காலத்தை நில் என்று சொன்ன மாயம்: அரங்கமாநகருளானே...

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், மிகப் புனிதமான காவிரி மற்றும் கொள்ளிடத்துக்கு நடுவில் தீவுப் பகுதியில் அமைந்துள்ளது. வைணவர்களுக்குப் பெரிய கோவில் என்பது இதுத

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், மிகப் புனிதமான காவிரி மற்றும் கொள்ளிடத்துக்கு நடுவில் தீவுப் பகுதியில் அமைந்துள்ளது.

வைணவர்களுக்குப் பெரிய கோவில் என்பது இதுதான். 108 வைணவத் தலங்களில் முதன்மையாக விளங்கும் இத்திருக்கோயிலின் விமானம் பிரம்ம தேவனின் தவத்தால் திருப்பாற்கடலினின்று வெளிப்பட்டுத் தோன்றியதாம். அதை பிரம்மதேவர் தேவருலகில் நெடுங்காலம் பூஜித்து வந்தார். ஸ்ரீ அரங்கநாதருக்கு தினமும் பூஜை செய்து வரும்படி பிரம்மதேவர் சூரியனை நியமித்தார். பின்னர், சூரிய குலத்தில் தோன்றிய மன்னன் இஷ்வாகு, இந்த விமானத்தைத் தனது தலைநகராகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு வந்தார். இக்குலத்தில் தோன்றிய திருமாலின் அவதாரமான ராமபிரான், தன் முடிசூட்டு விழாவைக் காண வந்த விபீஷணனுக்கு இந்த விமானத்தை பரிசாக அளித்து பூஜிக்கச் சொன்னார். இதை அவர் மிகுந்த பக்தியுடன் இலங்கைக்குக் கொண்டு சென்றார். காவிரியாற்றின் கரையை அடைந்த விபீஷணன் களைப்பால் விமானத்தைக் கீழே இறக்கி வைத்தார்.

தன் நித்தியக் கடன்களை முடித்து விட்டு, மீண்டும் புறப்பட நினைத்த போது விமானத்தை எடுக்க முயன்றும் அந்த விமானம் மேலே எடுக்க வரவில்லை. அவரால் பெயர்த்து எடுக்க முடியாத அளவுக்கு அந்த விமானம் அங்கேயே அழுந்திப் பதிந்து நிலைகொண்டது.

இதனால் கவலை கொண்டு கதறிய விபீஷணனுக்கு, அப்பகுதியை ஆண்டு வந்த சோழன் தர்மவர்மா ஆறுதல் கூறினார். அப்போது அசரீரியாக காவிரிக் கரையிலேயே தான் தங்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார் அரங்கன். விபீஷணனுக்காக, "தென்திசை இலங்கை நோக்கி' பள்ளி கொண்டருள்வதாக (அனந்த சயனத்தில் அருள்பவராக) உறுதி மொழிந்தார். அதனைக் கேட்ட விபீஷணன் ஒருவாறு மனம் தேறினான். அந்த விமானத்தைச் சுற்றிக் கோயில் எழுப்பி எல்லோரும் வழிபாட ஏற்பாடு செய்தார் சோழ மன்னர் தர்மவர்மா.

ஆனால், தர்மவர்மா கட்டிய கோயில் காவிரி வெள்ளப் பெருக்கில் அலையுண்டு மண்ணில் மறைந்தது. இந்த மன்னர் வழிவந்த கிள்ளிவளவன் என்னும் அரசன், ஒரு மர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்த போது, ஒரு கிளியானது



விமானத்தில் பரவாசுதேவர்

"வைகுந்தத்திலுள்ள மகா விஷ்ணுவின் கோயிலாகிய ஸ்ரீரங்கம் இருந்த இடம் இதுதான்' என்ற பொருள் தரும்படி, புராணச் செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது.

