ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும் - 30

தில்லி கண்ட திராவிடர் இயக்கம்: நாடாளுமன்றத்தில் சம்பத்தின் முதல் முழக்கம் கேட்ட பிறகே திராவிடர் இயக்கம் பற்றி அறியாதவர்களும் அறிந்து கொண்டனர். போர்க்குணமிக்க லட்சிய அமைப்பாகக் கழகம் தென்னகத்தே வலிவு ப
ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும் - 30

தில்லி கண்ட திராவிடர் இயக்கம்:

நாடாளுமன்றத்தில் சம்பத்தின் முதல் முழக்கம் கேட்ட பிறகே திராவிடர் இயக்கம் பற்றி அறியாதவர்களும் அறிந்து கொண்டனர். போர்க்குணமிக்க லட்சிய அமைப்பாகக் கழகம் தென்னகத்தே வலிவு பெறத்தொடங்கிய உண்மைகளை வட இந்தியத் தலைவர்கள் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை சம்பத்தின் முதல் முழக்கம் அவர்களுக்கு உணர்த்தியது. டெல்லி நம்மை உற்று நோக்கத் தொடங்கியது.

 சம்பத்தின் விவாதத் திறமையில் மிளிர்ந்த ஆழ்ந்த கருத்துகளை ஆதிக்கபுரியினர் திகிலோடு நோக்கினாலும், நடுநிலையாளர்கள் மனதிற்குள்ளாகவேனும் பாராட்டவே செய்தனர். அவையில் முழக்கமிட்டு வெளியே வந்த சம்பத்தைச் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். கழகத்தின் மூலாதார லட்சியங்கள் குறித்தும், அண்ணாவின் பங்களிப்பு குறித்தும் செய்தியாளர்களிடம் சம்பத் விளக்கமாக எடுத்துரைத்தார்.

 அதுவரை வடக்கே உள்ளவர்களுக்கு தி.மு.க. என்பதே தெரியாது. கடவுள் இல்லை என்று சொன்னதும் நாத்திகக் கட்சி என்று மட்டுமே அவர்கள் நினைத்திருந்தனர். மக்களவையில் தங்கள் பேச்சு பற்றி மற்ற மாநிலத்து உறுப்பினர்கள் தங்களிடம் தனிப்பட்ட முறையில் எதுவும் பேசினாரா என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

 வங்கத்தைச் சேர்ந்த பிரபல கம்யூனிஸ்டு எம்.பி. ஹிரேன் முகர்ஜி இந்தி பற்றி நான் பேசியதை ஆமோதித்தார். எந்த மொழியையும் திணிப்பதை நாங்கள் (கம்யூனிஸ்டுகள்) ஏற்க மாட்டோம். ஆனால் உங்கள் மாநிலத்தில்கூட விரும்பியவர்களை இந்தி கற்க அனுமதிக்கலாம் என்றார். இதுபற்றி டில்லியில் நாம் ஒரு கருத்தரங்கை நடத்தலாம் என்று கூட யோசனை கூறினார். பொதுவாக திராவிட இயக்கம் பற்றி வடக்கே அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.... இவ்வாறு டெல்லிச் செய்தியாளர்களிடம் சம்பத் குறிப்பிட்டார்.

 இந்த வேகத்திலேயே திட்டமிட்டுத் தொடர்ந்து சில சாதனைகளை ஏற்படுத்திவிட வேண்டும் என்று விரும்பிய அண்ணா நாடாளுமன்றத்தில் அந்தக் கூட்டத் தொடரிலேயே சில முக்கியப் பிரச்சனைகளை கிளப்புவதற்கான யோசனைகளை சம்பத்திற்கு வழங்கினார். இதன் தொடர்பாக 21.8.57 அன்று நாடாளுமன்ற மக்கள் அவையில் அந்தமான், இலங்கைத் தமிழர்கள் இன்னல்களைத் களைய சம்பத் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொணர்ந்து, அவையின் பரபரப்பை மிகுதியாக்கி அரியதோர் உரையாற்றினார். அதுவே, இன்றும் இலங்கைத் தமிழர்களுக்காக எழுதப்பட்ட உரிமைச் சாசனமாக விளங்குகிறது.

