ஈ.வெ.கி. சம்பத்தும்... திராவிட இயக்கமும்...

தலைமையாசிரியரிடம் சம்பத் தந்திரமாகப் பேசி, கைவல்யசாமி, சகஜானந்த சுவாமிகள், ஈழத்துச் சிவானந்த அடிகள் என்று பெயரைச் சொல்லி இவர்களெல்லாம் துறவிகள், சாமியார்கள் அரசியல் பேச மாட்டார்கள், ஒழுக்கம் பற்றி உரை
ஈ.வெ.கி. சம்பத்தும்... திராவிட இயக்கமும்...

தலைமையாசிரியரிடம் சம்பத் தந்திரமாகப் பேசி, கைவல்யசாமி, சகஜானந்த சுவாமிகள், ஈழத்துச் சிவானந்த அடிகள் என்று பெயரைச் சொல்லி இவர்களெல்லாம் துறவிகள், சாமியார்கள் அரசியல் பேச மாட்டார்கள், ஒழுக்கம் பற்றி உரைப்பார்கள் என்றெல்லாம் சொல்லி தமக்கு வேண்டிய ஆசிரியர்களையும் சொல்ல வைத்து அனுமதி வாங்கி விடுவார். மாணவர் மன்றக் கூட்டங்களில் இந்தச் சீர்திருத்தச் சாமியார்களைப் பேச வைத்துவிடுவார். தலைமை தாங்குகிற தலைமை ஆசிரியர் பேசுகிறவர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பார். அதிலேயும் இந்தச் சாமியார்கள் ஒழுக்கம் பற்றியெல்லாம் மாணவர்களுக்கு நல்ல கருத்துகளை எடுத்துக் கூறி ""புராணத்தில் இப்படியெல்லாம் அபத்தமாக இருக்கிறது. ஆகவே திருக்குறள் படியுங்கள்'' என்று பேசி முடித்து விடுவார்கள். மாணவர்களிடையே வரவேற்பும் இருக்கும். எதிர்ப்பும் இருக்கும்.

அடுத்த வாரமே அரசாங்கத்திடமிருந்து தலைமையாசிரியருக்கு ஓலை வரும். அதைச் சமாளிப்பது பெரும் பாடாக இருக்கும். இதனால் தமிழ் மன்றக் கூட்டங்களுக்கு அடிக்கடி சோதனை ஏற்படுவதுண்டு. ஆசிரியர்களுக்குக் குடியரசுப் பத்திரிகையைச் சம்பத் கொடுப்பார். பல ஆசிரியர்கள் அதன் மூலம் பகுத்தறிவு இயக்க அனுதாபிகளாகி விடுவார்கள்.

மாணவப் பருவத்திலேயே சம்பத்திற்குத் திரைப்படம் பார்க்கின்ற பழக்கம் அதிகம் உண்டு. (அதை அவர் மயக்கமாக வைத்துக்கொள்ளவில்லை. பொழுதுபோக்காகக் கொண்டார்) நல்ல கதை, சிறந்த நடிப்புத் திறன் இவற்றுக்கெல்லாம் அவர் ரசிகர். பள்ளி ஆண்டு விழாவில் நாடகம் போட்டுத் தாமே நடிக்க வேண்டுமென்று ஆர்வம் கொள்வார். சிலப்பதிகாரக் காட்சிகள், நக்கீரன் போன்ற ஓரங்க நாடகங்களை நடத்த முயன்று தலைமையாசிரியரின் அனுமதி இல்லாததால் ஏமாற்றமடைந்ததும் உண்டு.

