இளைப்பாறும் சுமைகள்

கீழக்கோட்டை. அதுதான் என் சொந்த ஊர்.  பட்டமங்கலத்தையும், சொக்கநாதபுரத்தையும்
இளைப்பாறும் சுமைகள்

கீழக்கோட்டை. அதுதான் என் சொந்த ஊர்.  பட்டமங்கலத்தையும், சொக்கநாதபுரத்தையும் இணைக்கும் அந்த ரோட்டிற்கு குறுக்கே செல்லும் மண் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்தால் வரும் கிராமம்தான் அது.  கிராமத்தை உரசிச் செல்லும் மணி முத்தாறுக்கு அது வடிகால் பகுதி.  அதனால் கரும்பு, சோளம், நெல் பயிர்கள் காற்றின் தாலாட்டில் தலையாட்டிக் கொண்டு முள் கம்பி வேலிகளுக்கு மத்தியில் எப்போதும் பசுமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும்.

இந்த அழகிய கிராமத்தை விட்டு அடியேன் வெளியேறி முப்பது ஆண்டுகள் ஆகி விட்டன.  சும்மா வெளியேற வில்லை.  குடியிருந்த வீட்டையும், விவசாயம் செய்து வந்த பத்து ஏக்கர் நிலத்தையும் விற்று விட்டுத்தான் குடும்பத்தோடு மதுரையில் வாடகை வீட்டிற்குப் போனேன்.  இப்போது அறுபத்தைந்து வயதில் தளர்ந்த நடையோடு, மண் சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கிறேன்.  சிலுசிலுவென்று அடிக்கும் காற்று என்னை உரசிச் செல்கிறது.  ஏதோ சொந்த பந்தங்கள் என் தோளைத் தொட்டு திரும்பிப் பார்க்கச் சொல்வது போல் இருக்கிறது எனக்கு.

கீழக்கோட்டையில் சொந்தம் என்று சொல்லிக் கொள்ள என்ன யோக்கிதை இருக்கிறது?  விளை நிலத்தில் விவசாயம் செய்ய இறங்கும் விவசாயிக்கு காலணிகள் ஏது...  உள்ளங்காலில் தொட்டு உறவாடுவது தண்ணீரோடு கலந்த வயல் மண்தானே? அதைக்கூட உதறிச் சென்றவனாயிற்றே நான். அப்புறம் எப்படி வரும் சொந்தம்?

நடந்து போகிறேன். நான் பிறந்து வளர்ந்து முப்பத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து விட்டுவிட்டு போன ஊரைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறேன்.  என்னைத் தாங்கி வளர்த்த என் முன்னோர்களுக்கு உயிர்க்கஞ்சி ஊற்றிய அந்த நிலம். அதனருகில் வந்து விட்டேன்.  அதை பார்க்கவே என் கண்கள் கூசுகின்றன.  என்னைக் கடந்து யார் யாரோ போய்க் கொண்டிருக்கிறார்கள்.  என்னை யாருக்கும் தெரியவில்லை.  எனக்கும் அவர்களில் யாரையும் தெரியவில்லை.  இன்னும் கடந்து தட்டுத் தடுமாறி நடக்கின்றேன்.  கம்பீரமாக நடந்த காலங்களில் காணாமல் போனவன், கடைசி காலத்தில் கிராமத்தைத் தேடி நடந்தபோது உடலும் தளர்ந்து விட்டது.  உள்ளமும் தளர்ந்து விட்டது.  அவிழ்ந்த வேட்டியைச் சரிசெய்து கட்டிக் கொள்ளக் கூட அடுத்தவனின் தோள் தொட்டு கொண்டு நிற்கவேண்டிய நிலையில் உள்ள நான், நடந்து போய்க் கொண்டிருக்கிறேன்.

