அக்கரைச் சீமை அழகினிலே...

சிங்கப்பூர் போகும் பிளைட்டில் ஏறி உட்கார்ந்திருந்த செல்வராஜுக்கு யாரைப் பார்த்தாலும் அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவே தோன்றியது.
அக்கரைச் சீமை அழகினிலே...

சிங்கப்பூர் போகும் பிளைட்டில் ஏறி உட்கார்ந்திருந்த செல்வராஜுக்கு யாரைப் பார்த்தாலும் அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவே தோன்றியது. அவனுக்கு வணக்கம் சொன்ன ஏர்ஹோஸ்டஸ், ஜன்னல் அருகே வந்து ஏரோபிளேனுக்கு முத்தம் கொடுத்து விட்டு சென்ற வெண்மேகம், ஐ போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டு இருந்த பக்கத்து சீட் பயணி, லேப் டாப்பில் எதையோ நோண்டிக் கொண்டு இருந்த முன்சீட் பயணி,  என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் உற்சாகமாக இருப்பதாகவே அவன் நினைத்தான். இன்று மகிழ்ச்சி என்பது காற்றைப்போல அனைவரையும் சூழ்ந்து கொண்டதாகவே அவன் மனது எண்ணியது.

சிறிது நேரத்தில் அனைவரும் தூங்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் செல்வராஜுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. அவனது நெடுநாள் கனவு இன்று நினைவாகப் போகிறது. சின்ன வயதில் இருந்தே செல்வராஜுக்கு வெளிநாடு போய் வேலை பார்த்து கைநிறையச் சம்பாதிக்க வேண்டும் என்பது ஆசை. அதற்கு காரணம் அவனது பக்கத்து வீட்டு பன்னீர்செல்வமும் எதிர்த்த வீட்டு ஏகாம்பரமும்தான். பக்கத்து வீட்டு பன்னீர்செல்வம் துபாயிலும், எதிர்த்த வீட்டு ஏகாம்பரம் சிங்கப்பூரிலும் வேலை பார்க்கிறார்கள். இவர்களைத் தவிர தெற்குத் தெரு கோவிந்தன், புதுத்தெரு சின்னையா, கோயில் தெரு ரங்கன் என ஒவ்வொருவரும், அபுதாபி, ஓமன், மலேசியா என ஒவ்வொரு நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் வருஷத்திற்கு ஒரு முறை ஊருக்கு வருவார்கள்.

அவர்கள் வரும் போது ஊரில் அவர்களுக்கு ராஜ மரியாதைதான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் விருந்து சாப்பாடுதான். அவர்கள் தங்கள் வீட்டில் வந்து காபி சாப்பிட்டாலே அது தமக்கு பெருமை என ஒவ்வொரு வீட்டிலும் நினைத்தார்கள். அவர்கள் கொடுக்கும் ஃபாரின் சோப்புக்கும், பவுடர்,சென்டுக்கும் அடிபுடிதான். தெரிஞ்சவங்கன்னா வெறும் கோடாரி தைலத்தை மட்டும் கொடுப்பாங்க. நல்ல பழக்கமானவங்கன்னா சோப்போ, பவுடரோ கிடைக்கும். தூரத்து சொந்தக்காரங்களுக்கு சென்டு கிடைக்கும். நெருங்குன சொந்தம்ன்னா விசிடி, செல்போன், வாட்ச், துணிமணி போன்றவை கிடைக்கும். செல்வராஜுக்கு வழக்கமாக கோடாரி தைலம்தான் கிடைக்கும். ஒரு தடவை சோப்பு கிடைச்சது. அதை போட்டு குளிக்க மனசேயில்லாம பெட்டியிலே பத்திரமா வைச்சிருந்து அப்பப்ப எடுத்து முகர்ந்துப் பாத்துட்டு மறுபடியும் வைச்சிடுவான்.

மொதல்ல அவர்களது வீடு சாதாரண ஓலை வீடாகத்தான் இருந்தது. ஆனால் அவங்க

ஒவ்வொரு தடவை வெளிநாடு போயிட்டு வரும் போதும் ஒலை வீடு மச்சு வீடானது. வெறும் கயிறு மட்டும் தொங்கின அவங்க பொண்டாட்டிங்க கழுத்துல அடுக்கடுக்கா செயினுக தொங்க ஆரம்பிச்சிட்டுது. வீட்டிலேயும் டி.வி., பிரிட்ஜ், ஏஸி என சகல வசதியும் வந்திட்டுது. அதைப் பார்த்து வளர்ந்த செல்வராஜுக்கும் தானும் எப்படியாவது வெளிநாடு போயி கைநிறையச் சம்பாதிச்சு ஊர் மெச்ச வாழணும்னு ஓரே ஆசை. அதுக்காகவே பக்கத்து டவுனில் போய் கம்ப்யூட்டர் படிச்சான். அலைஞ்சு திரிஞ்சி பாஸ்போர்ட்டும் வாங்கிட்டான்.

