வெறும் கருவிகள்

எத்தனை சாமியார்கள் விதம் விதமான கோலங்களில். சிலர் துணையோடும் கூட நடக்கிறார்கள்.
வெறும் கருவிகள்

எத்தனை சாமியார்கள் விதம் விதமான கோலங்களில். சிலர் துணையோடும் கூட நடக்கிறார்கள். அழுக்கேறிய காவி உடையோடு சைக்கிளில் போகிற சாமியார்களைப் பார்க்கையில் சிரிப்புத்தான் வருகிறது. காவி உடையிலும் அழுக்கேறுவது என்பது எப்படி சாத்தியம்? நிஜமான துறவிகள் இவர்களில் எத்தனை பேர் தேறுவார்கள்? எல்லாரும் ரமணர் ஆகிவிட முடியுமானால், இந்த பூமி கிடக்கட்டும், பிரபஞ்சம்தான் தாங்குமா?

அருணை மலையைச் சுற்றி வருகையில் மனம் எங்கெங்கோ சுற்றிச் சுற்றி அலைகிறது. ""அப்படியெல்லாம் மனசை அலையவிடக்

கூடாது என்பதுதான் கிரிவலம் வருவதன்

நோக்கம்'' என்கிறார் சுவாமி.

இவ்வளவு பேருக்கும் எப்படி இலவசமாகச் சாப்பாடு கிடைக்கிறது என்பதில் நமக்கு ஒரு வியப்பு. சாப்பாடா? அறுபது எழுபது இடங்களில் தினமும் அன்னதானம் நடக்கிறது. எங்கே? என்ன கிழமையில் என்ன உணவு கிடைக்கும்? என்கிற மெனு விவரம் கூட இவர்களுக்கெல்லாம் அத்துபடி. அதன்படி விரும்புகிற உணவை - அது பொங்கலோ, புளியோதரையோ தெரிந்து கொண்டு அங்கே போய்விடுகிறார்கள்.

""உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டார் சுவாமி. நமக்கு ஒரு திரைப்படத்தில் பார்த்த நகைச்சுவைக் காட்சி நினைவுக்கு வருகிறது. அது ஒன்றும் மிகையானதில்லை என்பது புரிகிறது.

""இப்படியெல்லாம் உழைக்காமல் சாப்பிடுகிற பழக்கத்தை ஆதரிப்பது தப்பில்லையா? சோம்பேறித் தனத்தை ஊக்குவிப்பது தேசத்துக்கு நன்மை பயக்குமா?'' என்கிற நம்முடைய பாமரத்தனமான அரசியல் பொருளாதாரக் கேள்விக்கும் சுவாமியிடம் விடை இருக்கிறது.

""பசித்த வயிற்றுக்கு உணவு தருவது நம்முடைய தேசத்தின் பண்பாடு என்பது உனக்குத் தெரியாதா? "அதிதி தேவோ பவ' என்று படித்திருக்கமாட்டாய்.. கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டாயா? அதுதான் இது. உங்கள் பாரதி கூடச் சொல்லியிருப்பானே, வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்று. அது என்ன சோம்பேறிகளை வளர்ப்பதற்காகவா சொன்னான்?'' சற்றுக் காட்டமாகவே பதில் வருகிறது சுவாமியிடமிருந்து.

""சோம்பேறிகள்... உழைக்காமல் சாப்பிடுகிறவர்கள்... எல்லாம் சரிதான். சுட்டெரிக்கிற சூரியன், கவிதை பாடுகிறீர்களே? குளிர் நிலவு அது இது என்றெல்லாம், அந்தச் சந்திரன், ஓயாமல் அலையெழுப்பிக் கொண்டேயிருக்கிற கடல். இவை மாதிரிதான் மனிதர்களும். பிரபஞ்சத்தில் எங்கேயாவது பிறந்துவிட்டால் உழைத்துத்தான் ஆகவேண்டும், ஏதாவது ஒரு வகையில். அந்த உழைப்பு உன்னுடைய கண்களுக்கு வேண்டுமானால் புலப்படாதிருக்கலாம்.''

""சுவாமிகளுக்குக் கோபம் வரலாமா?'' பாமரத்தனமாகத்தான் கேட்கிறேன்.

""எதுவுமே செய்யாமல் சும்மா இருக்கிறவர்கள், என்ன மாதிரியான உழைப்பில் ஈடுபடுகிறார்கள்?''

சுவாமி கோபப்படமாட்டார் என்பது எனக்குத் தெரியும்தான். உரத்துச் சத்தமாகச் சிரிக்கிறார்.

