விஞ்ஞானியின் மாமனார்

சொந்த வீடு இருக்கும் போது, இந்த வாடகை வீட்டை அவன் எடுத்ததே அவரிடமிருந்து தப்பிக்கத்தான். எங்கே  இந்த புது
விஞ்ஞானியின் மாமனார்

குமரேசனுக்கும் அவன் தாய் மாமா சந்துருவுக்கும் ஓர் உடன்படிக்கை.

தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி அவரிடம் குமரேசன் பேசக் கூடாது...

பதிலுக்கு தன் மகள் ஈஸ்வரியைப் பற்றி அவர் இவனிடம் பேச மாட்டார்.

இந்த உடன்படிக்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 

ஆனால் கடந்த ஒரு மாதமாக, சந்துரு மாமாவின் தொந்தரவு அதிகம் ஆகி விட்டது.

ஈஸ்வரிக்கு வயது ஆகிவிட்டதாம். உடனடியாக கல்யாணம் முடித்து ஆக வேண்டுமாம். உண்மையில் அவளுக்கு வயது ஒன்றும் அதிகம் ஆகவில்லை. எடை தான் அதிகம் ஆகிக் கொண்டு வருகிறது. ஈஸ்வரிக்கு வயது இருபது தான். பி.காம் இறுதி ஆண்டு படித்துக் கொண்டு இருக்கிறாள்.

சொந்த வீடு இருக்கும் போது, இந்த வாடகை வீட்டை அவன் எடுத்ததே அவரிடமிருந்து தப்பிக்கத்தான். எங்கே  இந்த புது விலாசத்தையும் கண்டுபிடித்து வந்து விடுவாரோ என்ற பயத்துடன் தான் இருந்தான் குமரேசன். அவனுடன் வங்கியில் உடன் வேலை செய்பவர்கள் ஒரே ரூமில் இரண்டு பேர், மூன்று பேர் என்று தங்கி இருக்க, குமரேசன்  தன் ஒருவனுக்கு ஒரு முழு வீட்டை வாடகைக்கு எடுத்தான்.

அதற்கு காரணம், தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சிக்கு தாராளமாய் இடம் வேண்டும் என்பதற்காகத்தான்.  அவனுக்கு பணம் ஒரு விஷயமல்ல. அவன் பெரிய சொத்துக்கு வாரிசுக்காரன். ஏகப்பட்ட சொத்தை அவன் பேரில் விட்டுவிட்டு சின்ன வயதிலேயே அம்மா, அப்பா இறந்து விட, தாய்மாமன் சந்துரு தான் அவனை வளர்த்தார். அவரின் வளர்ப்பிலே சந்துருவுக்கு எந்தக் குறையும் கிடையாது.  அதற்குப் பதிலாக அவர் தன்னுடைய குண்டு மகள் ஈஸ்வரியை கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்துவது தான் அவனுக்குப் பிடிக்கவில்லை.

சந்துரு மாமா அவன் படித்த பள்ளியிலேயே அறிவியல் ஆசிரியர். கிடார் வாசிப்பில் தேர்ந்தவர். பள்ளியில் மாணவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லாமல் கிடார் சொல்லிக் கொடுப்பவர்.

தன் வருங்கால மாப்பிள்ளைக்கு கிடார் சொல்லிக் கொடுத்து அவனை கிடார் மேதை ஆக்க வேண்டும் என்பது அவர் கனவு. ஆனால் குமரேசனுக்கோ ஐன்ஸ்டீனின் தியரி ஆப் ரிலேடிவிட்டியில் ஆராய்ச்சி செய்து ஒரு பெரிய விஞ்ஞானி என்று பெயர் வாங்க வேண்டும் என்று ஆசை.

ராவுத்தர் கடையிலிருந்து புதிதாய் வாங்கி வந்த ஒரு மூட்டை பழைய இரும்பு சாமான்களை வைத்து தன்னுடைய வழக்கமான ஆராய்ச்சியை தன் வீட்டு தோட்டத்தில் செய்து  கொண்டிருந்தான் குமரேசன்.

