சர்க்கரை நோய்க்கு நிலவேம்பு!

நிலவேம்பு குடிநீர் என்றவுடன் நாம் என்ன நினைப்போம்? நிலவேம்பைப் பொடி செய்து கொதிக்க வைத்து தயாரிப்பார்கள் என்றுதானே? நிலவேம்புக் குடிநீர்
சர்க்கரை நோய்க்கு நிலவேம்பு!

நிலவேம்பு குடிநீர் என்றவுடன் நாம் என்ன நினைப்போம்? நிலவேம்பைப் பொடி செய்து கொதிக்க வைத்து தயாரிப்பார்கள் என்றுதானே? நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப் பயன்படும் பொடியில் நிலவேம்பு மட்டும் இல்லையாம்!

""நிலவேம்பு, மிளகு, கோரைக் கிழங்கு, பற்படாகம், விலாமிச்சைவேர், சந்தனத்தூள், சுக்கு, வெட்டிவேர், பேய்புடல் ஆகியவை சேர்ந்ததுதான் நிலவேம்பு குடிநீர் தயாரிக்கப் பயன்படும் பொடி'' என்கிறார் சித்த மருத்துவர் கு. சிவராமன். அவரிடம் பேசியபோது...

""2006 ஆம் ஆண்டு சிக்குன்குனியா தாக்கியது. சித்த மருத்துவர்கள் சிக்குன்குனியாவுக்கு நிலவேம்புக் குடிநீரைக் கொடுத்தார்கள். 5 - 6 நாட்களில் சிக்குன் குனியா நோயைக் குணப்படுத்திவிட்டார்கள். அதற்குப் பிறகு மத்திய அரசின் "ஆயுஷ்துறை'யின் கவனம் நிலவேம்புக் குடிநீரின் பக்கம் திரும்பியது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் வந்தது. ரத்தத்தில் உள்ள ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை அப்போது குறைந்து போகும். சித்த மருத்துவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீரைக் கொடுத்தார்கள். ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீர் நல்ல மருந்து என்பது எல்லாருக்கும் தெரிந்தது.

தமிழக அரசு அரசு மருத்துவமனைகளில் நில வேம்பு குடிநீரைப் பயன்படுத்த அரசாணை பிறப்பித்தது. சிக்குன்குனியா, டெங்குவால் பாதிக்கப்பட்ட நிறையப் பேர் நிலவேம்புக் குடிநீரை நாடி வந்தார்கள்.

உடலில் வலியோடு கூடிய சுரம் வந்தால் அதை நிலவேம்பு போக்கும் என்று பழைய மருத்துவநூல்களில் கூறப்பட்டுள்ளது. அது உண்மை என்பதை நடைமுறையில் இப்போது எல்லாரும் உணர்ந்துவிட்டார்கள்.

நிலவேம்பு குடிநீரை வீட்டிலேயே தயாரிக்கலாம். நிலவேம்புப் பொடி 2 ஸ்பூன் எடுத்து, அதை இரண்டு டம்ளர் நீரில் போட்டுக் கலக்கி, அரை டம்ளராக ஆகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு மூன்று நாட்கள் இருவேளைகள் இதை அருந்தி வந்தால் சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல் போன்றவை நீங்கிவிடும்.

நமது வீட்டுக்குப் பக்கத்தில் உள்ளவர்களுக்கு சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல் வந்துவிட்டது என்றால், நமக்கு அது தொற்றிக் கொள்ளாமல்  இருக்க,  முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, வாரத்துக்கு ஒருநாள் இந்த மருந்தைச் சாப்பிடலாம். ஆனால் தினம்தோறும் குடிக்கக் கூடாது.

நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கும் பொடியில் ஒன்பது மருந்துப் பொருட்கள் அடங்கியுள்ளன. எனவே நிலவேம்புக் குடிநீரை அருந்தினால், உடல் வலிமை பெறும். சளி நீங்கும். சிக்குன்குனியா, டெங்கு போன்றவற்றுக்கு மட்டுமல்ல,  சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் திறன் நிலவேம்புக் குடிநீருக்கு உள்ளது.

நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப் பயன்படும் பொடி கிடைப்பது சிரமம் என்று பலர் நினைக்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்கிறது. அரசு சித்த மருத்துவ நிலையங்களில்  இலவசமாகவே கொடுக்கிறார்கள். சில தனியார் மருந்துக் கடைகளிலும் விற்கப்படுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். வேறு மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடும்போது இந்த நிலவேம்புக் குடிநீரை அருந்தினால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடுமே என்று பயப்படத் தேவையில்லை. எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் ஒன்று, ஒரு சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே இந்த நிலவேம்புக் குடிநீரைப் பயன்படுத்த  வேண்டும்'' என்கிறார் மருத்துவர் சிவராமன்.

கடைசி கப் வரை ஒரே அளவு வெப்பம்!