அவர் மாணவராக இருந்தபோது (வயது 16) தமது பள்ளிக்கருகிலுள்ள ஒரு பூங்காவில் "மனோன்மணி' என்ற திரைப்படத்திற்கான வெளிப்புறப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது சில மாணவர்களை அழைத்துக்கொண்டு படப்பிடிப்பைக் காணச் சென்றுவிட்டார். வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து ஆசிரியர்கள் தலைமையாசிரியரிடம் சம்பத் தான் கூட்டிக்கொண்டு போனார் என்று புகார் செய்ய கோபமுற்ற தலைமையாசிரியர் மீனாட்சி சுந்தர முதலியார் தலையிலே டர்பன், கையிலே பிரம்பு ஆகியவற்றோடு படப்பிடிப்பு நடைபெறுகின்ற இடத்திற்கே வந்துவிட்டார். அவரைக் கண்டதும், ""டேய், ஹெட் மாஸ்டர்டா'' என்று கூச்சலிட்டவாறு சம்பத்தும் மாணவர்களும் பள்ளியை நோக்கி ஓடினர். அந்தக் கூச்சல் சலசலப்பில் சில நிமிடங்கள் படப்பிடிப்பு தடைப்பட்டது.

உயர்நிலைப்பள்ளியிலேயே தமிழிலும், ஆங்கிலத்திலும் முதல் மாணவராகச் சிறந்து விளங்கினார் சம்பத். கணக்குப் பாடத்தில் மட்டும் கொஞ்சம் வீக். அழகான உச்சரிப்புடன் ஆங்கிலப் பாடங்களைச் சரளமாகப் படிப்பார். அவருடைய ஆங்கில ஆசிரியர் நாராயணராவ், சம்பத்திற்கு மிகவும் பிடித்தவர். பொங்கல் திருநாளில் தமது நண்பர்களுடன் தமக்குப் பிடித்த ஆசிரியர்கள் இல்லங்களுக்குச் சென்று கைத்தறி ஆடைகள், பொங்கல், கரும்பு முதலானவற்றைப் பணிவோடு வழங்குவார்.

பள்ளிப் படிப்பில் கெட்டிக்காரராக இருந்தாலும் பெரியார் சிறுபிள்ளையில் இருந்தது போலவே முன்கோபமும், முரட்டுத்தனமும் சம்பத்திடம் மேலோங்கியிருந்தன. அய்யாவைப் போலவே குறும்புத்தனங்களுக்கும் குறைவில்லை.

கண்டிப்பிற்குப் பெயர் போன பெரியார் வெறும் மிரட்டல் சத்தத்திலேயே சம்பத்தை அடக்கிவிடுவார். "வீட்டில் எல்லோரும் செல்லம் கொடுத்து இவனைக் கெடுத்துவிட்டீர்கள்' என்று கடிந்து கொள்வார். அப்போதே சம்பத் சுற்றுவட்டாரங்களில் நடைபெறும் சுயமரியாதை இயக்கக் கூட்டங்கள், நீதிக் கட்சியின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் தம் தோழர்களுடன் முன் வரிசையில் அமர்ந்து ஆர்வமாகக் கேட்பார்.

பெரியார் ஓய்வாக மகிழ்ச்சியாக இருக்கிறபோது உடனிருப்போர், சம்பத்தைச் சீண்டிவிட்டு அழகிரி, பொன்னம்பலம், ஜீவா போல் பேசிக் காட்டச் சொல்வார்கள். இவர் அவர்களைப் போலவே குரலை உயர்த்தி, தாழ்த்தி, கைகளை மேலும் கீழும் வீசி ஆவேசமாக பேசிக் காட்டுவார். சித்தப்பா ஈ.வெ.ரா.விற்கு அந்த நேரத்தில் வரும் சிரிப்புத் தாங்க முடியாததாக இருக்கும்.

பள்ளி விடுமுறை நாட்களில் சம்பத்தையும் தம்மோடு சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்வார். விடுமுறை முடிவதற்கு முதல்நாளே ஈரோட்டிற்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து பஸ்ஸிலோ ரயிலிலோ ஏற்றிவிடுவார். 15 வயதிலிருந்தே சம்பத்திற்கு இத்தகைய சுற்றுப் பயணத்திற்கான பயிற்சி தரப்பட்டது.