அதே சமயத்தில் காம்பவுண்ட் கேட்டுக்கு வெளியில் சந்துரு மாமா, ஒரு துண்டுச் சீட்டை கையில் வைத்துக் கொண்டு, அவனுடைய விலாசத்தை, தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். கூடவே அவர் மகள் ஈஸ்வரி. இங்கேயும் தேடி வந்து விட்டாரே என்று அவன் பயந்து கொண்டு, என்ன செய்வது என்று யோசிக்கும் போது, அவனைப் பார்த்து விட்ட மாமா,"" மாப்பிள்ள... நல்லதாய் போயிடுச்சி.. நீங்க வீடு மாத்தினது.. இந்த  வீடு ஈஸ்வரியோட காலேஜுக்கு பக்கம்..''  என்றார்.  ஈஸ்வரி, ஒரு கப் ஐஸ்கிரீமை கையில் வைத்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டு கூடவே வந்து கொண்டிருந்தாள்.

புதியதாய் வாங்கின கிடார் ஒன்று மாமா கையில் இருந்தது.

உள்ளே வந்த மாமா,  ""ஈஸ்வரியோட காலேஜில ஆண்டு விழா.. நீயும் வர்ரியா..'' என்றார்.

போகலாமா? என்று யோசித்தான்.

அங்கு போனால், தன் மகள் ஈஸ்வரியை கல்யாணம் செய்து கொள்ள போகும் மாப்பிள்ளை என்று அவனை எல்லாரிடமும் அவர் அறிமுகம் செய்து வைப்பார். அதை அவனால் தாங்க முடியாது.

""இல்ல மாமா.. எனக்கு வேலை இருக்குது..'' என்றான்.

""சரி.. இந்த கிடாரை வைச்சிக்கோ.. புதுசு... உனக்காகத்தான் வாங்கினேன்.. ஈவினிங் ஆண்டு விழா முடிஞ்சி வர்றோம்..''

கிளம்பி போய் விட்டார் மாமா, ஈஸ்வரியுடன்.

கதவைச் சாத்திவிட்டு குமரேசன் படுத்தான்.

தூக்கத்தில் மாமா மறுபடியும் வந்தார். ஈஸ்வரியைக் கல்யாணம் செய்து கொள்ள  அவனைத் தொடர்ந்து  தொந்தரவு செய்தார்.

அதே சமயத்தில் அவன் செய்து கொண்டிருக்கும் ஐன்ஸ்டீனின் தியரி ஆப் ரிலேடிவிட்டி ஆராய்ச்சி வெற்றி பெறுகிறது. அதன்படி அவன் செய்த வாகனம் தயாராகி விடுகிறது. மாமாவிடமிருந்தும், ஈஸ்வரியிடமிருந்தும் தப்பிக்க ஐன்ஸ்டின் வாகனத்தில் ஏறி ஊரை விட்டு கிளம்பி போய் விடலாம் என்று முடிவு செய்கிறான். தன் பொருட்களை எடுத்து அடுக்கும் போது, மாமா கொடுத்த பளபளக்கும் அந்த புது கிடாரை விட்டு விட்டுப் போக மனம் வரவில்லை. அதையும் அந்த வாகனத்தில் எடுத்து வைத்துக் கொள்கிறான்.

குமரேசனின் வாகனம் அங்கு இறங்கிய போது மூன்று பெண்கள் ஏதோ பாடிக்கொண்டே, உலக்கையில் நெல் குத்திக் கொண்டிருந்தார்கள்.

அந்த பெண்களைப் பார்த்து குமரேசன் கேட்டான்,  ""நீங்க எந்த நூற்றாண்டுல இருக்கிறீங்க.. கி. பி யா, கி.மு வா?''

குமரேசனையும் அவன் உடைகளையும் அந்த பெண்கள் ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார்கள்.

உடனே ஒரு பெரிய அலறல்...

உலக்கையை போட்டுவிட்டு தங்கள் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள் அந்த பெண்கள்..

அந்த பெண்களிடமிருந்து அவர்கள் எந்த நூற்றாண்டில் வாழ்கிறார்கள் என்பதற்கான பதில் கிடைக்கவில்லை என்றாலும், பிளவுஸ் கண்டு பிடிப்பதற்கான  முந்தைய காலம் என்று தெரிந்து கொண்டான் குமரேசன்.

தன்னுடைய வாகனத்திற்கு திரும்பி வந்து விடுவது நல்லது என்று அவனுக்குத் தோன்றியது.

திரும்பி நடக்க ஆரம்பித்தான். சற்று தூரம்தான் நடந்திருப்பான்.