 1957இல் இலங்கைத் தமிழர் பிரச்சினை கடுமை பெறலாயிற்று. ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவழியினர் இலங்கையிலிருந்து துரத்தப்பட்டு நிராதரவாக தமிழகக் கரையோரங்களில் அகதிகளாக வந்து குவிந்தனர். இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில், உள்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்ற சம்பத் பிரதமர் பண்டித நேரு முன்னிலையில் இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை மிக உருக்கமாக எடுத்துரைத்து பிரச்சினைக்குத் தீர்வு காண வற்புறுத்தினார்.

 சம்பத்தின் ஆவேசப் பேச்சை நேரு குறிப்பிட்டுப் பேசினார். அவர் கூறியதாவது: ""உங்களுடைய உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடியும். இந்த விவகாரம் பற்றி இலங்கையில் உள்ள நம் தூதுவர் அந்நாட்டு அதிபருடன் உடனடியாக பேச்சு வார்த்தை நடத்திட இன்றே உத்தரவிடுகிறேன். இலங்கை இந்தியர்களுக்குக் குடியுரிமை கிடைத்திட இந்த அரசு ஆக்கப் பூர்வமாகச் செயல்படும்'' என்று வாக்குறுதி தந்தார் நேரு.

 நமது தூதுவர் பேசுவது மட்டும் போதாது நீங்களும் இலங்கை அதிபரோடு தொடர்பு கொண்டு விவாதிக்க வேண்டுமென்கிறார் சம்பத். அதற்கும் நேரு சம்மதிக்கிறார்.

 

அண்ணா சட்டமன்றத்தில் - சம்பத் நாடாளுமன்றத்தில்

நாடாளுமன்ற மக்களவையில் நேரு மற்றும் மத்தியப் பெருந்தலைவர்கள் மத்தியில் சம்பத், இந்தியா ஒரு நாடல்ல. இது பல நாடுகளைக் கொண்ட துணைக்கண்டம் என்று முழங்கியபோது, ஏதோ புயலைச் சந்தித்ததுபோல் பொறுமினர். பொங்கினர். அதிர்ச்சியும், ஆத்திரமும் மேலிடச் சம்பத்தை பார்த்து ஒரு புரட்சிக்காரரைப் பார்ப்பது போல் மிரட்சியடைந்தனர்.

இதோ சம்பத் பேசுகிறார்:

""....நீங்கள் என் மீது கோபப்படலாம், ஆத்திரப்படலாம், பரிகாசம் செய்கிறீர்கள் ஆனால் இந்தக் கோரிக்கை பிறப்பதற்கு காரணமாயுள்ள சூழ்நிலைகளையும், தர்க்கவாத நிலைமைகளையும் அருள்கூர்ந்து நீவிர் சற்று சிரமப்பட்டு பரிசீலிப்பீர்களேயானால் இந்தக் கோரிக்கை உங்களளவில் மோசமாயினும், எங்களைப் பொறுத்தவரை அது தவிர்க்க முடியாதது என்பதை நீங்கள் உணரமுடியும்.... இந்தி ஆதிக்க எதிர்ப்பு என்பது எப்போது, எக்காரணத்திற்காக எங்கள் மண்ணில் வெடித்தது என்பதை, நீங்கள் சற்றுப் பொறுமை காட்டுவதாயின் சுருக்கமாகவே கூறி, உங்களுக்கு உணர்த்த முடியும் என்று நினைக்கிறேன்.

 தொன்மைச் சிறப்புடைய மொழி தமிழ். அது அழிவதை எங்கள் மக்கள் ஏற்க மாட்டார்கள். நாங்களே கூட உறங்கிக் கிடந்தோம். நீங்கள் இந்தியை திணித்து தூங்குகின்ற புலியை இடறி விட்டிருக்கிறீர்கள். இன்று மாநிலத்தின்முன் இன உணர்வும் மொழி உணர்வும் பொங்கிப் பிரவகிக்கிறது. கலப்பில்லாத நல்ல தமிழில் பேசுவோர் வரவேற்கப்படுகின்றனர்....'' (குறுக்கீடுகள்)

 நேரு: இந்தி மட்டுமல்ல அரசியல் சட்டத்தின் எட்டாவது ஷெட்யூலின் கண்டுள்ள மொழிகள் அனைத்தும் நமது தேசிய மொழிகளே.