""கோபம் வந்தால் நான் சுவாமி இல்லை. எதை வேணுமானாலும் கேள். தெரிந்ததைச் சொல்கிறேன். என்ன கேட்டாய்? சும்மா இருப்பவர்கள்.. அது எவ்வளவு கஷ்டம் என்பது உனக்குத் தெரியுமா? சும்மா இருப்பதே சுகம் என்றெல்லாம் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சும்மா இருப்பது என்பது புலன்கள் ஐந்தையும் ஒடுக்கி யோகத்தில் இருப்பது. அது சுவாமி என்கிறாயே, என்னால் கூட ஆகாத காரியம். உடம்பு வேண்டுமானால் சும்மா இருக்கலாம். ஆனால் மனசு அது சும்மாவே இருக்காது. கனவில் கூடக் கண்டதையெல்லாம் காட்டி மிரட்டிக் கொண்டிருக்கும். அதை அடக்கிக் கட்டிப் போடுகிறவன்தான் ஞானி. வெறும் காவி, காஷாயம், தும்பை வெண்மை ஆடை - இவற்றை அணிந்து கொள்வதால் மட்டும் சும்மா இருந்து ஞானம் பெற முடியாது''

சுவாமிகளுக்கு இன்றைக்கு ஒரு மாதிரியான வேகம் சுரந்துவிட்டது. பேசத் தொடங்கிவிட்டால் அது நீண்டுகொண்டே போகும்.

பேச்சு எங்கேயோ போகிறதே என்று நினைத்து நான் தயங்கியதை சுவாமி தெரிந்து கொண்டிருக்கவேண்டும்.

""என்ன விழிக்கிறாய்? இந்தக் கிழத்திடம் வந்து மாட்டிக்கொண்டோமே என்றுதானே நினைக்கிறாய்? எனக்கும் பொழுது போக வேண்டாமா? இன்றைக்கு நீ அகப்பட்டாய். இல்லாவிட்டால் இன்னொருவன் கண்டிப்பாக மாட்டுவான்தான். அதுதான் எங்களுக்குக் கிடைக்கிற மரியாதை. நாங்கள் என்ன சொன்னாலும் அருள் வாக்காகக் கேட்டுக் கொண்டே போய், அந்தண்டை போனதும் துண்டோடு சேர்த்து உதறிவிட்டுப் போய்விடுவீர்கள். அப்படித்தானே?''

இப்போது என்னுடைய முறை. மழுப்பலாகச் சிரித்து வைக்கிறேன்.

""அப்படியெல்லாம் இல்லை சுவாமி. சோம்பேறிகளுக்குச் சோறு போடுகிறீர்களே என்று கேட்கப் போய் பேச்சு எங்கேயோ போய்விட்டது. அதுதான்''

""எங்கேயும் போய்விடவில்லை. சும்மா இருப்பதைப் பற்றித்தானே சொன்னேன்? இவர்கள் யாரும் சும்மா இருக்கிறவர்களில்லை. இங்கே நாம் அன்னதானம் பண்ணுகிறோம் என்றால் மெனக்கெட்டு இவ்வளவு தூரம் நடந்து வருகிறார்களே? நடக்க முடியாதவர்கள், வயதானவர்கள் என்றால் ஒருவன் தள்ளு வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டாவது வருகிறானே? அப்படி வந்தால்தானே ஏதாவது கிடைக்கும்? அது உழைப்பில் சேர்த்தி இல்லையா?

இன்னொன்று.. இவர்களுக்கெல்லாம் நானோ மற்றவர்களோ, யாரும் சாப்பாடு போடுவதில்லை. இறைவன் தருகிறான். புழு பூச்சி முதலான சகல ஜீவராசிகளுக்கும் அவன்தான் தருகிறான். அதை எங்கள் வழியாகத் தருகிறான் என்று வைத்துக் கொள். அன்றன்றைக்கு அவனுக்கு என்று ஏற்பட்ட உணவு அது. அதைத்

தருகிற பாக்யம் எனக்குக் கிடைத்திருக்கிறது. இன்னும் ஏதோ கேட்டாயே...? சோம்பேறித்தனம், உழைக்காமல் சாப்பிடலாமா என்றெல்லாம். நெஞ்சில் கைவைத்துச் சொல். உங்களில் எத்தனை சதவிகிதம்பேர் கடுமையாக உழைத்து, நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துச் சம்பாதித்துச் சாப்பிடுகிறீர்கள். அடுத்தவன் உழைப்பில் குளிர் காய்கிறவர்கள் எத்தனை சதவிகிதம் பேர்?''

என்னிடம் பதிலில்லை. அவரே தொடர்ந்தார்.