புழுதியைக் கிளப்பிக் கொண்டு நாலைந்து குதிரைகள் அவனைச் சூழ்ந்து கொண்டன.

மூன்று பேர் அவனை உயிர் போகும்படி அழுத்திப் பிடிக்க, ஒருவன் அவன் கையைக் கட்டினான்..

குண்டுகட்டாக கட்டி, அவனை குதிரையின் மீது போட்டார்கள்

""என்னை என்ன செய்யப் போகிறீர்கள்?' முனகினான் குமரேசன்.

""இப்படியே காவிரியில் போடப்போகிறோம்'' என்றார்கள் அந்த குதிரையில் வந்த வீரர்கள்.

காவிரி  தமிழ்  அப்படியானால் இது சோழ நாடு.

""நல்லதாகப் போயிற்று'' என்று சந்தோஷப்பட்டான் குமரேசன்..

கொஞ்ச நேரத்தில் அரண்மனையை அடைந்தார்கள்.

அரண்மனை வாசலில் ஒருவன் பறையடித்து சொல்வது கேட்டது

""இதனால் சகல விதமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால், மகாராஜா புதிதாய் ஓர் இசைப் போட்டி நடத்தப் போகிறார், இதில் புது புதுவாத்தியக் கருவிகளை வாசித்து பரிசு பெறலாம்''  ..டும்..டும்.

அரண்மனைக்குள் அவனை இழுத்துப் போனார்கள்.

மன்னர் சபையை நடத்திக் கொண்டிருந்தார்.

மன்னரின் பக்கத்தில் மகாராணி. மகாராணிக்கு பக்கத்தில் அது யார்..குட்டி யானை போல்..

அவனால் தன் கண்களை நம்ப முடியவில்லை..

அது அவன் மாமா மகள் ஈஸ்வரிதான்..

அவள் எப்படி இங்கு வந்தாள்?

இளவரசியாக உட்கார்ந்திருந்தாள். ஈஸ்வரி முன்பை விட  அதிகம் குண்டாகிப் போயிருந்தாள்.

எந்த ஈஸ்வரிக்காக ஊரை விட்டு ஓடி வந்தேனோ, அவள் இங்கேயும் விடாமல் எப்படி வந்தாள் என்று அவன் மனதில் தோன்றி பயம் வந்தது.

அவள்  உட்கார்ந்திருந்த ஆசனம் அவளைக் கொள்ளாமல் தவித்தது.

இழுத்து வந்தவன் மன்னரைப் பார்த்து சொன்னான்

""மன்னர் மன்னா.  இவன் வேற்றுநாட்டு ஒற்றன். இவன் உடைகளைப் பாருங்கள். விசித்திரமாக உள்ளது. தமிழோடு வேற்று மொழி கலந்து பேசுகிறான்..''

மன்னர் மிகச் சாந்தமாக, "" தம்பி நீ யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவன்?'' என்று கேட்டார்.

பயம் குறைந்து குமரேசன் பேசினான்..

""நான் உங்களுக்கு பல நூற்றாண்டுகள் கழித்து பிறக்கப் போகிறவன் ஐன்ஸ்டின்  எனக்கு முன்பாகவே பிறப்பார் அவரோட தியரி ஆப் ரிலேடிவிட்டி பத்தி நான் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்''

அதற்குள் அமைச்சர் குறுக்கிட்டு, ""மன்னா இந்த பையன் ஏதோ பித்து பிடித்தவன் போலிருக்கிறது. கருணை செய்து இவனை மன்னித்து விடுவிக்க வேண்டுகிறேன்'' என்றார்.

அதைக் கேட்ட குமரேசன் கோபமாய், ""என்னையா பித்து பிடித்தவன் என்கிறீர்கள்.. நான் ஒரு விஞ்ஞானி.. என் ஆராய்ச்சியின் வெற்றியினால் தான் நான் இங்கு வந்திருக்கிறேன்''

 ""நீ சொல்வது ஒன்றும் விளங்கவில்லை..'' என்றார் மன்னர்.

குமரேசன் யோசித்தான்.

இவர்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது... அவர்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தில் ஏதாவது செய்து அவர்களின் பாராட்டைப் பெற வேண்டும் என்று தோன்றியது.

என்ன செய்வது..

அப்போது ஞாபகம் வந்தது. அவன் வரும் போது அரண்மனை வாசலில் புது வகை இசைக் கருவிக்கான இசைப் போட்டி அறிவித்து இருந்தது.

