குழந்தை மனம் கொண்ட குத்துச்சண்டை வீரர்!

குத்துச் சண்டை ஓர் ஆக்ரோஷமான விளையாட்டு. மண்டை உடையலாம், உதடு கிழியலாம்,கன்னம் வீங்கலாம். குத்துச்சண்டை ரிங்கை விட்டு வெளியே வந்தால்,
குழந்தை மனம் கொண்ட குத்துச்சண்டை வீரர்!

குத்துச் சண்டை ஓர் ஆக்ரோஷமான விளையாட்டு. மண்டை உடையலாம், உதடு கிழியலாம்,கன்னம் வீங்கலாம். குத்துச்சண்டை ரிங்கை விட்டு வெளியே வந்தால், அந்த வீரர் சாந்தசொரூபியாக மாறிவிடுவார் என்றால் யாராவது நம்புவார்களா? ஆனால் அதுதான் உண்மை. முதன் முறையாக உலக குத்துச்சண்டை வரலாற்றில் மூன்று முறை அதிக எடை கொண்ட பிரிவில் வெற்றி பெற்றவர் முகமது அலி. அவர் குத்துவது ஆக்ரோஷமாக இருந்தாலும், அவர் பேசுவது  சிரிக்கும் வண்ணம் இருக்கும். இதை அவரது சென்னை விஜயத்தின் பொது நான் தெரிந்து கொண்டேன்.

 காசியஸ் மர்செல்லுஸ் கிளே (Cassius Marcellus Clay) வாக லூசிவில்லே(Louisville)  கென்டக்கி (Kentucky) நகரத்தில் 1942 ஆம் ஆண்டு,ஜனவரி மாதம் 17ஆம் தேதி  பிறந்தார். 1964 ஆம் ஆண்டு உலக  குத்துச் சண்டை வரலாற்றில் முதன் முறையாக,  அதிக எடை கொண்ட பிரிவில் வெற்றி பெற்றார். அதே ஆண்டு தனது பெயரையும் காசியஸ் கிளே என்று இருந்ததை முகமது அலி என்றும் மாற்றிக் கொண்டார். அன்றிலிருந்து இவர் மறையும் காலம் வரை (June 4, 2016) நல்லதைச் செய்து, சிரிக்கப் பேசி, மற்றவர்களை மகிழச் செய்தார்.

இவர் சென்னைக்கு வருகிறார் என்றவுடன், குத்துச்சண்டை பிரியர்களைப் போன்றே எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அதற்கு காரணம் இரண்டு. ஒன்று, அன்று முதல்வராக இருந்த நமது எம்.ஜி.ஆர். தலைமையில் அவரது கண்காட்சி குத்துச் சண்டை சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். படங்களில் குத்துச் சண்டை வீரராக நடித்திருந்தார். இரண்டாவது முகமது அலியை நேரில் சந்தித்துப் பேசவேண்டும் என்ற ஆசையும் இருந்தது. அந்த சமயத்தில் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் என்று எல்லாவற்றிலும் என் பங்கு அதிகமாக இருந்தது. வானொலியில் அப்பொழுது தயாரிப்பாளராக இருந்த கணேசன் (பின்னாளில் இவர் கோவை வானொலியின் இயக்குநராக உயர்வு பெற்று, ஓய்வு பெற்றார்) என்னை தொலைபேசியில் அழைத்து, ""தனியாக ஒரு பேட்டி வேண்டும், முடியுமா?'' என்றார். இள ரத்தம் என்பதால் முயன்று பார்த்து விடலாம் என்று முடிவு செய்தேன். காலையில்தான் ஒரு 100 பத்திரிகையாளர்களை முகமது அலி சந்தித்தார். மாலையில் கண்காட்சி சண்டை. மதியஉணவின் இடைவேளைக்குப் பிறகு அவரைச் சந்திக்க முடிவு செய்தேன். அவர் தங்கி இருந்த இடம் இன்று தாஜ் கன்னிமாரா என்று அழைக்கப்படும், அன்றைய ஓட்டல்  கன்னிமாரா. அவர் சாப்பிட்ட பாத்திரங்கள் வெளியே வர, நான் என் டேப்  ரெகார்டர் சகிதம் உள்ளே புகுந்தேன். (அன்று பெட்டி போன்ற டேப் ரெகார்டர் இருந்தது) என்னுடன் என் புகைபடக்காரரும் நுழைந்தார். என்னைப் பார்த்த அலி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ""என்ன?'' என்றார். வந்த விஷயத்தை சொல்ல, ""பணம் கொடுப்பியா?''

