ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும் - 12

கருப்புச் சட்டைப் படை 1944-45 ஆம் ஆண்டுகளில் பரவலாக மாவட்டங்கள் தோறும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் திராவிட மாணவர் கழகப் பயிற்சி முகாம்கள் நடைபெற்றன. சம்பத் முன்னின்று அவற்றை நடத்தினார். நிகழ்ச்சிகள
ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும் - 12

கருப்புச் சட்டைப் படை

1944-45 ஆம் ஆண்டுகளில் பரவலாக மாவட்டங்கள் தோறும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் திராவிட மாணவர் கழகப் பயிற்சி முகாம்கள் நடைபெற்றன. சம்பத் முன்னின்று அவற்றை நடத்தினார். நிகழ்ச்சிகளில் கழகத் தலைவர்களும், முன்னணியினரும் பங்கேற்றனர். நேரடி அரசியலில் ஈடுபடுவதற்கு முன், மாணவப் பருவத்தில் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்துத் தலைவர்கள் விளக்க உரைகள் நிகழ்த்தினர்.

அப்போது சீனியர் மாணவர்களாய் இருந்தவர்களில் ஒவ்வொருவராக கல்லூரியில் இருந்து விடைபெற்றுத் திருமணம் செய்து கொண்டு முழு நேர அரசியலில் ஈடுபடலாயினர்.

21.2.45 அன்று சென்னையில் க. அன்பழகன் - வெற்றிச்செல்வி திருமணம் பெரியார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சென்னை மேயர் ராதாகிருஷ்ணன், எஸ். ராமநாதன், அண்ணா, எஸ். குருசாமி, ஈ.வெ.கி. சம்பத், இரா. நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், திராவிடமணி ஆகியோர் வாழ்த்துரை.

18.2.45 அன்று திருச்சி நகராண்மைப் பொதுக்கூட்டத்தில் வடமண்டல திராவிட மாணவர் மாநாடு எழுச்சியோடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் சம்பத் சற்று ஆவேசமாகப் பேசினார்.

""மாணவர்கள் அரசியலில் கலக்கலாமா? கூடாதா? என்னும் பிரச்சினை பற்றிக் கவலையில்லை. மாணவர் சமுதாயம் போர்க்குரல் கொடுத்துத் தியாக முத்திரைகளை ஏற்கவேண்டியது காலத்தின் கட்டாயமென்றால், அதற்கும் இந்த மாணவர் படை தயங்கப் போவதில்லை. (பலத்தகரவொலி) சமுதாயத்திலே நமக்குள்ள இழுக்கைப் போக்க தந்தை பெரியார் பல வகைமுறைகளைக் கையாண்டு விட்டார்கள். திராவிட சமுதாயத்திற்குப் பெரியார் காலத்திற்குள் நீதி கிடைக்கவில்லை என்றால் பிறகு யார் காலத்தில் அந்த மாற்றத்தைக் காண்பது? இதில் முட்டுக் கட்டைகள் தகர்க்கப்படவேண்டும். இல்லையேல் மாணவர் சமுதாயம் பொறுமையை இழக்க நேரும் என்று எச்சரிக்கிறேன்.

கால வேகத்தை உணர்ந்து எதிரிகள் தங்களது மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த மாற்றம் இனியும் ஒத்திப் போட்டுக் கொண்டு போகக் கூடியதல்ல என்பதை மாணவர் சமுதாயம் அவர்களுக்குக் கடுமையாக உணர்த்த வேண்டியுள்ளது.''

4.5.45 அன்று ஈரோடு பெரியார் மாளிகையில் ஒரு வார காலம் மாணவர் பயிற்சி முகாம் நடைபெற்றது. சம்பத் ஏற்பாட்டில் நடந்த இந்தப் பயிற்சி முகாமில் பல மாவட்டங்களிலிருந்தும் மாணவப் பிரதிநிதிகள் வருகை தந்திருந்தார்கள். ஒருவார காலம் அவர்களுக்குத் தங்குமிடங்களும், உணவு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

 ஒவ்வொரு மாணவராக அழைத்து பெரியார் அந்தந்த வட்டார நிலைகளைக் கேட்டறிந்ததோடு, மாணவர்கள் செயலாற்ற வேண்டிய தன்மைகள் குறித்தும் விளக்கிச் சொன்னார்.

1945, ஜூலை 15 முதல் ஒரு மாத காலம் தஞ்சை, தென்னார்க்காடு மாவட்டங்களில் ஈ.வெ.கி. சம்பத் தினமும் ஓர் ஊராகச் சூறாவளிச் சுற்றுப் பயணம் நடத்தினார். எஸ். கருணானந்தம் அவருடன் சென்றிருந்தார். திராவிட மாணவர் பிரச்சாரப் பயணம் என்று அறிவிக்கப்பட்டு அந்த இருமாவட்டங்களிலும் ஒரு மாத காலம் சுற்றுப்பயணம் நடத்தினர். அந்த ஒரு மாதத்தில் அவர்கள் ஒரே ஒரு நாள்தான் ஓய்வெடுத்துக் கொண்டார்கள். சம்பத்தின்  பொது வாழ்க்கையில் இதுவே முதல் சுற்றுப்பயணமாகும்.