தன் வாகனத்தில் இருக்கும் அந்த புத்தம் புது கிடாரும் ஞாபகம் வந்தது.

அவனுக்கு கடைசி வரைக்கும் ஒத்து வராத, அந்த கிடார் இப்போது உபயோகப்படப் போகிறதா...

முடிவு செய்தான்.

உனக்கு சுட்டுப் போட்டாலும் இசைஞானம் வராது என்று மாமா திட்டியதெல்லாம் இவர்களுக்கு எப்படி தெரியும்...

மன்னரைப் பார்த்து,"" சரி.. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், அப்புறம் தெரியும் நான் யாரென்று'' என்று கேட்டான்.

""என்ன வாய்ப்பு?''  என்று சாந்தமாய்க் கேட்டார் மன்னர்.

""நீங்கள் நடத்தப்போகும் இசைப்போட்டியில் நானும் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுங்கள். நான் வந்த வாகனத்தில் ஒரு வகை புது இசைக்கருவி இருக்கிறது. அதைப்போய் கொண்டு வர அனுமதியுங்கள்'' என்றான் குமரேசன்.

"" சரி போய் எடுத்து வா..'' மன்னர் சொல்ல, தான் வந்த வாகனத்திற்கு திரும்பி வந்து அதில் இருந்த கிடாரை எடுத்து வந்தான்.

மன்னர் அனுமதிக்க, மற்ற போட்டியாளர்களுடன் இவனும் கலந்து கொள்ள அனுமதிக்க பட்டான்.

போட்டி ஆரம்பிக்கும் வேளை.

திடீரென்று ஒரு காவலாளி ஓடி வந்து, ""மன்னரே,  இம் மனிதனைப் போன்ற உடைகளுடன் ஒருவர் இதே இசைக் கருவியோடு வந்து இருக்கிறார். அவரும் நாம் நடத்தும் இந்த இசைப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புகிறார்''

அனைவரின் முகத்திலும் ஆச்சரியம்.

குமரேசனுக்கு மற்றவர்களை விட ஆச்சரியம்.

""மன்னர்,   வரச் சொல்...'' என்றார்..

குமரேசன் வந்தவனைப் உற்றுப்பார்த்தான்..

ஆச்சரியம்..

அவன் கண்களை அவனால் மறுபடியும் நம்ப முடியவில்லை.

 அது அது அவன் மாமா சந்துருதான்..  அவர் எப்படி இங்கே வந்தார்?

போட்டி ஆரம்பித்தது.

முதலில் மாமா சந்துருவின் அற்புத வாசிப்பு

எல்லோரும் ரசித்து கைதட்டினார்கள்.

அடுத்து குமரேசன் தன்னுடைய அபஸ்வரத்தை ஆரம்பித்தான்.

அவன் வாசிப்பை கேட்டு, சந்துரு மாமா தன் காதை மூடிக்கொண்டார்.

அதே சமயத்தில் ஓர் ஆச்சரியமான காரியம் நடந்தது

இளவரசி ஈஸ்வரி அவளின் இருக்கையிலிருந்து எழ முடியாமல் தட்டுத்தடுமாறி சிரமப்பட்டு எழுந்தாள். பிறகு இரண்டு கைகளையும் சிரமப்பட்டு தூக்கினாள்...

என்ன செய்யப் போகிறாள் என்று பார்த்தான். யானையின் தும்பிக்கை போல் இருந்த அந்த இரு கைகளையும் இணைத்து கை தட்டினாள்.

இளவரசி கைதட்டிய உடன் சபையில் இருந்த மற்றவர்கள் கை தட்டினார்கள்.

பிறகு மன்னர் கைதட்டினார். பிறகு மகாராணி கைதட்ட, மாமாவைத் தவிர மற்றவர்கள் ரசித்து கைதட்டினார்கள்..

குமரேசனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை

தன்னுடைய கிடார் வாசிப்புக்கு கைதட்டலா..

இதைப் பார்த்த மன்னர்,  ""இரண்டு வாசிப்புக்களும் நன்றாக உள்ளன. ஒன்று தெளிந்த நீரோடை போலவும், மற்றொன்று பெருகி வரும் காட்டாறு போலவும் உள்ளது. யாம் மகிழ்ந்தோம்... இருவரையும் என் ஆஸ்தான இசைக் கலைஞர்களாக நியமிக்கிறோம்'' என்று சொன்னார்.

