மகாமக குளத்துக்குப் படித்துறை அமைத்தவர்!

நூற்றுப் பத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்து, சற்றேறக்குறைய தொண்ணூறு ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை வகித்தது, முறியடிக்க முடியாத மாபெருஞ் சாதனை!
மகாமக குளத்துக்குப் படித்துறை அமைத்தவர்!

நூற்றுப் பத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்து, சற்றேறக்குறைய தொண்ணூறு ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை வகித்தது, முறியடிக்க முடியாத மாபெருஞ் சாதனை! இந்தச் சாதனை புராணக்கதை அல்ல! பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த வரலாற்றுச் சாதனை! அந்தச் சாதனையாளர்தான் ஸ்ரீகோவிந்த தீட்சிதர்.

தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் மூவருக்கு இராஜகுருவாகவும், முதலமைச்சராகவும் திகழ்ந்தவர் பல்துறை அறிஞராகிய கோவிந்த தீட்சிதர்.

பதினாறாம் நூற்றாண்டில் அச்சுததேவராயர் விஜயநகரப் பேரரசின் மகாராயராக (பேரரசராக) இருந்தார். அவர் சேவப்ப நாயக்கரை, தஞ்சைப் பகுதியின் பிரதிநிதியாக 1532-இல் நியமித்தார்.

அதே காலகட்டத்தில், ஆரணிப் பகுதியை, சின்ன திம்மப்ப பூபதி அரசாண்டு வந்தார். கேசவ தீட்சிதர் என்பவர் திம்மப்ப பூபதியின் இராஜகுருவாக இருந்தார். கேசவ தீட்சிதரின் சகோதரியின் குமாரர்தான் கோவிந்த தீட்சிதர். அப்போது அவரை, பலராம கோவிந்தர் என அழைத்தனர். மகாராயர் அச்சுததேவர், ஆரணியில் பலராம கோவிந்தரையும், அவருடைய தந்தை தசரதராம தீட்சிதரையும் சந்திக்க நேர்ந்தது. பலராம கோவிந்தரின் அறிவும், முகப்பொலிவும் மகாராயரைப் பெரிதும் கவர்ந்தன. பதினேழு வயதிற்குள் பலராம கோவிந்தர் சகல சாஸ்திரங்களையும் கற்றுவிட்டார்!

நாராயணமகி, கேசவ தீட்சிதரின் இளமைக்கால நண்பர். அவருடைய மனைவி சின்ன பார்வதி. அவர்கள் இருவரும் தங்கள் மகள் நாகமாம்பாளுடன் ஆரணிக்கு வந்தனர். நாகமாம்பாள் பலராம கோவிந்தருக்கு ஏற்றவள் என்று தீர்மானித்தனர். அதன்படி, மகாராயர் அச்சுததேவர் முன்னிலையில் பலராம கோவிந்தருக்கும் நாகமாம்பாளுக்கும் ஆரணியில் திருமணம் நிறைவேறியது.

இல்லறம் மேற்கொண்ட பலராம கோவிந்தர், "கோவிந்த தீட்சிதர்' என அழைக்கப்பட்டார். தஞ்சை மன்னர் சேவப்ப நாயக்கர் மகாராயரின் ஆலோசனைப்படி, கோவிந்த தீட்சிதரைத் தமது இராஜகுருவாகவும், முதலமைச்சராகவும் நியமித்தார்.

கோவிந்த தீட்சிதர் பதவியேற்றவுடன், ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்ட, "சரஸ்வதி பண்டாரம்' என்ற நூல் நிலையத்தை நிறுவச் செய்தார். தஞ்சை மக்களின் குடிதண்ணீர் தேவையைக் கருத்தில்கொண்டு ஓர் ஏரியை வெட்டச் செய்தார். சரஸ்வதி பண்டாரமே, "சரஸ்வதி மகால்' என்ற பெயருடன் இன்றும் புகழுடன் செயல்பட்டு வருகிறது.

