ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்

ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்

சம்பத் உயர்நிலைக் கல்வியை முடித்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் (இன்டர்மீடியட்) வகுப்பில் சேர்ந்தார். அது 1944ஆம் ஆண்டு. அப்போது அவருக்கு வயது 18. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த சம்பத் இன்ட

சம்பத் உயர்நிலைக் கல்வியை முடித்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் (இன்டர்மீடியட்) வகுப்பில் சேர்ந்தார். அது 1944ஆம் ஆண்டு. அப்போது அவருக்கு வயது 18.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த சம்பத் இன்டர்மீடியட் கல்வி கற்கவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னதோடு, சென்னையில் விடுதியிலேயே தங்கிப் படிக்க வேண்டும், அண்ணா உட்பட கட்சிக்காரர்கள் யாரையும் விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் சந்திக்கக் கூடாது என்றும் கண்டிப்பாக அறிவித்திருந்தார்.

சம்பத், தமது தந்தையார் ஈ.வெ. கிருஷ்ணசாமியிடமும், சிறிய தந்தையார் பெரியாரிடமும் விடைபெற்றுக்கொண்டு சென்னை பயணமானார். ரயிலேறும் முன் தமது உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.மீனாட்சி சுந்தரனார் மற்றும் அவருக்கு நெருக்கமான ஆசிரியர்கள், மாணவத் தோழர்களிடம் பிரியாவிடை பெற்றார்.

அவரை உச்சிமோந்து பாராட்டி விடை கொடுத்த தலைமையாசிரியர் மீனாட்சி சுந்தரம், ""பெரியாரின் வாரிசு நீ, எதிர்கால அரசியலில் ஒரு ஜாம்பவானாக புகழோடு விளங்குவாய்'' என்று ஆசி வழங்கினார்.

பச்சையப்பன் கல்லூரி, அண்ணா படித்த காலத்திலிருந்தே திராவிட இயக்க உணர்வுள்ள ஆசிரியர்களையும் மாணவர்களையும் அதிகம் கொண்டதாக விளங்கியது. பெரியாரின் பிள்ளை பச்சையப்பன் கல்லூரியில் பயில வருவது அவரைப் பார்த்திராத மாணவத் தோழர்களுக்கு ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அக்கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர் வரதராஜன். இவரைக் கருப்புச் சட்டை வரதராஜன் என்று மாணவர்கள் சொல்வார்கள். சில மண்டபக் கூட்டங்களில் பேசுகிறபோது திராவிடச் சுடர் பேராசிரியர் வரதராஜன் என்று விளம்பரம் செய்வார்கள். அவருக்குச் சிறந்த ஆங்கிலப் புலமை உண்டு. பெரியாருக்கு வேண்டியவர். ஆகவே அவர் கட்டுப்பாட்டில்தான் சம்பத் கல்லூரியில் பயில வேண்டுமென்பது பெரியாரின் உறுதியான ஏற்பாடாகும்.

கல்லூரிக் கல்வியில் சம்பத்துக்கு நாட்டம் மிகுந்திருந்தது. வகுப்புகளில் பாடங்களை மிக உன்னிப்பாகக் கவனித்துக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வார். இரவில் பாடப் புத்தகங்களைவிட பத்திரிகைகள் வார, மாத இதழ்கள் மற்றும் பொதுவான நூல்களை நிறையப் படிப்பார். "குடியரசு', "விடுதலை' அவரைத் தேடி வந்துவிடும். அவற்றையும் விடாமல் படித்துவிடுவார். மனப்பாடம் செய்து தேர்வு எழுதுகின்ற பழக்கம் சம்பத்திற்கு இருந்ததில்லை. வகுப்பில் அறிந்து கொண்டதை நுணுக்கமாக மனத்தில் பதியவைத்து, தேர்வுகளின்போது நல்ல மதிப்பெண் வாங்கிவிடுவார். (ஆனால் கணக்கில் மட்டும் திறமை குறைவு) கல்லூரிக் கல்வி முடித்து மேல்நாட்டுக் கல்வியும் பெறவேண்டும் என்று அவரது குடும்பத்தார் விரும்பினர்.

