ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்

"தென் நாட்டு இளைஞர் சமுதாயத்தின் எழுச்சி முரசு நமது அண்ணா. பகுத்தறிவுப் பகலவன் பெரியார். புதுமையினைப் பாடிவரும் முழு நிலவு நம் அண்ணா. வீரர் கோட்டமாம் பகுத்தறிவுப் பாசறையில் கொள்கைச் சிங்கங்கள் சிலிர்த
ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்

"தென் நாட்டு இளைஞர் சமுதாயத்தின் எழுச்சி முரசு நமது அண்ணா. பகுத்தறிவுப் பகலவன் பெரியார். புதுமையினைப் பாடிவரும் முழு நிலவு நம் அண்ணா. வீரர் கோட்டமாம் பகுத்தறிவுப் பாசறையில் கொள்கைச் சிங்கங்கள் சிலிர்த்து நிற்கின்றன. வேங்கையென வீர இளைஞர்களும், மாணவர்களும் திரண்டுவிட்டனர்.

பழைமை படபடக்கிறது.  திராவிடத்தில் பகுத்தறிவு ஒளி பரவுகிறது. போர்ப் படைத் தலைவராம் தந்தை பெரியாரின் வீரத் தளபதியாக வெற்றிப் பதாகை ஏந்தி நிற்கும் என் அன்பு அண்ணனே இம்மாநாட்டிற்குத் தலைமையேற்று வழி நடத்துமாறு உன்னை வேண்டுகிறேன்' என்று ஈ.வெ.கி. சம்பத் முன்மொழிந்து பேச,

இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன், கே.ஏ. மதியழகன், ஏ.பி. சனார்த்தனம், கருணாநந்தம் ஆகியோர் வழிமொழிந்து பேசினர். ஈரோட்டில் இருந்தும் உடல் நலக்குறைவு காரணமாக பெரியார் இம்மாநாட்டில் கலந்து கொள்ள இயலவில்லை. இம்மாநாட்டு நிகழ்ச்சிகள் குடந்தை நேஷனல் ரேடியோ நிலையத்தாரால் ஒலிபரப்பப்பட்டன.

12.5.1944 அன்று பொள்ளாச்சிப் பகுத்தறிவு வாசக சாலையின் சார்பாக தேரடி மைதானத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஜி. வேங்கடாசலம் தலைமை வகித்தார். பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஈ.வெ.கி. சம்பத் "தமிழ்நாடும் நமது கடமையும்' என்ற தலைப்பில் பேசினார்.

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்கிற உணர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்தி நமது தொன்மையான மொழிகாத்து, கலை கலாச்சாரங்களை வளர்த்திடத் தாயமைப்பான திராவிடர் இயக்கத்திற்குத் துணையாக மாணவர்கள் இளைஞர்கள் வீறு கொண்டு எழ வேண்டுமென்று சம்பத் கருத்துரையாற்றினார். மாவட்டங்கள் முழுவதுமிருந்து மாணவர்கள் இம்மாநாட்டுக்குத் திரண்டனர்.

கோபி வேங்கடாசலம் பேட்டையில் மே. 27 ஆம் நாள் திராவிடர் இளைஞர் மாநாடு நடைபெற்றது. பிற்பகல் நிகழ்ச்சியில் ஈ.வெ.கி. சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

24.10.44 அன்று சேலம் செவ்வாய்ப்பேட்டை விக்டோரியா மார்க்கெட்  மைதானத்தில் எழுச்சியோடு நடைபெற்ற மாவட்ட மாணவர் மாநாட்டில் ஈ.வெ.கி. சம்பத் "வருங்கால திராவிடர் கடமை என்ன?' என்னும் தலைப்பில் பேசினார்.

திராவிட மாணவர் மாநாடு

இந்தக் கால கட்டத்தில் கருணாநிதி தம்முடைய நண்பர்களையெல்லாம் அழைத்துத் திராவிட மாணவர் மாநாட்டை நடத்த முயற்சி செய்தார். அப்போது 1945 ஆம் ஆண்டின் இறுதிப்-பகுதி. அவரது நண்பர்கள் தென்னன், இராம. அரங்கண்ணல், டி. வேங்கடாசலம், வி.எஸ்.பி. முதலியோர் உடனிருந்தனர்.

""எம்.கே. மாநாட்டுக்கு என்ன பெயர்?'' என்று கேட்டார் அரங்கண்ணல் (ரங்கசாமியாக காங்கிரசில் இருந்தவர் திராவிடர் இயக்கம் வந்தபின் அரங்கண்ணல் ஆனவர்) மு. கருணாநிதி பதில் சொன்னார். ""இப்போது இயக்கத்தில் மாணவர் அமைப்பு இல்லை. ஆனாலும் ஆங்காங்கே மாணவர்களைத் தயார்ப்படுத்திக் கொண்டுதான் அமைப்பை உருவாக்க வேண்டுமென்பது அய்யாவின் விருப்பம். தஞ்சையில் நாம் சற்று விரிவாக இதைச் செய்யலாம். ஆகவே, தென்மண்டல திராவிட மாணவர் மாநாடு என்று நடத்துவோம்''.

