நூற்றாண்டு கண்ட ஹொன்னப்ப பாகவதர்

1915 -ஆம் ஆண்டு பெங்களூரு அருகே உள்ள நெலமங்கலா, சளட சந்திரா கிராமத்தில் ஜனவரி 14 ஆம் தேதி பிறந்த ஹொன்னப்பா,

1915 -ஆம் ஆண்டு பெங்களூரு அருகே உள்ள நெலமங்கலா, சளட சந்திரா கிராமத்தில் ஜனவரி 14 ஆம் தேதி பிறந்த ஹொன்னப்பா, சிறுவயதிலிருந்தே சங்கீதத்தில் ஆர்வம் காட்டி வந்தார். தந்தையின் மறைளக்கு பிறகு அவரது தாயார் வசித்துவந்த மோட்டகானஹள்ளியில் தங்கியிருந்த ஹொன்னப்பா, குடும்பத் தொழிலான நெசள தொழிலுடன் ஆர்மோனியம், தபேலா கற்கத் தொடங்கினார். 1928-ஆம் ஆண்டு அவரது சகோதரரிடம் விவசாயத் தொழிலை ஒப்படைத்துவிட்டு வாய்ப்பு தேடி பெங்களூரு வந்தார்.

பெங்களூருவில் ஹொன்னப்பாவின் சங்கீத ஆர்வத்திற்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. கர்நாடக இசை வித்வான் சாம்பசிவ மூர்த்தி பாகவதர் மற்றும் ஆர்மோனிய வித்வான் அருணாசலப்பா ஆகியோருடன் சேர்ந்து முறைப்படி சாஸ்திரிய சங்கீதத்தைக் கற்றுக் கொண்டார். பின்னர் தனியாகவே கச்சேரிகள் நடத்துமளளக்கு திறமையை வளர்த்துக் கொண்டார்.

இவர் குரல் வளத்தைக் கண்ட "குப்பா ஸ்ரீ சென்ன பசவேஸ்வரா நாடக கம்பெனி' நிறுவனர், 1930-ஆம் ஆண்டில் இவரை அழைத்து நாடகக் குழுவில் சேர்த்துக் கொண்டார். சரித்திர, சமூக நாடகங்களில் பிரதான பாத்திரங்கள் ஏற்று பாடி நடித்ததுடன் கூடவே சங்கீதத்தில் இருந்த ஆர்வத்தையும் வளர்த்துக் கொண்டார்.

 1937-ஆம் ஆண்டில் தமிழ்நாடு சேலத்தில் இருந்த "சேலம் சங்கீத ரசிகர்கள் சபா' அழைப்பின் பேரில் இசை நிகழ்ச்சி நடத்த சென்றபோது இவருக்கு பாகவதர் என்ற பட்டத்தை வழங்கினர். அப்போது முதல் இவர் "ஹொன்னப்ப பாகவதர்' என அழைக்கப்பட்டார்.

