என் மகன்

தூங்கி எழுந்து, மனைவி செய்து வைத்திருந்த தேன் குழலை அசை போட்ட படியே மோகன் தொலைக்
என் மகன்

தூங்கி எழுந்து, மனைவி செய்து வைத்திருந்த தேன் குழலை அசை போட்ட படியே மோகன் தொலைக் காட்சிப் பெட்டியை இயக்க, கால் பந்து ஓடிக்கொண்டிருந்தது. ஆர்வமாகப் பார்க்க ஆரம்பித்தவனின் மனம் திடீரென்று விரக்தி அடைந்தது. டீவியை பட்டென்று அணைத்தான். சோபாவில் பொத்தென்று விழுந்தான். மனம், கடந்த காலத்தை அசை போட ஆரம்பித்தது.

 அவன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம் அது.  உடலில் இளமைத் துடிப்பு பொங்கி வர, எழுந்தது விளையாட்டில் ஆர்வம். அவனை மிகவும் கவர்ந்தது கால் பந்து. அந்த விளையாட்டின் வேகம், உற்சாகம், விறுவிறுப்பு, அதனை விளையாட தேவைப்படும் திறமை....  இதெல்லாம் அவனை வெகுவாகக் கவர, வீட்டில் அவனுக்குக் கொடுக்கும் பாக்கெட் மணியில் ஒரு கால் பந்து வாங்கினான். விளையாடத் தொடங்கினான். மணிக் கணக்கில். தினமும்.

  மோகனை ஒரு நாள் அவன் அப்பா அழைத்தார்.

""என்ன விளையாடறே நீ?'' கேட்டார்.

""ஃபுட் பால்பா. நல்ல பந்து வாங்கித்தாப்பா. இந்த பந்து சரியில்லை'' ஆர்வத்துடன் அப்பாவைப் பார்த்தான்.

 அப்பா அவனை அருகில் அழைத்தார். ""மோகன் அதைத் தூக்கி எறி முதலில்''. அவரின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான்.

""என்னப்பா சொல்றீங்க?''

""மோகன், கால் பந்துக்கு நம்ம நாட்டில்  மதிப்பு கிடையாதுடா. அதை விளையாடி ஏன் நேரத்தை வீணாக்கற. என் ஃப்ரண்ட் பாலு இருக்கானே. அவன் பையனை கிரிக்கெட் கோச்சிங்க்கில் சேர்த்திருக்கானாம். நாளைக்குக் காலையில் உன்னையும் அங்கே அழைச்சுட்டுப் போய் சேர்த்துடப் போறேன்''

 அப்பா பெருமிதமாய் சொன்னார். திடுக்கிட்டான்.

  ""அப்பா எனக்கு கிரிக்கெட்டில்  ஆர்வம் இல்லப்பா. கால் பந்துதான் விளையாடுவேன்''  சொன்னான். 

""நீ சும்மாயிருடா. உனக்கு என்ன தெரியும்? உன் பேச்சை யார் கேட்கப் போறா. நாளைக்குக் காலையில் ரெடியா இரு'' - உத்தரவிட்டார்.

காலில் விழுந்தான். ""அப்பா அப்பா ப்ளீஸ்.....''ம் பலனில்லை.

மறுநாள் காலையில் அவன் அப்பா அவனுக்காக ஆயிரம் ரூபாயை கிரிக்கெட் கோச்சிங் சென்டரில்  கட்டினார்.  பேட்டிங்கில் ராகுல் டிராவிடாகவும், பந்து வீச்சில் ஆசிஷ் நெஹ்ராவாகவும் பிரகாசிக்க ஆரம்பித்த வரை அவன் பயிற்சி தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

  அப்போது அவன் ப்ளஸ் டூ முடித்திருந்தான். தொண்ணூறு சதவிகித மதிப்பெண்கள்பெற்று. காலேஜ்  தேடும் படலம். ""அப்பா நான் ஆ.நஸ்ரீ ஙஹற்ட்ள் படிக்கப் போறேன்பா. அப்புறம் ங.நஸ்ரீ ஙஹற்ட்ள் படிச்சுட்டு டட்க் பண்ணணும்னு ஆசையா இருக்கு. கணக்கு எனக்கு ரொம்ப பிடிச்ச பாடம்பா''  தன் ஆசையை வெளியிட்டான்.

