ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும் - 25: குடும்பத்துடன் சம்பத் வெளியேறுதல்

பெரியாரை விட்டு விலகி நிற்போர் பற்றிய கண்ணீர்த் துளிகள் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. சென்னை மண்ணடி அருகே செம்புதாஸ் தெருவில் கார்னர் எஸ்டேட் என்ற பெயரில் ஐந்தடுக்கு மாடிக் கட்டடம், சுற்றிலும் இரும்
ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும் - 25: குடும்பத்துடன் சம்பத் வெளியேறுதல்

பெரியாரை விட்டு விலகி நிற்போர் பற்றிய கண்ணீர்த் துளிகள் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

சென்னை மண்ணடி அருகே செம்புதாஸ் தெருவில் கார்னர் எஸ்டேட் என்ற பெயரில் ஐந்தடுக்கு மாடிக் கட்டடம், சுற்றிலும் இரும்புக் கடைகள், இரைச்சல் நிறைந்த இடம்.

நான்காம் மாடியில் ஓர் அறை. அந்த அறையில் இருவர் தங்கி இருந்தனர். ஒருவர் எல்.ஐ.சி.யில் எழுத்தர் பணிபுரிந்த சீனிவாசன், (ஆம், அவர்தான் இரா.செழியன்) இன்னொருவர் சென்ட்ரல் எக்சைஸ் இலாக்காவில் பணிபுரிந்த வேலாயுதம். அவர்தான் ப.வாணன். இருவரும் சிறந்த எழுத்தாளர்கள். அண்ணாவின் நெருங்கிய நண்பர்கள். அறைக்கு வாடகை ரூ. 25.

காஞ்சியிலிருந்து அண்ணா சென்னை வந்தால் இங்கே தங்குவார். இரா. நெடுஞ்செழியன் இங்கே "மன்றம்' இதழையும் நடத்திக் கொண்டிருந்தார். கே.ஏ.மதியழகன் தொடக்கத்தில் தங்கியிருந்த இடமும் இந்த அறை தான். பெரியவர் எஸ்.வி. லிங்கம், டி.வி. நாராயணசாமி, எஸ்.எஸ். ராஜேந்திரன், வளையாபதி முத்துக்கிருஷ்ணன் ஆகியோரும் இங்கே தங்குவதுண்டு. சில நேரங்களில் சிவாஜிகணேசனும் இங்கே தங்கியதுண்டு.

"ஓர் இரவு' நாடகத்தை உருவாக்கியதும், "ஆகஸ்டு 15 துக்க நாள் அல்ல' எனும் கட்டுரையை அண்ணா எழுதியதும் இந்த அறையில்தான். அண்ணாவைச் சந்திக்க அடிக்கடி ம.பொ.சி., செங்கல்வராயன், ஜீவானந்தம் ஆகியோரும் இந்த அறைக்கு வருவதுண்டு. இங்கே அண்ணா வந்திருந்தால் சம்பத் உடன் இருப்பார்.

அன்றைய தினம் பெரியாரின் திருமணம் பற்றி தமது நண்பர்களிடம் விரக்தியோடு பேசிக் கொண்டிருந்த அண்ணா, ""எனக்கென்னயா திருச்சி சங்கரன்பிள்ளையின் தம்பி சாம்புவிடம் அவர் ஊரில் கடை வாடகைக்கு பார்க்கச் சொல்லி இருக்கிறேன். அண்ணாதுரை எம்.ஏ. வெற்றிலை பாக்குக் கடையென்று போர்டு போட்டுக் கொண்டு உட்காரப் போகிறேன். வெற்றிலை பாக்கு வாங்க வருபவர்களிடம் கொள்கையைப் பிரசாரம் செய்தபடி காலத்தைக் கழிக்க போகிறேன்'' என்று  வேதனையோடு சொல்லிக் கொண்டிருந்தபோது சம்பத் உள்ளே நுழைந்தார்.

""என்ன தளபதியா பேசுவது?'' என்று கேட்க, ""தளபதியில்லை தளர்பதி ஆகிவிட்டேன் சம்பத்'' என்று அண்ணா சொன்னார்.

""என்ன அண்ணா... இப்படியெல்லாம் நீங்களே சொல்ல ஆரம்பித்தால் எங்களுடைய வாழ்நாள் வீணாகிவிட்டதாக அர்த்தமா?'' என்று நெடுஞ்செழியன் கண்கலங்கினார்.

