தைரியலட்சுமி

மனோதைரியம் வேணும்... தைரியலட்சுமியை நாம் எப்போதும் பற்றிக் கொள்ள வேண்டும்.  ஆஞ்சநேயரைப் பாருங்கள், அவர் தைரியத்தின் அடையாளம்.
தைரியலட்சுமி

மனோதைரியம் வேணும்... தைரியலட்சுமியை நாம் எப்போதும் பற்றிக் கொள்ள வேண்டும்.  ஆஞ்சநேயரைப் பாருங்கள், அவர் தைரியத்தின் அடையாளம்.

புத்திர் பலம் யசோ தைர்யம்..''

  கோயிலில் கதாகாலட்சேபம் கேட்டுக் கொண்டிருந்த கமலம்மாளுக்கு

தன்னைப் பற்றி கேள்வி எழுந்தது. தனக்கு ஏன் தைரியமே இல்லை?  பளிச்சென்று ஒரு பதில் சொல்லக்கூட தைரியமில்லையே.

  "நில்' என்றால் நிற்கவேண்டும். "உட்காரு' என்றால் உட்கார வேண்டும். அப்படி ஒரு

கணவர். பதினெட்டு வயதிலிருந்து அவர்தான் உலகம். மூத்த மகன் பாலு பரம சாது. அவனை அவர் கோழி மிதிப்பது போல் மிதித்துவிடக் கூடிய அபாயத்திலிருந்து காப்பாற்றும்

சூழலில்தான் பதற்றம் அவளைத் தீவிரமாகப் பற்றிக் கொண்டது.

  தொடங்கிய புள்ளியிலேயே தான் மீண்டும் வந்து நிற்பதுபோல் தோன்றியது. 

அதிகார கணவனுக்கு பதில் அதிகார மருமகள். பயந்த சுபாவம் மாறாத பாலு. அவனுக்கு

வலிக்கக் கூடாதே என்று அனுசரித்துப் போகவேண்டிய நிர்பந்தம். நினைத்த போது

அவளுக்கே சிரிப்பு வந்தது. சிரிப்பின் தொடர்ச்சியாக இளைய மகன் ரகுவின் நினைவும் வந்தது.

  ரகு இருந்த நாட்கள் அவள் வாழ்வின் அதிர்ஷ்டமான நாட்கள்தான். அவனுடைய

அட்டகாசமான பேச்சும் சிரிப்பும் சுற்றி இருப்பவர்களையும் பற்றிக் கொள்ளும். அச்சமோ

நிர்பந்தமோ தேவைப்படாத இயல்பான பிறவி. நிறைய ஆண்டுகளை ஹாஸ்டலில் கழித்தவன். அதனாலோ என்னவோ வீட்டுச் சூழல் துளியும் அவனைப் பாதிக்கவில்லை.

  தான் விரும்பிய ப்ரியாவை மணந்து கொண்டு மாலையும் கழுத்துமாக வீட்டுக்குள் வந்தான் ரகு. வாயே திறக்காமல் ஏற்றுக் கொண்டார் கணவர்.  அவன் ஆளுமை அப்படி.

  கணவன் மனைவிக்குள் இப்படி ஒரு தோழமையா? ரகுவும், ப்ரியாவும் வாழ்க்கையை

கொண்டாடினார்கள். அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் கமலத்துக்கு

உற்சாகமாக இருக்கும்.

  யாருடைய துரதிர்ஷ்டமோ ஒருநாள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த ரகுவுக்கு

மாரடைப்பு ஏற்பட்டு சட்டென்று ஒரு மரணம் நேர்ந்தது. நொறுங்கிப் போனாள் கமலம். ப்ரியா மும்பைக்கு வேலை மாற்றம் வாங்கிக் கொண்டு கிளம்பிய அன்றுதான் இழப்பின் வலி முழுமையாக உறைத்தது.

  அடுத்த ஆறு மாதத்தில் நேர்ந்த கணவரின் சாவுகூட அவளை அவ்வளவாகப்

பாதிக்கவில்லை.

 மூத்தவன் பாலு வீட்டில் வேண்டாத நபராக ஒட்டிக்கொண்டு வாழவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

""என்னை வேணாம்னு ஒதுக்கினவுங்களுக்கு இப்ப மட்டும் நான்  வேணுமா? காரியம்

ஆகணும்னா காலை புடிக்கிற ஜென்மங்க''-  சாட்டையின் விளாசாய் வார்த்தைகளைக்

கொட்டுகிறாள் மருமகள் சாந்தா.

  இவளை பாலுவுக்கு மனைவியாக்க வேண்டாம் என்று கமலம் சொன்னதென்னவோ

உண்மைதான். சாதுவான பாலுவுக்கு முன்கோபியான சாந்தா பொருத்தமாயிருக்க மாட்டாள் என்பது கமலம்மாவின் கணக்கு. இதை எப்படிக் கணவரிடம் சொல்வது?