 ""டேய் கண்ணா, நம்ம கிட்டே வசதி இருக்கு. நீ இஞ்ஜினியரிங்க்  நுழைவுத் தேர்வு எழுது. பாஸ் பண்ணலேன்னா தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்த்து விட்டுடறேன்.  பிழைக்கற வழியைப் பாருடா. தெரிஞ்சுதா? ஆஉ படிச்சா என்ன மவுசு தெரியுமா? கணக்காம் கணக்கு. என்ன, ராமானுஜம் ஆகப் போறியா?'' அப்பா அவனை அடக்கினார். அவன் நுழைவுத் தேர்வில் பெயில் ஆகி தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான்.

""கெமிக்கல் இஞ்ஜினியரிங் எடுத்துக்கறேன்பா'' என்றான்.

""ம்ம் எலெக்ட்ரானிக்ஸ்தான்'' என்றார்.

""டேய் மோகன் உனக்குக் காலாகாலத்தில் ஒரு கல்யாணத்தைப் பண்ணி  வெச்சுடலாம்னு ஆசைப் படறோம்பா. மகாலிங்கம் மாமா கிட்டே சொல்லி உனக்கு வரன் தேடச் சொல்லியிருக்கேன். என்னடா உனக்குக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம்தானே?ஆசைதானே?''  அம்மா அவன் தலையை பாசத்துடன் வருடியபடியே கேட்டாள். தாய்ப் பாசம் அவள் கண்களில்.

  ""கல்யாணமா, எனக்கா, இப்ப வேணாம்மா. என் வேலையில் நான் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி முன்னேற வேண்டியிருக்கும்மா. ஒரு வருஷம் இரண்டு வருஷம் பொறு. அப்புறம் பார்க்கலாம்'' அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்தவாறே சொன்னான்.

""நாங்க உனக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சாச்சுடா. மோகன், கல்யாணம் பண்ணிக்கிட்டு ஆபீஸ் வேலையில் கவனம் செலுத்த முடியாதா என்ன? அது பாட்டுக்கு அது. இது பாட்டுக்கு இது. அதுக்காக இதைத் தள்ளிப் போடக்கூடாதுடா கண்ணா'' அம்மா சொன்னாள்.

 ""அம்மா அம்மா  இரண்டு வருஷம் போகட்டும்மா...ப்ளீஸ்..ப்ளீஸ்..''

 '"நீ சும்மா இருடா பயலே. என் ஆசையிலே நீ குறுக்கே நிற்காதே'' சொல்லிவிட்டு இவன் பதிலுக்குக் காத்திராமல் சமையல் கட்டுக்குள் நுழைந்துவிட்டாள். 

 ஒரு மாதம் கழித்து அம்மா மறுபடியும் அவனிடம் கல்யாணப் பேச்சைத் துவங்கினாள். ""டேய் கண்ணா, ஒரு ஜாதகம் நல்லா பொறுந்தியிருக்குடா. முடிச்சுடலாம்னு இருக்கேன்''

 ""அம்மா நான் சொன்னதை யோசிச்சு.......''

 ""டேய் சும்மாயிருடா....'' மடக்கினாள்.

 ""அம்மா, கல்யாணமோ உடனே பண்ணிண்டாகணும்னு சொல்றே. அப்ப நான்  சொல்றதைக் கேளேன். என் ஆபீஸ்லே வேலை செய்யற கயல்விழிங்கற பெண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு. அவளுக்கும் என் மேல் ஆசை இருக்கு''.. .. .. முறையிட்டான்.

  ""டேய் அவ பெயரைப் பார்த்தாலே தெரியறது, வேற  ஜாதின்னு. வாயை மூடு. நாங்க சொல்லற பெண்ணைப் பண்ணிக்கோ. அதான் உனக்கு நல்லது'' அம்மா அடித்துச் சொன்னாள்.

  ""அம்மா, அம்மா ப்ளீஸ் ப்ளீஸ்......'' கெஞ்சினான்.