கற்க வேண்டும் என்னும் ஆர்வம் மிகுந்திருந்தாலும் பெரியார் போதித்த லட்சியங்களிலேயே சம்பத் லயித்து நின்றார். ஒவ்வொரு முறையும் இயக்கத்தில் பரபரப்பான நிகழ்ச்சிகளும் சம்பவங்களும் நடக்கின்ற போது அவரால் கல்லூரி வளாகத்திற்குள்ளே கட்டுண்டு கிடக்க முடியவில்லை. அதிலும் பெரியார், அண்ணா ஆகியோர் பங்கேற்கின்ற பொதுக்கூட்டம் அல்லது போராட்ட நிகழ்ச்சிகளைக் காண வேண்டும் என்னும் ஆர்வத் துடிப்பு சம்பத்திற்கு எப்போதும் அதிகம்.

காஞ்சிபுரத்திலே இருந்து அண்ணா சென்னை வருகிறார். அவர் கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலோ தேவராஜ முதலியார் கார் ஷெட்டிலோ தங்கி இருப்பதாகத் தெரிந்தால் இரண்டு நாளோ மூன்று நாளோ கல்லூரிக்கு விடுப்புக் கொடுத்துவிடுவார்.

சென்னையில் கிருபானந்த வாரியார் போன்றவர்களின் கதாகாலட்சேபம் நடந்தால் சம்பத் தமது மாணவ நண்பர்களை அழைத்துக் கொண்டு பக்திமான் போல் உட்கார்ந்து உபன்யாசம் நடந்துகொண்டிருக்கின்ற போதே இடையில் கேள்வி கேட்டுத் திணறடிப்பார்.

"அன்பே சிவம்' என்பார் வாரியார். ""ஆறாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றி சித்ரவதை செய்தது சிவமதம் தானே?'' என்னும் கேள்வியை மாணவர் சம்பத் கேட்பார். தம்முடைய சந்தேகங்களை எல்லாம் கேள்வித் தாள் போன்று எழுதி அதற்கெல்லாம் பதில் சொல்லுங்கள் என்று கேட்பார். ""நீங்கள்தான் முற்றும் துறந்தவர் ஆயிற்றே கழுத்திலே ஏன் தங்கக் கொட்டை?'' என்பார். அப்படிப்பட்ட நேரத்தில் பக்தகோடிகளிடம் பதற்றம் ஏற்படும். காவல்துறையினர் வந்து மாணவர்களை வெளியேற்றிவிடுவர். பின்னர் உபன்யாசம் அவர்கள் விருப்பம்போல் நடைபெறும்.

நீதிக் கட்சியைச் சீமான்களும் பூமான்களும் ஆட்டிப் படைத்ததைப் பெரியாரோ அண்ணாவோ விரும்பவில்லை. அதிலும் பெரியார் தலைமைக்கு வேட்டு வைத்துவிட வேண்டும் என்று நீதிக்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டனர். பெரியாரைப் பொறுத்தவரை சில அரசியல் காரணங்களுக்காக நீதிக் கட்சிக்குத் தலைவராக இருந்தாரே தவிர, அவருடைய போர் ஆவேசமெல்லாம் சுயமரியாதை இயக்கத்தின் மீதுதான் அழுத்தமாகப் படிந்திருந்தது.

நீதிக் கட்சியின் 16 ஆம் மாநில மாநாடு சேலத்தில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலையில் கூடியது. சீமான்களின் சூழ்ச்சியை முறியடித்துச் சாமான்யர்களின் அமைப்பைத் தொடருவோம்,  பெரியாரின் தலைமையைக் காப்போம் என்னும் வீர முழக்கத்தோடு மாணவர்களும் இளைஞர்களும், ஏன் தமிழ்ச் சமுதாயமே ஆவேசத்தோடு திரண்டது.