வெளிநாட்டு வேலைக்கு போவது எப்படி என்றே விசாரித்துக் கொண்டு அலைந்தான். டவுனில் ஒருத்தர் வெளிநாட்டு வேலைக்கு ஆளனுப்புறதாக் கேள்விப்பட்டான். உடனே அவரைப் போய்ப் பார்த்தான். ""தம்பி அடுத்த மாசமே பத்து பேரு சிங்கபூருக்குத் தேவைப்படுது.  மாச சம்பளம் பதினைஞ்சாயிரம். ஓவர் டைம் பாத்தா கூட ஒரு அஞ்சாயிரம் கிடைக்கும். ஆக ஒரு மாசத்துக்கு எப்படியும் இருபதாயிரம் பாத்துரலாம்.  ஒரு இரண்டு லட்சம் மட்டும் ரெடி பண்ணி கொண்டு வந்துட்டா. உடனே விசா கைக்கு வந்திடும். பணம் கொடுத்த அடுத்த வாரமே உங்களை பிளைட்டுலே ஏத்தி விட்டுருவேன். ஆனா லேட்டா வந்தா நான் ஒண்ணும் பண்ண முடியாது. வெளிநாட்டுக்கு போக நான், நீன்னு ஒரு கூட்டமே கியூவிலே காத்துக்கிட்டு இருக்கு. யார் முந்துதாங்களோ அவங்களை நான் அனுப்பிடுவேன். அப்புறம் என்மேல வருத்தப்படக்கூடாது'' என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

இரண்டு லட்சம் கடனை வாங்கி கட்டிட்டு போனாக்கூட, ஒரு மாசத்துக்கு இருபதாயிரம் ரூபா. அப்படின்னா பத்து மாசத்திலேயே இரண்டு லட்சத்தை பாத்திடலாம். ஒரு வருஷம் சம்பாதிக்கிறத வைச்சு கடனைக் கட்டிடலாம், பொறகு சம்பாதிக்கறது எல்லாமே நமக்குதானே என்ற அவனது மனம் கணக்குப் போட்டது..

வீட்டில் வெறகு அடுப்பில் புகையுடன் பேராடி, ரேசன் அரிசியை சோறாக மாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்த தனது அம்மா செவ்வந்தியிடம் வந்த செல்வராஜு,

""அம்மா இனிமே நீ இந்த வெறகு அடுப்பிலே கண்ணை கசக்கிக்கிட்டு ரேசன் அரிசியை பொங்க வேண்டாம். கேஸ் அடுப்பிலே பொன்னி அரிசியை குக்கர்ல வைச்சி ஐஞ்சே நிமிஷத்திலே அழகா சாப்பாடு ஆக்கிரலாம்'' என்று சொன்னான்.

""ஏன்டா, நல்லாதானே இருந்தே. திடீர்னு உனக்கு ஏதாவது ஆயிட்டுதா?'' என்று மகனை செவ்வந்தி திருப்பிக் கேட்க,

""ஆமாம்மா, உன் பையனுக்கு சிங்கப்பூர்ல வேலை கிடைச்சிருக்கு. நான் சிங்கப்பூருக்குப் போயி சம்பாதிச்சு பணம் அனுப்ப ஆரம்பிச்சுட்டா, இனி நீ இப்படி கஷ்டப் படவேண்டாம்லா'' என்று சொல்லவும்,

முதலில் அவன் என்ன சொல்கிறான் என்பது அவளுக்குப் புரியவில்லை, புரிந்தவுடன் அடுப்புப் பக்கத்தில் உட்காந்திருந்தவள் அப்படியே சாமி படம் மாட்டியிருந்த பக்கம் திரும்பி கையைத் தூக்கி, ""நான் கும்பிடுத மாரியாத்தா நம்மளை கைவிடலே. அவதான் உனக்கு இந்த வேலையை கிடைக்க வைச்சிருக்கா. இந்த வருஷ கோயில் கொடையிலே அவளுக்கு கெடா வெட்டி பொங்க வைக்கணும்'' என்று சந்தோஷத்துடன் சொன்னாள்,

""ஆனா ஒரு சின்ன பிரச்சனைம்மா...'' என்று அவன் கொஞ்சம் இழுக்கவும்,

""என்னடா பிரச்சனை? சொல்லித் தொலையேன்'' என்று பொறுமையில்லாமல் கேட்க,

""ஒண்ணுமில்லேம்மா, ஒரு ரெண்டு லட்சம் கட்டணும்'' என்று சொல்லவும், தண்ணீர் தெளிக்காமல் கத்தரி வெயிலில் வைத்திருக்கும் பூ வாடுவதைப் போல அவளது முகம் வாடிவிட்டது.