காவேரீ விரஜா úஸயம் வைகுண்டம் ரங்கமந்திரம்

ஸ வாஸýதேவோ ரங்கேஸ: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்

விமாநம் ப்ரணவாகாரம் வேதஸ்ருங்கம் மஹாத்புதம்

ஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாஸக:

(வைகுந்தத்தில் ஓடுகின்ற விரஜை நதிதான் காவேரீ ஸ்ரீரங்கவிமானமே வைகுந்தம். வாஸýதேவனே அரங்கன். ப்ரணவமே விமானம். விமாத்தின் நான்கு கலசங்கள் நான்கு வேதங்கள். உள்ளே கண்வளரும் அரங்கனே ப்ரணவத்தினால் விவரிக்கப்படும் பரம்பொருள்)

இப்படியே சொல்லிக் கொண்டிருந்ததாம். சோழ மன்னன் கவனத்துக்கு இது வந்தது. அதேநேரம் அரங்கன் தான் இங்கே பள்ளி கொண்டிருப்பதை மன்னனுக்கு உணர்த்த, ஸ்ரீரங்கம் மீண்டும் மகோன்னதமானது. கிளியினால் இது உணர்த்தப் பெற்றதால் இன்றும் அரங்கன் திருமுற்றத்தில் ஒரு மண்டபத்துக்கு கிளி மண்டபம் என்றே பெயர்.

இந்தத் திருக்கோயிலில்தான் ஆண்டாள், திருப்பாணாழ்வார், பீபி நாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்தனர்.

கோயில் அமைப்பு:

இத்திருக்கோயிலில் மூலவர் ஏழு திருச்சுற்றுகளுக்குள் கருவறையில் தென்திசை நோக்கி பள்ளி கொண்டுள்ளார். திருவுண்ணாழி திருச்சுற்று, ராஜமகேந்திரன் திருச்சுற்று, குலசேகரன் திருச்சுற்று, ஆலிநாடான் திருச்சுற்று, அகளங்கன் திருச்சுற்று, திருவிக்கிரமன் திருச்சுற்று, கலியுகராமன் திருச்சுற்று என ஏழு திருச்சுற்றுகளையும் உள்ளடக்கி 156 ஏக்கர் பரப்பளவில் அடையவளந்தான் திருச்சுற்று அமைந்துள்ளது.

கோயிலுக்குத் தென்புறத்தில் 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர்களால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாமல் இருந்த தெற்கு ராஜகோபுரம் 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தாயார் அருள்மிகு அரங்க நாச்சியாருக்கு, சுவாமிக்கு நடைபெறுவது போல எல்லா திருவிழாக்களும் நடத்தப்படும். கோடைத் திருவிழா, வசந்த உற்ஸவம், நவராத்திரி உற்ஸவம், ஊஞ்சல் உற்ஸவம் உள்ளிட்ட திருவிழாக்கள் முக்கியமானவை.



பிரணவாகார விமானம்


ராமானுஜர் சந்நிதி:



பரமபதத்தில் ஸ்ரீமன் நாராயணன், ஆதிசேஷனை அழைத்து "200 ஆண்டுகள் பூலோகத்தில் வாழ்ந்து சீர்திருத்தி வாரும்' என்று ஆணையிட்டார். அதனால்தான் அவர் ராமானுஜராக அவதாரம் எடுத்தார்.

சுமார் 120 ஆண்டுகள் வாழ்ந்த ராமானுஜர், தன் திருமேனியை சந்நிதி பிராகாரத்தில் அகளங்கன் திருச்சுற்றில் உள்ள மண்டபத்தில் வைத்து இறுதி கைங்கர்யங்கள் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டபடி நடந்தது. அதுவே தற்போது உடையவர் சந்நிதியாக உள்ளது. ராமானுஜர் திருமேனியைப் பள்ளிப்படுத்திய பிறகு தானாகவே திருமேனி தோன்றியுள்ளது.

அதுவே தற்போது ராமானுஜர் சந்நிதி கருவறையாக உள்ளது. இந்தச் சந்நிதி மூலவருக்கு திருமஞ்சனம் கிடையாது. அதற்குப் பதிலாக குங்குமப்பூவும், பச்சைக் கற்பூரமும் கலந்து திருமேனியில் ஐப்பசி மாதமும், சித்திரை மாதமும் சாற்றப்படும். இவ்வாறு எவ்வித ரசாயனக் கலப்பும் இன்றி இயற்கையான முறையில் குங்குமப்பூ மற்றும் பச்சைக் கற்பூரம் கொண்டு உடல் அழியாமல், சிதையாமல் இக்கோயிலில் பாதுகாக்கப்படுகிறது.

சக்கரத்தாழ்வார் சந்நிதி:

இந்தச் சந்நிதியில் உள்ள பெருமாள் சுதர்ஸன ஆழ்வார் என்றழைக்கப்படுவார். எட்டுத் திருக்கைகள், சங்கு, சக்கரம் மற்றும் அங்குசங்களுடன் காட்சியளிக்கிறார். இங்கு மூலவர் பதினாறு திருக்கரங்களுடன் உள்ளார். மூலவராகிய சக்கரத்தாழ்வாரின் பின்புறம் யோக நரசிம்மனின் திருவுருவத்தைக் காணலாம். சனிக்கிழமை தவிர, மற்ற நாள்களில் சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் நடைபெறும்.