 சம்பத்: பிரதமரின் இந்த வாக்குறுதியை நாங்கள் வெகுவாக மதிக்கிறோம். ஆனால் சமீப காலமாக உயர்ந்த பதவியில் இருக்கும்மிக உயர்ந்த பதவியில் இருக்கும் சிலர் இந்தியாவின் தேசிய மொழி இந்தி' எனத் திரும்பத் திரும்பச் சொல்லித் திரிகிறார்கள். உயர்மட்டத்தில் எழும் இந்த முரண்பாடு நமது உண்மையான பரிசீலனைக்குரியது. அரசு இதற்கு தகுந்த விளக்கமும், காரணமும் தந்தாக வேண்டும். இந்தி மட்டுமா அல்லது எல்லா மொழிக்குமா நமது தேசிய மொழிக் கொள்கை பற்றி அரசு தனது நிலையை கொள்கைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.

இந்தி எதிர்ப்புத் தலைவர்கள் கூட்டம்:

சம்பத் வெளியிட்ட யோசனை வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கின்ற அனைத்துத் தலைவர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து ஆலோசனை நடத்தினர். பெரியார், ராஜகோபாலாச்சாரியார், அண்ணா, பி.ராமமூர்த்தி, ப. ஜீவானந்தம், ஏ. ராமசாமி முதலியார், ம.பொ.சி. வி.கே. ராமசாமி முதலியார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 1956ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் நாள் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பிரமுகர் ஏ. சுப்பையாபிள்ளை இல்லத்தில் இந்தச் சந்திப்புக்கு எற்பாடாகியிருந்தது. இந்தியாவின் ஆட்சி மொழிப் பிரச்சினை பற்றி ஆலோசனை நடந்தது.

 இந்திய அரசியல் சட்டத்தின் 347ஆம் பிரிவு 1965 ஜனவரி 26 முதல் இந்தி மத்திய அரசின் பிரதான ஆட்சி மொழியாவதற்கு அனுமதியளிக்கிறது. இந்த விதி நடைமுறைக்கு வருமானால், இந்தி பேசாத மாநிலங்களில் அலுவல் நலன்கள் பாதிக்கும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, 1965க்குப் பிறகும் ஆங்கிலம் மத்தியில் ஒரே ஆட்சி மொழியாக நீடிக்க வழி செய்ய இக்கூட்டம் கேட்டுக் கொண்டது. தமிழ்நாட்டில் பிறகு தமிழைப் போதனா மொழியாக்கிக் கொள்ளலாம். முடிந்த அளவு காலம் வரை தமிழ்நாட்டில் ஆங்கிலமே போதனா மொழியாக இருக்கவேண்டும் என்றும் பெரியார் குறிப்பிட்டார்.

 இதில் ம.பொ.சி. மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார். இந்தியாவில் தமிழுக்கு ஆபத்து இல்லை, ஆங்கிலத்திற்குத்தான் ஆபத்து என்று ராஜகோபாலாச்சாரியார் கருத்துக் கூறினார். எப்படியோ இந்தித் திணிப்பைத் தடுத்தால் போதும் என்பது அண்ணாவின் கருத்து. இந்தித் திணிப்பைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

சம்பத் தலைமையில் மாநாடு:

நாஞ்சில் மாவட்ட தி.மு.க. மாநாடு நாகர்கோவிலில் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதியன்று சம்பத் தலைமையில் நடைபெற்றது. நாஞ்சில் கி. மனோகரன் வரவேற்புரை. மதுரை டாக்டர் அருணாசலம் மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசினார்.

 அண்ணா மற்றும் முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

 தமிழ்நாட்டுப் பெரியோர்களைக் கிழடுகள் என்றும், நாடு கடத்தப்பட வேண்டியவர்கள் என்றும், நான்சென்ஸ் என்றும் நேரு பேசிய அநாகரிகப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் 6.1.58 இல் அவர் சென்னை வரும் போது கறுப்புக் கொடி காட்டுவது என்று இம்மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டு, மறுநாள் நடைபெற்ற கழகப் பொதுக் குழு அதற்கு ஒப்புதல் வழங்கியது. இந்தக் கறுப்புக் கொடிப் போராட்டத்தை கழகச் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னின்று நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டது. வெளியூர்களில் அதே நாளில் கறுப்புக் கொடி ஊர்வலங்களை நடத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

 

நேரு கண்ட கறுப்புக் கொடி:

சென்னை நகரமெங்கும் கறுப்புக் கொடிகள் காணப்பட்டன. மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு எதிரில் பெரிய ஏரியில் கறுப்புக் கொடிகளுடன் தோழர்கள் திரண்டிருந்தார்கள்.