 1945, செப்டம்பர் 28ஆம் நாள் "குடியரசு' பத்திரிகையில் கருப்புச் சட்டைப்படை என்பதாக ஓர் அறிவிப்பைப் பெரியார் வெளியிட்டார். ஈ.வெ.கி. சம்பத், எஸ். கருணானந்தம் ஆகிய இருவரும் தற்காலிக அமைப்பாளர்களாயிருந்து இந்தப் படையை நடத்துவார்களென்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. "குடியரசு'ப் பத்திரிகையில் வாரந்தோறும் கருப்புச் சட்டைப் படைத் தொண்டர்களின் பெயர்கள் இடம் பெற்று வந்தன. செப்டம்பர் 29, 30 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் நாடு முழுவதும் கருப்புச் சட்டைப் படையினர் திரட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தம்பித் தலைவர் அவர்களே

தென்னார்க்காடு மாவட்டம் திராவிடர் இயக்கக் கோட்டையாக மாறியதற்கு செட்டிநாட்டு அரசரின் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒரு காரணமாகும். அங்கே பயின்ற நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், இளம்வழுதி, அரங்கண்ணல் போன்ற மாணவர் பட்டாளம் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர் கொழுந்து விட்டெரியத் தமிழகமெங்கும் எழுச்சி ஏற்பட்டது.

அம்மாவட்டத்தில் பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டையில் திராவிட மாணவ மாநாடு நடைபெற்றது. புதுப்பேட்டை வட்டாரம் நெசவாளர் நிறைந்த பகுதி. சேலம் மாநாட்டுக்குப் பின்னர் புதுப்பேட்டை மாநாடுதான் புத்தெழுச்சியை ஏற்படுத்தியது. வீரமணியை உருவாக்கிய கடலூர் அ. திராவிட மணி இந்த மாநாட்டை முன்னின்று நடத்தினார். மாநாட்டின் வெற்றிக்கு முன்னோடியாக விளங்கியவர் புதுப்பேட்டை ராமலிங்கம். இவர் பின்னர் சென்னையில் குடியேறி அனகாபுத்தூர் ராமலிங்கம் எனப் புகழ் பெற்று இயக்கத்திலும், நெசவாளர் மத்தியிலும் சிறந்து விளங்கினார்.

புதுப்பேட்டை மாநாடு வெற்றி பெற வேண்டுமென்பதில் அண்ணா தனி அக்கறை கொண்டிருந்தார். காரணம் முதன் முதலாக தம்பி சம்பத் மாநாட்டுத் தலைவர் ஆகிறார். ஆம், அது முதல் சம்பத் முழு நேர அரசியல்வாதியாக உருப்பெறுகிறார். ஆகவே இம்மாநாட்டை வெற்றியாக நடத்த அண்ணா ஒரு மாத காலம் தென்னார்க்காடு மாவட்டச் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி மக்கள் பணியில் முனைப்போடு ஈடுபட்டார்.

தென்னார்க்காடு மாவட்ட மாநாடு குறித்து மற்ற மாவட்டங்களிலும் நல்ல விளம்பரமாயிற்று. மாநாட்டில் திரளானோர் குழுமினர். மாநாட்டில் ஏ.பி. ஜனார்த்தனம் கொடியேற்றினார். புதுப்பேட்டை எஸ். கோவிந்தசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாநாட்டிற்கு ஈ.வெ.கி. சம்பத்தை தலைமை தாங்குமாறு கே.ஏ. மதியழகன் முன் மொழிந்தார். தோழர்கள் க. அன்பழகன், சேலம் சித்தையன், போளூர் சுப்ரமணியம், கி. வீரமணி, தில்லைப் புலவர் ந.மு. மாணிக்கம், நன்னன் ஆகியோர் வழி மொழிந்து பேசினர்.

பின்னர், பலத்த கரவொலிக்கிடையே ஈ.வெ.கி. சம்பத் தலைமை உரையை நிகழ்த்தினார். அவருடைய ஒரு மணி நேரப் பேச்சை பெரியார், அண்ணா உள்பட அனைவரும் உன்னிப்பாகக் கேட்டு ரசித்தனர். அடுத்து பெரியார், அண்ணா ஆகியோரின் உரையும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது.

அதிலும் சம்பத் முதன்முதல் தலைமை தாங்கும் மாநாட்டில் இவர்களுடைய பேச்சு எப்படி இருக்குமென்று எல்லோரும் ஆவலோடிருந்தனர்.