இப்போது கிராமத்து அம்மன் கோயிலுக்கு அருகே வந்து விட்டேன்.  அடுத்தது மாந்தோப்பு. மாந்தோப்பின் வளைவைத் தாண்டினால் நான் வாழ்ந்த வீடு வரும். அதனருகிலே தான் என்னுடைய நண்பன் பழனியின் வீடு. நான் தேடிப்போகும் அந்த வீட்டில் பழனி இருக்க வேண்டும்.  அவனைப் பார்க்கத் தானே உயிரைப் பணயம் வைத்த இந்தப் பயணம்.  ஒருவேளை என்னைப் போல அவனும் வீடு, நிலங்களை விற்று விட்டு வெளியேறிப் போயிருந்தால் என்ன செய்வது?  நிச்சயம் இருக்காது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

பழனிக்கும், எனக்கும் சமவயது.  சொக்கநாதபுரம் பள்ளியில் ஒரே நாளில் முதல் வகுப்பு சேர்ந்து பத்தாம் வகுப்பு வரை படித்தோம்.  படிக்கும் காலங்களில் ஒன்றாகவேதான் சுற்றித் திரிவோம்.  பழனியின் அப்பா வயலில் பாம்பு கடித்து இறந்து போக, பத்தாம் வகுப்போடு படிப்பை முடித்து விவசாயத்திற்குச் சென்று விட்டான்.  நான் மட்டும் கூடுதலாக கொஞ்சம் படித்து இடைநிலை ஆசிரியராகி பக்கத்து ஊரிலேயே வேலை கிடைக்க, வாத்தியார் வேலையோடு விவசாயத்தையும் பார்த்து வந்தேன்.  பழனி இருக்கும் இடத்தில் என்னைப் பார்க்கலாம்.  நான் இருக்கும் இடத்தில் பழனியைப் பார்க்கலாம்.   அந்த அளவிற்கு இரண்டு பேரும் சுற்றித் திரிவோம்.  இந்த நட்பு திருமணமான பின்பும் நீடித்தது.  சொல்லி வைத்தாற்போல் எனக்கும், அவனுக்கும் தலைப்பிள்ளை ஆண்பிள்ளைதான்.  கூடுதலாக எனக்கு மட்டும் ஒரு பெண் குழந்தை. 

""பாண்டி. நீ எந்தப் பள்ளிக்கூடத்தில் வாத்தியார் வேலை பார்க்கிறீயோ, அந்தப் பள்ளிக்கு நிச்சயமாக என் மகனை அனுப்பமாட்டேன்.  ஏன்னா என் மகன் நல்லா படிக்கணும். அதற்காகத்தான்'' என்று என்னைப் பார்த்து கிண்டல் செய்வான்.

அதை அவன் விளையாட்டிற்காகச் சொல்வான்.  அதுவே நிஜமாகி விட்டது.  என் மனைவி மதுரை நகரத்தில் வளர்ந்தவள்.  கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள்.  அவளும் ஆசிரியை வேலை பார்ப்பவள். அவளுக்கு கிராமச் சூழ்நிலைகள் பிடிக்க வில்லை.  பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்ற கனவு உண்டு.

என் மகனுக்கு இரண்டு வயது இருக்கும்.  அப்போதுதான் என் மனைவி என்னிடம் மெல்ல ஆரம்பித்தாள்.

""ஊட்டியில் ஒரு கான்வென்ட் இருக்கிறது.  அங்குதான் இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டும்.  மூன்று வயதில் பிள்ளைகளைச் சேர்த்தால் ஒழுக்கமும், கல்வியும் நன்றாக இருக்கும்.  வருடம் ஒரு லட்சம் வரை பணம் கட்ட வேண்டியிருக்கும்'' என்றாள்.

எங்கள் இருவரின் சம்பளத்திற்கும் செலவு வந்து சேர்ந்தது.  அடுத்த ஆண்டே அந்தப் பள்ளியில் போராடி சீட் வாங்கி முதல் தவணையாக 60,000 ரூபாயை கட்டி என் மகனைச் சேர்த்து விட்டோம்.  நடைவண்டி ஓட்டிக் கொண்டிருந்தவன்.  இரவு நேரங்களில் என் தோளில் தூக்கி போட்டுக் கொண்டு அவன் முதுகில் தட்டிக் கொடுத்து நடந்தே கொண்டே தூங்க வைத்து பழக்கப்பட்டவன்.  அந்தப் பாசத்தையெல்லாம் விட்டு விட்டு அவன் எதிர்காலம் மட்டுமே எண்ணத்தில் வைத்து பள்ளியில் சேர்த்து விட்டோம்.  கையைப் பிடித்து அழுது கொண்டு ஓடி வந்தான்.  மனதைக் கல்லாக்கிக் கொண்டு கைகளை உதறிவிட்டு அவனைப் பராமரிக்கும் வேலையில் இருந்த ஆயாவிடம் அவனை ஒப்படைத்து விட்டு வந்தோம்.