""ரெண்டு லட்சமா நாம எங்கேடா போறது?'' என்று தலையில் கையை வைத்துக் கொண்டு அப்படியே உக்காந்திட்டாள்.

""ஐயோ, அம்மா, இதுக்குப் போயி எதுக்கு இப்படி இடிஞ்சிப் போயி உட்காந்திட்டே. நம்மக்கிட்டேயே அதுக்கு வழியிருக்கும்மா'' என ஆறுதல் சொல்லவும்,

""எப்படிடா ரெண்டு லட்சம் பொரட்ட முடியும்?''

என நம்பிக்கையில்லாமல் சொல்ல,

""அம்மா,  இன்னைக்கு தங்கம் கொள்ள வெல விக்குது. உங்கிட்ட இருக்கிற நகை எப்படியம் பத்துப் பவுன் தேறும். அத விக்கக்கூட வேண்டாம்மா, அடவு வைச்சலே போதும், எப்படியும் ஒரு லட்சம் தேறும். நம்ம வீட்டை பண்ணையார் கிட்ட ஒத்திக்கு விட்டா அதுல  எப்படியும் ஒரு ஐம்பதாயிரம் தேறும். எதிர்த்த வீடடு ஏகாம்பரம் மாமாவோட சம்சாரம் வெள்ளையம்மாதான் வட்டிக்கு பணம் கொடுக்கே, அதுக்கிட்டே மீதியை வாங்கிக்கலாம்'' என்று செல்வராஜே பணம் புரட்டுவதற்கான வழியையும் சொன்னான்.

வெளிநாட்டு மோகம் யாரை விட்டது... உடனே அவனோட அம்மாவும், மளமளவென பணத்தை பொரட்ட ஆரம்பிச்சிட்டா. ஆனா தாலி முதற்கொண்டு அடகு வைக்கப்போயிதான் ஒரு லட்சம் பொராட்ட முடிஞ்சது. பண்ணையாரு வீட்டை ஒத்திக்கு வாங்க ரொம்ப பிகு பண்ணிக் கொண்டார். வீட்டை விற்பதாக இருந்தால் தான் வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். பெறகு அவரை கெஞ்சி கூத்தாடி வீட்டை ஒத்திக்கு வைத்துக் கொள்ள சம்மதித்தார். அதுவும் ஒரு வருடத்தில் திருப்பிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வீட்டைத் தன்பேருக்கு கிரயம் பண்ணிக் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் இவனுடைய அப்பா பண்ணையத்திற்கு வரவேண்டும் என்ற நிபந்தனையோடுதான்  ஐம்பதாயிரம் ரூபாயைக் கொடுத்தார்.

மீதிப் பணத்திற்கு ஏகாம்பரத்து வீட்டம்மாவிடம் போனார்கள். இதற்கிடையில் செல்வராஜுக்கு ஏகாம்பரத்திடம் இருந்து போன் வந்தது.

""செல்வராஜு சிங்கப்பூருக்கு வேலைக்கு வரப்போறதா கேள்விப்பட்டேன். வேண்டாம் தம்பி. இங்கே வராதேப்பா. நாங்க படுற கஷ்டம் நீயும் படவேண்டாம். வெளியே இருந்து பாக்கவங்களுக்குதான் வெளிநாட்டு வேலை சொர்க்கமா தெரியும். உண்மையிலே இது நரகம்னு அனுபவிக்கங்களுக்குத்தான் தெரியம். அதனாலே அங்கேயே எதாவது நல்ல வேலை தேடிக்கிட்டு நிம்மதியா இருப்பா. ஒரு உடம்பொறப்பா நினைச்சு சொல்லுதேன்'' என்று அவர் சொல்லவும்,

