ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

பஞ்சகவ்யத்தின் பலாபலன்கள்!   பசுவின் பால், தயிர், நெய், பசுவின் சாணம், கோமூத்ரம் எனப்படும் பசுவின் சிறுநீர் ஆகியவை சேர்ந்தது பஞ்சகவ்யம் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்த ஐந்து திரவங்களும் எந்த விக
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

பஞ்சகவ்யத்தின் பலாபலன்கள்!

பசுவின் பால், தயிர், நெய், பசுவின் சாணம், கோமூத்ரம் எனப்படும் பசுவின் சிறுநீர் ஆகியவை சேர்ந்தது பஞ்சகவ்யம் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்த ஐந்து திரவங்களும் எந்த விகிதத்தில் கலக்கப்பட வேண்டும்? ஆயுர்வேத மருத்துவத்தில் பஞ்சகவ்யத்தின் பலாபலன்கள் விளக்கப்பட்டுள்ளனவா? தினந்தோறும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் பஞ்சகவ்யம் உட்கொண்டால் பெறும் நன்மைகள் எவை?

 எஸ்.அனந்தராமன், புட்டபர்த்தி.

 "பஞ்ச' என்றால் ஐந்து. "கவ்யம்' என்றால் பசு மாட்டிலிருந்து கிடைக்கக் கூடிய பால், தயிர், நெய், சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றின் கலவை. அஷ்டாங்க ஹிருதயம் எனும் ஆயுர்வேத நூலில் இந்த பஞ்சகவ்யம் பற்றிய விபரம் உத்தர ஸ்தானத்தில் வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இந்த ஐந்தையும் நெய்யுடன் சேர்த்து பக்குவம் செய்து சாப்பிட்டோமேயானால் வலிப்பு, ஜுரம், பைத்தியம், காமாலை போன்ற உபாதைகள் நீங்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. நெய் மருந்தாகக் கிடைக்கிறது.

 ஒவ்வொன்றையும் சம அளவு சேர்க்க வேண்டும் என்று சரக ஸம்ஹிதையில் கூறப்படுகிறது. ஆனால் பசுநீர் 1 பங்கு, பசும்சாணம் 1 1/2 பங்கு, பால் 8 மடங்கு, நெய் 4 பங்கு, தயிர் 5 பங்கு என்ற விகிதத்தில் சேர்ப்பது சம்பிரதாயமாகும் (ஸித்த யோகம்).

 மகாபஞ்சகவ்யகிருதம் என்ற பெயரிலும் ஒரு நெய் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. தசமூலம், திரிபலை, மஞ்சள், மரமஞ்சள், வெட்பாலைப்பட்டை, ஏழிலம்பாலை, நாயுருவி, அவுரி, கடுகரோஹிணீ, கொன்றை, புஷ்கரமூலம், பேயத்தி வேர், காஞ்சொறி இவற்றை வகைக்கு 2 பலம் எடுத்து 16 பிரஸ்த நீரிலிட்டுக் காய்ச்சி நாலில் ஒன்றாகுமாறு குறுக்கி அதில் சிறுதேக்கு, வட்டத் திருப்பி, துவரை, சிவதை, நாகதந்தீ, த்ரிகடுகு, வாசனைப் புல், பெருங்குரும்பை, ஓமம், நிலவேம்பு, யானைத் திப்பிலி, நன்னாரி, பெருநன்னாரி, மல்லிகை (காட்டாத்தி என இந்து முனிவர். காட்டு மல்லிகை எனச் சிலரும், மருதோன்றி எனச் சிலரும் கூறுவர்), கொடிவேலி, நொச்சி ஆகியவற்றை வகைக்கு 1/4 பலம் எடுத்து கல்கமாக்கி கலப்பதுடன் முன் கூறப்பட்ட பஞ்சகவ்ய திரவப் பொருட்கள் நான்கையும் சேர்த்து ஒரு பிரஸ்தம் நெய் பக்குவம் செய்து கொள்ள வேண்டும். இது மகாபஞ்ச கவ்யம் எனப்படும். இது விசேஷமாக ஜுரம், வலிப்பு, மருகாதரம், பவுத்திரம், வீக்கம், மூலம், காமாலை, பாண்டு, குன்மம், இருமல், கிரஹபீடை ஆகிவவற்றைப் போக்கும்.

 வலிப்பு நோய் உள்ளவருக்கு இந்த நெய் மருந்தை அப்படியே கொடுத்துவிட முடியாது. வாயுவால் உண்டான வலிப்பை, பஸ்தி எனும் எனிமா முறையாலும், பித்தத்தால் உண்டான வலிப்பை, பேதி மருந்தாலும், கபத்தால் உண்டான வலிப்பை, வாந்தி சிகிச்சையாலும் குடல் சுத்தி முறைகளைச் செய்த பிறகு, கஞ்சி முதலியவற்றால் உடலைத் தேற்றி, அதன் பிறகே வலிப்பு நோயை அடக்குவதற்கும், நீக்குவதற்கும் பஞ்சகவ்யகிருதம் எனும் நெய் மருந்தைச் சாப்பிட வேண்டும்.

 மற்ற மருத்துவமுறைகளால் கண்டறியப்படாத மனோவஹஸ்தரோதஸ், அதாவது மனதின் திட்டங்களையும் செயல்களையும் ஏந்திச் செல்லும் குழாய்களைப் பற்றிய விபரங்களை ஆயுர்வேதம் எடுத்துக் கூறுகிறது. தினமும் ஓரிரு ஸ்பூன் பஞ்சகவ்ய நெய் மருந்தைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், புத்தியும் மனமும் கலக்கமடையாமல் தெளிவான சிந்தனையும், சிந்தனைக்கேற்ற செயல்பாடுகளும் ஏற்படும். கவலை, வருத்தம், பயம், காமம், குரோதம் முதலியவற்றால் மனம் கலக்கப்பட்ட நிலையில், கோபமடைந்த மனம், உடல் ஆகியவற்றின் ரஜோகுண, தமோகுண வாயு தோஷங்களால் இருதயம் நிரம்பப் பெற்று, ஸத்வ குணம் குலைந்து, உணர்வை எடுத்துச் செல்லும் குழாய்களிலும் தோஷங்கள் பரவிய நிலையில் தமோ குணத்தை அடைந்தவராகி அறிவுகுன்றி அருவருக்கத்தக்க சேஷ்டைகளைப் புரிபவர்களுக்கு, இந்த பஞ்சகவ்ய மஹாபஞ்சகவ்ய நெய் மருந்தானது ஒரு வரப் பிரசாதமாக அமையும். அந்த அளவிற்கு மனதில் அமைதியைத் தோற்றுவிக்கும்.

 குடல், இதயப் பகுதி, உட்புறக் குழாய்கள், மூச்சுப்பாதை போன்ற முக்கியமான பகுதிகளில் சேரக் கூடிய கிருமித் தொற்று, அடைப்பு, சுருக்கம், தளர்ந்தநிலை, செயல்திறன் குன்றுதல் போன்ற உபாதைகளை பஞ்சகவ்யக்கிருதத்தின் தொடர்ச்சியான உட்புற வரவால் நீங்கிவிடக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் மனதைச் சார்ந்த உபாதைகள் பெருகி வருகின்றன. அவற்றுக்கு பஞ்சகவ்ய - மஹா பஞ்சகவ்ய நெய் மருந்துகள் ஒரு சிறப்பான தீர்வைத் தரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

 (தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com