1542-இல் கும்பகோணத்தில் காவிரிக்கரையில் கோவிந்த தீட்சிதர் úஸாம யாகத்தை நடத்தினார். மகான் ஸ்ரீமத் அப்பய்ய தீட்சிதர் அந்த வேள்விக்கு வருகை தந்து சிறப்பித்தார். அதே யாக பூமியில், மாணவர்கள் குருகுல முறையில் பயிலத்தக்க வகையில் வேதபாடசாலை ஒன்றை நிறுவச் செய்தார். "ஸ்ரீராஜா வேதகாவ்ய பாடசாலை' என்ற பெயரில் அப்பாடசாலை இன்றளவும் செயல்பட்டு வருகிறது.

அங்கு நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், மீமாம்ஸ வேதாந்த சாஸ்திரங்கள், இசை, நடனம், ஆகமம் போன்ற கலைகளும் கற்பிக்கப்படுகின்றன. அந்தப் பாடசாலையை நிர்வகிக்க அரசர் எழுபது ஏக்கர் நிலத்தையும் அளித்தார்.

இந்து வைதீகக் கொள்கையில் பற்றுடையவராய் இருந்த கோவிந்த தீட்சிதர், மனிதநேயமும் மதநல்லிணக்கமும் பேணிய மாமனிதர் ஆவார். அவருடைய ஆலோசனைப்படி, நாயக்க மன்னர்கள் மூவரும் செய்த நற்பணிகளைக் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. தஞ்சையில் ஒரு மசூதி கட்டிக்கொள்ள, தீட்சிதர் ஏழு வேலி நிலத்தை அளிக்கச் செய்தார். புனித úஸவியர் என்ற பாதிரியார் நாகப்பட்டினத்தில் கட்டடங்கள் கட்டிக்கொள்ள தீட்சிதர் அரசரின் அனுமதியைப் பெற்றுத் தந்தார்.

திருவண்ணாமலை உள்ளிட்ட பல கோயில்களின் திருப்பணிகளுக்கு உதவினார் கோவிந்த தீட்சிதர். கும்பகோணம் மங்களாம்பிகை உடனுறை ஆதிகும்பேசுவரர் கோயிலுக்கு இராஜகோபுரமும், மதில்களும் கட்டி, 1580-ஆம் ஆண்டு குடமுழுக்கையும் நிறைவேற்றினார். திருவையாற்றில் தொடங்கி, மயிலாடுதுறை வரை, காவிரியின் இரண்டு பக்கங்களிலும் அழகிய படித்துறைகளைக் கட்டச் செய்தார். அவற்றுள் பல இன்றளவும் உள்ளன.

இலங்கை, யாழ்ப்பாணம் சென்று போர்ச்சுகீசியரை வென்று வந்த நாயக்க மன்னரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் குடந்தையில் இராமர் கோயில் கட்டச் செய்தார். இங்கு இராமர் பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சியளிக்கிறார். குடந்தையில் இராமசாமி கோயில் என்று இக்கோயில் புகழ்பெற்று விளங்குகிறது. இங்கு இராமாயணக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.

இசையிலும் மேதையாகத் திகழ்ந்த கோவிந்த தீட்சிதர், "ஸங்கீத ஸýதாநிதி' என்ற நூலை இயற்றி, அதனை ரகுநாத நாயக்கருக்கு அர்ப்பணம் செய்துள்ளார். மேலும், "ரகுநாத மேள வீணா' என்ற புதிய தஞ்சாவூர் வீணையையும் உருவாக்கினார் கோவிந்த தீட்சிதர்.

பட்டீசுவரத்திற்கு அருகில் இருந்த சிங்கரசன்பாளையம் என்ற இடத்தில், அச்சுதப்ப நாயக்கருக்கு, வில், வாள் சண்டைப் பயிற்சியும், குதிரையேற்றம், யானையேற்றம் போன்ற போர்க்கலைப் பயிற்சிகளையும் அளித்தார் முதலமைச்சர் கோவிந்த தீட்சிதர். ஆசானைப் பாராட்டும்விதமாக, அச்சுதப்பன் சிங்கரசன்பாளையம் என்ற ஊரின் பெயரை மாற்றி, "கோவிந்தகுடி' என்று பெயரிட்டான். கோவிந்தகுடியில் ஒரு வேதபாடசாலை இயங்கி வருகிறது. சோழ நாட்டு வேதவிற்பன்னர்களில் பெரும்பாலோர், கோவிந்தகுடி பாடசாலை அல்லது குடந்தை ராஜா வேதபாடசாலையில் அத்யயனம் செய்தவர்களே.