 சரியாக 12.45 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நேரு தலைவாயிலில் ஐம்பது காங்கிரஸ்காரர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு வெளியே வந்தார். கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் கறுப்புக் கொடிகளைக் கண்டார். கண்டன முழக்கங்கள் எழுந்தன. சாலையில் இருமருங்கிலும் வெகு தூரம் வரை கறுப்புக் கொடிகள் தென்பட்டன. நேரு பிரமித்துப் போய்விட்டார். திறந்த காரில் நின்றபடி வணங்கினார். மருட்சியுற்ற மந்திரிகள் நேருவை அமர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். அவர் அமர்ந்ததும் கார் வேகமாக ஆளுநர் மாளிகைக்குப் பறந்தது. கறுப்புக் கொடியுடன் கண்டன முழக்கங்களும் தொடர்ந்தன. கூட்டத்தைக் கலைக்க காவல்துறை மிருகவெறியுடன் தடியடி, கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தியது. ரத்த வெள்ளத்தில் நினைவற்ற நிலையில் வீழ்ந்து கிடந்தனர் கழகத் தோழர்கள். பெரும் பதற்றம் நிலவியது. நேருவின் மற்ற நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்யப்பட்டது.

 ஏப்ரலில் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியது. நேருவுக்கு கறுப்புக் கொடி காட்டிய நிகழ்ச்சியில் அரசு நடத்திய காட்டுத் தர்பார் குறித்தும் தமிழர்களை இழிவு படுத்திய பண்டிதர் தமது வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் மக்களவையில் சம்பத் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொணர்ந்தார். அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தி எதிர்ப்பு நாள்

பொதுச் செயலாளர் இரா. நெடுஞ்செழியனின் அறிக்கைக்கேற்ப 13.10.57 அன்று, கிளைக்கழகங்கள், துணை அமைப்புகள் மன்றங்கள், படிப்பகங்கள் அனத்தும் இந்தி எதிர்ப்பு நாளைக் கொண்டாடினர். சென்னை மாவட்ட தி.மு. கழகத்தின் சார்பில் அன்று மாலை திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் சம்பத் சொற்பொழிவாற்றினார்.

 அன்று பிற்பகல் 3மணிக்கு மூலக்கொத்தளத்திலுள்ள தாய்மொழிக்காக தம் இன்னுயிர் நீத்த லட்சியக் காளைகள் தாளமுத்து நடராசன் கல்லறைகளுக்கு வீர வணக்கம் செலுத்தினார். அங்கிருந்து மாபெரும் ஊர்வலம் திருவல்லிக்கேணி கடற்கரையை சென்றடைந்தது. கடற்கரைக் கூட்டத்தில், சம்பத், இந்திய அரசியலிலே இந்தித் திணிப்பு எந்த வகையிலே உருவெடுத்து ஆதிக்கம் செலுத்த வருகிறது என்பதையும், இந்திப் பிரச்சினைக்குப் பின்னாலே ஒளிந்து கொண்டிருக்கிற ஆதிக்க வெறியைசூழ்ச்சி எண்ணத்தை அம்பலப்படுத்திச் சொற்பொழிவாற்றினார்:

 அகில இந்திய ஆட்சி மொழி பற்றிய கல்கத்தா மாநாடு

 1958ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய ஆட்சி மொழி மாநாட்டில் சம்பத் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கலந்துகொண்டு தென்னக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்தார்.