""பெரியார், அண்ணா எல்லோரும் வருவாங்களா?'' இது அரங்கண்ணலின் கேள்வி.

""எல்லோருக்கும் யாகூப் கடிதம் எழுதியிருக்கார். நிச்சயம் வருவாங்க''. இது கருணாநிதியின் பதில். ஒட்டு மொத்தமான தோழர்களின் ஒரு கேள்வி. மாநாட்டுக்கு யார் தலைவர்?

""பெரியாரோட அண்ணன் மகன் ஈ.வெ.கி. சம்பத்தை முதல்ல நம்ப மாநாட்டிற்குத் தலைவராய்ப் போடுவோம்''. கருணாநிதி சொல்கிறார். நண்பர்கள் கேட்கின்றனர்.

""அவர் நல்லாப் பேசுவாரா?''

""மாணவர் கூட்டங்கள் மாநாடுகளில் சுமாராகப் பேசறார்னு சொன்னாங்க... அய்யா குடும்பத்துப் பிள்ளைக்கு நாம ஒரு இம்பார்ட்டன்ஸ் கொடுக்கணும்...'' கருணாநிதி சொல்கிறார்.

மாணவத் தோழர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு ஆமோதிக்கின்றனர். யாரிடமும் சல்லிக் காசு இல்லை. ஆனால், ஆர்வம் மிகுதி. ஓடியாடி உழைக்கின்றனர்.

முதல் நாளே மாநாட்டுத் திறப்பாளர் இரா. இளம்வழுதி வந்துவிட்டார். அன்று மாலையே மதியழகன் வந்துவிட்டார்.

எஸ்.கே. சாமி, கே.கே. நீலமேகம் வி. சின்னத்தம்பி ஆகியோர் முயற்சியில் பணம் வசூலித்து மாநாட்டுப் பணிகள் மாணவர்களைக் கொண்டு தீவிரமாக நடைபெறுகின்றன. இம்மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவர் மு. கருணாநிதி, செயலாளர் அரங்கண்ணல், பொருளாளர் டி. வேங்கடாசலம்.

இந்த மாநாட்டில் கல்லூரி மாணவர் ஈ.வெ.கி. சம்பத் தலைமை தாங்கி அரியதோர் சொற்பொழிவை நிகழ்த்தினார். திரளான மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.

சம்பத் பேசியதன் சுருக்கம்:

""இன்றைய மாணவர்கள்தான் நாளைய தலைவர்கள். அதற்கேற்ப பொறுப்போடு நாம் வளரவேண்டும். இந்தச் சமுதாயம் எதிர்காலச் சந்ததிகளையே நம்பியிருக்கிறது. நமக்கு வழிகாட்டத் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தளபதி பட்டுக் கோட்டை அழகிரிசாமி, ஜீவானந்தம், பொன்னம்பலனார் போன்ற நெஞ்சுரமிக்க தலைவர்கள் இருக்கிறார்கள்.

மாணவர்களாகிய நாம் ஜாதி மத மூட நம்பிக்கைகளை வெறுக்கவேண்டும்,  நமக்குப் பள்ளியிலே மறைக்கப்படுகிற திராவிடக் கலை, கலாசாரம், பண்பாடு ஆகிய சிறப்புகளை நாம் நமது தலைவர்கள் வாயிலாகத் தெரிந்து கொண்டு அவற்றைப் பள்ளிகள் தோறும் பரப்ப வேண்டும்.  சேர சோழ பாண்டியர்கள் யார்? அவர்களது ஆட்சியின் மகிமை, வீரம், இவற்றைப் பறைசாற்ற வேண்டும். ரேடியோ கண்டுபிடித்தவர் யார்? ரயிலைக்கண்டுபிடித்தவர் யார்? ஆகாய விமானத்தை கண்டு பிடித்தவர் யார்? இதையெல்லாம் புகட்ட வேண்டும். பெரியார் என்பவர் தனி மனிதரல்ல. இந்தச் சமுதாயத்தைச் சீர்திருத்த வந்த சிற்பி. நம்போன்ற மாணவர்களுக்கு அண்ணாவின் எழுத்தும் பேச்சுமே ஆயுதம்.''