""உன்னை மாதிரிச் சில பைத்தியங்கள்தான், தர்மம் நியாயம் என்றெல்லாம் எதையெதையோ நம்பிக் கொண்டு ஓடி ஓடி உழைக்கிறீர்கள். தர்மம், நியாயம், சத்தியம் என்கிற வார்த்தைகளின் உண்மையான பொருள் எல்லாம் இப்போது மாறிப் போய்விட்டது தெரியுமா? குறைந்தது உங்கள் காந்தி, அந்த நாற்பத்தெட்டோடு அது போயே போய்விட்டது. கிடக்கட்டும். சாமியாருக்கு எதற்கு அரசியல்? என்பாய். அது உன்பாடு. உன் தேசத்தின் பாடு''

திருவண்ணாமலையில் எத்தனையோ சுவாமிகள். இவர் ஒரு வித்தியாசமான ரகம். சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியும். உலகம் முழுவதும் சுற்றிச் சுற்றி வருகிற ஒற்றை ஆள். படை பட்டாளம் எதுவும் வைத்துக் கொள்ளாமல், தான் உண்டு, தன்னுடைய வேலைகள் உண்டு என்று இயங்கிக் கொண்டிருக்கிறவர். ஊரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினப்படி அன்னதானம் தவறாமல் நடைபெற வலுவான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். ஒரு நண்பர் மூலம் சுவாமிகளின் அறிமுகம் கிடைத்தது. பந்தா எதுவும் இல்லாமல் ஒரு சிநேகிதனைப் போல் பழகுகிறவர் என்பதால் இவர் மீது ஒரு ஈடுபாடு ஏற்பட்டது. உலகம் முழுவதும் உள்ள அன்பர்கள் தருகிற பணத்தில் அன்னதானம், கல்விக்கு உதவுவது, கல்யாணத்துக்கு உதவுவுது, மருத்துவ சேவை என்று செலவு செய்கிறவர்.

""காலையிலே எட்டு மணிக்கு இங்கே வந்து பார்'' என்று சொல்லிவிட்டார். தங்கியிருந்த விடுதியிலிருந்து அழைத்துப் போக ஏழரை மணிக்கே வண்டியும் வந்துவிட்டது. இலேசான தூறல். அதையும் சுகமாக அனுபவித்துக்கொண்டு, சுவாமியின் குடிலுக்கு முன்னால் ஆட்கள் வரிசை கட்டியிருந்தார்கள், ஆண்களும் பெண்களுமாய். பக்கத்தில் அவருடைய உயரத்தில் பாதிக்கு மேலாய் ஒரு கறுப்பு நாய் அவருடைய தோழன். வழக்கமான புன்னகையோடு வரவேற்றார்.

""என்ன, பயப்படுகிறாயா?'' என்று கேட்டவாறே அந்தத் தோழனின் கழுத்துப் பட்டையை இறுக்கிப் பிடித்துக்கொண்டார். நுழைவாயில் அருகிலேயே இருந்தது பிரத்யேகமான சமையல் கூடம். கமகமவென்று சாம்பாரின் மணம் காற்றில் மிதந்து வந்தது. "ம்ம்ம்...' என்று மூச்சை உள்ளே இழுத்து மணம் நுகர்ந்தவாறே வாசல் வரிசைக்காரர்களைப் பார்த்து உற்சாகமாகச் சொன்னார்.

""இன்னிக்கி வெங்காயம், முருங்கை, முள்ளங்கி எல்லாம் போட்ட சாம்பார்.''

அதிதிகளிடம் அத்தனை சினேகம் சுவாமிக்கு. தள்ளுவண்டிகளில் வைத்துக் கலவை சாதம் வினியோகத்துக்காகக் குடிலின் வாசலுக்குப் போனது. உழைப்பாளிகள் முண்டியடிக்காமல் அமைதியாக வரிசையில் வந்தது பார்க்க சந்தோஷமாக இருந்தது. அன்றைக்கு ஏதோ விசேஷமான நாள். பெüர்ணமியோ, கிருத்திகையோ நினைவில்லை.

ஒரு கற்றை பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து என்னிடம் தந்தார் சுவாமி.

""இன்னிக்கி பேட்டா கூட உண்டு. உன் கையாலேயே கொடு''

எனக்குப் பதில் பேசத் தோன்றவில்லை. வரிசையாக வந்தவர்களிடம் ஆளுக்கு ஒரு தாளாக எடுத்துக் கொடுத்துக் கொண்டேயிருந்தேன்.

""சுவாமி தந்தது போதுமா?'' என்கிற எண்ணம் வந்தது.

