பூனைக்கு என்ன ஜாதி?

பள்ளிக்கூட மைதானத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த பூனைக்குட்டியை ஆசையாக வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு
பூனைக்கு என்ன ஜாதி?

பள்ளிக்கூட மைதானத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த பூனைக்குட்டியை ஆசையாக வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு வந்தாள் த்ரிஷா. அவள் தகப்பனாருக்கு அது பிடிக்கவில்லை. ""வேறு நல்ல ஜாதி பூனைக்குட்டி வாங்கித் தருகிறேன், இது வேண்டாமே'' என்றார். மகள் அடம் பிடித்ததால் அரை மனதுடன் ஒப்புக் கொண்டார்.

அவர் அந்தப் பூனைக் குட்டியைக் கண்டுகொள்வதில்லை. அதுவோ த்ரிஷாவுடன் விளையாடிக் கொண்டிருக்கும். ஒரு நாள் டைனிங் டேபிளின் கீழே சாமான்கள் சிதறிக் கிடந்தன. பூனைதான் உருட்டி விட்டிருக்கும் என்றார் தகப்பனார். ""அது அப்படிச் செய்யாது அப்பா...'' என்ற மகள், ""இனி பூனையை கவனமாகக் கண்காணிப்பதாகச் சொன்னாள்''.

இல்லையென்றால் அவளுடைய தந்தை அதை விரட்டியடித்திருப்பார்.

சில நாட்கள் கழித்து ஒரு நாள், நடு இரவில் பூனை த்ரிஷாவைப் பிறாண்டிப் பிறாண்டி மேலே விழுந்தது. த்ரிஷாவே எரிச்சல் பட்டாள். ஆனால் பூனை இவளுக்கு ஏதோ சொல்வதுபோல் தோன்றியது. எரிச்சலுடன் பூனையையும் தூக்கிக்கொண்டு சற்றே தள்ளியிருந்த சகோதரியின் அறைக்குச் சென்று இன்னொரு படுக்கையில் படுத்துக் கொண்டாள். சில நிமிடங்கள் கழிந்திருக்கும்.

தடதடவென சப்தம். த்ரிஷா ஏற்கெனவே தங்கியிருந்த அறையில் அலமாரிகள் நிலை தடுமாறிக் கீழே விழுந்தன. கட்டில் நொடித்துப் போய் அறையில் ஏற்பட்ட பள்ளத்தில் சரிந்தது. ஆமாம், அப்போது அங்கே பூகம்பம் ஏற்பட்டது. த்ரிஷா தங்கியிருந்த அறை மோசமாக சேதமானது. நல்ல வேளை பூனைக்குட்டி காப்பாற்றி விட்டது.

என்ன ஜாதியாக இருந்தாலும் பூனைக்குட்டிகள் ஒரே மாதிரிதான். ஆபத்துக்களை முன்கூட்டி உணரும் சக்தி அவற்றிற்கு உண்டு. அவை எந்த ஆபத்திலிருந்தும் தப்பிவிடும்.

தீப்பற்றிய தேவாலயம்!

அந்த தேவாலயத்தில் எல்லோரும் ஞாயிறு தோறும் மிகச் சரியாக ஒன்பது மணிக்குத் தவறாமல் கூடிவிடுவார்கள், காரணம், இருபது கலைஞர்கள் கொண்ட இசைக்குழு தேவகீதத்தைச் சொக்கிப் போகும் அளவுக்கு இசைக்கும். யாரும் ஒரு நொடியைக்கூடத் தவறவிடாமல் அந்த இன்னிசையைக் கேட்பது வழக்கம். பக்தர்கள் நேரம் தவறாமல் தேவாலயத்திற்கு வருவதற்கு அது முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை ஒன்பது மணிக்குச் சில நிமிடங்கள் இருக்கும்போது, பக்தர்கள் தேவாலயத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது, பெரிய வெடிச்சத்தம் இடிபோலக் கேட்டது. உடனே தேவாலயம் பற்றி எரிய ஆரம்பித்து விட்டது.

தீப்பிழம்புகள் நாலாபக்கமும் சூழ்ந்தன. எல்லோரும் பதறிப் போனார்கள். பக்தர்கள் ஒன்பது மணிக்குத்தான் வருவார்கள் என்றாலும், இசைக்குழு எப்பொழுதும் ஒன்பது மணிக்கு முன்னதாகவே வந்து வாத்தியங்களைச் சரிபார்த்துக் கொள்வது வழக்கம். எனவே எல்லோரும் அனிச்சையாக கடிகாரத்தைப் பார்த்தார்கள். மணி சரியாக ஒன்பது. எங்கும் அழுகைக் குரல். மக்கள் தீச்சுடர்களை மீறி உள்ளே நுழைந்து இசைக் குழுவினரைக் காப்பாற்றப் பாய்ந்தார்கள். தீயணைக்கும் படையினர் உரிய பாதுகாப்புடன் உள்ளே சென்றார்கள். விரைவில் திரும்பி உதட்டைப் பிதுக்கினார்கள்.

உள்ளே சமையல் வாயு சிலிண்டர்கள் வெடித்ததால் இந்தத் தீ விபத்து என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.

உள்ளே சென்று வந்த ஒரு தீயணைப்புப் படைவீரர், ""அப்படித்தான் இருக்கும்'' என்றார். அத்துடன் ""இருபது பேரில் ஒருவர் கூடப் பிழைத்திருக்க முடியாது'' என்றும் துக்கம் தோய்ந்த குரலில் சொன்னார். கூடியிருந்த பக்தர்கள் மயக்கம் போட்டு விழாத குறை. போயும் போயும் இசைக் கலைஞர்களுக்கு இப்படி ஒரு துர்மரணம் ஏற்பட்டுவிட்டதே என்று எல்லோரும் வருந்தினார்கள்.

இவர்கள் இப்படிக் கவலையுடன் பேசிக் கொண்டிருந்தபோதே, வரிசையாக அங்கே இருபது கார்கள் வந்து நின்றன. என்ன ஆச்சரியம். கார்களிலிருந்து அந்த இசைக் கலைஞர்கள் சொல்லி வைத்தாற்போல் வந்து இறங்கினார்கள்.

அன்று ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சொந்த வேலை இருந்ததனால் எல்லோருமே அன்று பத்து நிமிடங்கள் தாமதமாக வந்தார்களாம்.

அப்பாடா, தாமதத்தினால் பிழைத்தார்கள் என்று பக்தர்கள் எல்லோரும் பெருமூச்சு விட்டார்கள். சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com