மக்கள் நலம் பேணிய, தமது அரிய பணிகளால், மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார் கோவிந்த தீட்சிதர். தஞ்சைத் தரணியில், ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் கோவிந்த தீட்சிதரை, "எங்கள் ஐயன்' என்று போற்றினர்! வாழ்த்தினர்! அதன் வெளிப்பாடாக, ஐயன்பேட்டை, ஐயன் குளம், ஐயன் கடைவீதி என்றெல்லாம் பெயரிட்டு மகிழ்ந்தனர். அப்பெயர்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத்தின்பொழுது, பூமியிலுள்ள அத்துணை புண்ணிய தீர்த்தங்களும், கங்கை முதலான ஒன்பது புண்ணிய நதிகளும் மகாமகக் குளத்திற்குள் வந்துவிடுவதாக ஐதீகம். ஒருமுறை கோவிந்த தீட்சிதருடன் கும்பகோணத்திற்கு வந்திருந்த இரகுநாத நாயக்கர், ""கங்கை முதலான புண்ணிய நதிகள் இப்போதும் மகாமகக் குளத்திற்கு வருகின்றனவா? அவர்களை (நதியரசிகளை) நாம் காண இயலுமா?'' என்று வினவினார்.

""ஆம்! இன்றும் நதியரசிகள் இங்கு வருகிறார்கள்!''

என்று பதிலளித்த கோவிந்த தீட்சிதர், சிறிது நீரைத் தெளித்து நதிதேவதைகளைப் பிரார்த்தித்தார். அப்போது மகாமகக் குளத்தில், ஒரே நேரத்தில் பதினெட்டு வளைக்கரங்கள் தோன்றின! 1624-ஆம் ஆண்டு இரகுநாத நாயக்கர் அந்த அதிசயத்தைக் கண்டார். பெரிதும் மகிழ்ந்த இரகுநாத நாயக்கர், கோவிந்த தீட்சிதருக்கு எடைக்கு எடை தங்கத்தைத் துலாபாரமாகக் கொடுத்துச் சிறப்பித்தார். சிறிதும் தன்னலமில்லாத கோவிந்த தீட்சிதர், அப்பொன்னைக் கொண்டு மகாமகக் குளத்திற்குப் புதிய படித்துறைகள் அமைத்தார். அத்துடன் குளத்தைச் சுற்றிலும் பதினாறு சிவாலயங்களைக் கட்டினார்.

இரகுநாத நாயக்கர் கோவிந்த தீட்சிதருக்கு எடைக்கு எடை தங்கம் அளித்ததன் நினைவாக, மகாமகக் குளத்தின் வடக்குக்கரையில் துலாபார மண்டபம் என்றே ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதில் இந்த நிகழ்ச்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

மூன்று மன்னர்களுக்கு முதலமைச்சராகவும், இராஜகுருவாகவும் விளங்கிய கோவிந்த தீட்சிதர் எவ்விதப் பகட்டும் படாடோபமும் இல்லாமல் வாழ்ந்தார். பட்டீஸ்வரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் சிறிய ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். மன்னனுக்கு வழிகாட்டவும், மக்களுக்குத் தொண்டு செய்யவுமே, இறைவன் படிப்பையும், பதவியையும் அருளியதாகக் கருதினார் கோவிந்த தீட்சிதர். இல்லற ஞானியாக வாழ்ந்து, சாதனைகள் படைத்து, வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் கோவிந்த தீட்சிதர்.

ஸ்ரீராமாநுஜர் 120 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்தார். அதுபோல், கோவிந்த தீட்சிதரும் 119 ஆண்டுகள் (கி.பி.1515 முதல் 1634 வரை) நீண்ட நெடிய வாழ்வு வாழ்ந்தார் என்பதும் வரலாற்றுச் சான்றுடன் கூடிய உண்மையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com