பின்னர் அமைச்சரைப் பார்த்து மன்னர்,

""அமைச்சரே, இந்த ஆஸ்தான இசைக் கலைஞர்களை சகல மரியாதைகளுடன் நம் விருந்தினர் மாளிகைக்கு அழைத்து சென்று நன்றாக உபசரியுங்கள்...'' என்றார்.

இருவரையும் ஏற்றிக் கொண்டு, விருந்தினர் மாளிகையை நோக்கி, குதிரைகள் போக ஆரம்பித்தன.

""மாமா நீங்க செய்யறது நல்லாயிருக்கா.. எப்படி என்னுடைய கண்டு பிடிப்பை திருடினீங்க...''  என்று குமரேசன் மாமாவைப் பார்த்து கோபமாய்க் கேட்டான்.

""நீ மட்டும் கிடார் மேதைன்னு சொல்லி இவங்கள ஏமாத்தலாமா?'' மாமா பதில் சொன்னார்.

"" அது சரி.. எதுக்கு இங்க வந்தீங்க?'' கேட்டான்.

"" ஈஸ்வரியை கல்யாணம் பண்ணிக்காமல் எங்கே ஓடிப் போனாலும் உன்ன விட மாட்டேன்'' என்றார்.

""எப்படி இங்க வந்தீங்க.. அதை சொல்லுங்க முதல்ல'' என்றான்.

அதற்கு மாமா, "" உன் வீட்டை பூட்டாம கௌம்பிட்டே... உன்னோட ஐன்ஸ்டீன் வாகன ஆராய்ச்சி பேப்பருங்க டேபிள் மேல கெடந்திச்சு.. அதை படிச்சுட்டு நானும் அந்த ராவுத்தர் கடைக்கு போய்..''

அவர் முடிப்பதற்குள்,

"" உங்களுக்கு நான் எழுதி வைச்சது எப்படி புரிஞ்சுது?'' குமரேசன் பரிதாபமாய்க் கேட்க,

"" உனக்கு சயின்ஸ் சொல்லிக் கொடுத்தவனே நான் தான்... நீ எழுதி வைச்சது எனக்குப் புரியாதா?''

மாமா சந்துரு அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக பதில் சொன்னார்.

அதற்குள் விருந்தினர் மாளிகையை வந்து சேர்ந்தது.

முகம் கழுவினார்கள் இருவரும்..

திடீரென்று மன்னர் அங்கு வருவதாகச் சொல்லப்பட, அவர்கள் இருவரும் பேச்சை நிறுத்தினார்கள்.

குமரேசனை நோக்கி வந்த மன்னர், "" என் மகள் தங்களின் வாசிப்பை கேட்டு தங்களை மணம் செய்து கொள்வேன் என்று சொல்கிறாள். அதனால் தாங்கள் இங்கிருந்து போகக் கூடாது..  தாங்கள் வந்த வாகனத்தை தீயிட்டு கொளுத்தி  விட்டேன்'' என்று சொல்ல,

""ஐயோ.. நான் மாட்டேன்.. நான் ஊருக்கு போகணும்'' என்று கதறினான் மன்னரிடம்.

மன்னர் குமரேசனின் கதறலை கண்டு கொள்ள வில்லை.

சந்துரு மாமாவுக்கு உதறல் எடுத்தது.

அவர் மன்னரைப் பார்த்து, ""நான் வந்த வாகனம்...'' பரிதாபமாய்க்  கேட்க,

"" உங்கள் வாகனத்தை நான் எரிக்க வில்லை.. நீங்கள் வேண்டுமானால் திரும்பி போகலாம்'' மன்னர் சொன்னார்.

மாமா சந்துருவைப் பார்த்தார்.

குமரேசனுக்கு அழுகையாய் வந்தது.

""இல்லை... இல்லை.. எனக்கு இதில் சம்மதம் இல்லை.. நான் போகணும்..'' என்றான் குமரேசன் மன்னரைப் பார்த்து.

""நீ என் மகளை கல்யாணம் செய்து கொள்ள மறுத்தால் கழுவிலேற்றி கொன்று விடுவேன்'' அவனைப் பார்த்து கர்ஜித்தார் மன்னர்.

