சொந்தச் சகோதரிகள்

சொந்தச் சகோதரிகள்

கிளினிக்கில் இன்று நிறைய கூட்டம்.

கிளினிக்கில் இன்று நிறைய கூட்டம்.

ஒரு கிரீன் டீ சாப்பிடக்கூட நேரமில்லை. ""ராமதிலகம்மா வீட்டுலேர்ந்து நாலு முறை போன் பண்ணிட்டாங்க டாக்டர்'' என்று ஞாபகப்படுத்தினாள் நர்ஸ் நாகம்மாள்.

சீனியர் டாக்டர் வெங்கட்ராமன்தான் அந்த வீட்டை அறிமுகம் செய்து வைத்தார். ""இரண்டு வயதான பெண்கள் இருக்காங்க, இனிமே நீங்கதான் அவங்களுக்கு குடும்ப டாக்டர். முடியும்தானே ஜோதி?'' என்று கேட்டார். கிளினிக்குக்குப் பக்கத்துத் தெருவிலேயே அவர்கள் வீடு என்பதால் ஒப்புக் கொண்டேன்.

பத்து வருஷத்துக்கு முன்பு அறிமுகமானபோதே ராமதிலகத்துக்கு எழுபது வயதுக்கு மேல் இருக்கும். நல்ல உயரம். மிடுக்கான ஒரு தோற்றம். பேசும்போது கையை ஆட்டியபடி பேசுவார். கழுத்தில் நவரத்தின முகப்பும், கையில் கெம்ப்பு வளையலும் மினுங்கும். நெற்றியில் நீண்ட திருச்சூரணம் தீட்டியிருப்பார்.

""ரண்டி டாக்டரம்மா'' என்று வாய் நிறைய வரவேற்பார். யுகாதி அன்று வரவழைத்து வெற்றிலை, பாக்கு, புடவை சகிதம் மரியாதை செய்வார்.

அந்த வீடே பழமை பேசியது. சங்கு சக்கர முகப்பு தாங்கிய பெரிய நிலைவாசல் படி.. திசைக்கு ஒன்றாக ஆந்திர மரப்பதுமைகள். கலம்காரி திரைச்சீலைகள். நாலைந்து வேலை ஆட்கள்.

ராமதிலகத்தை விட அவர் தங்கை ராகவாவுக்குத்தான் அடிக்கடி சிகிச்சை தேவைப்பட்டது. பலவீனமான மெல்லிய தோற்றம். முடக்குவாதத்தால் அவதிப்பட்டார்.

""அது என்ன பெயர் ராகவான்னு?''

"" எங்க நாயனாகாருவுக்கு ராமாயணத்துல ரொம்ப ஈடுபாடு. ஹரிகதை சொல்லுவாரு. நாங்க மூணு பொண்ணுங்க. மூத்தவ ராமாமிர்தம், நான் இரண்டாவது ராமதிலகம், இவ ராகவப்ரியம்.''

மூத்த அக்கா ராஜமுந்திரியில இருக்காங்களாம். அவங்களுக்கு மட்டும் ரெண்டு புள்ளைகளாம். ராமதிலகம்மாவுக்கு குழந்தைங்க இல்லையாம் என்று உபரித் தகவல்களைத் தந்தாள் நர்ஸ் நாகம்மாள். நான் உள்ளே பேஷண்டைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது இவள் வெளியே வேலை ஆட்களுடன் பேசி விவரம் சேகரித்துக் கொண்டிருப்பாளோ?

""எங்க ராகவாவுக்கு தெருவடைத்து பந்தல் போட்டு கல்யாண ஏற்பாடு செய்தாரு எங்க நாயனாகாரு. வர்ற வழியில கோதாவரியில் வெள்ளம், மாப்பிள்ளை குடும்பமே மூழ்கிப் போய் கல்யாணம் நின்னுபோச்சு. இப்படி ஆன பிறகு கிராமத்துல ஒரு பொண்ணு வாழ்ந்திட முடியுமா? அப்பா போன பிறகு நான்தான் அவளுக்கு ஆதரவு'' ராமதிலகம் சொல்லிக் கொண்டிருந்தபோதே சங்கடத்துடன் எழுந்து உள்ளே போனார் ராகவா.