கருடாழ்வார் சந்நிதி:

ஸ்ரீரங்கத்தில் திருமங்கை மன்னன் திருச்சுற்று அல்லது ஆலிநாடன் திருச்சுற்று எனப் பெயர்பெற்ற நான்காவது திருச்சுற்றில், 14 அடி உயரத்தில் கருடாழ்வார் உள்ளார். கருவறைக்கு நேர் எதிரில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் பெருமாளுக்கு அஞ்சலி செலுத்தியவாறு உள்ளார்.

தல விருட்சம்:

இத்திருக்கோயில் தல விருட்சமாக புன்னை மரம் அமைந்துள்ளது. இந்த மரம் சந்திர புஷ்கரணி அருகிலேயே உள்ளது.

தல தீர்த்தம்:

இத்திருக்கோயிலில் உள்ள தீர்த்தத்துக்கு சந்திர புஷ்கரணி என்று பெயர். இந்தத் தீர்த்தத்தைச் சுற்றி வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவ தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆடம்பர தீர்த்தம் என எட்டுத் தீர்த்தங்கள் விளங்குகின்றன. இது மட்டுமல்லாமல், தென்திருக்காவிரி, வட திருக்காவிரியும் உள்ளது.

இந்த சந்திர புஷ்கரணியில்தான் வருடம் முழுவதும் நடைபெறும் உற்ஸவங்களில் நம்பெருமாள் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுகிறது. பரமபதவாசலுக்கும், ஸ்ரீகோதண்டராமர் சந்நிதிக்கும் இடையே இந்த சந்திரபுஷ்கரணியும், தல விருட்சமான புன்னை மரமும் அமைந்துள்ளன.

திருவிழாக்கள்:

இத்திருக்கோயிலில் 12 மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறும். இவற்றில் வைகுண்ட ஏகாதசி, பங்குனி, சித்திரைத் தேரோட்டங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

இதிலும், வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும். இவ்விழாவின் முக்கிய நிகழ்வு பரமபதவாசல் திறப்பு. இத்திருவிழாவின் போதுதான் இந்த வாசல் 10 நாள்களுக்கு திறந்திருக்கும்.

சித்திரையில் கோடைத் திருவிழா, விருப்பன் திருநாள், வைகாசியில் விசாக உற்ஸவம் (தொடர்ந்து ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் கோடைத் திருவிழா, வசந்த உற்ஸவம்), ஆடி 18-ல் அம்மா மண்டபத்தில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி காவிரித் தாய்க்கு பூஜை செய்தல், புரட்டாசியில் நவராத்திரி உற்ஸவம், ஐப்பசியில் ஊஞ்சல் உற்ஸவம், கார்த்திகை, மார்கழி மாதங்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, தை மாதத்தில் பூபதித் திருநாள் என்றழைக்கப்படும் தேரோட்டம், தெப்பத் திருவிழா, பங்குனியில் ஆதி பிரமோற்ஸவம் என எல்லா மாதங்களிலும் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறும்.



தாயாருடன் சேர்த்தி காணும் நம்பெருமாள்

விசுவரூப தரிசனம்:

கோயில் யானை வடதிருக்காவேரியிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து கருவறை நோக்கியும், கோயில் காராம்பசு பின்புறம் திரும்பியும் நிற்கும்போது திரை விலகி பெருமாள் காட்சியளிக்கும் விசுவரூப தரிசனம் மிகவும் கண்கொள்ளாக் காட்சி.

பெருமாள் சந்நிதியில் சேவை நேரம் (திருவிழா இல்லாத காலங்களில்):

விசுவரூபம் } காலை 6.15, இலவச சேவை காலை 6.15 மணி முதல் காலை 7.30 வரை, பூஜை காலம் காலை 7.30 முதல் காலை 8.45 மணி வரை, இலவச சேவை காலை 8.45 மணி முதல் பகல் 1 மணி வரை, பூஜை காலம் பகல் 1 மணி முதல் பகல் 2 மணி வரை, இலவச சேவை பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை, பூஜை காலம் மாலை 6 மணி முதல் மாலை 6.45 மணி வரை, இலவச சேவை மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணி வரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com