அண்ணா "விடுதலை' ஆசிரியராக ஈரோடு வந்த பின்னர் சம்பத் தமது பத்து வயதிலேயே அண்ணாவைத் தம் சொந்த அண்ணனாகவே ஏற்றுப் பெருமைப்பட்டவர். அண்ணாவின் இதயத்தின் பெரும் பகுதியை சம்பத்தே ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறார் என்று கூடப் பலரும் சொல்வதுண்டு. அண்ணாவும் சம்பத்தை தம் உடன்பிறவாத் தம்பியாகவே உள்ளன்போடு கொண்டாடினார். சம்பத் மீது பெரியாருக்கிருந்த அக்கறை போன்றே அண்ணாவுக்கும் அளவிடற்கரிய அக்கறை, உரிமை உண்டு. "அவன், இவன்' என்று சம்பத் ஒருவரை மட்டுமே அண்ணா உரிமையோடு அழைத்தார். ஏட்டில் எழுதுவதானாலும் மேடைகளில் பேசுகிறபோதும் சம்பத்தை மட்டும்தான் "என் தம்பி சம்பத் சொன்னான், பேசினான், கேட்டான்' என்றெல்லாம் உரிமையோடு குறிப்பிடுவார். நெடுஞ்செழியன், கருணாநிதி உட்பட மற்றவர்களை, "நண்பர் என்றும், அவர், இவர்' என்றும்தான் சொல்வார்.

அண்ணா பேசுவதற்கு ஒலி பெருக்கி சரிசெய்யப்பட்டதும்,  ""தம்பித் தலைவர் அவர்களே'' என்று தொடங்கினார் அண்ணா. வாழ்த்து முழக்கம். அண்ணா தமது பேச்சில் சம்பத் பற்றிக் குறிப்பிடுகையில், ""எதிர்காலத்தில் என் தம்பி எனக்கு மட்டுமல்ல,  இந்த இயக்கத்திற்கே தலைவனாகப் பரிணமிப்பான்.

மற்றவர்களெல்லோரையும் விட எனக்கு அந்த நம்பிக்கையுண்டு. தலைவர் மகன் தலைவராவதில்லை. காந்தியின் மகன் யார் என்பது நாட்டுக்குத் தெரியாது. ஆனால் பெரியாரின் வாரிசு தம்பி சம்பத் இன்று நாட்டுக்குத் தெரிகிறான் என்றால் அதற்கு அவனது தனித்தன்மையும் திறமையும்தான் காரணம். தம்பித் தலைவர்... நாளைய நாட்டின் தலைவர்'' என்று அண்ணா குறிப்பிட்டபோது ஒரே மகிழ்ச்சி ஆரவாரம்.

பின்னர் பெரியார் பேசுகையில், ""தலைவராக இருப்பதில் பெருமையைவிட தொல்லைதான் அதிகம் (சிரிப்பு).

ஊர் ஊராகப் போய் உழைத்துக் கட்சியை வளர்த்து, எதிர்ப்புகளைச் சந்தித்தும் போராட்டங்களை நடத்தியும் சிறை சென்று தியாகம் செய்துதான் தலைமைக்குப் புகழ் தேடவேண்டும். ஒரு பக்கம் பாராட்டு எல்லாம் நடக்கும். இன்னொரு பக்கம் கைப்பணம் காலியாகிவிடும். அதனால் ஏதோ கிடைத்துவிட்டது என்றில்லாமல் இந்தச் சமுதாயத்திற்கு நமது பங்கு என்ன என்பதை அறிந்து சம்பத் மட்டுமல்ல, ஒவ்வொரு மாணவனும் பொறுப்போடு செயல்படவேண்டும்''

 இவ்வாறு பெரியார் குறிப்பிட்டார். மாநாடு முடிந்ததும் சில நண்பர்கள் அண்ணாவிடம் தனிமையில் பேசிக் கொண்டிருந்தபோது, ""என்ன அண்ணா, எப்படியோ சம்பத்தை தலைவராக்கி படிக்க விடாமல் பண்ணிட்டீங்க?''

என்று கேட்டனர். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் நம்பிக்கையோடு அண்ணா சொன்னார். ""படிப்பு அவனுக்கு ஒரு குறை இல்லை எல்லோரும் பார்க்கத்தான் போறீங்க. சம்பத் நல்லா ஷைன் பண்ணுவான்.''

இந்த மாநாட்டின் இன்னொரு சிறப்பு பாரதிதாசன் அனுப்பிய வாழ்த்துக் கவிதை. அவர் உடல் நலக் குறைவால் மாநாட்டிற்கு வரவில்லை. அனுப்பி இருந்த வாழ்த்துப்பா, பிற்காலத்தில் புகழ் பெற்ற கவிதை. அதனை மாநாட்டு மேடையில்

க. அன்பழகன் படித்த போது வரிக்கு வரி பாராட்டு எழுந்தது.

  பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு

  திறக்கப்பட்டது சிறுத்தையே வெளியில் வா

  எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்

  புலியெனச் செயல்செயப் புறப்படு வெளியில்

  நம்பினை பகலினை நள்ளிருள் என்றே

சிம்புட் பறவையே சிறகை விரி எழு

  சிங்க இளைஞனே திருப்பு முகம்! திற விழி!

என்றெல்லாம் உணர்ச்சியும் எழுச்சியும் ஊட்டி வரலாறு படைத்த அந்தக் கவிதை புரட்சிக் கவிஞரால் சம்பத்துக்காகவே எழுதி அனுப்பப்பட்ட கவிதையாகும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com