 அம்மாநாட்டில் சம்பத் இந்திய யூனியன் ஆட்சி மொழியாகவும் மத்திய அரசாங்க நிர்வாகத்திற்கும் மாநிலங்களுடன் தொடர்பு கொள்ளவும் எந்த மண்டல மொழியையும் பயன்படுத்த முயற்சிக்கக் கூடாது என்று இம்மாநாடு கருதுகிறது அத்தகைய முயற்சி மக்களுக்கு அநீதியையும் ஆழ்ந்த வெறுப்பையும் விளைவித்து, கேடு வாய்ப்பதாகும் என்னும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

தாராசிங் சம்பத் சந்திப்பு

1958 பிப்ரவரி 3ஆம் தேதி சீக்கியர்களின் மாபெரும் தலைவரான மாஸ்டர் தாராசிங்கை சம்பத் சந்தித்தார்.

 இருவரும் இந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முறியடிப்பது பற்றியும் மற்றும் இதர பல பிரச்சனைகள் குறித்தும் மனம்விட்டுப் பேசினர். தாராசிங் தமிழகத்திற்கு வருகை தர வேண்டுமென அண்ணா சார்பாகவும் தி.மு. கழகம் சார்பாகவும் சம்பத் அன்பழைப்புத் தந்தார். அழைப்பிற்கு நன்றி தெரிவித்த தாராசிங் பஞ்சாபில் இந்தி ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்கான தயாரிப்புகளில் ஈடுபடவேண்டியிருப்பதால் பிறிதோர் சமயம் வருவதாக வாக்களித்தார்.

நேரு அண்ணா சந்திப்பிற்கு சம்பத் முயற்சி

1958 ஆம் ஆண்டு திராவிட நாடு பிரிவினைக் கொள்கை குறித்து அது சாத்தியமா? சாத்தியமில்லையா? என்பது தொடர்பாக அண்ணா பிரதமர் நேரு சந்திப்பு அவசியம் என பெரிதும் விரும்பினார் சம்பத். இதற்காக அண்ணாவின் சம்மதத்தைப் பெற அரும்பாடுபட்டார் சம்பத்.

 முதலில் அண்ணா தயங்கினார், தள்ளிப் போட்டார். விடாது வற்புறுத்தி அண்ணாவின் சம்மதத்தைப் பெற்ற சம்பத் டெல்லி சென்று நேருவிடம் நேரம் குறித்து ஒப்புதல் பெற்றார். இரு தடவைகளில் ஒவ்வொரு மணி நேரம் கலந்து பேசுவதென்று முடிவாயிற்று. உற்சாகத்துடன் சென்னை திரும்பிய சம்பத் "தையற்கலை' சுந்தரத்தை வரவழைத்து அண்ணாவிற்கு கோட்டு சூட் எல்லாம் தயாராகிவிட்டது. அண்ணாவும் சம்பத்தும் கோட்டு சூட்டணிந்த படங்கள் பத்திரிகைகளிலும் காலண்டர்களிலும் வெளிவந்தன.

 குறிப்பிட்ட நாளுக்கு நான்கு நாட்கள் முன்பாகவே அண்ணாவை டெல்லிக்கு அழைத்துப் போனார் சம்பத். அண்ணாவின் இணைபிரியா நண்பர் காஞ்சி சி.வி. ராஜகோபால், செழியன், ராசாராம் ஆகியோரும் உடன் சென்றனர். டெல்லி சென்றதும் ஒரு நாள் ஓய்வு, மறுநாள் டெல்லி, ஆக்ரா, போன்ற சுற்றுலாத் தலங்களைச் சுற்றி பார்த்தாகிவிட்டது. அடுத்த நாள் காலை பதினோரு மணிக்கு நேருவுடன் அண்ணாவின் சரித்திரச் சந்திப்பு. ஆனால் முதல் நாள் இரவு காஞ்சியிலிருந்து ஒரு துயரச் செய்தியை ஏந்திக்கொண்டு ஒரு தந்தி அண்ணாவுக்கு வந்தது.

 அண்ணாவின் அக்காளுடைய (மச்சி என்று எல்லோரும் அழைப்பர்) மகள் செüந்தரியம்மாள். (அண்ணாவின் வளர்ப்பு மகன்களான பரிமளம், இளங்கோவன், கெüதமன், ராஜேந்திரன் இவர்களின் தாயார்). இந்த அம்மையார் வயிற்றுவலி காரணமாக நோய்வாய்ப்பட்டு காலமானார். இந்தத் துயரச் செய்தி கிடைத்ததும் அண்ணா கண்கலங்கினார். உடனே சென்னை திரும்ப வேண்டுமென்று சம்பத்திடம் சொன்னார்.