ஏகாம்பரத்தின் மேல் செல்வராஜுக்கு கோபமாக வந்தது. நம்ம ஊருக்காரங்களே இப்படித்தான். தான் மட்டும்தான் நல்லா இருக்கணும்ஙகிற சுயநலம். ஏங்கே நானும் வெளிநாட்டுல வேலைப் பார்த்து அவன் வீட்டை விட பெரிய வீடா கட்டிடுவேனோன்னு பொறாமை. அதான் வேண்டாங்கிறான். அவ பணம் தந்தா தரட்டும். இல்லாட்டா பண்ணையார்கிட்டேயே நம்ம அப்பாவை பண்ணையாள இருக்க சொல்லிட்டு பணம் கேப்போம். அவரு என்ன தராமலா போயிடுவாரு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். ஒரு பண்ணையாரிடம் பண்ணையாளாக சேருவது என்பது அவரிடம் கொத்தடிமையாக சேருவது என்பது செல்வராஜுக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் வெளிநாட்டு மோகம் அவன் கண்ணை மறைத்தது. எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தானே. பொறகு நாம சாம்பாதிக்கிறது எல்லாம் யாருக்கு? நம்ம அப்பா அம்மாவுக்கு தானே. ஒரு ரெண்டு வருஷம் பண்ணையாளா கஷ்டப்பட்டாலும் பொறகு ராஜ வாழ்ககை வாழலாம்லா என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான். ஆனால் இவன் வெளிநாட்டுக்கு போயே தீரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதைப் பார்த்து ஏகாம்பரம் மனைவியே பணம் கொடுத்து விட்டாள். எல்லாவற்றையும் கொண்டு போய் கொடுத்து. இதோ இன்று ஏரோபிளேனும் ஏறியாச்சு. இனி தனக்கு ராஜயோகம்தான் என்று மனதில் கூத்தாட ஆரம்பித்தான்.

பிளைட் சிங்கப்பூரை அடைந்தது. ஆஹா... சொர்க்கம்ணு சொல்றாங்களே அது இப்படித்தான் இருக்குமோ என்று சிங்கப்பூர் ஏர்போர்ட்டை பார்த்தவுடன் நினைத்தான்.  இவனைக் கூட்டிக் கொண்டுப் போக ரெடியாக அங்கே எஜெண்டின் ஆட்கள் வந்திருந்தார்கள். காரில் போகும். போது சிங்கப்பூரின் அழகைப் பார்த்து பார்த்து வியந்தான். இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்து வியந்த அழகான ஊரை நாம் இன்று நேரில் பார்க்கிறோம். இனி இந்த ஊரில்தான் வாழப்போகிறோம் என்று நினைப்பே அவனுக்கு இனித்தது.

நம்ம ஊரும் இருக்கே? எங்கே பாத்தாலும் ஒரே குப்பையும், கூளமும்தான். குப்பைத் தொட்டின்னு ஒண்ணு இருந்தாலும், நம்ம மக்களுக்கு குப்பையை ரோட்டுல போட்டாதான் திருப்தி. ரோட்டோரத்தில் ஒண்ணுக்கு அடிச்சாதான் நிம்மதி. இது காணாதுன்னு கேபிளுக்கு, ஈபிக்கு. பைப்லைன்னு எதுக்காவது ரோட்டுல குழியை வெட்டி வச்சிப்பாங்க. ஆனா அத சரியா மூடமாட்டாங்க இது பத்தானுன்னு சிகப்பு லைட் எரிஞ்சாலும் என்னமோ யாரோ சாகக் கெடக்குற மாதிரி வேகமாப் போவாங்க இங்கே பார் ரோட்டில் எலைப் போட்டு சாப்பிடலாம். அவ்வளவு சுத்தம். ஒரு குப்பையைக்கூட எங்கும் பார்க்க முடியல. எல்லாரும் டிராபிக் ரூல்சை எவ்வளவு ஒழுங்கா பாலோ பண்ணுறாங்க இதுதான் ஊரு நம்ம ஊரும் இருக்கே. ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாதது. இந்த ஊருல வாழக் கொடுத்து வச்சிருக்கணும் என நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டே தனது இடத்திற்கு சென்றான்.

ஆனால் அவனது சந்தோஷத்திற்கான ஆயுள் மழைக்காலத்தில் தோன்றுமே, ஈசல் பூச்சி, அதன் ஆயுளைப் போன்று ஒரு நாள் மட்டுமே என்பதை அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறையைப் பார்த்ததும் தெரிந்து கொண்டான். வரிசையாகப்படுத்தால் நான்கு பேர் மட்டுமே படுக்கக் கூடிய அறையில் பத்து பேரை தங்க வைத்திருந்தார்கள். ரயிலில் பெர்த் இருப்பதைப் போன்று நான்கு சுவர்களை ஒட்டியும் அடுக்கடுக்காய் படுக்கைகள். அந்த ரூமில் படுக்க மட்டுமே செய்யலாம். பாத்ரூம், டாய்லெட் எல்லாம் பொதுவானதாக இருந்தது. வந்த அன்றே வேலைக்குப் போகச் சொல்லி விட்டார்கள்.