அன்று இரவு முழுவதும் தூக்கமில்லை.  என் மகன் நினைவில் வந்து போனான்.  என்னோடு இருந்தபோது என்னை எரிச்சலூட்டிய அவனுடைய செய்கைகள் இப்போது நான் மட்டும் ரசிக்கும் ஆச்சரியங்களாயின.

என்னுடைய மகனுக்குத் துணையாக இருக்கட்டுமே என்று பழனியின் மகனைச் சேர்க்கச் சொல்லி அவனிடம் சிபாரிசுக்குப் போனேன்.

""அட போப்பா. வருசத்துக்கு ஒரு லட்சம் எவன் கட்டுறது? பெத்த பிள்ளையை நல்லா படிக்க வைக்கிறேன்னு அனாதை மாதிரி எங்கேயோ கண்காணா இடத்தில் சேர்த்து விடச் சொல்றே. அவனுக்கு வயசு மூணுதான். தானா சாப்பிடத் தெரியுமா..... துணி போட்டுக்கிற தெரியுமா.... இல்லை ஒழுங்கா தூங்கத்தான் தெரியுமா....'' என்றான் பழனி.

பழனி கேட்கிறபோதே அவன் அனுப்பத் தயாராக இல்லை என்பது எனக்குப் புரிந்தது.

""எட்டு குழந்தைகளுக்கு மூன்று ஆயாக்கள் இருக்காங்க. குழந்தைகள் சாப்பிடுறது, குளிக்கிறது, துணி துவைத்து போடுகிற வேலைகளை அவங்க பார்த்துக் கொள்வார்கள்.  வாரத்துக்கு ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் நாம் போய் பார்க்கலாம் அல்லது போனில் பேசலாம். எந்தக் குறையும் இருக்காது. குழந்தை என்ன விரும்புறாங்களோ, அதை அங்கேயே ஏற்பாடு செய்து கொடுப்பாங்க. நாம பணத்தை மட்டும் கட்டினால் போதும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்''

நான் சொல்ல பழனி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

""நீயும் உன் பெண்டாட்டியும் வாத்தியார் வேலை பார்க்குறீங்க. உங்களுக்குச் சரியாப் போகும். எனக்குச் சரியா வராது. என் பையன் என் கைக்குள்ளேயே இருக்கட்டும் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் படிச்சு வளர்ந்தா போதும்'' என்றான்.

முடிவில் மாற்றமில்லாமல் பழனி நடந்து போனான்.  அடுத்த ஆண்டே நான் குடும்பத்தோடு மதுரைக்கு இடம் பெயர வேண்டிய கட்டாயம். கொஞ்ச காலம் வீட்டை வாடகைக்கு விட்டேன்.  வயலை வாரக் குத்தகைக்கு சில ஆண்டுகள் விட்டிருந்தேன்.  அதுவும் சரிவராமல் போக எல்லாவற்றையும் விற்று விட்டு மதுரையில் செட்டிலாகிப் போனேன்.

முப்பத்தைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன.  நினைவுகளில் சென்ற என்னை எதிரே ஒரு கூட்டம் இடித்துத் தள்ள நினைவுக்கு வந்தேன்.  அது பழனி வீட்டு வாசல். அந்தக் கூட்டம் ஏதோ ஒரு அசாதாரண சூழ்நிலையைச் சொல்லி கொண்டிருந்தது. 

""அட காத்த விடுங்கப்பா.. எல்லாரும் சுத்தி நின்னு அடைச்சிக்கிட்டா எப்படிப்பா....''

கூட்டம் விலகியது.

""பழனி அண்ணனுக்கு என்னாச்சுத்தா....'' ஒரு வயதான பெண் நெஞ்சிலடித்துக் கொண்டு வந்தாள்.

