ஓவியம்: ஆலயங்களில் ஓவிய தரிசனம்!

புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில்,பிருந்தாவனம் ஸ்ரீராகவேந்திரர் கோயில், திருவையாறு தியாகராஜர் சன்னதி, வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோயில்... இப்படி தஞ்சாவூரைச் சுற்றியிருக்கும் பல கோயில்களில்
ஓவியம்: ஆலயங்களில் ஓவிய தரிசனம்!

புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில்,பிருந்தாவனம் ஸ்ரீராகவேந்திரர் கோயில், திருவையாறு தியாகராஜர் சன்னதி, வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோயில்... இப்படி தஞ்சாவூரைச் சுற்றியிருக்கும் பல கோயில்களில் ஓவியத் தம்பதிகளான ப.தங்கம், சந்திரோதயம் வரைந்திருக்கும் தெய்வத் திருவுருவங்களின் ஓவியங்கள் பக்தி மணம் பரப்புகின்றன. ஆலயங்களில் ஓவியங்களின் தரிசனத்தை கொண்டு வந்திருக்கும் அந்த ஓவியர்களைச் சந்தித்தோம். தங்கம் நம்மிடம் பேசியதிலிருந்து...

''நாங்கள் இருவருமே கும்பகோணம் ஓவியப் பள்ளியில் படித்தவர்கள்தான். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் நான் புகைப்படக் கலைஞராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறேன். என்னுடைய மனைவி சந்திரோதயம், தஞ்சை பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

நானும் என்னுடைய மனைவியும் தெய்வ திருவுருவங்களை ஓவியங்களாக வரைந்து ஆலயங்களுக்கே அதைக் கொடுப்பதைப் பல வருடங்களாகச் செய்து வருகிறோம்.

தஞ்சையில் பல கோயில்களில் நாங்கள் வரைந்துள்ள ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

தஞ்சை பெரிய கோயிலில் அம்மன் சன்னதியில் ஸ்ரீ பெரிய நாயகி அம்மன் ஓவியம், ஸ்ரீ சரஸ்வதி ஓவியம், ஸ்ரீ வராஹி அம்மன் ஓவியம், திருவையாறில் ஸ்ரீ தியாகராஜர் சன்னதியில், நிற்கும் பாவனையில் ஸ்ரீ தியாகராஜர் ஓவியம், வெண்ணாற்றங்கரையில் ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஹயக்ரீவர் ஓவியம், ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஓவியங்களைப் பன்னிரெண்டு நிலைகளில் வரைந்திருக்கிறோம். எல்லா ஓவியங்களும் ஆயில் பெயின்டிங் முறையில் வரையப்பட்டவை. எங்களின் சேமிப்பிலிருந்து ஓவியம் வரைவதற்கான பொருள்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்.

என்னுடைய மனைவியும் ஓவியம் வரைவதில் ஈடுபாடு காட்டினாலும் அவருக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஓவியக் கலையைச் சொல்லிக் கொடுப்பதில் மிகுந்த ஈடுபாடு. கடந்த பன்னிரெண்டு வருடங்களாக குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் அனைத்தையும் மகாத்மா காந்தி பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் கண்காட்சியாக வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். நம்முடைய தேசத் தலைவர்களைப் பற்றியும் அவர்களின் தியாகங்களைப் பற்றியும் எப்போதும் குழந்தைகளுக்கு அறிவுறுத்திக் கொண்டிருப்பதை எங்கள் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டுள்ளோம்.

என்னுடைய மகன் அமெரிக்காவில் மருத்துவராக இருக்கிறார். மகள் சென்னை இராணிமேரிக் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார். மகனின் அழைப்பை ஏற்று அமெரிக்காவுக்கு இரண்டு முறை சென்றுவந்துள்ளோம். நியூயார்க், வாஷிங்டன், டெட்ராய்டு ஆகிய நகரங்களில் உள்ள அருங்காட்சியகங்களில் இடம்பெற்றிருக்கும் உலகப் புகழ் வாய்ந்த ஓவியங்களைப் பார்த்து பிரமித்தோம். அமெரிக்க பயணம் குறித்து நான் எழுதிய 'அன்னை பூமியிலிருந்து அமெரிக்கா வரை' என்னும் நூல், தமிழக அரசின் சிறந்த பயண இலக்கியத்துக்கான விருதைப் பெற்றதைப் பெருமையாக நினைக்கிறேன்.

வயதாகிவிட்டதால் ஓடியாடி வேலை செய்வதற்கு முடியவில்லை. ஆனாலும் கடந்த பிப்ரவரி 22 அன்று தியாக தீபம் தில்லையாடி வள்ளியம்மை நினைவு நாளில் அவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பை அச்சடித்து 500 குழந்தைகளுக்குப் படித்துப் பாதுகாப்பதற்குக் கொடுத்தோம். நான் வரைந்த தில்லையாடி வள்ளியம்மையின் ஓவியத்திற்கு மாலை அணிவித்து மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

'தென் ஆப்பிரிக்காவில் இனவெறி பிடித்த ஆங்கிலேயர்களால் அங்கு குடியேறிய இந்தியர்களின் உரிமை பறிக்கப்பட்டபோது, காந்தியடிகள் அதனை எதிர்த்து 1913-ல் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்கினார். அந்தப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்களில் பதினாறு வயதே நிரம்பிய தில்லையாடி வள்ளியம்மையும் ஒருவர். உடல் நலம் குன்றிய வள்ளியம்மையை சிறையிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கு ஸ்ட்ரெச்சர் கூட கொடுத்து உதவ மறுக்கிறது சிறை நிர்வாகம். வள்ளியம்மையை ஒரு போர்வையில் வைத்து காந்தியடிகள் சிறைக்கு வெளியே தூக்கிவருகிறார். வள்ளியம்மையின் உயிர்த்தியாகம் தென் ஆப்பிரிக்காவில் பெரும் சமூக மாற்றத்துக்கு காரணமாக அமைகிறது. பின்னாளில் தில்லையாடி வள்ளியம்மையின் நினைவாக ஜோகன்ஸ்பர்க்கில் நிறுவிய நினைவாலயத்தை காந்தியடிகள் திறந்துவைத்தார்...' இதுபோன்ற தகவல்களை நாங்கள் மாணவர்களுக்கு அளித்த குறிப்பில் அச்சிட்டுக் கொடுத்திருந்தோம். தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைக் காந்தியடிகள் அவரின் வாழ்நாள் முழுவதும் மறக்கவில்லை. நாமும் மறக்கக்கூடாது. இனி வரும் தலைமுறையும் மறக்கக்கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம்'' என்றார் நெகிழ்ச்சியுடன் தங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com