சேலத்தில் அண்ணா தலைமையில் கூடிய அந்த மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்ற வேண்டிப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. சேலம் மாநாட்டின் முக்கியத்துவமே அண்ணாவின் தீர்மானம்தான். பெரியாரின் சம்மதத்தோடு இத்தீர்மானத்தை அண்ணா முன் மொழிந்தார். இதன்படி பிரிட்டிஷ் அரசால் அளிக்கப்பட்ட ராவ் பகதூர், திவான் பகதூர் போன்ற கவுரவப் பட்டங்களைக் கைவிடவேண்டும். கவுரவ நீதிபதி, ஜில்லா போர்டு தாலுக்கா போர்டு நியமனங்கள் ஆகிய அரசு நியமனப் பதவிகளை உதற வேண்டும் என்று தீர்மானம் வற்புறுத்தியது.

இத்தீர்மானத்தின்படி நீதிக் கட்சி திராவிடர் கழகமாக மலர்ச்சி பெற்றது.

திராவிடர் கழகத்தின் தலைவர் பெரியார். பொதுச் செயலாளர் அண்ணா. பெரியாரின் பேச்சும் அண்ணாவின் எழுத்தும் தாழ்ந்த தமிழகத்தைத் தட்டி எழுப்பின. முதல் மாநில மாநாடு 1945}இல் திருச்சியில் நடைபெற்றது.

திருவொற்றியூர் சண்முகம் தலைமையில் குடந்தை கே.கே. நீலமேகம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இரண்டாம் நாள் அரசியல் மாநாட்டிற்குப் பெரியார் தலைமை. திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கை பற்றி அண்ணா நீண்டதோர் உரையாற்றினார்.

எம்.ஆர்.ராதாவின் "போர்வாள்' நாடகம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சம்பத் பார்வையாளராகப் பங்கேற்றார்.

வேலூரிலிருந்து கே. அரசியல் மணி (மணியம்மை), ஏ.பி. ஜனார்த்தனம், எஸ். கஜேந்திரன், எஸ். தவமணி ராஜன், ஆ. திராவிட மணி ஆகியோர் பெரியார் குருகுலத்திற்கு அழைக்கப்பட்டு ஈரோடு வந்தனர்.

1938}இல் நாகம்மையார் மறைவுக்குப் பிறகு பெரியாருக்குப் பணிவிடைகள் செய்து பராமரிக்க ஒருவரும் இல்லாதிருந்த நிலையில்  ஒரு செவிலிப் பெண் தொண்டராக வேலூர் கனகசபை முதலியாரின் மகள் கே. அரசியல் மணி, 1943}இல் தந்தை பெரியாரிடம் வந்து சேர்ந்தார். பக்குவமாக, பத்திரமாக உணவு சமைத்துப் பெரியாரை உண்ண வைத்தல், வற்புறுத்திக் குளிப்பாட்டல், உடை மாற்றுதல், வீட்டுக் கணக்குப் பார்த்தல், "குடியரசு'ப் பதிப்பக வெளியீட்டு நூல்களைச் சுமந்து பெரியார் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் விற்கச் செய்து கணக்கு வாங்குதல்...

 இப்படிப் பல பணிகளை நன்றியுணர்வுடன் நிறைவேற்றி வந்தார்.வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் சாமி நாயுடு, நீதிக் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தார்.  அவருடைய மூத்த மகன் எஸ். கஜேந்திரன். மகள் சுலோச்சனா. கஜேந்திரன் பி.ஏ. பட்டம் பெற்ற பின் 1934}இல் ஈரோடு குருகுலத்திற்கு வந்தார். பின்னர் அவர் தந்தை பெரியாரிடம் செயலாளர் ஆனார். "குடியரசு' இதழில் எழுதினார். ஜஸ்டிஸ் இதழைப் பார்த்துக் கொண்டார். அறிவுக் கூர்மையும் விவாதிக்கும் திறனும், எழுத்தாற்றலும் மிக்க அவர் மாணவர் இயக்கத்திலும் தீவிரப் பங்கு கொண்டிருந்தார்.

