எல்லாமே ஸ்டண்ட்தான்!

கோடம்பாக்கத்தின் அந்த குறுகலான தெருவில் ஒரே ஜனத்திரள். தெருவின் கோடியில் கண்ணாடி குளிர்சாதனப்
எல்லாமே ஸ்டண்ட்தான்!

கோடம்பாக்கத்தின் அந்த குறுகலான தெருவில் ஒரே ஜனத்திரள். தெருவின் கோடியில் கண்ணாடி குளிர்சாதனப் பேழையில் ஸ்டண்ட் நடிகர் ராஜபாண்டியின் சடலம். பேழையின் மேல் குவியல் குவியலாக மலர் மாலைகள். தற்போது வசூல் வேட்டையில் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் உன்னத நடிகரின் படத்தில் நடித்தவர் ராஜபாண்டி. ஒரு மாதத்துக்கு முன் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது உன்னத நடிகருக்கு "டூப்' ஆக நடிக்கும் போது தலையில் பலத்த அடிபட்டு கோமாவில் விழுந்து... படம் "ஓகோ'வென்று ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நேற்று உயிரைவிட்டுவிட்டான் ராஜபாண்டி. சடலத்தைச் சுற்றி மனைவி, 10 வயது மகள், 15 வயது மகன், உற்றார் உறவினர் "கோ' வென அழுது கொண்டிருந்தனர். அந்தத் தெருவே சோகத்தில் பிழிந்து வழிந்து கொண்டிருந்தது.

""நல்லா நடிக்கிறவங்களை உயிரைக் கொடுத்து நடிக்கிறான்பாங்க. நம்ம ராஜபாண்டி நடிக்கறதுக்காக நெஜமாகவே உயிரைக் கொடுத்துட்டானே''... பெரியவர் ஒருவர் ( ராஜபாண்டியின் பெரியப்பாவாம்). ஓ... வென அழுதார்.

சில வேளைகளில் உச்சி வெயில் நேரத்தில், மேகங்கள் வானத்தை ஆக்கிரமித்து சூரியனை மறைத்து கண்ணாமூச்சி ஆடும். அப்போது திடுமென இருள் சூழ்ந்து கொள்ளும். அப்படிப்பட்ட இருள்மயமான சோகத்தில் அந்தத் தெரு மூழ்கிக் கொண்டிருந்தபோது திடீரென மேகம் விலகியது போல மக்களிடையே ஆரவாரப் பிரகாசம். உச்சபட்ச சம்பளம் வாங்கும் அந்த உன்னத நடிகர் வருகிறாரென கிடைத்த தகவல்தான் இந்த ஆரவாரத்துக்கும் பரபரப்புக்கும் காரணம், ராஜபாண்டி நடித்த படத்தின் கதாநாயகன்தான் அந்த உன்னத நடிகர்.

""என்ன இருந்தாலும் நம்ம ஹீரோவுக்கு இரக்க மனசுப்பா!  கூட நடித்த நடிகர் உயிர்   துறந்துவிட்டதைத் தெரிந்து தனது வெளிநாட்டுப் பயணத்தையும் ரத்து செய்துட்டு பாக்க வந்துருக்காருய்யா''... அந்த நடிகரின் தீவிர ரசிகன் ஒருவன் உருக்கமாக வர்ணனை செய்து கொண்டிருந்தான்.

சுற்றிலும் நின்று கொண்டிருந்தவர்களும்,""ஆமாப்பா ஆமாப்பா... இருந்தாலும் அவர் மனசு யாருக்குப்பா வரும்?'' என்று கோரஸ் பாடினார்கள்.

இப்போது வேகமாக காட்சிகள் மாறின...

சடலப் போழையைச் சுற்றி நின்று கொண்டிருந்த பொடிசுகளுக்கும் இளசுகளும் தாய்க்குலங்களும்.  ஒரு சில பெரிசுகளுக்கும் கூட இப்போது உன்னத நடிகரைப் பார்க்கும் ஆவல் தொற்றிக் கொண்டது.

 தெருவின் முனைக்கு விரைந்தனர். திடீரென ராஜபாண்டி அநாதையாக விடப்பட்டது போல இருந்தது. அதைப் பார்த்தோ என்னவோ ராஜபாண்டி மனைவியின் அழுகை சத்தம் கூடிவிட்டது. ஒரு சில நிமிடங்களில் அந்த தெரு மீண்டும் சந்தையின் இரைச்சலுக்கு திரும்பியது.

