறகு தனிமையில் விடப்பட்ட இரவுகள் அஸ்மிதாவின் தூக்கத்தை தொலைத்து இருந்தன. இவளின்  இருப்பை அறவே வெறுத்த ராதிம்மா அடிக்கடி கிள்ளியதில் கன்னங்களில் வெட்டுக்காயங்கள் பதிந்து இருந்தன. அம்மா ஏன் தன்னை விட்டுப் போனாள் என அடிக்கடி எழும் கேள்விக்குப் பதில் அறியாமல் அடிக்கடி அஸ்மிதா மனம் தவித்துப் போனாள்.

அம்மா கைருன்னிசா நல்ல வளர்த்தி. கருப்பாக இருந்தாலும் களையான முகத்துடன் திடகாத்திரமாக இருந்தாள். அப்பா மைதீன் பாட்சா குள்ளம். முகம் நீளவாக்கில் தொங்கும் மூக்குடன் இருக்கும். அம்மா, அஸ்மிதாவுடன் தனித்து இருக்கும்பொழுது மட்டும் அவளுடன் யாரும் அறியாவண்ணம் சிரித்து விளையாடுவாள். மற்றபடி அதிகம் பேசமாட்டாள். பகல் நேரங்களில் ராதிம்மா ஓயாமல் அம்மாவைத் திட்டிக்கொண்டே இருப்பாள். சிலநேரங்களில் சமையலறைப் பாத்திரங்களை சுவற்றில் வீசி அம்மாவை கலவரப்படுத்துவாள்.

இரவு நேரங்களில் அஸ்மிதா அம்மாவின் அழுகையொலி கேட்டு இருட்டில் பலமுறை எழுந்து அமர்ந்திருக்கிறாள். அம்மாவின் கண்ணீர் படிந்த கை ஆறுதலுடன் அஸ்மிதாவின் மார்பை வருடி படுக்க வைக்கும். சில நேரங்களில் குரோதத்தினால் ஏற்படும் உறுமல் அப்பாவிடம் வெளிப்படும். மூச்சுமுட்ட அடங்கிக் கிடப்பவளின் அங்க அசைவுகளும் திணறல்களும் அம்மாவிடம் ஏற்படும். இருளில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியா பயத்திலும், பதட்டத்திலும் அம்மாவின் கைகள் தன்னை அரவணைத்துக் கொள்ளாதா? என்ற ஏக்கத்தில் அஸ்மிதா நடுங்குவாள். சிறிது நேரத்தில், அப்பா, அம்மாவின் அடிவயிற்றில் எட்டி உதைப்பதும், அம்மா ஈனஸ்வரத்தில் வலி தாங்கமுடியாமல் முனகுவதும், அஸ்மிதாவிற்கு அச்சத்தை ஏற்படுத்தி சிறுநீரை வரவழைக்கும். அப்பா அறைக்கதவை அடித்து திறந்து, ""வெளியில் போடி...''ன்னு கத்துவார். அம்மா, மார்புக்கு குறுக்கே கைகளை குவித்து ஒரு பிச்சைக்காரியைப் போல அழுது மன்றாடுவாள். நிழலுருவான தோற்ற வடிவத்தில், அம்மா சத்தம் வராமல் அமைதியாய் அறையை விட்டு வெளியேறியதும், அப்பா கதவை இழுத்துச் சாத்திவிட்டு, மூச்சுவாங்க பீடியைப் பற்ற வைப்பார்.

அறைக்கு வெளியே அம்மா அமரும்பொழுது மரப்படிக்கட்டுகள் நெறியும் ஓசை கேட்கும். இரவு முழுவதும் அம்மாவின் விசும்பல் ஒலியுடன், அஸ்மிதா களைப்புற்று கண்ணயர்ந்துள்ளாள்.