""சரியாப் போயிடும். கவலைப்படாதே. எவ்வளவு பேர் வருவாங்கன்னு எனக்குத் தெரியும். இன்னிக்கி அறுபத்து நாலு பேர்'' என்று சொல்லி மறுபடியும் சிரிப்பு. இன்றைய பேட்டாவாவது நம்முடைய கணக்காக இருக்கட்டும் என்கிற நினைப்பில் உத்தேசமாக ஒரு தொகையை எடுத்து சுவாமியிடம் காணிக்கை மாதிரி தரலாம் என்று தோன்றியது.

அன்னதான விநியோகம் முடிந்து மெüனமாக சுவாமியுடன் குடிலுக்குள் வந்தேன். ரெயில் பிச்சைக்காரர்களுக்குக் கூடக் காசு கொடுத்து எனக்குப் பழக்கமில்லை. பிச்சை போடுவது தவறு என்கிற மனோபாவம் எப்படியோ உள்ளே ஊறியிருந்தது. வசதியில்லாமலிருந்த காலத்தில் உண்டான எண்ணம். அபரிமிதமான வசதிகள் வந்த பிறகும் நீடிக்கிறது. இன்றைக்குத்தான் வாழ்க்கையிலேயே முதன் முதலாக, அதுவும் தட்சிணை மாதிரி பத்துப் பத்து ரூபாயாகத் தருகிற அனுபவம்.

""என்ன... சந்தோஷமாயிருந்ததா?'' இதற்கும் என்னிடம் பதிலில்லை. கண்களில் நீர் சுரந்தது.

""கொடுக்கிறதிலேதான் சந்தோஷம் இருக்கு. நம்மகிட்டே இருக்கான்னு யோசிக்காமக் கொடுத்துக்கிட்டே இருக்கணும். தன்னாலே அதுக்குத் தேவையான வசதி கிடைச்சுடும். ஆனால் ஒண்ணு. நான் தருகிறேன் அப்படின்னு நினைப்பு மட்டும் வரக்கூடாது. இது அவனுடைய சாப்பாடு.. இது அவனுடைய பணம். பகவான் கொடுக்கிறார். அவனுக்குக் கொடுக்கிற நாம் ஒரு கருவிதான். நம்ம கையாலே கொடுக்க வைக்கிறார். இந்த சுவாமி தந்த பணம் இன்னிக்கி உன் கையாலே அவங்களுக்குக் கிடைக்கணும்னு இருந்திருக்கு.''

வீட்டில் ராஜியின் அட்டகாசம் நினைவில் அலை மோதுகிறது. வியாழக்கிழமைகளில், அலுவலகம் போகிற அவசரத்தில், எலுமிச்சைச் சாதத்தையும், மணக்க மணக்க உருளைக் கிழங்குக் கறியையும் என் முன்னால் கொண்டு வந்து வைத்து... ""சீக்கிரம்.. சீக்கிரம்.. ஆபீசுக்கு நாழியாயிடுத்து. அஞ்சு பாக்கெட்.. சீக்கிரம் கட்டுங்கோப்பா..'' என்று அதிகாரம் பண்ணுகிற ராஜி கட்டளைக்குக் கீழ்ப்படுவதைத் தவிர என்னால் ஒன்றும் செய்ய முடிந்ததில்லை. சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருக்கிற அரசியல் வம்பை ஒரு மூலையில் கடாசிவிட்டு அவசரமாகப் பொட்டலம் கட்டியாக வேண்டும். அடுத்த அரைமணியில் அந்தப் பொட்டலமும் தண்ணீர் பாக்கெட்டும் யாருடைய பசியையோ போக்கிக் கொண்டிருக்கும். அது ராஜியின் தர்மம் இல்லை. அவள் மூலமாகக் கடவுள் தருகிற உணவு என்பது திருவண்ணாமலை சுவாமியைப் பார்த்த பிறகுதான் புரிகிறது.

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் பாரதியில் ஆழ்ந்தவன் என்று நினைத்துக் கொண்டிருந்தாலும், சுவாமியின் குடிலின் முன்னால் தான் இந்தக் கவிதை வரிகளின் பொருள் புரிகிறது. சரி வரப் புரிந்ததா? என்று சொல்ல இன்னும் முடியவில்லை.

சற்றுத் தொலைவில் தெரியும் அருணைச் சிகரத்தைப் பார்த்துக் கைகூப்புகிறேன்.

""ரொம்ப உணர்ச்சிவசப்படாதே. இன்னும் போக வேண்டிய தொலைவு நிறைய இருக்கு'' சுவாமி சிரிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com