இப்படி எல்லாம் மாணவர் சம்பத் தமக்குக் கிடைத்த தலைமைப் பதவிக்கு ஏற்ப கருத்துகளை அள்ளி வீசினார். "புலிக்குப் பிறந்தது பூனையாகுமா' என்று தஞ்சை திராவிடர் கழகத்துச் செயல் வீரர்கள் பாராட்டிச் சென்றனர். ஈரோட்டுப் பழக்கத்தோடு, இந்த மாநாட்டின் மூலம் சம்பத்திடம் கருணாநிதி ஆழ்ந்த பற்றும் பாசமும் கொண்டார்.

கருணாநிதி மீண்டும் ஈரோட்டுக்கு வந்து இதழ்ப் பணியைத் தொடரவேண்டும் என்று சம்பத் கூறினார். அதில் தாம் மிகுந்த ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் குடும்பச் சூழ்நிலைகள் சரியில்லை என்றும், தமது நாடக வசனங்களைப் பார்த்து விட்டுத் திரைப்பட இயக்குநர் ஏ.எஸ்.ஏ. சாமி பயன்படுத்த அழைப்பதாகவும் மு.க. கூறினார்.

அதற்கு சம்பத் வரும் சந்தர்ப்பங்களைத் தக்க விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுமாறும்,  தடைகள் ஏற்படுகிறபோது சும்மா இருக்காமல் ஈரோடு வந்து பணிகளை மேற்கொள்ளுமாறும் யோசனை தெரிவித்தார்.

அப்போது அருகிலிருந்த அரங்கண்ணலிடம் "விடுதலை' விரைவில் சென்னைக்கு வரக்கூடும் என்றும், ஈரோடு வந்து அய்யாவிடம் தொடர்பு கொள்ளுமாறும் அதற்குத் திராவிட மணியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் சம்பத் நட்பு முறையில் தெரிவித்தார்.

மாணவப் பருவத்திலேயே சம்பத்தின் அணுகுமுறையில் லட்சியத் துடிப்போடு மனித நேயமும் பின்னிப்பிணைந்திருந்தது.

அண்ணாமலையில் கலவரம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நெடுஞ்செழியன், அன்பழகன், கஜேந்திரன் ஆகியோர் படித்து முடித்து வெளியேறிய பின்னர் அவர்கள் தயாரித்து வைத்திருந்த மாணவர் படை பல்கலைக் கழகத்தில் மிகச் சிறப்பாக இயங்கியது.

கே.ஏ. மதியழகன், இரெ. இளம்வழுதி, அ. பொன்னம்பலனார், தம்பி இளங்கோவன் (புலவர்) மற்றும் தில்லை வில்லாளன், வி.ஜி. சாமிநாதன், தில்லை மறை முதல்வன், இராம. அரங்கண்ணல், எஸ்.டி. சோமசுந்தரம், பழ. நெடுமாறன், பண்ருட்டி ராமச்சந்திரன், குப்புசாமி என்றொரு மாணவர் பட்டாளம் துணிச்சலாகக் கருப்புச் சட்டை அணிந்து கொண்டு கழகக் கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருந்தது.

காலமெல்லாம் மாணவர் தலைவர் என்னும் பட்டத்தோடு லட்சியத்தின் உருவாய் நடமாடிய கே.ஏ. மதியழகன் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அன்புள்ளம் கொண்டவராக விளங்கினார். கழக மாணவர்கள் அறைகளில் கழக ஏடுகளும் நூல்களும் குவிந்து கிடக்கும். வகுப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் கொள்கை விளக்கமும், இலக்கியச் சர்ச்சைகளும் நடைபெறும்.

பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிற்கு கல்வி அமைச்சர் அவிநாசிலிங்க செட்டியார் வருவதாக இருந்தது. இந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி மாணவர்கள் ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆலோசித்தனர்.

கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை மதியழகன் விரும்பவில்லை. அவர் ஒரு கருத்து சொன்னார்.  ""பல்கலைக்கழக கட்டடத்தின் ஒவ்வொரு திசையின் உச்சியிலும் கும்பங்கள் இருக்கின்றன அல்லவா? பத்துக்குக் குறையாத கும்பங்கள், இந்தப் பத்திலும் பெரிய அளவில் கழகத்தின் கொடியைப் பறக்க விட்டு விடுவோம்'' என்றார்.

மாணவ, மணிகள் அதை உற்சாகத்துடன் வரவேற்றனர். ""மையத்தில் உள்ள கடிகாரக் கூண்டு முழுதும் ஏறி ஒரு கொடியைக் கட்டி விடுவோம்'' என்றார் இளம்வழுதி.

""சுவர் விழுந்தா என்னாவது?'' என்று கேட்டார் மதி.

""உயிர்தானே போகும். நான் கட்டிக் காட்டுகிறேன்''  என்றார் இளம்வழுதி.