இவருக்கு சங்கீதத்தில் கிடைத்த வெற்றி, தமிழ்த் திரையுலகில் வாய்ப்புகளைப் பெற்று தந்தது. தியாகராஜ பாகவதருடன் இணைந்து இவர் நடித்த "அம்பிகாபதி" ( 1941) ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தமிழில் "கிருஷ்ண குமார்', "ரதி சுகன்யா', "வால்மீகி', "ஸ்ரீமுருகன்', "குணசாகரி', "தேவமனோகரி' உள்பட 14 படங்களில் நடித்தார். 1940-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் பெருமளவில் ரசிகர்கள் அவரைப் பாராட்டினர். முதன்முறையாக "குப்பி கம்பெனி' ஹென்னப்ப பாகவதரை கதாநாயகனாகளம், ஜெயம்மாலையை கதாநாயகியாகளம் வைத்து கன்னடத்தில் சுபத்ரா (1941) என்ற படத்தை தயாரித்து, பத்மநாப சாஸ்திரி இசையமைப்பில் இவர் பாடிய பாடல்கள் படத்தின் வெற்றிக்கு ஆதாரமாக இருந்தது. தமிழ்ப் படங்களில் இவர் நடித்த காலகட்டத்தில் நடிகர்களே பாடி நடிக்க வேண்டுமென்ற நிலை இருந்ததால் இவரால் சுலபமாக புகழ் பெற முடிந்தது. கன்னடத்தில் இவரே தயாரித்து நடித்த "பக்தகும்பாரா' ( 1947) "மகாகவி காளிதாசா' (1955) "பஞ்சரத்னா' ( 1956) ஆகிய படங்களுக்கு இசையமைத்தது பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கன்னடத்தில் படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். "ஹேமரெட்டி மல்லம்மா', "குணசாகரி' போன்ற படங்களில் நடித்தபோது பண்டரிபாயை அறிமுகப்படுத்தினார். மற்றொரு படத்தில் சரோஜா தேவியை அறிமுகம் செய்தார்.

1959- ஆம் ஆண்டு  இவர் தயாரித்த ஜெகஜோதி பசவேஸ்வரா  படத்தில் ராஜ்குமார் உடன் நடித்தார். "மகாகவி காளிதாசா', "ஜெகஜோதி பசவேஸ்வரா' ஆகிய இருபடங்களும் தேசிய விருது பெற்றன. தமிழில் இவர் தயாரித்த " உழளக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' படத்தின் தோல்வி இவருக்கு பெரும் நஷ்டத்தை தந்தது.

1960 -ஆம் ஆண்டில் "உமா மகேஸ்வரா நாடக மண்டலி'யை துவங்கிய இவர், பல நாடகங்களைத் தொடர்ந்து நடத்திவந்தார். அதிலும் இழப்பு அதிகரிக்கவே நாடகங்கள் நடத்துவதை விட்டுவிட்டு இசையில் மட்டும் ஈடுபாடு காட்டினார்.  கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை உருவாக்கினார்.

 1956 ஆம் ஆண்டு சென்னை திரைப்பட ரசிகர்கள் சங்கம் இவருக்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியது. "நாட்டியாச்சார்யா', "கான அபிநய சந்திரா', "கான கலா கந்தர்வா', "கான கலா பூஷணா' போன்ற பட்டங்களை பெற்றதோடு, 1976-ஆம் ஆண்டு சிருங்கேரி ஜகத்குரு இவருக்கு "கர்ண சிகாமணி' தங்க பதக்கத்தை வழங்கினார். 1972 -ஆம் ஆண்டு "கர்நாடக சங்கீத நாடக அகதெமி' விருது வழங்கியதை தொடர்ந்து, 1979 -ஆம் ஆண்டு "மத்திய சங்கீத நாடக அகாதெமி' விருது பெற்ற முதல் கன்னடர் என்ற பெருமையையும் பெற்றார்.

1977-ஆம் ஆண்டு மீண்டும் "சதானந்தா' என்ற படத்தை தயாரித்து நடித்து திரையுலகில் பிரவேசித்தார். 1986 -ஆம் ஆண்டு "ராஜ்யோத்சவா' விருது கர்நாடக அரசால் வழங்கப்பட்டது. 1991- ஆம் ஆண்டு பெங்களூருவில் இவர் மறைந்தார்.

இவரது நூற்றாண்டு நிறைள தினத்தையொட்டி கர்நாடக "கான சித்ரா அகதெமி' ஜனவரி 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் நடத்திய நினைள விழாவின் போது இவர் நடித்த படங்களின் புகைப்படங்களைக் கண்காட்சியாக வைத்ததோடு, இவர் தயாரித்த மகாகவி காளிதாசா, பஞ்சரத்னா, ஜெகஜோதி பசலேஸ்வரா ஆகிய திரைப்படங்களை திரையிட்டு கௌரவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com