இறுக்கிப் பிடித்த உச்சி வெயில் தெருவில் நிசப்தத்தை ஏற்படுத்தியிருந்தது. அஸ்மிதா உட்கார்ந்து இருந்த இடத்தை விட்டு சிறிதும் அசையாமல் சிலையாக அமர்ந்து இருந்தாள். வீட்டுக்கு வடக்கு பக்கம் வளர்ந்து நின்ற கொடிக்காப்புளி மரத்தின் உச்சிக் கிளைகளில் ஓடியாடும் அணில் பிள்ளைகளில் சரசரப்புச் சத்தம், அஸ்மிதாவுக்குத் துல்லியமாகக் கேட்டது. வாராமல் விடப்பட்டு இருந்த தலைமுடி முழுவதும் நனைத்த வியர்வை காதோரங்களில், கழுத்தின் பின்புறத்திலும் வழிந்து, அஸ்மிதாவின் கவுனை ஈரமாக்கிக் கொண்டிருந்தது. அஸ்மிதா அம்மாவைப் பற்றி பழைய நினைவுகளில் மீண்டும் மூழ்கலானாள்.

அன்று மாலை அப்பா அம்மா உறவினர்கள் வீடு நிறைய உட்கார்ந்திருந்தார்கள். அஸ்மிதா வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். இவளது பெயர் சொல்லி அப்பா உரக்க குரல் எழுப்பியதும் உள்ளே சென்று பார்த்தாள். அதிர்ந்து பேசி அறியாத அம்மா, சமையலறைக் கதவின் பின்புறமிருந்து "கொழந்தையை விடமாட்டேன். எங்கிட்ட கொடுக்கச் சொல்லுங்கோ' என தீர்க்கமாகப் பேசினாள். ஆனால் அவளது தாயார், பதட்டத்துடன் கொழந்தயக் கேக்காதடி பாவி.. பட்டது போதாதா.. விட்டுத் தள்ளுடி. அவனே வேணாமுண்டு சொன்னபிறகு, ""அவங் கொழந்தய எதுக்குண்டு கேக்கற'' என அமமாவை அடக்கினாள். அரக்கபரக்க பார்த்துக் கொண்டிருந்த அஸ்மிதாவை அள்ளி எடுத்து அணைத்துக் கொண்ட அம்மா, அய்யோ! அஸ்மிதாவை என்னண்டு விட்டுட்டு போக, என்னால முடியாது.. என அழுது அரற்றினாள். அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அப்பா வெடுக்கென அஸ்மிதாவை அம்மாவிடம் இருந்து பிடுங்கி, அப்பாவின் அக்காள் பர்வீனிடம் கொடுத்து மாடி அறைக்கு கொண்டு போகச் சொன்னார். அய்யோ! அய்யோ! அஸ்மிதா... என கத்தி அழும் அம்மாவை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே அஸ்மிதா, பர்வீன் குப்பியுடன் (அத்தையுடன்) மரப்படிகளில் ஏறிப்போனாள்.

கீழே ஒரே சத்தமும், ரகளையுமாக இருந்தது. பர்வீன் அத்தை மடியில் படுக்கவைத்து தட்டிக்கொடுத்ததில், அஸ்மிதா உறங்கிப் போனாள். அடுத்த நாள் காலை எழுந்தபோது அம்மா இல்லை. அவளது சிகப்பு நிற கிழிசல் ஜாக்கெட் மட்டுமே கரித்துணியாக அடுப்படியில் இருந்தது. அஸ்மிதாவுக்கும் கடைசிவரை நடந்தது என்ன என்றே புரியவில்லை. அதற்குப் பிறகு அம்மாவை அஸ்மிதா கனவுகளில் மட்டுமே பார்த்தாள். அப்பா திருப்பூருக்கு வேலை நிமித்தமாகச் சென்றுவிட்டார். அம்மா எங்கே? என ராதிம்மாவைக் கேட்க பயமாக இருந்தது. வேளா வேளைக்கு குளிக்கவைக்கவும், தலைசீவி துணி உலர்த்திவிடவும் ராதிம்மா அக்கறை காட்டவில்லை. ஆனால் இவள் எதைச் செய்தாலும் சதா தலையில் கொட்டிக் கொண்டிருந்தாள். கன்னங்களைக் கிள்ளிக் கொண்டிருந்தாள்.