1929 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை இயக்க மாநாடு நடைபெற்றபோது அம்மாநாட்டில் கூட்டத்தில் ஒருவராக இருந்து பங்கேற்றவர் காஞ்சிபுரம் சி.என். அண்ணா. ஏற்கெனவே பெரியார் பற்றியும் தன்மான இயக்கம் பற்றியும் அறிந்து வைத்திருந்த அண்ணாவிற்குச் செங்கல்பட்டு மாநாடு சிந்தனைகளைக் கிளறிவிட்டது.

சென்னையில் சுயமரியாதை இயக்கச் செயல்வீரர்களாக இருந்த சி. கணேசன், சிவஞானம், புலவர் செல்வராஜ் ஆகியோருடன் அண்ணாவிற்கு நட்பு ஏற்பட்டது. இவர்களது முயற்சியால் சென்னையில் சுயமரியாதை இளைஞர் மன்றம் தொடங்கப்பட்டது. மன்ற நிகழ்ச்சிகளில் அடிக்கடி அண்ணா ஆர்வத்துடன் பங்கேற்பார். அப்போது அவர் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்தார்.

1934 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அண்ணா தமது கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது முன்னோர் யாரும் படித்துப் பட்டம் பெற்றதில்லை. பெரிய பதவிகள் வகித்ததுமில்லை. சமுதாயத்தின் கீழ்த்தட்டில் சாதாரண நெசவாளர் குடும்பத்தில் தோன்றியவர் அவர். தந்தை நடராசனார் மறைவிற்குப் பிறகு அன்னையார் பங்காரு அம்மாள் சிறிய தாயார் (தொத்தா) ராஜாமணி அம்மையார் ஆகியோர் மெத்தச் சிரமப்பட்டு அண்ணாவை இன்டர்மீடியட் வரை படிக்க வைத்தனர். அண்ணாவின் அறிவுக் கூர்மையை உணர்ந்து கல்லூரி முதல்வர் சின்னத்தம்பி நீதிக்கட்சித் தலைவர்களிடம் உதவிபெற்று அண்ணா எம்.ஏ. படிக்க ஆவன செய்தார்.

கல்வி முடிந்ததும் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஏற்பட்டு அண்ணா நீதிக்கட்சிப் பிரமுகர் ஒருவரின் பரிந்துரையோடு அப்போது கல்வி அமைச்சராக இருந்த செட்டி நாட்டரசரிடம் எழுத்தராக ஆறுமாதம் பணியாற்றினார். பொது வாழ்க்கை ஆர்வம் காரணமாக விரைவாகவே அப்பணியிலிருந்து விலகிவிட்டார்.

அண்ணா நூல் நிலையங்களுக்குச் சென்று பெரும்பகுதி நேரம் படித்துக் கொண்டிருப்பார். பெரியாரின் குடியரசுப் பத்திரிகையைத் தவறாது படிப்பார். 1934-ல் அவரது கல்வி முடிவதற்கு முன்பே, 1930 ஆம் ஆண்டிலேயே அண்ணாவின் 21 வயதில் பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டனர். காஞ்சிபுரம் வரகுவாசல் தெரு 51 ஆம் எண் இல்லத்தில் அவரது குடியிருப்பு. படிப்பு சென்னையில். மனைவி ராணி அம்மையார் அவரது பெற்றோரோடு தஞ்சையில். இப்படி அவரது தொடக்க கால இல்லறம்.