""என் தங்கை மகளை நீ எப்படி குறை சொல்லலாம்?'' என்று தர்க்கம் செய்வார்.     பாலுவின் எதிர்காலத்தை எண்ணி ஓர் அம்மாவாக தன் கடமையைச் செய்ய வேண்டாமா? பயத்தை

உதறிவிட்டு கணவரிடம் பேசினாள்.

  இவள் காதருகில் சொன்னதை அவர் ஊரறியப் பெரிதுபடுத்திவிட்டார். இவள் மீது

மென் உணர்வோ, மரியாதையோ இல்லாத மனிதர். கல்யாணத்தை முடிப்பதில் அவர் மேலும் தீவிரம் காட்டியதுதான் மிச்சம்.

  உள்ளே அடைகாத்து வைத்திருந்த கசப்பை இப்போது சமயம் பார்த்து உமிழ்கிறாள் சாந்தா.

  ""நான் பேசியது உனக்கு எதிரான வார்த்தை இல்லையம்மா. நாளைக்கு உன் பிள்ளைக்கு

கல்யாணம் என்று வரும்போது நீயும் ஒரு அம்மா ஸ்தானத்தில் நாலையும் யோசிப்பாய்தானே?'' என்று தன்னிலை விளக்கம் தர பலமுறை முயற்சி செய்தாள். ஏனோ பயத்தில் வார்த்தைகள் வரவில்லை.

 பாவம் பாலு. அம்மா படும் கஷ்டத்தைப் பார்த்து துவண்டு போகிறான். தான் சீக்கிரமாகப் போய்ச் சேர்ந்தாலாவது பிள்ளையின் கஷ்டம் தீருமே என்று இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றுகிறது.

  மாலை வேளைகளில் இப்படி கோயிலுக்கு வர முடிவது ஒன்றுதான் ஆறுதல். வீட்டுக்குப் புறப்பட மண்டபத்தை விட்டு எழுந்தபோது  திடீரென்று எதிரில் வந்து நின்றவளைப் பார்த்து திகைத்தாள். புதுப்புடவையும் பூவுமாக, ப்ரியா சற்றே பூசியிருக்கிறாள். முகத்தில் பழைய மலர்ச்சி.

  பக்கத்திலிருந்த இளைஞனை அறிமுகம் செய்தாள்.

""இவர் மோகன், எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி மூணு மாசமாகுது அத்தை இங்கே அண்ணாநகரில்தான் வீடு''

  சட்டென்று காலில் விழுந்தவர்களை நாக்குழற ஆசீர்வதித்தாள். ரகு இதைத்தான் விரும்பியிருப்பான். அவனுக்கு உவப்பானதைத்தான் இவள் செய்திருக்கிறாள். குபீரென்று பரவிய மகிழ்ச்சியில் திணறிப் போனாள்.

  ""உங்களைப் பார்க்கணும்னுதான் கோயிலுக்கு வந்தோம். உங்களைப் பத்தி இவர்கிட்டே நிறைய சொல்லியிருக்கேன். எங்க புது வீட்டுல எல்லா வசதியும் இருக்கு. ஆனா உங்களை மாதிரி ஒரு அம்மாதான் மிஸ்ஸிங்''

  ""ஆமாம்மா. நீங்க கட்டாயம் எங்க கூட வந்து தங்கியிருக்கணும். என்னை அந்நியமா நினைக்க வேணாம்'' என்றவன் வீட்டு முகவரி, தொலைபேசி எண் தகவலடங்கிய கார்டைக் கொடுத்தான்.

  ""ப்ரியா அத்தைனு கூப்பிடும்போதே நீ எனக்கு மகனாயிட்டேப்பா. உன்னை எப்படி அந்நியமா நினைக்க முடியும்?'' ஒரு கணம் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு தொடர்ந்தாள் கமலம்.

  ""நான் புறப்பட்டு உங்களோட வந்தா பாலுவை அது ரொம்ப பலவீனப்படுத்திடும். உங்களை இப்படி ஜோடியா பாக்கற சந்தோஷம் எனக்குப் போதும். அடிக்கடி வாங்க''

  வீட்டுக்கு வந்தபோது தினமும் உணரும் கால்வலியோ, களைப்போ தெரியவில்லை. பொங்கிய மகிழ்ச்சியும், மனநிறைவும் புதிய பலம் தந்தது போல் உணர்ந்தாள்.

  ""கோயிலுக்கு போய்வர இவ்வளவு நேரமா}இனி எப்போ குக்கர் வெக்கறது, எப்போ சாப்பிடறது?'' சாந்தாவின் நிஷ்டூரம்கூட இன்று பாதிக்கவில்லை.

  ""வெச்சாப் போச்சும்மா. மணி ஏழுதானே ஆகுது. நீ அடிக்கடி இப்படி கத்தாதேம்மா. பிள்ளைங்கள்ளாம் வளர்ந்துட்டாங்க பாரு. அவுங்களுக்கும் சங்கடம், உனக்கும் உடம்பு வீணாப்போயிடும்'' நயமாக வந்தன வார்த்தைகள்.

  தைரியலட்சுமி தன்னையும் தொற்றிக் கொண்டதை எண்ணி கமலத்துக்குப் புன்னகை அரும்பியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com