ராதிம்மா மாதத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை திடீரென கண்களை உருட்டி, கொடூரமாக கைகால்களை ஆட்டி அசிங்கமாக சைகைகள் செய்வாள்; கொச்சையான வார்த்தைகளைக் கூறி வெடித்துச் சிரிப்பாள். அப்பொழுதெல்லாம் தகவல் கேள்விப்பட்டு பர்வீன் அத்தை வீட்டில் வந்து ஒரு சிலநாட்கள் தங்கியிருப்பாள். ராதிம்மாவுக்கு மாத்திரைகள் கொடுத்து தொடர்ந்து தூங்க வைப்பாள். அத்தகைய தருணங்களில், பர்வீன் அத்தை மிகுந்த பாசத்துடன் அஸ்மிதாவை கவனித்துக் கொள்வாள். அஸ்மிதாவை சிரிக்கச் சொல்லியும், விளையாடச் சொல்லியும் வற்புறுத்துவாள். அஸ்மிதாவால் இயல்பாய் அப்படி இருக்கமுடியாமல் போவதை எண்ணி வருந்துவாள். பர்வீன் அத்தைக்கு இரண்டும்  பையன்கள்; பெண் பிள்ளை கிடையாது. ஒங்கம்மாவை ஒங்க அத்தா, தலாக் பண்ணாம இருந்திருந்தார்னா ஒங்கதி இப்படி ஆயிருக்காதுன்னு பர்வீன் அத்தை அடிக்கடி சொல்லுவாள். அஸ்மிதாவை வெயிலின் உக்ரமும், பசியின் வேதனையும் அப்படியே அருகில் இருந்த தூணில் சாய்த்தன. திண்ணையில் இருந்து கீழே விழாமல் இருக்க அஸ்மிதா கைகளால் தூணை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள். ராதிம்மா எப்பொழுது வீட்டிற்குள் அழைப்பாள் என்ற ஏக்கத்துடன் இருந்தவளின் காதுகளில், பெரிய பள்ளிவாசல் பாங்குச் சத்தம் கேட்டது. ராதிம்மா மதியத் தொழுகை முடிந்தவுடன், சாப்பிடச் செல்வாள். தொழுகை முடிந்ததும் தன்னையும் உள்ளே அழைத்து ஒருவாய் சாப்பாடு போட வேண்டுமென அஸ்மிதா அல்லாவை மெüனமாய் தொழ ஆரம்பித்தாள்.

அஸ்மிதா உடல் முழங்கால்வரை துவண்டு கிடந்தது. முழங்காலுக்குக் கீழே திண்ணையில் இருந்து கால்கள் தொங்கிக் கொண்டிருந்தது. அஸ்மிதா மயக்கத்தில் இருக்கிறாளா? அல்லது தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டாளா? அஸ்மி! அஸ்மி! அம்மா காதில் கிசுகிசுப்பதை போன்று மெல்லிய குரலில் அழைத்ததைக் கேட்டு கண்விழித்த அஸ்மிதா, சுற்றிலும் தேடிப்பார்த்தாள். அம்மா தொலைவில் தெருவின் முடிவில் உள்ள பாலத்தருகே நிற்பது போலிருந்தது. அவசரமாய் எழுந்த அஸ்மிதா வீட்டுவாசலில் புதிதாக பூப்போட்ட அழகான பிளாஸ்டிக் செருப்புகளைப் பார்த்து ஆச்சரியம் கொண்டாள். அம்மா தான் கொண்டு வந்திருப்பாள்போல, அஸ்மிதா காலில் அணிந்து கொள்ளாமல், செருப்புகளை கையில் எடுத்துக் கொண்டு அம்மாவை நோக்கி அவசரமாய் ஓடினாள். அம்மா பொன்னிறத்திலான கோசாவை அணிந்து தேவதையைப் போல கைகளை விரித்து மிதந்து செல்வதை கண்ணுற்று அஸ்மிதா அதிசயித்துப் போனாள். யாருமில்லா வீதியில் அம்மா என வாய்திறந்து அஸ்மிதா அழைத்தும் சத்தம் வெளியே வரவில்லை.