""ஒண்ணுமில்லை சின்ன மயக்கம் தான். டாக்டர் வந்து பார்த்துட்டு போயிட்டாரு. பயப்படுகிற மாதிரி எதுவுமில்லை''

நான் பழனியைப் பார்க்க வரும் நேரத்திலா இப்படி நடக்க வேண்டும்? நல்லவேளை பழனியைத் தேடாமல் பார்க்க ஒரு சந்தர்ப்பமாகவும் அது அமைந்து போய் விட்டது.  நான் அசையாமல் அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். பழனி மெல்ல கண் விழித்தான். அதுவரை சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்தவர்கள், அவர்களுக்கு உயிர் வந்தது போல் உற்சாகத்தில் பெருமூச்சு விட்டு விலகிப் போய்க் கொண்டிருந்தார்கள்.  பழனி மயக்கமான செய்தியைத் தாமதமாகக் கேள்விப்பட்டவர்கள் ஒவ்வொருவராக வந்து என்ன நடந்தது? என்று விசாரித்துத் தெரிந்து கொண்டார்கள்.

""இன்னைக்கு காலைலே எதுவும் சாப்பிடாமல் வயலுக்குப் போனாங்க. அதனால் கொஞ்சம் மயக்கம் போட்டுட்டாங்க'' விவரம் தெரியாதவர்களிடம் இந்தப் பதிலையும், ""லோ பி.பி. வேற ஒண்ணுமில்லை. சாப்பிடலே அதுதான்'' என்ற பதிலைக் கொஞ்சம் விவரம் தெரிந்தவர்களிடமும் சொல்லிக் கொண்டிருந்த இளைஞன் பழனியின் மகன் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

சிறிது நேரம் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தேன்.  அரை மணி நேரத்தில் எல்லோரும் சென்று விட, நான் மட்டும் இருந்தேன்.  மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்கு வந்த பழனி எழுந்து நடந்து வீட்டிற்குள் சென்று சாய்வு நாற்காலியில் அமர்ந்தான்.

""சார். யாரு சார் நீங்க...?'' என்னைப் பார்த்து கேட்டான் பழனியின் மகன்.

""தம்பி நான் இந்த ஊருதான்.. உங்க அப்பாவோட ப்ரண்ட். உன்னை சின்ன வயசில் பார்த்தது. என்பேரு பாண்டி. உனக்குத் தெரிய வாய்ப்பில்லை. என் பெயரைச் சொல்லு அப்பாவுக்குத் தெரியும்'' என்றேன்.

""உள்ளே வாங்க. ரொம்ப களைப்பா இருக்கீங்க போல இருக்கு. கொஞ்சம் டீ, ஹார்லிக்ஸ் ஏதாவது சாப்பிடுகிறீர்களா? கொண்டு வர்றேன்'' என்றான்.

பரிவுடன் அந்தப் பையன் கேட்ட போதே எனக்கு பறப்பது போல இருந்தது.  சாய்வு நாற்காலியிலிருந்த அப்பாவை எழுப்பினான்.

"" உங்க ப்ரண்ட் பாண்டின்னு ஒருத்தர் வந்திருக்கார். உங்களைப் பார்க்க'' என்று தான் அந்தப் பையன் சொன்னான்.  ஆச்சரியத்தில் எழுந்து நின்றான் பழனி.  வாசலில் இருந்த என்னைப் பார்த்தான்.

""பாண்டீ..'' சப்தம் மிகுந்த அந்த உச்சரிப்பில் கடந்த காலங்களில் கரைந்து போன அன்பு வெளிப்பட்டது.  இருவரும் நெருங்கி ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொண்டோம். முப்பத்தைந்து ஆண்டு கால வாழ்க்கையின் விசாரிப்புகள் மூன்றே நிமிடத்தில் சொல்லி விட முடியுமா என்ன? பேசிக் கொண்டிருக்கும் போதே பழனியின் மகன் எங்களுக்கு ஹார்லிக்ஸ் கொண்டு வந்து கொடுத்தான். 

""கேட்க மறந்துட்டேன். உன் பிள்ளைகள் என்ன செய்யுறாங்க? ஊட்டியில் படிக்க வைச்சியே'' என்றான்.

""நல்லா இருக்காங்க பையன் டாக்டராகி அமெரிக்காவில் இருக்கான். பெண் இன்ஜினியராகி நார்வேயில் இருக்கா. இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. அங்கேயே செட்டில் ஆகிட்டாங்க''

நான் சொல்லிக் கொண்டிருக்கும் போது பழனியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

""என் பையனை நானே கெடுத்துட்டேன்னு நினைக்கிறேன்.  நீ சொன்ன போதே வயல் வரப்பை வித்துட்டு படிக்க வைச்சிருக்கலாம். அவனை விட்டுப் பிரிய மனசில்லே. இருந்தாலும் தன் முயற்சியில் அவன் படிச்சு உன்னைப் போல ஒரு வாத்தியாராயிட்டான். விவசாயத்தையும் பார்த்துக்கிறான். வயசான காலத்தில் என் கூடவே இருக்கான். அவ்வளவுதான்'' என்றான்.