""இல்லை இனிதான் நிறைய வேலை இருக்கிறது. அண்ணாவை நாம்தான் தயார் செய்ய வேண்டும்'' என்றார் சம்பத்.

அதற்கு அண்ணா, ""இல்லை சம்பத் அய்யாவை எதிர்த்து ஓர் அரசியல் நடத்துவதை என்னால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. அது ஒருபோதும் நம்மால் முடியாது. நான் கோடம்பாக்கத்தில் போய் சினிமாவுக்குக் கதை எழுதி என் வாழ்வை அமைத்துக் கொள்கிறேன். நீ கல்லூரியில் சேர்ந்து படி. நெடுஞ்செழியன் எங்காவது வாத்தியார் வேலைக்குப் போகட்டும். இதைத் தவிர வேறு ஒன்றும் என்னால் சொல்ல முடியவில்லை...'' என்று வேதனையோடு கூறினார்.

அதைக் கேட்டு சம்பத் சிரித்தார். ""எதிர்காலச் சமுதாயத்தின் சாபத்திற்கு நாமெல்லாம் ஆளாக வேண்டுமா? நாம் அரசியலை நடத்தவில்லை என்றால் வேறு யார் நடத்தப்போவது? அய்யாவா அரசியல் நடத்தப் போகிறார்?'' என்றார் சம்பத்.

""நீ துடிப்போடு பேசுகிறாய், என்னால் இயலாது சம்பத், என்னைச் சிந்திக்க விடு'' என்று தலையணையை இழுத்து அதில் சாய்ந்தபடி தூங்கத் தொடங்கினார் அண்ணா. அன்று எந்த முடிவும் காணாமல், அண்ணா காஞ்சி சென்றுவிட்டார். சம்பத்தின் வாதத்தை மற்ற தோழர்கள் ஏற்பதாயினும், அண்ணா தயாரில்லையே என்று குழப்பம் நிலவியது.

இருநாட்கள் சென்றபின்னர் மீண்டும் பேசலாம் என்று சம்பத் ஈரோட்டுக்குப் புறப்பட்டார். காஞ்சி சென்று அண்ணா "மாஜி கடவுள்கள்' என்னும் புதிய கட்டுரைத் தொடரை எழுதலானார். வெளிநாடுகளில் கொண்டாடப்பட்ட கடவுள்கள் மாஜிகளாகி கண்காட்சிச் சாலைகளிலே வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று அக்கட்டுரைத் தொடரில் தீட்டினார். திராவிட நாடு இதழில் "கண்ணீர்த் துளிகள்' பகுதியில் அண்ணா கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

""நாமெல்லாம் கழகத்திலிருந்து வெளியேறுகிறோம். ஆனால் அதோ என் தம்பி சம்பத் தமது மனைவியுடனும், கைக் குழந்தையுடனும் பெரியாரின் குடும்பத்தைத் துறந்து வெளியேறுகிறார். அந்தச் சோகக் காட்சியை காணுகிறபோது கண்கள் குளமாகின்றன, அதனிலும் நம்முடைய தியாகம் பெரிதல்ல...'' என்று அண்ணா உணர்வுபொங்கக் குறிப்பிட்டிருந்தார். சம்பத் தமது மனைவி மக்களுடன், தாம் பிறந்து வளர்ந்த ஈரோட்டு மாளிகையிலிருந்து வெளியேறிச் சென்னை வந்து, வாடகை வீட்டில் குடியேறினார். சென்னை கோடம்பாக்கம் கிருஷ்ணாபுரம் வன்னியர் தெரு 34 ஆம் எண் கட்டடத்திலிருந்து சம்பத்தை ஆசிரியராகக் கொண்டு "புது வாழ்வு'  வார ஏடு வெளிவரத் தொடங்கியது. 

தமது குடும்பத்துடன் வீட்டை விட்டு சம்பத் வெளியேறியது பெரியாருக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது, அவர் ஓர் அறிக்கையில் அண்ணாவைத் துரோகி என்று வெளிப்படையாகக் கண்டித்தார்.