உடம்பெல்லாம் அசதியாக இருந்தது. நன்றாக படுத்துத் தூங்கவேண்டும் போல இருந்தது. ஆனால் அவனைக் கூட்டிக் கொண்டு வந்த ஏஜெண்ட் அதற்குச் சம்மதிக்கவில்லை.

""சும்மா ரெஸ்ட் எடுக்க உன்னை சிங்கப்பூருக்கு கூட்டிக் கொண்டு வரல தம்பி. ஒழுங்கா வேலைக்குப் போற வழியைப் பாரு'' என்று சொல்லி அவன் வேலை பார்க்க வேண்டிய சூபர்வைசரிடம் கொண்டு போய் விட்டு விட்டார். அவனுக்கு சூபர்வைசராக ஒரு சீனக்காரனைப் போட்டிருந்தார்கள். இங்கே டிகிரி முடித்துக் கொண்டு போனால் கூட அங்கு ஓ லெவல், (பத்தாம் வகுப்பு) ஏ லெவல் (பன்னிரெண்டாம் வகுப்பு)  படித்த சீனக்கார்களின் கீழ்தான் வேலைப் பார்க்க வேண்டும் என்பது அங்கு போன சிறிதுநாளில் அவன் தெரிந்து கொண்ட உண்மை. ஓ லெவல் மட்டும் படித்த அந்த சீன சூப்பர்வைசர் செல்வராஜைப் பார்த்த பார்வையில் சிறிது கூட சிநேகிதம் இல்லை. அது என்னவோ சீன சூப்பர்வைசர்களுக்கு இந்தியர்களைக் கண்டால் பிடிப்பதில்லை. எதோ ஜென்ம விரோதியைப் பார்ப்பது போல பார்க்கிறார்கள்.

வேலைக்கான ஸ்பாட்டுக்கு  மினி லாரியில் கூட்டிக் கொண்டு போனார்கள். வேலைக்குப் போகும் போது இவனுடன் வந்த இளையர்கள் (வாலிபர்கள்) கையில் கர்சீப் வைத்துக் கொண்டு இருந்தார்கள். கையில் ஏன் கர்சீப்பை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பேண்ட் பாக்கெட்டில் வைத்திருக்க வேண்டியதுதானே என்று நினைத்த பொழுதுதான் அவர்கள் கையில் கர்சீப் வைத்திருந்ததின் ரகசியம் புரிந்தது. இளம் பெண்களைக் கடந்து  போகும் போது ஆடு, மாடுளை வண்டியில் ஏற்றிக் கொண்டு  போவதைப் போல தங்களை மினிலாரியில் அழைத்துப் போவதை அவர்கள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக, முதன்முறை ஜெயிலுக்கு போகும் நபர் தனது முகத்தை மறைத்துக் கொண்டு போவதைப் போல தங்களை முகத்தை மறைப்பதற்காக கர்சீப்பை பயன்படுத்துகிறார்கள் என தெரிந்த போது, தானும் எதோ தப்பு பண்ணிவிட்டதாகவே உணர்ந்தான்.  சிங்கப்பூரில் கால் வைத்த உடன் சொர்க்கம் என்றால் இப்படித்தான் இருக்குமோ என்ற நினைத்த செல்வராஜ் தான் வேலைப் பார்க்கும் ûஸட்டுக்குப் போகும் பொழுது நரகம் என்பது இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். தான் இதுவரை சினிமாவில் பார்த்து மகிழ்ந்த சிங்கப்பூரில் இப்படிக்கூட ஓர் இடம் இருக்கும் என்பதை அவன் கொஞ்சம் கூட கற்பனை செய்து  பார்க்கவில்லை. சதசதவென்ற சகதி நிறைந்த பாதாளம், அதில் இறங்க கற்களை வைத்து படிகள் அமைத்திருந்தார்கள். இறங்கும் போது கற்கள் ஏதாவது நகர்ந்து கீழே விழுந்து சகதியில் முழ்கிப் போயிருவோமோ என்று எண்ணத் தோன்றியது. அந்த படிக்கட்டில் அவன் முதன் முதலாக இறங்குகிறான் என்பதால் கீழே விழுந்து விடாமல் இருக்க அங்கே ஏற்கனவே வேலை  பார்த்து அந்த இடத்தில் ஏறி இறங்குவதில் பயிற்சி பெற்றிருந்த ஆட்கள், அவனை பத்திரமாக கையைப் பிடித்து கீழே இறக்கி விட்டாரகள்.  அங்கே அவனுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது கேபிள் இழுக்கக்கூடிய வேலை. இருப்பதிலேயே கடினமான வேலை கேபிளை இழுப்பதுதான் என்பதை பின்னர் தெரிந்து  கொண்டான்.