என்று அவர் கேட்க, ""இந்தியாவில் அப்படி பழக்கமில்லை'' என்று நான் கூற, ""தெரியும் தெரியும்'' என்று அவர் தலையாட்டிக்கொண்டே, நான் கேட்கும் கேள்விக்கெல்லாம் சிரித்தவண்ணம் பதில் அளிக்க ஆரம்பித்தார். முதலில் பேட்டி கிடைக்குமா? என்று நினைத்தது பின்னர் பெரிய பேட்டியாக முடிந்தது. மாலையில் எம்.ஜி.ஆர். பேசியது, பின்னர் நானும் கணேசனும் அவரது வெஸ்பா வண்டியிலேயே அகில இந்திய வானொலி அலுவலகம் வந்தது என எல்லாம் கனவு போல் நடந்தது. ஒலிபரப்பு நேரம் நெருங்க நெருங்க, பயம் எங்களை பற்றிக் கொண்டது. அரைமணி நேர நிகழ்ச்சியை இரண்டு பகுதியாக, வெற்றிகரமாக செய்து முடித்தோம். இன்றும் அந்த நிகழ்ச்சி வானொலியில் பத்திரமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

நான் அவரது அறையைவிட்டு வெளியே வந்த பிறகு பல பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி ( அன்று தூர்தர்ஷன் மட்டுமே உண்டு) யும் தனித் தனியாக அவரை பேட்டி கண்டனர். டேப்பிலும், அதற்கு முன் நேரிலும் என்னிடம் பேசிய பேச்சுக்கள், அவர் குழந்தை மனம் கொண்டவர் என்று எனக்கு உணர்த்தியது. முகமது அலியின் பேச்சில் எந்த வித கோபமோ,வெறுப்போ இல்லை. மற்றவர்கள் வரும் முன் என்னிடம் இந்த சென்னையைப் பற்றியும் அதன் தன்மை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார். நான் சொன்ன சில விஷயங்களை மாலையில் தன் பேச்சில் சேர்த்துக் கொண்டார். அவர் என்றுமே தான் தான் கிரேட்டஸ்ட் (Greatest) என்று சொல்வார். அதைச் சொல்லும் பொது அதில் கர்வமோ, மற்றவர்களை கிண்டல் செய்வது போலவோ இருக்காது.

 மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதற்கும் அவர் தயங்கியதே இல்லை. தன்னுடன் வந்துள்ள ஜிம்மி எல்லிஸ்ஸையும் பேட்டி எடுக்க வேண்டும் என்று கூறினார். காரணம், ""ஜிம்மி எல்லிஸ் சிறந்த குத்துச் சண்டை வீரர். என்னிடமும் மோதியுள்ளார்'' என்றார். தன்னைப் புதிதாகப் பார்க்க வரும் நபரிடம், ""நான் வி.சி.கணேசன்'' என்று கூறியவாறு தன் கையை நீட்டுவார்  நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதே போல் உலகப் புகழ் பெற்றிருந்தாலும் "நான் முகமது அலி' என்று கை நீட்டினார்  இந்த குத்துச்சண்டை வீரர்.  தனது தந்தையார் காசியஸ் கிளே சீனியரையும் அறிமுகப்படுத்தினார். என்னைப் பொருத்தவரை குழந்தை மனம் கொண்ட குத்துச்சண்டை வீரர் நம் முகமது அலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com