அம்மா மதனிஸô பள்ளிக்கூடம் செல்லும் குறுகிய தெருக்களில் கால் பாவாமல் பயணித்துக் கொண்டிருந்தாள். அஸ்மிதா அம்மாவின் கைகளை பிடித்துக் கொண்டு எப்படியாவது பள்ளிக்குச் சென்றுவிடவேண்டும் என்ற ஆசையில் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தாள். அதோ பள்ளிக்கூடம் தெரிகிறது. அஸ்மிதா அம்மாவை நெருங்கிவிட்டாள். அவளது கைகளை ஆவலுடன் பற்ற முனைகையில், திடீரென அம்மா காணாமற் போய்விட்டாள். பள்ளிக்கூடமும் அங்கே இல்லாமற் போனது. அஸ்மிதா அம்மா.. அம்மா.. எனக் கூவியழைத்து ஓய்ந்து போனாள்.

அஸ்மிதா கண்விழித்துப் பார்த்தபொழுது, பர்வீன் அத்தையின் மடியில் படுத்திருந்தாள். மருதாணி வர்ணமிட்ட குளிர்ந்த கைகளால் அஸ்மிதாவின் தலைமுடியை கோதியவாறே அஸ்மீ... என்றழைத்தாள். அஸ்மிதாவுக்கு அம்மாவே நேரில் வந்தது போலிருந்தது. குப்பீ.. என்றழைத்தவாறே அத்தையை இறுகக் கட்டிக் கொண்ட அஸ்மிதாவின் உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது. என்னடா ஆச்சு, என அன்பின் மிகுதியில் கேட்ட அத்தை ஆதரவாக அஸ்மிதாவின் முதுகை தட்டிக் கொடுத்தாள். அம்மா வேணும் என அஸ்மிதா கேட்பாள் என எதிர்பார்த்த அத்தையிடம், குப்பீ.. நா பள்ளிக்கூடம் போவணும் குப்பி... என அழுத அஸ்மிதாவை அத்தை இறுக அணைத்துக் கொண்டாள்.

ராதிம்மாகிட்ட சொல்லிக்கடா.. என அத்தை சொன்னதும், அஸ்மிதா ராதிம்மா முன்பு போய் தலை கவிழ்ந்து நின்றாள். நெஜம்மாவே இந்த சனியன கூட்டிட்டு போறியா பர்வீன் என ராதிம்மா அத்தையிடம் கேட்டுவிட்டு, தலையில கொட்டிக்கிட்டே இரு, இல்லேண்டா அவ அம்மா மாதிரியே அழுத்தக்காரியா வந்து சேருவா... எனக்கூறிவிட்டு ராதிம்மா திரை விளக்கி உள்ளே சென்றுவிட்டாள்.