அவனுக்கு அந்த சதசதவென்று சகதி நிறைந்த இடத்தில் வேலைப் பார்க்கவே அருவெறுப்பாக இருந்தது. மேலும் இவன் பேசுவது இவனது சூபர்வைசருக்குப் புரியவில்லை. அவன் பேசுவது இவனுக்குப் புரியவில்லை. நல்ல வேளை தமிழ் தெரிந்த ஆட்கள் இவனுடன் இருந்ததால் ஏதோ தப்பித்தான்.. வேலை கடினமாக இருந்தால் சிறிது நேரத்தில் தாகம் எடுக்க ஆரம்பித்தது. குடிக்க தண்ணீர் வேண்டுமென்று கேட்டான். தண்ணீர் குடிக்க அவர்கள் அழைத்துச் சென்ற இடத்தைப் பார்த்ததும் அவனுக்கு வாந்தியே வந்து விட்டது. ஏனென்றால் அது கழிவறை. இங்கேயா தண்ணீர் குடிக்க வேண்டும். என்னால் இந்த தண்ணீரைக் குடிக்க முடியாது என்று திரும்பப் போனான். அவனைத் தண்ணீர் குடிக்க அழைத்து வந்தவர்கள், ""தம்பி நாங்களும் ஆரம்பத்தில் உன்னைப் போலத்தான் அருவருப்பு பட்டோம். ஆனால் இங்கே நமக்கு கொடுக்கிற சம்பளத்துக்கு நாம வெலைக்கி வாங்கியெல்லாம்

தண்ணி குடிக்க முடியாது. அதைத் தவிர தண்ணி வாங்கணும்னா நாம வந்த பாதையெல்லாம் கடந்து தான் திரும்பப் போகணும். அந்தப் பாதையிலே நீ மட்டும் தனியா போக முடியாது. நீ போயி தண்ணி வாங்கிட்டு வரணும்னா, கொறைஞ்சது ஒரு மணி நேரமாவது ஆகும். அதுக்கு இந்த சீனாக்காரன் அனுமதிக்க மாட்டான். அதனாலே பேசமா

இதையே குடி. நாம எட்டு மணிக்குதான் இங்கேயிருந்தே கெüம்ப முடியும். அது வரைக்கும் தாகத்தை அடக்கிக்கிட்டு இருக்க முடியாது'' என்று சொன்னார்கள்.

அவர்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் அவனக்கு டாய்லெட்டில் வரும் தண்ணியைப் பிடிச்சுக் குடிக்க மனமில்லே. அதனாலே தாகத்தை அடக்கிக் கொண்டு வேலையைத் தொடர ஆரம்பித்தான்.  ஆனால் கொஞ்சநேரம்தான் அவனால் தாக்குப்பிடிக்க முடிஞ்சது. பொறகு உதடு வறண்டு போய் விட்டது. உமிழ்நீர்  கூட வற்றிப் போய் விட்டது. ஒரு சொட்டு தண்ணீராவது வாயில் படாவிட்டால் மயக்கம் வந்துவிடும் போல தோன்றியது.

இரவு நேரம் ரொம்ப பசியோடு ஹோட்டலை மூடுறப்ப போகும் பொழுது, சாப்பிடுவதற்கு ஏதாவது ஒண்ணு கெடைத்தால் போதும் என்ற எண்ணம்தான் வரும். உப்புமா பிடிக்காதவங்ளோ, ஊத்தப்பம் பிடிக்காதவங்களோ எனக்கு உப்புமா பிடிக்காது, ஊத்தப்பம் பிடிக்காது என்று சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அவர்கள் வயிறுதான் பசியினால் வாடும். அப்ப என்ன இருக்கோ அத சாப்பிட்டு பசியாறுத மாதிரி, தாகம் அதிகமான  பிறகு வீராப்பு காட்ட முடியலை. டாய்லெட்டில் வரும் தண்ணியையே குடித்து விட்டு, கிராமத்திலே ஆத்து,குளத்து தண்ணியிலேதான் காலைக்கடன் முடித்தவர்கள் சுத்தம் செய்கிறார்கள். அதிலேயேதான் மாட்டைக் குளிப்பாட்டுகிறார்கள். அதிலேதான் துணி துவைக்கிறார்கள். குளிக்கிறார்கள். பொறகு அந்தத் தண்ணியைத்தான் குடிக்கிறார்கள். அப்படியிருக்க, இந்த தண்ணியைக் குடிச்சா ஒண்ணும் தப்பில்லே என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான். தாயைப் பழிச்சாலும் தண்ணியை பழிக்கக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே என்று பலவாறாகத் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு டாய்லட்டில் வந்த தண்ணியைப் பிடித்துக் குடித்தான்.  அவனை முதலில் தண்ணி குடிக்க கூட்டிக் கொண்டு வந்தவர்கள் அவன் டாய்லட்டில் தண்ணீர் பிடித்துக் குடிப்பதைப் பார்த்து, தமக்குள் நமட்டு சிரிப்பு சிரிப்பதாக அவனுக்குத் தோன்றியது. மற்றவர்கள் பண்ணும் கிண்டலையெல்லாம் கண்டு கொண்டால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டான்.