சென்னை, கோடம்பாக்கத்தில் சம்பத், தமது குடும்பத்துடன் வசித்து வந்தார். அதனால், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து, கூட்டங்களில் பங்கேற்றார். அண்ணா சென்னை வந்ததும், சம்பத் இல்லத்திற்குத்தான் முதலில் வருவார். உணவருந்தி மகிழ்ந்து பேசி, ஓய்வெடுப்பார். சில வேளைகளில் இரவுக் கூட்டம் முடிந்து அகால நேரத்திலும் வருவதுண்டு. சம்பத்தைப் பார்க்காமல் அண்ணாவுக்குப் பொழுது போகாது.

பாசமிகு குடும்பங்கள்:

அண்ணாவும் சம்பத்தும் பெரும்பாலும் சென்னையில் சைனீஸ் ரெஸ்டாரண்டில் சாப்பிடுவது வழக்கம்.

அண்ணா சில நேரங்களில் கூட்டங்களுக்குச் சென்று திரும்பும்போது கோடம்பாக்கத்தில் சம்பத் இல்லத்திற்கு வந்து, ""சுலோச்சனா சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?'' என்பார். ""சாதத்தில் தண்ணீர் ஊற்றிவிட்டேன். எல்லாமே தீர்ந்துவிட்டதே.  சமைத்துப் போடுகிறேன்'' என்பார் சுலோச்சனா.

""சாதத்தில் தண்ணீர் ஊற்றிவிட்டால் என்ன? மோர் இருக்கிறதல்லவா? ஊறுகாய் இருக்கிறதல்லவா? போதும் வை'' என்று சாப்பிட்டு விட்டுப்  பல கதைகளையும் பேசிவிட்டுப் போவார். சுலோச்சனா மற்றும் குழந்தைகளுடன் மிகவும் மகிழ்வோடு பேசுவார்.

 அண்ணா அகிலத்திற்கே வகுத்தளித்த குடும்பப் பாச உணர்வின் இனிய தன்மைகள் ஈரோட்டில் கிளைத்தெழுந்து கவிதையாய்  காவியமாய் திராவிட இயக்கக் குடும்பங்கள் அனைத்தும் ஒரு குடும்பம், அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என்னும் நல்லுறவும் நல்லுணர்வும் பெற்றுத் திகழ்ந்ததை அக்காலம் உணர்த்தியது.

 அண்ணா மண்ணடி செல்வார். அங்கு நெடுஞ்செழியன் இல்லத்தில் உணவருந்தி ஓய்வெடுப்பார். புரசைவாக்கம் வெள்ளாளத் தெருவில், அன்பழகன் இல்லம். அங்கேயும் அண்ணா விருப்பத்தோடு தங்கி உணவருந்தி ஓய்வெடுப்பார். கோவிந்தப்ப நாயக்கன் தெருவில், அண்ணாவின் சின்ன மாமனார் வீடு ( ராணி அண்ணியாரின் சிற்றப்பா சிவப்பிரகாசனார் இல்லம்) அங்கேயும் அண்ணா குடும்பத்தோடு தங்குவார். எஸ்.எஸ்.பி. லிங்கம் (வேதாசலம்) இல்லத்திலும் தங்குவார். எப்போதும் போல், டபிள்யூ. கே. தேவராஜ் முதலியார் இல்லம். அறிவகம் வாங்கியபின், பெரும்பகுதி நாட்கள் சென்னையில் தங்குவது தி.மு.க. தலைமை நிலையமான அறிவகத்தில்தான். 

அண்ணா, திராவிட நாடு இதழில் கீழ்கண்டவாறு விளக்கம் எழுதியிருந்தார். ""கழகத் தலைவர் (பெரியார்) என்னைச் சந்தேகிக்கிறார், துரோகி என்று எண்ணுகிறார் என்று துளிஜாடை தெரிந்திருந்தால் கூட நான் அதுவரை காட்டிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி செலுத்திவிட்டு வெளியே வந்துவிட்டிருப்பேன்.

 ...நான் பல தடவைகளில் எடுத்துக் கூறியிருக்கிறபடி இந்தப் பரந்த உலகிலே, என்போன்ற சாமான்யர்களுக்கு இடம் இருக்கிறது. ஆதினங்களின் ஆதரவே இல்லாத பண்டாரங்கள் இல்லையா  அதுபோல் இருந்துவிட்டிருப்பேன். ஒரு துளியும் ஜாடை காட்டியதில்லை. என்னை சோம்பல் குணமுள்ளவன் என்று கண்டித்திருக்கிறார். வாலிபர்களுடன் கூடித் திரிகிறேன் என்று பேசியிருக்கிறார். துரோகி என்று அவர் சொன்னதுமில்லை, அப்படி ஒரு எண்ணம் அவர் உள்ளத்திலே இருந்திருக்கக்கூடும் என்று கூட நான் எண்ணிட நேரிட்டதில்லை...