""என்னைவிட பத்துவயசு சின்னவ டாக்டர். சின்ன வயசுல என் இடுப்புல தூக்கி

வச்சுகிட்டு அலைவேன். அவ வாழ்க்கை இப்படி ஆயிட்டுதேன்னு நினைச்சா ஆறமாட்டேங்குது. அடிக்கடி சோர்ந்து போயிடறா. உடம்பு மேல அக்கறை இல்லை'' புலம்பலுக்கு இடையில் தன்னை நம்பி ஒரு ஜீவன் இருக்கிறது என்ற பெருமிதமும் அவ்வப்போது பேச்சில் தொனித்தது.

""உங்களை மாதிரி அன்பும் அக்கறையுமா ஒரு அக்கா கிடைச்சது அவங்க அதிர்ஷ்டம்தான்'' என்று சொன்னதும் முகம் பூரித்தார் ராமதிலகம்.

தொன்னைக்கு நெய் ஆதாரமா அல்லது நெய்க்கு தொன்னை ஆதாரமா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ராமதிலகத்தின் வாழ்க்கையில் இருந்த வெறுமையை ராகவாவின் இருப்பு ஓரளவு ஈடுசெய்வதை என்னால் உணர முடிந்தது. அதன் வெளிப்பாடுதான் எப்போதும் ராகவா குறித்த பேச்சு, கவலை, கவனிப்பு, சிகிச்சை எல்லாமே.

இருவரில் ராகவா ஆழமானவர். சட்டென்று வார்த்தைகளை விடமாட்டார். தன் நிலைமையை அனுசரித்து எச்சரிக்கையுடன் நடந்துகொள்வார். ""கொஞ்சம் பேரீச்சம்பழம் சாப்பிடலாமே. இரவு பால் சாப்பிட்டாலும் நல்லது'' என்று ஆலோசனை சொன்னால் ""அக்கா கிட்ட சொல்றேன் டாக்டர்'' என்றுதான் பதில் வரும். எதிலும் அக்கா எடுப்பதுதான் முடிவு போலும்.

ஆறு மாதத்துக்கு முன்பு ஒருநாள் கீழே விழுந்தார் ராமதிலகம். இடுப்பு எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை நடந்தது. பிறகு மீண்டும் விழுந்தார். மறுபடியும் அறுவை சிகிச்சை. சிடுசிடுத்த முகமும் எரிச்சலுமாக மாறிப் போனார். படுத்த படுக்கை ஆகிப்போனதால் சுவாசக்கோளாறும் சேர்ந்து கொண்டது. அடிக்கடி நினைவு தப்பியது. பேச்சும் குறைந்தது.

போனவாரம் வந்திருந்த போது ராகவா கலங்கிய கண்களுடன் முதன் முதலாக மனம் திறந்தார்.

""என்னவோ தெரியல டாக்டர், அக்கா வேலை ஆளுங்க கிட்ட கூட எப்பவாது பேசறாங்க, என்கிட்ட மட்டும் முகம் கொடுத்து பேச மாட்டேங்கறாங்க.''

""அவங்க பழைய சுவாதீனத்துல இருக்கறதா எனக்கு தெரியல. அதனால இதையெல்லாம் பெரிசு படுத்தாதீங்க ராகவா''

லஞ்ச் சாப்பிட்டுவிட்டு கிளினிக்கிலிருந்து ராமதிலகத்தைப் பார்க்கப் போனேன். கட்டிலில் ஒடுங்கிக் கிடந்தார்.

மெல்ல தோளைத் தட்டி அழைத்தபோது பளீரென்று ஒரு கணம் கண்கள் விரிந்தது.