வந்த ஒரு வாரத்திலேயே தான் சரியான நரகத்தில் வந்து சிக்கிக் கொண்டோம் என்பதை நன்றாகவே புரிந்துக் கொண்டான். ஏஸி ரூமில் உட்காந்து ஒரு கையில் கோக் பாட்டிலும் மறு கையில் பீட்ஸôவும் வைத்துக் கொண்டு ஒரு மடக்கு கோக், ஒரு கடி பீட்ஸô என கம்யூட்டரைத் தட்ட வேண்டும் என கனவு  கண்டு  கொண்டு வந்தான், தாகத்திற்கு டாய்லட் பைப்பில் உள்ள தண்ணீரைக் குடித்துக் கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் கூலி வேலைபார்க்க வேண்டியதாகி விட்டதே என தனக்கு தானே பரிதாபப் பட்டுக் கொண்டான். சாப்பாடாக வரட்டி மாதிரி நான்கு ரொட்டி. அதுக்கு தொட்டுக் கொள்ள ஜாம் என்ற பெயரில் எதையோ தந்தார்கள். மதியம் உப்பு சப்பு இல்லாத சாப்பாடு. இரவு மறுபடியும் அதே வரட்டி மாதிரியான ரொட்டி. அதை வேண்டாம் என்று மறுத்தால் வேறு சாப்பாடு கிடையாது. அம்மா கையினால் சாப்பிடும் பழைய சாதத்திற்கும் பச்சைமிளகாய் வதக்கலுக்கும் நாக்கு ஏங்கியது. சிங்கப்பூர் சொர்க்கமாக காட்சியளிப்பதே தன்னைப் போன்றவர்கள் நரகத்தில் வேலை பார்ப்பதால்தான் என்பது அவனுக்கு அங்கு வந்த பிறகுதான் தெரிய ஆரம்பித்தது. இரவு சைட்டில் இருந்து ரூமுக்கு வர பத்து மணியாகிவிடும். பிறகு சாப்பிட்டு விட்டு படுக்க மணி பதினொன்று ஆகிவிடும். படுத்தது போன்றுதான் இருக்கும். விடிந்து விடும். காலையில் ஐந்து மணிக்கே எழுந்தால்தான் கியூவில் நின்று காலைக் கடன்கனை முடித்து, குளித்து, சாப்பிட்டு விட்டு காலை ஏழுமணிக்கு இவர்களை வேலைக்கு அழைத்துப் போக வரும் மினி லாரியில் ஏறி வேலைக்கான ஸ்பாட்டுக்கு போகமுடியும். கொஞ்சம் அசந்து தூங்கினால் குளிக்காமல், சாப்பிடாமல் வேலைக்குப் போக வேண்டியதுதான். மினி லாரி வரும்போது இவர்கள் தூங்கிக் கொண்டு இருந்தாலும் எழுப்பி அப்படியே வேனில் ஏற்றி வேலைக்கு கொண்டு  போய் விடுவார்கள். உடல் நிலை சரியில்லை என்றாலும் அவர்களுக்குக் கவலையில்லை. அவர்களைப் பொறுத்த வரை இவர்கள் அவர்களுக்கு வேலை பார்த்துக் கொடுக்கும் அடிமை இயந்திரங்கள். இரண்டு தடவை இவன் கொஞ்சம் அசந்து தூங்கிப் போக குளிக்காமல், சாப்பிடாமல் வேலைக்குப் போய் மதியம் சாப்பாடு போடும் வரை பசியுடன் கடினமான வேலையைப் பார்க்க, பசியினால் கண்கள் மயங்குகிறது, ஆனால் இவனுடைய சீன சூபர்வைசர் இவனையே கண்காணித்துக் கொண்டு வேலை ஏவிக் கொண்டு இருந்தான்.

இவனுக்கு அருகில் இருந்த ஒருவன் சற்று அசமந்தமாக நிற்க, அவனை இவர்களுக்கு சூப்பர்வைசராக போட்டிருந்த சீனாக்காரன் இரண்டு தடவை திட்டினான். அதன் பிறகும் அவன் தொடர்ந்து அசமந்தமாக இருக்க, அடுத்த தடவை அவனது வாய் பேச வில்லை. அவனது கையில் இருந்த சாட்டை பேசியது. அந்த ஆளை சுரீரென்ற சத்தத்துடன் சாட்டை தாக்க, அதுவரை செல்வராஜ் கண்ணில் இருந்த தூக்கம் தானாகவே ஓடிப்போய்விட்டது. ஆனாலும் வயிறு பசி... பசி என்று அவனது காதுக்கும் மட்டும் கேட்கும் வகையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது.