உன்னத நடிகர் கையில் மலர் வளையத்துடன் தனது தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் பரிவாரங்களுடன் வந்து கொண்டிருந்தார். ரசிகர் கூட்டமும் இப்போது அந்த தெருவுக்குப் படையெடுத்தது. உணர்ச்சி வசப்பட்ட சில ரசிகர்கள் அந்த சூழ்நிலையையும் பொருள்படுத்தாமல் ""தலிவரு வாழ்க... தலிவரு வாழ்க!'' என கோஷமிட்டனர். உன்னத நடிகர் சட்டென திரும்பிப் பார்த்தார். அவரது கண்கள் நெற்றிக்கண்களாக கனலடித்தது. புரிந்து கொண்ட ரசிகர் கூட்ட நிர்வாகிகள் ""விவஸ்தை கெட்ட பசங்களா'' என்று ரசிகர்களைப் பார்த்து கர்ஜித்த பின்னர், கோஷங்கள் மெது மெதுவாக அடங்கின.

இப்போது சடலத்தின் அருகே வந்து நின்றார். ராஜபாண்டியை குளிர்ந்துகிடந்த கண்ணாடி பேழையினூடே கண்களால் துழாவினார். அவரது கண்களில் கண்ணீர் கசிய ஆரம்பித்தது. மலர் வளையம் வைத்தார். திடுமென "ஓ' வென அழுத ராஜபாண்டி மனைவியின் கையைப் பிடித்து ஆறுதல் சொன்னார்.

 அவளது மகன், மகள் இருவரின் கைகளையும் பற்றிக் கொண்டு, ""நான் இருக்கேன். கவலைப் படாதீங்க!'' என்றார்.

நெருங்கி வந்து கதறிய ராஜபாண்டியின் தாயாரை ஆதரவாக அணைத்தபடியே, "" அம்மா ராஜபாண்டி மட்டும் உங்களுக்கு மகன் இல்லை. நானும் உங்க மகன்தான். உங்க குடும்ப செலவுகளை எல்லாம் நான் பாத்துக்கறேன். முதல் கட்டமா ரூ.30 லட்சம் கொடுக்கறேன்,'' என்றவாறே பின்னால் நின்றிருந்த அந்தரங்க உதவியாளரிடம் ஏதோ சொன்னார். அவரும் ஏதோ புரிந்த மாதிரி தலை அசைத்துக் கொண்டார்.

பின்னர் உன்னத நடிகர் காருக்குத் திரும்ப ஆயத்தமானார். கார் வரை வந்து அவரை வழியனுப்ப ஒரு கூட்டமே மீண்டும் அவர் பின்னே அணி வகுத்தது. அப்போது ஒரு பெரியவர் "" ம் ஹூம்! அவரை ( உன்னத நடிகரை) வழியனுப்பியாச்சு... இனி ராஜபாண்டியை வழியனுப்புற வழியைப் பார்ப்போம்... என்று பெருமூச்சு விட்ட     படியே யதார்த்தமாக சொன்னபோது அருகே நின்று கொண்டிருந்த திரைப்பட உதவி இயக்குநர் ஒருவருக்கு சுள்ளென கோபம் வந்தது.

""என்ன பெரியவரே... இந்த சிச்சுவேஷன்ல நீ பேசறது நல்லால்லே. வாயை மூடு'' என்றார்.

""நான் என்னத்த தப்பா சொல்லிட்டேன். அவரு போயிட்டாரு. இவனை அனுப்பணும்தானே சொல்றேன்'' என்று பதிலுக்கு சிடுசிடுத்தவாறே சவப் பேழையை நோக்கி பெரியவர் நடக்க ஆரம்பித்தார். மீண்டும் அந்த குறுகிய தெருவை சோக இருள் வேகமாகக் கவ்வியது. ராஜபாண்டியின் சடலம் இடுகாட்டுக்குச் செல்ல தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

உன்னத நடிகரின் கார் ஜனத்திரளைக் கிழித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு மறைய ஆரம்பித்தது.

""என்னப்பா ஜனங்க என்ன பேசிக்கிறாங்க?'' உன்னத நடிகர் தனது உதவியாளரிடம் கேட்டார்.

""சார்... உங்க தாராளக் குணத்தை வாயாரப் புகழறாங்க. தலைவரு சினிமாவுல நடிக்கற மாதிரியே நிஜ வாழ்க்கையிலும் அள்ளிக் கொடுக்கற வள்ளலா இருக்காரேன்னு ஆச்சர்யப்பட்டுப் போறாங்க...!''

""ரசிகர்கள் சரியான முட்டாளா இருக்காங்க. நான் ஒரு பைசா கூட கொடுக்கப் போறதில்லை''.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com