என்னிடம் அவர் காட்டி வந்த அன்பும், மரியாதையும் என்னைப் பல சமயங்களிலே வெட்கப்படும்படி செய்திருக்கிறது. நன்றாகக் கவனமிருக்கிறது. ஈரோட்டுக்கு என்னை முதன் முதலாக அழைத்தது,   பொது வாழ்வில் ஈடுபடுவதில் விசேஷத்தைக் கூறினது,  பிறகு நான் ஊர் திரும்பப் புறப்பட்டபோது, அவருடைய வீட்டுப் பெரிய வண்டியைப் பூட்டி, அதிலே நான் உட்கார்ந்து கொண்டு வண்டி கிளம்ப, அதன் பின்னோடு பத்து வீடு வரையில் அவர் வந்தது,  நான் வண்டிக்குள்ளே பதறி, நில்லுங்கள்  வரவேண்டாம், நில்லுங்கள் என்று கூறியது  வெட்கப்பட்டது ஆகிய காட்சிகள். அன்று முதல் திருமணப் பிரச்னை பயங்கரமாக உருவம் எடுத்த நாள் வரையில், என்னிடம் அவர் நடந்துகொண்ட முறை, என்னைப் பற்றி அவர் கேவலமான எண்ணமோ, கெடுதலான எண்ணமோ கொண்டிருக்கிறாரா என்று யோசிக்க வேண்டிய அவசியத்தையே உண்டாக்கியதில்லை. 

பல தடவைகள் என்னிடம் கோபித்துக்கொண்டிருக்கிறார்  நானும் கோபம் கொண்டிருக்கிறேன்.  பல ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டிலிருந்து விடுதலை வெளிவந்து கொண்டிருந்தபோது, கோபித்துக்கொண்டு, ஊருக்கே வந்துவிட்டிருக்கிறேன்.

 என்னைச் சமாதானப்படுத்தவும், என்னிடம் தமக்கு உள்ள அன்பைக் காட்டவும் பெரியாரும், அவர் அண்ணாரும் தனித்தனியாக எனக்கு எழுதிய கடிதங்கள் என்னிடம் உள்ளன. இன்று என்னைப் பெரியார் துரோகிப் பட்டியலில் சேர்த்துப் பேசும்போது, நான் அந்தக் கடிதத்தைக் கவனப்படுத்திக்கொண்டு சாந்தி பெறுகிறேன்''

தனிக்கட்சி தொடங்குங்கள் அண்ணா

 பெரியார் தம்மைத் துரோகி என்று குறிப்பிட்டதை அண்ணாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

 அண்ணாவுக்கு சம்பத் கண்டிப்பான தொனியில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். காஞ்சிபுரத்தில் சும்மா உட்கார்ந்திருப்பது பயன் தராது. சுறுசுறுப்போடு ஒரு நல்ல முடிவு காண வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

 பெரியாரின் அறிக்கையும், சம்பத்தின் கண்டிப்பும் அண்ணாவைக் குழப்பின. எண்ணற்ற கடிதங்கள் நாள்தோறும் குவிந்தன. முக்கியமானவர்கள் நேரில் வந்து தங்கள் கருத்துகளைச் சொல்லி நெருக்கினர். அண்ணா தூங்கவில்லை. சோகமே உருவானார். எத்தகைய பொறுப்பு தம் மீது விழுகிறது என்பதை உணர்ந்தார். பெரியாரை எதிர்க்கவும் துணிவின்றித் துவண்டார்.

 இந்தச் சூழ்நிலையால் அண்ணாவுக்குக் கடுங்காய்ச்சலும், உடம்பெல்லாம் சிறுசிறு கொப்பளங்களும் ஏற்பட்டன. அவரது நண்பரான சித்த மருத்துவர் சிற்சபை ஓடோடி வந்து வைத்தியம் செய்யலானார். அண்ணாவுக்கு ஓய்வு தேவையென்றார்.