மதியம் சாப்பாட்டை சாப்பிட்ட பிறகுதான் உயிரே வந்தது  போல இருந்தது. அதன் பிறகு தூக்கம் கண்களை அழுத்தினாலும், சாப்பிடாமல் தான் பட்ட கஷ்டம் ஞாபகத்திற்கு வர உடனே எழுந்து விடுவான். ஞாயிற்றுக் கிழமை மட்டும் அரை நாள் விடுமுறை. அதுவும் இந்த வாரம் சேர்ந்துள்ள துணிகளைத் துவைத்துக் காயப் போடுவதற்கே சரியாக இருக்கும். ஒரு நாள் மினி லாரியில் வேலைக்குப் போகும் போது எதிர்த்த வீட்டு ஏகாம்பரம் தெருவிளக்குக் கம்பத்திற்கு வியர்க்க விறுவிறுக்க குழிதோண்டிக் கொண்டு இருந்ததைப் பார்த்தான். மற்றொரு நாள் பாதாள சாக்கடை அமைக்க மண்வெட்டிக் கொண்டு இருந்தார். அங்கே இவர் வீட்டில் எல்லாரும் ஏ.ஸியில் சுகமாகத் தூங்கிக் கொண்டு இருக்க இவர் வேகாத வெயிலில் வேர்க்க விறுவிறுக்க குழி தோண்டிக் கொண்டும், மண்வெட்டிக் கொண்டும் இருக்கிறார். இதனால்தான் தன்னை வரவேண்டாம் என்று சொன்னார் போலிருக்கு. தான் தான் முட்டாள் தனமாக அவர் பேச்சைக் கேட்காமல் வந்து விட்டோம் என்று தன்னைத் தானே நொந்து  கொண்டான். ஆனால் இது நோய் வந்து முற்றிய  பிறகு தடுப்பூசி போடுவதைப் போல, காலங்கடந்த ஞானோதயம். இனி அதைப் பற்றி நினைப்பது பயனில்லை என நினைத்துக் கொண்டான்.

இவனை அனுப்பின ஏஜெண்டுக்கு போன் போட்டு, ""என்ன சார் இப்படி பட்ட வேலையிலே என்னை சேர்த்து விட்டுட்டீங்களே?'' என்று கேட்ட போது, ""இதப்பாரு தம்பி. இப்பக்கூட ஒண்ணும் கெட்டுப் போயிடல, உனக்கு வேலை பாக்க இஷ்டமில்லேன்னா, உங்கப்பாக்கிட்ட பிளைட் காசு அனுப்ப சொல்லி, அந்தக் காசுலே இங்கே வந்திரு. உனக்கு பதிலா வேற ஆட்கள் பணத்தைக் கட்டிட்டு அங்க வர ரெடியாக இருக்காங்க'' என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார்.

மாதம் இருபதாயிரம் சம்பளம் என்று சொன்னாலும், ரூம் வாடகை, சாப்பாடு என  பிடித்துக் கொண்டு பத்தாயிரம்தான் கையில் தருகிறார்கள் என்பதை முதல் மாதம் சம்பளம் வாங்கியபொழுது தெரிந்து கொண்டான். தான் அனுப்பும் பத்தாயிரத்தில் வட்டிக்கே ஐந்தாயிரம் போய்விடுகிறது என்று போனில் அம்மா சொன்னாள். அடகு கடையில் இருக்கும் அம்மாவின் நகைகள், பண்ணையாரிடம் உள்ள வீடு, எதிர்த்த வீட்டு ஏகாம்பரம் மனைவியிடம் வட்டிக்கு வாங்கிய பணம் இவற்றையெல்லாம் எப்போ அடைப்பது. தான் எப்போது இந்த அடிமைச்சிறையில் இருந்து விடுதலையாவது என்று நினைக்கும் பொழுது தேனைப் பருக வருவதாக நினைத்து நெப்பந்தஸ் செடியில் மாட்டிக் கொண்டு அதற்கு உணவாக மாறும் பூச்சியைப் போல் அக்கரைச் சீமை அழகில் ஆசைப்பட்டு வந்து அடிமை வாழ்க்கையில் சிக்கிக் கொண்டதை மிக தாமதமாக உணர்ந்து  கொண்டான் செல்வராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com