அத்தை பர்வீன், அஸ்மிதாவை கையைப் பிடித்து குறுகிய தெருக்களின் வழியே கவனமாக அழைத்துச் சென்றாள். அத்தை எங்கே அம்மாவைப் போல் பறந்து விடுவாளோ என்ற பயத்துடன் அவளது கைகளை இறுகப்பிடித்துக் கொண்டு அஸ்மிதா நடந்து சென்றபோது வெயில் முற்றிலும் தாழ்ந்து வீதியில் மெலிதாய் இருள்படர்ந்து கொண்டிருந்தது. வையாபுரிக் கண்மாய் கரையோரம் பகல் முழுவதும் மேய்ந்துவிட்டு வந்த பசுமாடுகள் கழுத்து மணிச் சத்தத்துடன் அணி அணியாக எதிர்வருவதை அத்தையின் பின்புறம் ஒதுங்கி நின்று கண்களை அகல விரித்து அஸ்மிதா பார்த்தாள். பசுக் கூட்டத்தில் ஒரே ஒரு கன்றுக்குட்டி, அச்சமின்றி துள்ளிக்குதித்து சென்றதைப் பார்த்த அஸ்மிதாவின் முகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறுபுன்னகை நம்பிக்கையுடன் தோன்றி மறைந்தது.

அத்தை வீடு ராதிம்மா வீட்டைப் போல பெரிதாக இல்லை. வாசலில் திரைச் சீலைக்குப் பதிலாக சாக்குப் படுதாக்கள் தொங்கின. சாணம் மெழுகிய மண் தரையும் காரை உதிர்ந்த சுவர்களும் தட்டோட்டு கூரையும் வீட்டின் நீண்ட ஆயுளை அடக்கிவாசித்தன. பீங்கான் தட்டில் போட்ட சோற்றை ரசத்துடன் சேர்த்து பிசைந்து ஆவலுடன் அஸ்மிதா சாப்பிட்டாள். அத்தையின் இரண்டு மகன்களும் குண்டு பல்ப் மஞ்சள் வெளிச்சத்தில் அஸ்மிதாவையே பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் ஈரம் தெரிந்தது.

படுத்த உடன் உறங்கிப் போன அஸ்மிதா கதவு தட்டும் ஒலி கேட்டு விழித்துக் கொண்டாள். மாமா வந்திருந்தார். அஸ்மிதா படுத்திருப்பதைப் பார்த்த மாமா அவள் தூங்குவதாகக் கருதி யாரது அஸ்மிதாவா? என அத்தையிடம் கேட்டார். அத்தை, பாவம்ங்க.. அந்தப் பொண்ணு..... என ஆரம்பித்து உருக்கமாக நடந்ததைச் சொன்னாள். எல்லாவற்றையும் கேட்ட மாமா பீடியைப் பற்றவைத்து புகையை இழுத்துவிட்டவர், நிதானமாக அத்தையைப் பார்த்து, பர்வீன் நாம இருக்கிற நெலமையில , இந்தப் பெண்ணையும் வச்சுக்கிட்டு எப்படி சமாளிக்கிறதுன்னு கொஞ்சமாவது யோசிச்சயா... என பேச ஆரம்பித்தவரை அத்தை சமாதானப்படுத்தும் முறையில் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, மாமாவின் குரல் சிறுக சிறுக உயர்ந்து அதில் சீற்றமும் தடித்த வார்த்தைகளும் வழிந்தது. அத்தையின் குரல் குறைந்துகொண்டே போய் கரகரத்து வார்த்தைகள் முடங்கியது. கடைசியில் மாமா, கொழுப்பெடுத்துப் போயி, தலாக் வாங்குன ஒந்தம்பி பெத்தபுள்ளய சீராட்டி வளர்க்குறதுக்கு நான் என்ன அரமணயா கட்டி வச்சிருக்கேன் என கத்தி ரகளை செய்தபொழுது, அத்தை அம்மாவைப் போலவே மார்புக்கு குறுக்கே கைகளை குவித்து பாவம் படிக்கணும்ன்னு ஆசைப்படுறாளுங்க... என ஒரு பிச்சைக்காரியைப் போல அழுது மன்றாடுவதைக் காணச் சகிக்காமல் அஸ்மிதா கண்களை இறுக மூடிக் கொண்டாள். அதில் ராதிம்மா வீட்டுத் திண்ணை வந்து போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com