தாமதம் கூடாது. திராவிடர் கழக நிர்வாகக் கமிட்டியை கூட்டி அண்ணாவைத் தலைவரென்று முடிவெடுக்க வேண்டும். பெரியாரிடம் உள்ள விடுதலை அலுவலகம் போன்ற கழகச் சொத்துகளைக் கைப்பற்ற வேண்டும் என்று பாரதிதாசன் ஓர் ஆவேசக் கடிதத்தை அனுப்பி இருந்தார்.

அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து ஒதுங்கி, தேசிய இயக்கத்தில் சேருவாரானால் எதிர்காலத்தில் அண்ணா அகில இந்தியத் தலைவராக உயர்வார் என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி ஒரு கடிதத்தை எழுதியிருந்தார்.

பல்வேறு திசைகளிலிருந்தும், பல்வேறு உணர்வுகள் ஆட்டிப் படைத்தன. அண்ணா சோர்வுற்றார். அண்ணாவின் ஓய்வு கண்டு தோழர்கள் மனம் பதறினர். முக்கியப் பிரமுகர்கள் சம்பத்தோடு தொடர்பு கொள்ளலாயினர். என்.வி. நடராசன் தந்தி கொடுத்து சம்பத்தை அவசரமாக அழைத்தார்.

சம்பத் சென்னை வந்தார். எண்ணற்ற தோழர்கள் சூழ்ந்தனர். ""நீங்கள் போய் அண்ணாவிடம் நேரில் பேசி அழைத்து வாருங்கள். சென்னையில் முடிவு செய்வோம்'' என்று கே.கே. நீலமேகம், நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன் ஆகிய பலரும் வற்புறுத்தினர்.

 சம்பத் என்.வி. நடராசனை அழைத்துக்கொண்டு காஞ்சிபுரம் சென்றார். சோர்வுற்றுப் படுத்துவிட்ட அண்ணாவை எழுப்பி உட்கார வைத்து, அடுத்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாகப் பேசினார். அண்ணா வழுக்கி வழுக்கிச் சென்றார். ""கடமையில் இருந்து தவறாதீர்கள் அண்ணா, இது காலத்தின் கட்டாயம், சரித்திரக் கடமை. இதிலிருந்து விடுபட்டால் எதிர்காலச் சமுதாயம் சபிக்கும்'' என்றெல்லாம் ஆணித்தரமாக பேசினார் சம்பத். ""அரசியலில் இருந்து நீங்கள் ஓய்வெடுத்தால் நாங்கள் தற்கொலை செய்துகொள்வோம்'' என்று என்.வி. நடராசன் அழ ஆரம்பித்துவிட்டார்.

""சற்று ஓய்வெடுத்துப் பிறகு பேசுவோம் சம்பத்'' என்றார் அண்ணா.

""எத்தனை தடவை பேசினாலும் இதுதான் தீர்மானமான முடிவு. இதிலிருந்து நீங்கள் நழுவ முடியாதண்ணா''-  இது சம்பத்.

மறுநாளும் பேச்சு தொடர்ந்தது. இறுதியாக அண்ணா ஒரு யோசனை கூறினார். ""சம்பத் முதலில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு நீ சென்று, அய்யாவின் தவறான முடிவைக் கூட்டம் போட்டுச் சொல். மக்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கிறது? என்பதைத் தெரிந்துகொண்டு ஒரு முடிவு செய்வோம்''.

 இதற்குச்  சம்பத் சம்மதித்தார்.

திராவிடர் கழகத்தில் அய்யாவிடம் மிச்சமிருந்தவர்களில் பலர் முரடர்கள். பெரியாரை எதிர்த்துக் கூட்டம் போட்டால் என்ன நடக்குமோ என தயக்கம் இருந்தது. அதனால், சம்பத்தை அனுப்பினால் பெரியார் ஆட்கள் எதுவும் செய்யமாட்டார்கள் என்று அண்ணா கருதியிருக்கக் கூடும். எப்படியாயினும் இந்தப் பிரச்சனையை மக்கள் மன்றத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான், ஏற்கெனவே சம்பத்தின் வாதம். அதற்கு எவரும் முன்வராத நிலையில், தாமே மக்கள் மன்றத்திற்கும் செல்லத் தயார் என்னும் உறுதியோடிருந்தார் சம்பத்.

அன்று அண்ணா, சம்பத், என்.வி.என். ஆகியோர் சென்னை புறப்பட்டு வந்தனர். அண்ணாவின் இளமைக்கால நண்பர் சி.வி. ராசகோபாலும் உடன் வந்தார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com