சாதனையின் முதல் படிக்கட்டே சாதகம் தான்!

ஓயாது உழைத்தால் உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். இது பொன்மொழிஅல்ல, உழைத்தவர்கள் சொன்ன சொற்கள். பாடகர்களோ அல்லது
சாதனையின் முதல் படிக்கட்டே சாதகம் தான்!

""ஓயாது உழைத்தால் உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். இது பொன்மொழிஅல்ல, உழைத்தவர்கள் சொன்ன சொற்கள். பாடகர்களோ அல்லது இசைக் கருவியை வாசிப்பவரோ, அதில் பயிற்சி பெற வேண்டும். அதற்கு சாதகம் தான் சரியான வழி. எல்லாத் தொழிலிலும் பயிற்சி  எடுத்துக்கொண்டால், அந்தத் தொழில் நமக்கு சுலபமாகி விடும். 8 மணிநேரம் பயிற்சி செய் என்று சொன்னது என் தந்தை தான்'' என்கிறார் வீணை சிட்டிபாபுவின் மகன் சுந்தர் சி. பாபு.

""என் பெற்றோருக்கு மூன்று ஆண் குழந்தைகள். அதில் நான்தான் கடைக்குட்டி. நான் கடைசியாகப் பிறந்ததனால் என்னால் அவருடன் அதிகமாக வெளியில் செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை.  அவர் சாதனையாளராக உருவாக, அவரது ஆரம்ப காலத்தில் 16 மணிநேரம் அவர் சாதகம் செய்திருக்கிறார் என்று அவர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். இளைஞர்கள் இப்படி செய்யமாட்டார்கள் என உணர்ந்து தானோ என்னவோ என்னை வீணை வாசிக்க என் தந்தை விடவேயில்லை. நான் இசையைக் கற்றுக் கொள்ள விரும்பும் போதெல்லாம் வேண்டாம் என்று சொல்லாமல், பேச்சை  மாற்றி விடுவார். பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே நான் கீ போர்டு வாசிக்க ஆரம்பித்தேன். பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் இருந்தார்.  ஒருமுறை இவர்அமெரிக்கா செல்ல வேண்டி வந்தது. அமெரிக்கா செல்லும் முன்பு, அவரிடம் நான் ஒரு கீ போர்டு வாங்கி வரச் சொல்லி, அதன் பெயரையும் எழுதிக் கொடுத்தேன். நன்றாக நினைவில் வைத்துக் கொண்டு அமெரிக்காவில் கீ போர்டு வாங்க,  இசை கருவி விற்கும் கடையில் நுழைந்து, நான் எழுதித் தந்த சீட்டை காண்பித்துள்ளார். ""இதை யார் வாசிக்க போகிறார்கள்?'' என்று அந்த கடைக்காரர் கேட்க, இவர் ""ஏன்?'' என்று கேட்க, ""இந்தக் கருவியை ஒரு பெரிய இசைக் கலைஞன் தான் வாசிக்க முடியும். அதனால் தான் கேட்டேன்'', என்று சொல்ல, என் தந்தை பெருமையாக, ""என் மகன் தான்'' என்று சொல்லி விலையைக் கேட்க, அன்றைய நிலையிலேயே அது ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வந்தது. பையன் விரும்புகிறான் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் வாங்கி வந்தார்.

 எனது பள்ளிப் படிப்பை நான் முடித்தவுடன், அடுத்தது என்ன என்று கூடக் கேட்காமல், ""கல்லூரிக்குப் போகாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் கல்லூரிக்குப் போவது போல் தினமும் 8 மணிநேரம் இந்த கீ போர்டைக் கற்றுக் கொள்'' என்றார். நானும் அவர் விரும்பியது போலவே காலை 10 மணியிலிருந்து மாலை  ஐந்து மணிவரை கீ போர்டும் கையுமாகவே வாழ்ந்தேன். அன்று செய்த சாதகம் தான் இன்றும் எனக்குக் கை கொடுக்கிறது.

 அப்பாவிற்கு உடல் நிலை ஒரு முறை சரியில்லாமல் போக, ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டியதாகி விட்டது. திடீர் என்று நடந்ததால் கையில் அன்று பார்த்து பணம் இல்லை. நான் உடனே வீட்டிற்குச் சென்று என்னிடம் இருந்த பணத்தை எடுத்து வந்து தந்தேன். அப்பாவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ""உன்னிடம் ஏது பணம்?'' என்று கேட்க, நான் விளம்பரப் படங்களில் வேலை செய்தபோது பெற்ற பணத்தை சேர்த்து வைத்து கொடுத்தேன் என்று சொன்னேன். ""உன் செலவிற்கு எடுத்துக் கொள்ளவில்லையா?'' என்று கேட்டபோது, ""நீங்கள் என் தேவைகளை எல்லாம் கவனிக்கும் போது, எனக்கு என்ன செலவு?'' என்று நான் சொல்ல, மிகவும் சந்தோசப்பட்டார். அன்றிலிருந்து நான் வாங்கிய எல்லாமே என் சம்பாத்தியத்தில்தான். என் அப்பா வீணை சிட்டிபாபுவின் இசை என்றால் பலரும் மயங்குவார்கள். அதில் பல வி.ஐ.பி.கள் அடக்கம். அதில் ஒருவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இன்றைய முதல்வர் ஜெயலலிதா.  இன்று நான் இசைஅமைத்து தயாரித்து வெளிவரப் போகும் படம் "அட்டி'. இதன் இசை வெளியீட்டை என் தந்தையார் வீணை சிட்டிபாபு இறந்த பிப்ரவரி 9 ஆம் தேதி நடத்தினோம். சென்சார் சான்றிதழ் கிடைத்தது ஏப்ரல் 5. இது என் தாயார் இறந்த தேதி. எனது தாயார் பிறந்த தேதி மே -25, அன்றுதான் முதல் விளம்பரம் அளித்தோம். இப்படி எல்லாமே அதுவாக நடை பெறுகிறது'' என்றார் சுந்தர் சி.பாபு. கூடிய விரைவில் இவரும் விஜய் ஆண்டனி, ஜி.வி. பிரகாஷ் குமார் வரிசையில் நடிகராக மாறப் போகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com