சந்துரு மாமா பக்கம் திரும்பிய மன்னர்,  ""நீங்கள் வந்த  வாகனத்தை எடுத்து கொண்டு  நீங்கள் திரும்ப போகலாம்..'' என்று மன்னர் சொல்ல, தான் தப்பித்தால் போதும் என்று மாமா கிளம்ப ஆயத்தமானார்.

கொஞ்ச தூரம் நடந்த மாமா, ஏதோ ஞாபகம் வந்தவராய் குமரேசனைப் பார்த்து,

""நீ என் பெண்ணை குண்டாக இருப்பதாய்ச் சொல்லி வேண்டாம் என்று சொன்னாய் அல்லவா... இப்போது இந்த குட்டி யானையை கல்யாணம் செய்து கொண்டு, இங்கேயே இருந்து காலத்தை கழித்துக் கொள்.. அடுத்த ஜென்மத்திலும் ஈஸ்வரியை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்றுதானே சொன்னாய்.. முன் ஜென்மத்திலும் என்று சொல்ல வில்லையே.. எனக்கு இப்போது திருப்திதான். இந்த கிறுக்கு மாப்பிள்ளை வேண்டாம். என் மகள் ஈஸ்வரிக்கு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன். என் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள மறுத்த உனக்கு கிடைத்த தண்டனை இது'' என்று மாமாவும், மற்றவர்களைப் போல, தூய தமிழில் பேசினார்.

மாமா முதலில் கிளம்பிப் போக, மற்றவர்களும் விருந்தினர் மாளிகையில் அவனை விட்டு விட்டு  கிளம்பினார்கள்.

குமரேசன் தப்பித்து போகாமல் இருக்க, திடகாத்திரமான நான்கு காவாலாளிகளை வைத்து விட்டு போனார் மன்னர்.

தனக்கு நடந்த எல்லாவற்றையும் பற்றி யோசித்த குமரேசன் மயங்கி விழுந்தான்.

மயக்கத்திலே யாரோ கதவைத் தட்டுவது போலிருந்தது.

களைப்பு, அசதியில் அவனால் எழுந்திருக்க முடியவில்லை.

மன்னர் இளவரசி ஈஸ்வரியை கல்யாணம் செய்து கொள்வது பற்றி பேச ஆள் அனுப்பி இருப்பார் என்று நினைத்து, பயந்து, சிரமப்பட்டு எழுந்து போய் கதவைத் திறந்தான்.

கதவைத் திறந்த உடன் இளவரசி ஈஸ்வரி நின்று கொண்டிருந்தாள்.

"" இளவரசி.. தாங்களா... தாங்கள் என்னைப் பார்க்க தனியாகவா வந்தீர்கள்.. உடன் காவாலாளிகள் யாரும் வரவில்லையா.. மன்னரும் மகாராணியும் உடன் வரவில்லையா?'' என்று பதறிப் போய் கேட்டான் குமரேசன்.

கலகல என்று ஈஸ்வரி சிரித்தாள்.

""கிறுக்கு மாமா.. தூக்கத்தில இருந்து முழிச்சீங்களா.. கனவு ஏதாவது கண்டீங்களா... இளவரசி, மன்னர், மகாராணின்னு சொல்றீங்க... மதியம் அப்பா சொன்னாரே எங்க காலேஜில ஆண்டு விழான்னு... அதுல டிராமா போட்டாங்க.. அந்த டிராமாவிலே எனக்கு மண்டோதரி  வேஷம்... டிராமா முடிஞ்ச உடனே அப்படியே வந்தேன்.. உங்ககிட்ட என் வேஷத்தை காண்பிக்கலாம்னு.. அப்பா பின்னாடி வர்றாரு..'' என்றாள் ஈஸ்வரி.

நல்ல வேளை... எல்லாம் வெறும் கனவு..

மனதில் இருந்த பயம் போய், நிம்மதியாக இருந்தது குமரேசனுக்கு.

கழுவிலேற்றி கொன்று விடுவேன் என்று சொன்ன அந்த மாமனாருக்கு இந்த மாமாவே பரவாயில்லை என்று தோன்றியது அவனுக்கு.

ஈஸ்வரியை அந்த டிராமா உடையில் பார்த்தான்.

அந்த குட்டி யானை இளவரசி ஈஸ்வரிக்கு, இந்த ஈஸ்வரி பி.காம்., பரவாயில்லை என்றும் தோன்றியது குமரேசனுக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com