திருப்பூரில் 1934 ஆம் ஆண்டு செங்குந்தர் (நெசவாளர்) மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் சிறப்புச் சொற்பொழிவாளர் பெரியார் ஈ.வெ.ரா. இந்த மாநாட்டிற்கு அண்ணாவும் அழைக்கப்பட்டிருந்தார். (இதுதான் அண்ணாதுரை எனும் பெயரில் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி)

அந்த மாநாட்டில் அண்ணா பேசுவார் என்று அறிவிக்கப்பட்டதும் ஒரு குள்ளமான உருவம் அழகான தமிழில் அடுக்குமொழியில் இனிய குரலில் அற்புதமாகப் பேசியதில் அடிக்கடி பலத்த கரவொலியும் மகிழ்ச்சி ஆரவாரமும் ஏற்பட்டன. அண்ணாவுக்கு அது கன்னிப் பேச்சு. பெரியாருக்கோ வியப்பு. பேசி முடித்ததும் அண்ணாவை அருகில் அழைத்து உட்காரவைத்து, ""நல்லாப் பேசுனீங்க. ஊரு காஞ்சிபுரமா? என்ன உத்தியோகம் பார்க்கிறீங்க?'' என்று கேட்டார். அதற்கு, ""உத்தியோகத்தைத் தேடிக்கிட்டிருக்கேன் அய்யா ''என்று சொன்னார். ""சரி என்னோட வந்திடுங்க ஈரோட்டுக்கு'' என்றார் பெரியார். ""ஊருக்குப் போய் வீட்டில் கலந்து பேசி பிறகு வருகிறேன்'' என்றார் அண்ணா. இதுவே பெரியார் அண்ணா முதல் சந்திப்பு. பெரியாரின் கனிவான கவனிப்புக்கு உள்ளானார் அண்ணா.

பெரியாரைப் பகைத்துக்கொண்ட நீதிக்கட்சி பெரும் சரிவுகளைச் சந்தித்தது. அவற்றைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பல தலைவர்கள் விலகி நின்றனர். அந்த நேரத்தில் மிச்சம் மீதியிருந்த நீதிக்கட்சித் தலைவர்கள் பெரியாரை விட்டால் வேறு கதியில்லை என்று சரணாகதி அடைந்தார்கள். நீதிக்கட்சியின் தலைவராகப் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசிற்கு எதிராக இனி ஒரு மாற்றுக் கட்சி உருவாகவே முடியாது என்றிருந்த நிலையில் பெரியார் நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அக்கட்சி புத்துயிர் பெற்றது.

இரண்டே ஆண்டுகளில் நீதிக்கட்சி என்னும் அரசியல் இயந்திரத்தைச் சுயமரியாதை இயக்கம் என்ற இஞ்சினோடு பூட்டி வெகு வேகமாக இயக்க ஆரம்பித்தார் பெரியார். நாள்தோறும் பொதுக்கூட்டங்கள் திங்கள்தோறும் மாநாடுகள் பரபரப்பான பத்திரிகைகள் என்று எழுச்சி முரசு அதிர்ந்தது.

நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த கி.ஆ.பெ. விசுவநாதம், பெரியார் சர்வாதிகாரமாக நடப்பதாக குற்றம் சாட்டிப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். அதனையடுத்து அண்ணாவை நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராக கட்சிச் செயற்குழு ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது.

பொறுப்பேற்றுக் கொண்ட அண்ணா நீதிக்கட்சியின் வடிவத்தை மாற்ற எண்ணினார். பணக்காரர்கள் என்றாலே அண்ணாவுக்கு ஆகாது. அதிலும் பெரிய பெரிய சீமான்கள், மிட்டா மிராசுகளின் ஆதிக்கம் நீதிக்கட்சியில் இருந்தது. மேலும் இந்திய விடுதலைக்கு விரோதமாக வெள்ளையர்களின் ஏஜென்சி அமைப்பாக நீதிக்கட்சி கருதப்பட்டதையும் அண்ணா மாற்ற எண்ணினார். இதனால் நீதிக்கட்சியின் வடிவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. சாதாரண மக்களின் எழுச்சி கண்டு சீமான்கள் விடைபெறத் தொடங்கினர். சிலர் உள்ளிருந்தே பெரியாருக்கும், அண்ணாவுக்கும் தொல்லை விளைவிக்க முயன்றனர்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com