""பெரியார் கோபித்துக் கொள்ளப் போகிறார். எதற்கும் சம்பத்திடம் கேட்டு விடலாம்'' என்று ஈரோட்டிற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். சம்பத் அதை உற்சாகத்துடன் வரவேற்றார். ""சிதம்பரம் வளாகத்தில் மற்றவர்களிடம் கலந்து கொள்ளுங்கள்'' என்றும் சொன்னார்.

பெரியவர் கிருஷ்ணசாமி, அன்பழகன் தந்தையார் கல்யாண சுந்தரம், பாலகுருசாமி, புலவர் நா.மு. மாணிக்கம் போன்றவர்கள் தில்லையம்பதியின் தி.க. போர் மறவர்கள்.அண்ணாமலைக் கழக மாணவர்களுக்கு அவர்கள் தாம் பாதுகாப்புக் கேடயங்கள்.

திட்டமிட்டபடி கும்பங்களில் எல்லாம் கொடிகள் பறந்தன. பல்கலைக் கழகமா? திராவிடர் கழகப் பாசறையா? என்று எண்ணும் அளவுக்குக் கழகக் கொடிகள் பட்டொளி வீசின. அந்த அருங்காட்சியைப் பார்த்துவிட்டு, கழக மாணவர்கள் மிரண்டு போய்த் தலைமறைவாக இருந்தனர்.

தங்கும் விடுதிகளுக்கு நடுவில் ஒரு பெரிய மரம். அந்த மரத்தின் அடியில் யாராவது ஒரு மாணவர் விடாமல் கை தட்டினால் அது அபாயச்சங்கு என்று பொருள். எல்லா மாணவர்களும் கட்சி பேதமின்றிக் கூடிவிடுவர். அன்று மாலை 6 மணி, திடீரென்று ஒரு கைதட்டல் ""காம்ரேட்ஸ்'' என்றோர் ஓங்காரக் குரல் கேட்டது.

கழக மாணவர்களுக்குத் தெரியும் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறதென்று. பத்து பதினைந்து கழக மாணவர்கள் மீது காங்கிரஸ் மாணவர்கள் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான கழக மாணவர்கள் விறகுக் கட்டையுடன் பாய்ந்து விரோதிகளை நகரத்தை நோக்கி விரட்டினர். சிதம்பரத்தில் ஒரு டூரிங் டாக்கீஸ். அதனுள் எதிரிகள் ஓடி ஒளிய முயன்றனர். கழக மாணவர்கள் துரத்திக் கொண்டே கொட்டகைக்குள் நுழைய, அங்குக் கடும் மோதல் ஏற்பட்டுப் படம் நிறுத்தப்பட்டது.

மாற்றான் ஒருவன் எறிந்த கல் மதியழகன் தலையில் பட்டு ரத்தம் கொட்டியது. அவ்வளவுதான் "காம்ரேட்ஸ்' என்று கழகத் தோழர்கள் ஆவேசத்தோடு முழங்கிக் கொண்டு எதிர்ப்படையினரை அடித்து நொறுக்கினர். அதற்குள் கொட்டகையினர் அடியாட்களை அழைத்து வர சிக்கிக் கொண்டால் ஆபத்து என்று அடிபட்ட மதியழகனைத் தூக்கிக் குதிரை வண்டியிலேற்றி மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லி விட்டுக் கழக மாணவர்கள் அனைவரும் விட்டால் போதுமென்று பறந்து விட்டனர். மறுநாளும் பல்கலை வட்டாரத்தில் பதற்றம். காவல்துறையினர் நடமாட்டமும் காணப்பட்டது.

மதியழகன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் எனும் தகவலுடன் விவரங்களையெல்லாம் சம்பத் பெரியாரிடம் எடுத்துச் சொன்னார். ""படிக்கிற இடத்தில் கோமாளித்தனமாக காலித்தனம் செய்வதா?'' என்று கோபித்துக் கொண்டார் பெரியார்.

கோபம் தணிந்ததும் சம்பத்தை அழைத்து சிதம்பரம் போய் எல்லாவற்றையும் நேரில் தெரிந்து கொண்டு வருமாறும், கலவரத்திற்கு இடம் தரவேண்டாமென்றும் பணித்தார். அவர்தாம் பெரியார். வேண்டுமென்றே கலகங்களை உண்டு பண்ணுவதில், அதிலும் படிக்க வேண்டிய பருவத்தில் மாணவர்கள் அவற்றில் ஈடுபடுவதில் அவருக்கு உடன்பாடில்லை. அதேசமயம் அவர்களது சிறுபிள்ளைத்தனத்தை மன்னித்து உரிய வழியில் நெறிப்படுத்தவும் அவர் தவறமாட்டார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com