நினைவலை: வரலாறு நன்றி கூறியது!

1960ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை காந்தியப் பொருளாதார மேதை டாக்டர் ஜே.சி. குமரப்பா சென்னையில் காலமானார். அவரது உடல் சென்னை ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வை
நினைவலை: வரலாறு நன்றி கூறியது!

1960ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை காந்தியப் பொருளாதார மேதை டாக்டர் ஜே.சி. குமரப்பா சென்னையில் காலமானார். அவரது உடல் சென்னை ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் மறுநாள் மாலை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் எரியூட்டப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் தமிழக முதல்வர் காமராஜர், சர்வோதயத் தலைவர் எஸ்.ஆர். சுப்ரமணியம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பிரஜா சோசலிஸ்டு கட்சித் தலைவர் ப.சு. சின்னத்துரை போன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நான் அப்போதுதான் சென்னை சட்டக் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்திருந்தேன். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா மாணவர் விடுதியில் தங்கியிருந்தேன். அவ்வூர்வலத்தில் நானும் கலந்துகொண்டேன்.

டாக்டர் ஜே.சி.குமரப்பா பிறப்பால் கிறிஸ்தவர். ஆனால் அவரது இறுதிக்கால விருப்பப்படி அவரது உடல் எரியூட்டப்பட்டது. அவரது உயில் பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. அதில் அவர், ""நான் இறந்த பிறகு எனது உடல் புதைக்கப்படக் கூடாது. தகனம் செய்யப்பட வேண்டும். அதற்காக விறகுகளைப் பயன்படுத்தக் கூடாது. மாட்டுச் சாணத்தினால் செய்யப்பட்ட எருவைப் பயன்படுத்த வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனது உடலை எரியூட்டுவதற்கு விறகுக் கட்டைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்குக் காரணம், சுற்றுச்சூழல் மாசுபடக் கூடாது என்பதேயாகும். மரத்தையும், விறகையும் பயன்படுத்தினால் இயற்கை வளம் பாதிக்கப்படும் என்பதோடு இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதிப்பாடும் காரணமாகும். தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளைத் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்ததோடு, தனது மரணத்துக்குப் பின்னும் அக்கொள்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் டாக்டர் ஜே.சி. குமரப்பா.

இந்தியப் பெரு நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் 1914 முதல் 1947ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தை "காந்தி சகாப்தம்' என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இக்கால கட்டத்தில் சமூக, பொருளாதாரத் துறைகளில் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட தியாகசீலர்கள் பலர் தோன்றினர். கிட்டத்தட்ட ஒரு தலைமுறை காலம், காந்தி என்னும் மாமனிதரின் அப்பழுக்கற்ற வாழ்க்கைமுறை பலதுறைகளைச் சார்ந்த அறிஞர்களை காந்தம் போல் ஈர்த்தது.

இந்திய நாட்டிலுள்ள கிராம சமுதாயத்தையும், சுமார் ஏழு லட்சம் கிராமங்களில் வசிக்கும் இம்மக்களின் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கட்டுக்கோப்பையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் பொருளாதாரக் கொள்கையை நாட்டின் முன்வைப்பதற்கு காந்தியடிகள் காரணகர்த்தாவாக இருந்தார். இக்கொள்கைகளுக்கு விஞ்ஞான ரீதியாக விளக்கமளித்து அதை காந்தியப் பொருளாதாரம் என்று சித்தாந்தரீதியான தத்துவமாக்கிய பெருமை குமரப்பாவையே சாரும்.

காந்தியடிகள் 1930ஆம் ஆண்டு நடத்திய உப்பு சத்தியாகிரகத்துக்குப் பின்னர் அவர் தனது, இருப்பிடத்தை இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள வார்தா நகருக்கருகில் உள்ள சேவா கிராமம் என்னும் கிராமத்திற்கு மாற்றிக்கொண்டார். குமரப்பாவும் வார்தாவின் ஒரு பகுதியில் உள்ள மகன்வாடி என்னும் இடத்தில் இருந்து கொண்டு தனது பணியைத் தொடர்ந்தார். இன்றளவும் அவர் எழுதிய நூல்கள் - சுமார் 100க்கு மேல் உள்ள நூல்கள் - சேவா கிராமத்தில் உள்ள ஆவணக் காப்பகத்தில் உள்ளன. இந்த நூல்கள் உண்மையிலேயே இந்நாட்டின் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என விரும்பும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஓர் தங்கச் சுரங்கம் போன்றதாகும்.

காந்தியடிகள் மறைவுக்குப் பின், சிறிது காலம் அதாவது 1953ஆம் ஆண்டு வரை மகன்வாடியிலேயே தங்கியிருந்தார். அதன்பின் 1954இல் தாய்த் தமிழகத்துக்கு திரும்பி மதுரை மாவட்டத்தில் டி. கல்லுப்பட்டி என்னும் கிராமத்தில் உள்ள காந்தி நிகேதன் ஆசிரமத்தில் தங்கி தனது பணியைத் தொடர்ந்தார். அவருக்கு 1957ஆம் ஆண்டு இதய நோய் ஏற்பட்டு அதற்காக மதுரை அமெரிக்கன் மிஷன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

அப்போது, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பி.எஸ். குமாரசாமி ராஜா, தனது சொந்த ஊரான இராஜபாளையத்தில், தனது சொந்த வீட்டை நாட்டுடைமையாக்கி, காந்தி கலை மன்றம் என்னும் நிறுவனத்தைத் துவக்கினார். அந்நிறுவனத்தைத் துவக்கிவைப்பதற்காக அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் தனி இரயிலில் ராஜபாளையம் வந்தார். திரும்பும் வழியில் டாக்டர் குமரப்பா மதுரை மருத்துவமனையில் இருப்பதாகக் கேள்விபட்டதும், அவர் சிறப்பு ரயிலை மதுரையில் நிறுத்தச் செய்து, மருத்துவமனைக்குச் சென்று டாக்டர் குமரப்பாவின் உடல்நலத்தை விசாரித்துவிட்டுச் சென்றார்.