""இல்லை பழனி நீ செய்தது தான் சரி. உன்னுடைய முடிவு அன்னைக்கு எனக்குப் பிடிக்கலை.  இன்னைக்கு எனக்குப் பிடிச்சிருக்கு''

நான் சொன்னேன்.  வேறு வேறு விஷயங்களை பேசிக் கொண்டிருந்தோம்.  நீண்ட நேரமாகி விட்டது.  நேரம் போனதே தெரியவில்லை.  மதிய உணவு பழனியுடன் சாப்பிட்டேன்.  என்னுடைய கண்களில் நீர் முட்டிக் கொண்டு நின்றது.  பழனியின் மனைவி கண்காணிக்க, மகனும், மருமகளும் ஓடி ஓடிப் பரிமாறினார்கள்.  ஓவ்வொன்றாக ருசித்துச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார்கள்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு வயிறும், மனமும் நிறைந்து இருந்தது எனக்கு.

சாப்பாட்டிற்குப் பிறகும் எங்களுடைய பேச்சுத் தொடர்ந்தது.  ஓயவில்லை.   மாலை நான்கு மணியானது.  நான் புறப்படத் தயாரானேன்.

""என்ன கிளம்பிட்டே இங்கேயே இரு. காலையில் போகலாம்'' கையைப் பிடித்து இழுத்தான் பழனி.

""இல்லே பழனி. எட்டு மணிக்குள் மதுரைக்குப் போகணும். உன் பையனைக் கொஞ்சம் சொக்கநாதபுரம் பஸ் ஸ்டாப் வரைக்கும் வண்டியில் கொண்டாந்து விடச் சொல்லு''.

""ஏன்டா என்னைப் பத்தியே இவ்வளவு நேரம் கேட்டியே... உன்னைப் பத்தி சொல்லவில்லையே... ஆமா நீ என்ன பண்றே....?''

கடைசியாகக் கேட்டான் பழனி.

""என் மனைவி ஹார்ட் அட்டாக்கிலே இறந்து இரண்டு வருஷமாச்சு. இப்போ நான் தனிக்கட்டை.  பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்காங்க. வீட்டை விற்று விட்டு அங்கே போய் இருந்தேன். ஓடி ஓடி அவங்க பார்க்கிற வேலையில் என்னை கவனிக்க அவர்களால் முடியலை.  இப்போது என்னை கவனிக்கிறதுக்கு இரண்டு ஆயாக்கள் இருக்காங்க. எனக்கு வேண்டியதை டயத்துக்கு அவங்க செஞ்சு கொடுத்துருவாங்க. சாப்பிட்டாலும், சாப்பிடலைன்னாலும் கொண்டு வந்து வச்சிட்டு போயிருவாங்க.

வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை என்னுடைய மகனும், மகளும் போனில் பேசுவாங்க. பென்சன் பணம் போக கூடுதலா ஏதாவது தேவைப்பட்டால் பிள்ளைங்க ஆன்லைன்ல நான் இருக்கிற இடத்துக்கு அனுப்பிருவாங்க. நான் இருக்கிறது மதுரையில் புதூர் பக்கமிருக்கிற தெரசா முதியோர் இல்லம்.''

கண்களிலிருந்து கண்ணாடியை கழற்றி கண்களைத் துடைத்துக் கொண்டு சொன்னேன் நான். 

""அட போடா. என் மகனை உன்னோட அனுப்புறேன்.  அந்த இடத்தை விட்டு கிளம்பி வா இங்கே என்னோட இருக்கலாம். இது கிராமம்டா. நம்மை தாங்குகிற சொந்தம் இங்கேதான்டா இருக்கு''.

""சரி'' என்று தலையாட்டியபடியே, பழனியின் மகனின் தோளைத் தொட்டு அவன் பைக்கில் ஏறி உட்கார்ந்தேன்.  பைக்கின் வேகத்தில் காற்று என்னை வேகமாக உரசிச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com