""நான் சொல்லற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கலைன்னா என்னை உயிரோடேயே பார்க்க முடியாது சொல்லிட்டேன்'' அம்மா அறிவித்தாள்.  வாயை மூடிக் கொண்டான். அவன் கண்களில் கண்ணீர். அம்மா முகத்தில் ஆனந்தம்.

""கெüரி, இரண்டு வருஷம் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடலாம். கொஞ்சம் வாழ்க்கையை அனுபவிச்சுட்டு அப்புறம் குழந்தை பெத்துக்கலாம். ஊர் ஊரா போகலாம். சினிமா, ட்ராமான்னு சுத்தலாம். குழந்தை பிறந்தப்புறம் நம்ம கவனம் முழுவதும் அதன் மேல் இருக்கணும்'' மனைவியிடம் சொல்ல "ஓகே' என்றாள்.

""மோகன் கல்யாணம் ஆகி இரண்டு மாதம் ஆகிறது. ஏதாவது விசேஷம் உண்டா. ஒரு பேரனை கையில் எடுத்துக் கொஞ்சணும்னு ஆசையாய் இருக்குடா...'' அம்மா மணிக்கு அறுபது முறை நச்சரிக்கத் தொடங்கினாள். மருமகளிடமும். அவனால் தாங்க முடியவில்லை. வாத்ஸ்யாயன மந்திரத்தை அவன் மனைவியிடம் படிக்க, அவன் வீட்டில் அவனுக்குக் கல்யாணம் ஆகி ஒரு வருஷத்தில் "குவா குவா'. ""இரண்டாவது குழந்தையைத் தள்ளிப் போடலாம்'' என்றான்.

""டேய் பேரனைப் பெத்துக் கொடுத்துட்டே. ஒரு பேத்தியும்.......'' ஆரம்பித்தாள். அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதைத் தவிர அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. ஆனால்

பிறந்தது மறுபடியும் பையன். அம்மாவின் பேத்தி ஆசையால் இப்பொழுது அவன் இரண்டு பையன்களும் ஒரு பெண்ணும் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். கட்டிலிலும் தொட்டிலிலும்.

நினைவுகளில் இருந்து கலைந்தவன் மறுபடியும் தொலைக்காட்சியை இயக்க, அதே கால் பந்து. கோபத்தில் ஒரு தமிழ் சேனலை இயக்க, அழகிய அழகி அஸ்காவாம்.... "உனக்கு இருபது எனக்குப் பதினெட்டு' படத்தின் பாடல் காட்சி. அங்கும் கால் பந்து. வெறுப்பில் ரிமோட்டை வீசி எறிந்தான். அவன் மனதில் மெகா சீரியல் பாவம்.

 ""இந்தாங்க....'' எதிரில் மனைவி நின்றிருந்தாள். அவள் கையில் ஆவி பறக்கும் காப்பி. வாங்கிக் கொண்டான். அவன் மனநிலைக்கு மிகவும் தேவைப்பட்டது. பருகத் தொடங்கினான். ஒரு விஷயம் சொல்லணுங்க. சுரேஷ் தினமும் என்னிடம் நச்சரிச்சுண்டே இருக்கான்...'' ஆரம்பித்தாள்.

 ""என்ன விஷயம்?'' கேட்டான்.

 ""அவனை கிரிக்கெட் கோச்சிங்கில் சேர்க்கணுமாம். ஆசைப் படறான். கிரிக்கெட் விளையாடணும்னு ரொம்ப ஆசையாம். சேர்த்து விட்டுடுங்களேன். பாவம்''

உடனே  மோகன் எழுந்தான். காப்பிக் கோப்பையை டைனிங் டேபிளில் வைத்தான். மனைவியைப் பார்த்தான். ""தோ பார் கெüரி. ஃபுட்பால் கத்துண்டு பெரிய ஃபுட் பால் ப்ளேயரா ஆகணும்னு எனக்கு தீராத ஆசை இருந்தது. அது நிறைவேறல. அந்த நிறைவேறாத என் ஆசையை என் மகன் மூலம்தான் தீர்த்துக்கப் போறேன். நாளைக்கே அவனை ஃபுட்பால் கோச்சிங்கில் சேர்க்கப் போறேன்'' தீர்க்கமாகச் சொல்லிவிட்டு நகர்ந்தான், மனைவியின் பதிலுக்குக் காத்திராமல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com