""என்ன செய்யுது உங்களுக்கு?'' என்ற என் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. சுற்றிலும் ஒருமுறை எல்லோர் மீதும் பதிந்தது பார்வை. அறையின் ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்த ராகவாவின் மீது ஒரு கணம் நிலைத்தது. பிறகு முகத்தை வெடுக்கென்று மறுபுறம் திருப்பிக் கொண்டார்.

ராமதிலகத்தின் குணாதிசயம் பற்றி ராகவா குறைபட்டுக் கொண்டது உண்மைதான் என்று ஊர்ஜிதமாயிற்று. அப்படியானால் என்ன காரணமாயிருக்கும்?

நர்ஸ் நாகம்மாளைக் கேட்டால் பளிச்சென்று ஒரு எளிமையான காரணத்தை சொல்லிவிடுவாள்.

""அது ஒண்ணுமில்லை டாக்டர், அந்த அம்மாவுக்குப் பொறாமை. இவங்கதான் தங்கச்சிய ஆதரிக்கறதா பெருமைப்பட்டுகிட்டிருந்தாங்க. இப்ப நிலைமை தலைகீழா ஆயிருச்சில்ல. அதை அவங்களால தாங்க முடியல. அதனாலதான் ஆத்திரப்படறாங்க''

இப்படி ஏதாவது சொல்லுவாளாயிருக்கும் அவள் கூற்றில் சில சமயம் உண்மையும் இருக்கும்.

என்னுடைய அனுபவத்தில் மரணப் படுக்கையில் கிடக்கும் சில கணவர்கள் மனைவி மீது அதீதமாகக் கோபப்படுவதை பார்த்திருக்கிறேன். மனித மனதின் எத்தனையோ புதிர்களில் இதுவும் ஒன்று. கரும்புள்ளிகளை தன்னுள் ஒளித்து வைத்துக் கொண்டே வெளிச்சக் கீற்றுபோல் தோற்றம் காட்டும் ஜாலப் பிறவிகள்.

வெளியில் வந்து ராகவாவின் கையைப் பற்றிக் கொண்டேன்.

""உங்கள் மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். உங்க அக்கா இன்னும் அதிக நாள் இருக்க வாய்ப்பில்லை'' என்றேன்.

""அப்படி சொல்லாதீங்க டாக்டர். இரவில் பக்கத்து ரூமில் தனியாக படுத்திருக்கும் எனக்கு அக்கா இழுத்து இழுத்து மூச்சுவிடும் சத்தமும், இருமல் சத்தமும்தான் ஒரு துணை. அதுவும் அடங்கிடுச்சுனா என்னால தாங்கமுடியாது''என்று குலுங்கினார்.

அடுத்த சில வாரங்களில் ராமதிலகம் இறந்துபோனார். அவருடைய கணவர் வழி உறவினர்கள் ராகவாவை அங்கேயே தங்கிக் கொள்ளச் சொன்னார்களாம். அவர் மறுத்துவிட்டாராம். முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும்படி கேட்டுக் கொண்டாராம். நாகம்மாள் அவ்வப்போது தகவல் தந்து கொண்டிருந்தாள்.

போவதற்கு முன்பு என்னிடம் சொல்லிக் கொள்ள கிளினிக்குக்கு வந்தார். அவர் முகத்தில் எல்லையற்ற அமைதி. மழை ஓய்ந்த வானத்தின் தெளிவு.

""நீங்க எனக்கு ஆறுதலா இருந்தீங்க டாக்டர், ரொம்ப நன்றி''

""உங்க அக்காவின் இழப்பை ஒரு மாதிரி ஏத்துக்கிட்டீங்க போலிருக்கே?''

""எதுவும் முழுமையா கிடைக்கலைன்னு தெரியவரும்போது இழக்கவும் இல்லைன்னு புரிஞ்சு போயிடுதில்லையா?'' பக்குவப்பட்ட வார்த்தைகளை சாதாரணமாக உதிர்த்துவிட்டு வாசலை நோக்கி நிதானமாக நடந்தார் ராகவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com