மொழிபெயர்ப்பாளர்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்!

சிறந்த மொழியாக்க நூல்களுக்கும் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் சிறந்த மொழியாக்க நூலுக்கான 2014-ஆம் ஆண்டிற்கான விருதினை சாகித்ய அகாதெமி மார்ச் மாதம் 9ஆம் தேதி அறிவித்தது.
மொழிபெயர்ப்பாளர்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்!

சிறந்த மொழியாக்க நூல்களுக்கும் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் சிறந்த மொழியாக்க நூலுக்கான 2014-ஆம் ஆண்டிற்கான விருதினை சாகித்ய அகாதெமி மார்ச் மாதம் 9ஆம் தேதி அறிவித்தது.

2008 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான படைப்புக்களை ஒவ்வொரு மொழிக்கும் மூன்று பேர் அடங்கிய தேர்வுக்குழு ஆய்வு செய்து பரிந்துரை செய்திருந்தது.

அதன் அடிப்படையில் சாகித்ய அகாதெமியின் தலைவர் விஸ்வநாத்பிரசாத் திவாரி தலைமையில் அதன் நிர்வாகக்குழுக் கூட்டம் நூல்களை ஆய்வு செய்தது. டாக்டர் எச்.பாலசுப்பிரமணியம், இந்திரன், டாக்டர் தமிழவன் கார்லோஸ் ஆகியோர் அடங்கிய குழு தமிழ் மொழிக்கான தேர்வுக்குழு அளித்த பரிந்துரையின்படி பீஹாரைச் சேர்ந்த பபானி பட்டாச்சார்யாவின், "ஷேடோ ஃபிரம் லடா' என்ற ஆங்கில நூலை "லடாக்கிலிருந்து கவிழும் நிழல்' என மொழியாக்கம் செய்ய இலக்கிய எழுத்தாளர் சா.தேவதாஸ் விருதுக்கு தகுதி பெற்றதாக அறிவித்தது.

சாகித்ய அகாதெமியின் சிறந்த தமிழ் மொழியாக்க விருதுக்கு தேர்வாகியுள்ள சா.தேவதாஸ் (60) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வசித்து வருகிறார். இது குறித்து அவரிடம் கேட்டபோது:

""1977ஆம் ஆண்டு எம்.ஏ.தமிழ் படித்து முடித்தபோது, இலக்கிய ஆர்வம் ஏற்பட்டது. தமிழ்மட்டுமல்லாது, ஆங்கில நூல்களையும் படிக்கத் தொடங்கினேன். அப்போது, ஆய்வு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் ஆகியவற்றில் ஈடுபாடு ஏற்பட்டது. பல ஆங்கில இலக்கியங்களைப் படித்தேன்.

அப்போது இது போன்ற இலக்கியங்களை தமிழ் படிப்பவர்களும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. 1995-இல் முதல் முறையாக இந்திய மொழிச் சிறுகதைகள் என்ற ஆங்கில நூலை தமிழில் மொழியாக்கம் செய்தேன். இதிலிருந்து பல மாநிலங்களில் உள்ள , எழுத்தாளர்களின் சிந்தனை, அவர்களின் போக்கு, அந்த மாநில கலாசாரங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை மொழி மாற்றம் செய்தபோது, தமிழ் வாசகர்களும் அந்தந்த மாநிலங்களின் மக்களின் வாழ்க்கைமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என எண்ணினேன். தமிழில் அந்த நூலுக்குப் பெயர் "புன்னகை பூக்கும் இளவரசி' என்பதாகும்.

பின்னர் பகத்சிங் சிறைக் குறிப்புகள், சர்வதேச வாய்மொழிகதைகளின் தொகுப்பான கதாசாகரம், உலகச் சிறுகதைதள் யூதப்பறவைகள் என்ற பெயரிலான புத்தகம் உள்ளிட்ட 20 நூல்கள் மொழிபெயர்ப்பு நூலாக வந்துள்ளது.

மொழிபெயர்ப்பு நூல்களால், ஆங்கிலம் படிக்க இயலாதவர்கள், அந்த நூலைப் படிக்கும் போது, அறிமுகம் கிடைக்கும். வாசிக்க சிரமம் இருக்கலாம். எனினும் இலக்கிய ஈடுபாடு இருந்தால் வாசிக்க மிக எளிதாக இருக்கும். மூல நூலில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதனைச் சிதைக்காமல் அப்படியே மொழிபெயர்ப்பதுதான் சவாலான விஷயம். மொழியாக்க நூல்களை வாசிப்பவர்கள் மூல நூலை எழுதியது யார் என பார்த்து வாசிக்கிறார்கள். ஆனால் அந்த நூலை யார் மொழியாக்கம் செய்துள்ளார்கள் என பார்ப்பதில்லை. இது சற்று வேதனை தரும் விஷயமாக உள்ளது. மொழியாக்க நூல்கள் இருபது தவிர 9ஆய்வுக் கட்டுரை நூல்களும் எழுதியுள்ளேன்.

உலகில் சிறந்த காதல் கதைகளை , எமிலிக்காக ஒரு ரோஜா என்ற தலைப்பில் தொகுப்பு நூலாக வெளிவந்தது. இது வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

புதிய எழுத்து, கல்குதிரை, திசை எட்டும் ஆகிய பத்திரிகைகளில் எழுதியுள்ளேன்.

ஆங்கிலத்தில் யார் தீவிரமாக எழுதுகிறார்கள். அதில் தமிழ் வாசகர்களுக்கு எதனைக் கொடுக்கலாம் என ஆய்வு செய்து பின்னர் அந்த நூலை மொழியாக்கம் செய்கிறேன். பிற மொழி எழுத்தாளரை அறிமுகம் செய்யும் போது, அவரது எழுத்தில் உள்ள வீச்சு குறையாமல் பார்த்துக் கொள்வேன்.

மொழியாக்கலுக்கு, மொழிகட்டமைப்பு சார்ந்த பிரச்னை, கலாசாரம் சார்ந்த பிரச்னை, மத ஆன்மீக தத்துவப் பிரச்னைகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். 1960-இல் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு வரவேற்பு இருந்தது. 1980-1990-ல் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

தற்போது வாசகர்களிடம் வரவேற்பு இருந்தாலும், மேலும் வாசகர்கள் மொழிபெயர்ப்பாளர்களை உற்சாகப்படுத்த வேண்டும். வாசகர்களிடம் புத்தகங்கள் குறித்த விழிப்புணர்வு வேண்டும். நல்ல புத்தகம் நல்ல நண்பன் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நல்ல புத்தகம், வாசிப்பவர்களின் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் எனக் கூறலாம்.

வாசகர்களின் கவனத்தைத் திசைதிருப்ப பல சாதனங்கள் உள்ளன.

எனினும் சாதனைகள் உலகில் நிலைத்து நிற்கும் என்பதை யாரும் மறக்கக் கூடாது. சாதனைகள் புரிவதற்கு வாசிப்பு பழக்கம் வேண்டும். இலக்கியவாதிகளுக்குள் விஷயம் சார்ந்த விவாதம் இருக்கலாம். தனிநபர் சார்ந்த சர்ச்சைகள் ஆரோக்கியமாக இருக்காது'' என்றார் தேவதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com