1945 மே 24 ஆம் நாள் ஈ.வெ. கிருஷ்ணசாமியின் மூத்த மகள் செல்வி மிராண்டாவுக்கும் (ஈ.வெ.கி. சம்பத்தின் தமக்கையார்) எஸ். கஜேந்திரனுக்கும் பெரியார் தலைமையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. தலைவர்கள் வாழ்த்தினர். கஜேந்திரன் அரசுத் தலைமைச் செயலகத்தில் அலுவலர். இருவரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள், காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். மிராண்டா சென்னை மாநகராட்சிக் கல்வித் துறை அதிகாரியாகப் பலகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவ்விணையருக்கு இரு பெண் மக்கள்.

1944}ஆம் ஆண்டின் தொடக்கத்தை மாணவர் எழுச்சிகளின் தொடக்கமென்று பெரியார் வர்ணித்துள்ளார். பெரியாரின் முயற்சியாலும், அண்ணாவின் கல்லூரிப் பேச்சுகளாலும் மாணவமணிகள் அன்று எழுச்சி பெற்றுத் திரண்டனர். அவர்களுக்கெல்லாம் அறிவிக்கப்படாத தலைவராக சம்பத் புறப்பட்டார். ஆங்காங்கே தமது தலைமையில் மாநாடுகளை எழுச்சியோடு நடத்துகிற பணிகளிலும் இறங்கினார்.

1942 ஆகஸ்ட் கலவரங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் சார்புடைய மாணவர்கள் தீவிரப் பங்கு கொண்டனர். சுதந்திர உணர்வில் அணி சேர்ந்த அம்மாணவர்களைக் காங்கிரஸ் இயக்கம் பழமைக் குழியில் தள்ளி வகுப்பு வெறியில் பிரித்துப் போடும் இழிவு கண்டு, முற்போக்கு மாணவர்கள் பெரியார் கொளுத்தும் அறிவுச் சுடரின் பேரொளியில் பகுத்தறிவுப் பாசறை நோக்கி விரைந்து வரலாயினர். "குடியரசு'ம், "திராவிட நாடு'ம் மாணவர்களின் கருத்துக் கலன்களாகத் திகழ்ந்தன.

1944 பிப்ரவரி 19, 20 தேதிகளில் குடந்தையில் திராவிட மாணவர் முதல் மாநாடு ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் எழுச்சிமயமாக நடைபெற்றது.

அண்ணா சிறப்புரையாற்றினார். புலவர் குழந்தை, மா.நன்னன், அ.மு. மாணிக்கம், கோ.சி. பெரியசாமி, ஏ.பி. சனார்த்தனம், க. அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், இளம்வழுதி, எஸ்.கஜேந்திரன், க. கணேசன், இரா. செழியன், எஸ். கருணானந்தம், தவமணி ராஜன், இரா. சொக்கப்பா என ஏராளமான மாணவ மணிகள் பங்கேற்றனர்.

அதே ஆண்டில் தஞ்சையில் பாரதிதாசன் தலைமையில் திராவிட மாணவர் மாநாடு நடைபெற்றது. மாநாட்டைப் பெரியார் திறந்து வைத்தார்.

கரூரில் சம்பத் தலைமையில் மாணவர்களின் மாநாடு. அக்டோபரில் கோவையில் முதல் நாள் மாணவர் மாநாடு, மறுநாள் மாவட்டக் கழக மாநாடு சிறப்பாக நடைபெற்றன. இந்த மாநாட்டில் சென்னையிலிருந்து என்.வி. நடராசன், சத்தியவாணிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

1944}ஆம் ஆண்டு ஏப்ரல் 16}ஆம் நாள் ஈரோடு நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. கோவை மாவட்ட முதலாம் திராவிட இளைஞர் மாநாடு சரஸ்வதி மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்றது.

அம்மாநாட்டிற்குத் தலைமை தாங்குமாறு அண்ணாவை வழிமொழிந்து ஈ.வெ.கி. சம்பத் பேசினார் .

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com