 ""நாளை, நீங்கள் நேருவுடன் பேசுகிற மிக முக்கிய நிகழ்ச்சி இருக்கிறது. அந்த வாய்ப்பை இழக்க வேண்டாம். ஊருக்குத் தகவல் சொல்லி அடக்கம் செய்யச் சொல்லிவிடலாம். நாளை நீங்கள் நேருவைச் சந்தித்ததும் சென்னை புறப்பட்டுவிடலாம்'' என்று சம்பத் கூறினார். ஆனால் அண்ணாவோ அழ ஆரம்பித்துவிட்டார்.

 ""இல்லை சம்பத், நேரு எப்போதும் இருப்பார். ஆனால் அந்தப் பெண்ணின் சடலத்தை மூடிவிட்டால் பிறகு பார்க்க முடியாது. அதனால் காஞ்சிபுரம் போய் மறுநாளே திரும்பி விடுகிறேன். என்னால் இதைத் தவிர்க்க முடியாது'' என்று சென்னை புறப்படத் தயாரானார் அண்ணா. அன்றே அனைவரும் சென்னை திரும்பினர். மறுநாள் நேருவுடன் நடக்கவிருந்த அண்ணாவின் சந்திப்பு பிறகு நடக்காமலேயே போய்விட்டது.

 சம்பத் சோவியத் சுற்றுப் பயணம்

 சம்பத் 1958 செப்டம்பர் மாதம் 26இல் சோவியத் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். காலை 8 மணிக்கு புதுடில்லி வெலிங்டன் விமான நிலையத்தில் ஏராளமான எம்.பி.க்களும் நண்பர்களும், பிரமுகர்களும் அவரை வழியனுப்பி வைத்தனர். அரியானா என்னும் ஆப்கானிய விமானம் சம்பத்தை மாஸ்கோவிற்குச் சுமந்து சென்றது. அவருடன் தமிழகக் காங்கிரஸ் பிரமுகரும் எம்.பி.யுமான கே.எஸ். ராமசாமி மாஸ்கோ சென்றார்.

 சம்பத்தின் சண்டே டைம்ஸ்

 சம்பத் 1959 ஜனவரியில் "சண்டே டைம்ஸ்' எனும் ஆங்கில வார ஏட்டைத் தொடங்கினார். அவர் ஆசிரியராக இருந்த அவ்விதழ் வெற்றிநடை போட்டது. அண்ணாவின் "ஹோம் லண்டு' பொருளாதாரத் தட்டுபாடுகளால் தடைபட்டு நின்றதால் சம்பத் இந்த முயற்சியை மேற்கொண்டார். அப்போது அவருக்கு இதில் மிகவும் உறுதுணையாக இருந்தவர் பழம்பெரும் நீதிக் கட்சித் தலைவர் "சண்டே அப்சர்வர்' பி. பாலசுப்ரமணியம்.

 பி. பாலசுப்ரமணியம் நீண்ட காலமாக "சண்டே அப்சர்வர்' ஆங்கில வார ஏட்டை நடத்தி வந்தார். துணிவோடு கருத்துகளை எழுதக் கூடியவர். அண்ணாவின் பேரன்பிற்குரியவர். தென் சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் (1957) மத்திய நிதி அமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியை எதிர்த்து இரு கழகங்களின் ஆதரவோடு போட்டியிட்டு பத்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டவர்.

 சம்பத்தின் நாடாளுமன்றப் பேச்சு குறித்து பெரியார்

 நாடாளுமன்றத்தில் நேருவுக்கு எதிரே அமர்ந்து கொண்டு சம்பத் திராவிடத்தின் குரலை மிகத் துணிவாக ஒலிக்கிறார் என்பதில் பெரியாருக்கு உள்ளூர மகிழ்ச்சி உண்டு. தம்மை சந்திக்கிற பிரமுகர்களிடம், ""சம்பத்து நல்லா பேசுறானாமே பேப்பர்ல கூட பார்த்தேன்'' என்று கேட்பார். ""ஆமாம்யா, நல்லாத்தான் பேசுறார்யா'' என்று குருசாமியும் கூறுவார்.

 (தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com