இந்நிகழ்வின் விளைவாக டாக்டர் குமரப்பாவின் பெயரைக் கூட கேள்விப்பட்டிராத மதுரை மக்களுக்கு, நாட்டின் உயர் பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவர் மதுரை மருத்துவமனைக்கு சென்று டாக்டர் குமரப்பாவைப் பார்த்தது பெரிய செய்தியாக இருந்தது.

குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் ஆசிரமத்துக்கு ஒரு விழாவில் கலந்துகொள்ள வந்தபோது குமரப்பா வசித்த, அவராலேயே அக்கம்பக்கத்தில் கிடைக்கும் மண், செங்கல், மரத்தை உபயோகித்து நிர்மாணித்த குடிலுக்கு அவரைக் காண வந்தார். அக்குடிசையில் ஒரு ஏழை விவசாயியின் படம் மாட்டப்பட்டிருந்தது. அதை ஆர்வமுடன் பார்வையிட்ட குடியரசுத் தலைவர் அப்படத்தில் இருப்பது யார் என விசாரித்தார். அதற்கு குமரப்பா அவர்கள் இவர்தான் நமது குருநாதரின் குருநாதர் (ஙஹ் ஙஹள்ற்ங்ழ்'ள் ஙஹள்ற்ங்ழ்) என்று பதிலளித்தார்.

தனது வாழ்க்கையின் வழிகாட்டியாகவும் குருவாகவும் திகழ்ந்த காந்தியடிகள் இந்நாட்டிலுள்ள கோடானு கோடி ஏழை விவசாயிகளைத்தான் நேசித்தார். அவர் நேசித்த ஏழை விவசாயியே தனக்கும் குருநாதர் என்று குமரப்பா கருதினார்.

காந்தியடிகள், குமரப்பா அவர்களுடன் நிறையக் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். கடிதத்தில் அன்புள்ள "கு' என்றுதான் அவரை அன்புடன் குறிப்பிடுவார். ஒரு நாள் அவருக்கு வந்த கடிதத்தில் "அன்புள்ள டாக்டர் குமரப்பா' எனக் குறிப்பிட்டிருந்தார். குமரப்பா காந்தியடிகளைச் சந்தித்து எப்படி என்னை டாக்டர் என்று அழைக்கலாம். நான் எந்தப் பல்கலைக்கழகத்திலும் டாக்டர் பட்டம் பெறவில்லையே என்று கேட்டதற்கு, காந்தியடிகள் ""நான் குஜராத் வித்யா பீடத்தின் வேந்தர் (இட்ஹய்ஸ்ரீங்ப்ப்ர்ழ்) என்பது தங்களுக்குத் தெரியாதா? அப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில்தான் நான் தங்களுக்கு ஈர்ஸ்ரீற்ர்ழ் ர்ச் ஸ்ண்ப்ப்ஹஞ்ங் ஐய்க்ன்ள்ற்ழ்ண்ங்ள் என்ற பட்டத்தை வழங்கியுள்ளேன்'' எனக் குறிப்பிட்டதாகக் கூறுவார்கள்.

காந்தியடிகளின் மார்பளவுச் சிலையொன்றை இத்தாலிய நாட்டு சிற்பி ஒருவர் உருவாக்கியிருந்தார். அந்த மார்பளவு சிலையில் காந்தியடிகளே கையொப்பமிட்டிருந்தார். அச்சிலையை டாக்டர் குமரப்பா, தன்னுடன் வைத்திருந்தார். அச்சிலையை தான் இறுதிக் காலத்தில் வாழ்ந்த காந்தி நிகேதன் ஆசிரமத்தில், பொது இடத்தில் வைக்க வேண்டும் என்று விரும்பினார். தற்போது காந்தி மண்டபம் என்று அழைக்கப்படும் அவ்விடத்தில், தானே மண்ணைத் தோண்டி பீடம் அமைத்து, அப்பீடத்தை தரையில் பதித்து மண்ணை வைத்து மூடியபின் அப்பீடத்தின் மீது சிலையை நிர்மாணித்தார்.

அச்சமயம், எதற்கும் நிலைகுலையாத உறுதியான மனம் படைத்த டாக்டர் குமரப்பா, தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் உணர்ச்சி வயப்பட்டுக் குலுங்கிக் குலுங்கி அழுதுவிட்டார். பின்னர் அங்கு குழுமியிருந்த காந்தியத் தொண்டர்களிடம் நான் இவ்விடத்தில் மண்ணைத் தோண்டியெடுத்து, பீடம் அமைத்து அதில் மண்ணைப் போட்டி மூடி என் குருநாதர் காந்தியடிகளின் சிலையை நிர்மாணித்தேன். ஆனால் இவ்வளவு விரைவில் நாம் காந்தியடிகளின் கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைத்து விடுவோம் என்று எண்ணவில்லை எனக் கூறி வருந்தினார்.

இன்று காந்தியடிகள் மறைந்த தினம், காந்தியடிகள் மறைந்து சரியாக 12 ஆண்டுகளுக்குப் பின்னர், அவரது சீடரான டாக்டர் குமரப்பாவும், தனது குருநாதர் மறைந்த நாளான ஜனவரி மாதம் 30ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை இயற்கை எய்தினார். வரலாறும் அம்மாமனிதருக்குத் தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டது!

மு. மாரியப்பன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com