பெரிய அலுவலகங்களில், சினிமா தியேட்டர்களில் காபி, டீ தயாரிக்கும் இயந்திரங்களைப் பார்த்திருப்பீர்கள். இனிமேல் நிறைய மருத்துவமனைகளில் - அதுபோன்ற - ஆனால் மருத்துவக் குணம் உள்ள பானத்தைத் தயார் செய்யும் இயந்திரங்களைப் பார்க்கப் போகிறீர்கள். ஆம்! நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் இயந்திரங்களை உருவாக்கி இருக்கிறார் ஜோஸூவா ஜுடா. சென்னை அம்பத்தூரில் உள்ள கிங்கேஃப்

என்ற நிறுவனத்தின் மேலாளராக உள்ள அவரிடம் அவர் தயாரித்த இயந்திரத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காகப் பேசினோம்...

""எங்கள் நிறுவனத்தில் காபி, டீ, குளிர்பானங்கள் தயாரிக்கும் இயந்திரங்களைத் தயாரித்து வருகிறோம். எங்களிடம் நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் இயந்திரங்களைத் தயாரிக்க முடியுமா? என்று சுகாதாரத்துறையினர் கேட்டார்கள். அவர்கள் கொடுத்த நிலவேம்புப் பொடியை வைத்துக் கொண்டு பல்வேறு இயந்திரங்களை உருவாக்கிப் பார்த்தோம். கடைசியில் நாங்கள் தயாரித்த இயந்திரத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

இது காபி, டீ போன்றவற்றைத் தயாரிக்கும் இயந்திரத்தை விட முற்றிலும் வேறுபட்டது. மருந்துப் பொருளாகையால்  தயாரிக்கும்போது வேறு மாதிரியான பொருளாக ஆகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.

உலோக பைப்புகளுக்குப் பதிலாக சிலிக்கான் ட்யூப்களைப் பயன்படுத்தினோம். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பம்ப்பை இந்த இயந்திரத்தில் பொருத்தியிருக்கிறோம். அதன் விலை மட்டும் ரூ.15 ஆயிரம் ஆகும்.

இந்த நிலவேம்பு குடிநீர் தயாரிக்க 100 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை தேவை. அதற்கேற்ப இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறோம். நாங்கள் தயாரித்துள்ள இயந்திரங்களை அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்துவார்கள் என்பதால், அதை மனதிற் கொண்டு 3 லிட்டர் நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் அளவில் இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறோம்.

இதில் வெளிவரும் ஒரு கப் நிலவேம்பு குடிநீர் 30 மி.லி.  இருக்கும். ஒரு நிமிடத்தில் 6 கப் நிலவேம்பு குடிநீர் கிடைக்கும்.

இதில் என்ன சிறப்பு அம்சம் என்றால், கடைசி கப் வரை ஒரே அளவில் வெப்பநிலை இருக்கும்.

இந்த நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தில் இதுபோன்ற வேறு மருத்துவ பானங்களையும் தயாரிக்க முடியும். நிலவேம்பு பொடிக்குப் பதிலாக ஆடாதொடையைப் பயன்படுத்தியும் பானங்களைத் தயாரிக்கலாம்.

நிறைய சிறு சிறு மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தைச் செய்து தரும்படி எங்களிடம்  கேட்கிறார்கள். அவர்களுக்கு 3 லிட்டர் கொள்ளளவு என்று இல்லாமல், அதற்கும் குறைவான கொள்ளளவுகள் உள்ள சிறிய இயந்திரங்களைச் செய்து தரும் எண்ணமும் உள்ளது. சிறிய இயந்திரங்களின் விலை சற்றுக் குறைவாக இருக்கும்.

 இந்த நிலவேம்பு குடிநீர் இயந்திரம் முழுக்க முழுக்க கணினி மயமாக்கப்பட்டுள்ளது. நிலவேம்பு குடிநீரின் வெப்பநிலை குறைந்தால் தானாகவே உயர்ந்துவிடும். ஒரு கப் நிலவேம்பு குடிநீர் இயந்திரத்தில் உள்ள சிறு தொட்டியில் இருந்து குழாய்கள் வழியாக வெளியேறியேதும், அடுத்த கப் உங்களுக்குத் தேவையில்லை என்றால் குழாய்களில் தங்கியுள்ள நிலவேம்பு குடிநீர் மீண்டும் தானாகவே தொட்டிக்குச் சென்றுவிடும்.

அரசுத்துறையில் எங்கள் இயந்திரத்துக்கு ஓகே சொல்லிவிட்டார்கள். அரசின் ஆணைக்காகக் காத்திருக்கிறோம்'' என்கிறார் ஜோஸூவா.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஜோஸூவா படித்திருப்பது வெறும் பத்தாவது வரைதான்.

""1996 இல் சென்னைக்கு வந்ததிலிருந்து, மெக்கானிக்கல் ஃபீல்டில்  எனக்குப் பதினெட்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. அந்த அனுபவத்தை வைத்துத்தான் இந்த இயந்திரங்களை உருவாக்கி வருகிறோம்'' என்கிறார் பெருமையாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com