அற்புதமான ஆசான்! ராணி மைந்தன்

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் தினந்தோறும் அவரை நேரில் சந்தித்து உரையாடவோ அல்லது தொலைபேசி மூலம் பேசவோ எனக்குக் கிடைத்த வாய்ப்பு என் வாழ்க்கையில்
அற்புதமான ஆசான்! ராணி மைந்தன்

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் தினந்தோறும் அவரை நேரில் சந்தித்து உரையாடவோ அல்லது தொலைபேசி மூலம் பேசவோ எனக்குக் கிடைத்த வாய்ப்பு என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த வரம்.
 அவர் எனக்குக் காட்டிய முகங்கள் பல.
 எடிட்டராக, இசை ரசிகராக, பயணப் பிரியராக, வித்தியாசமான சிந்தனையாளராக, கோபக்காரராக - இப்படி சாவி ஸாரை நான் பலவிதமாகப் பார்த்திருக்கிறேன்.
 ஓர் அலாதியான எடிட்டர் அவர். மெனக்கெட்டு நான்கு பக்கங்களில் ஒரு மேட்டரை எழுதிக் கொண்டு போய் அவரிடம் கொடுப்பேன்.
 ""உட்காருங்கள்'' என்று எதிரே நாற்காலியைக் காட்டுவார்.
 என் கண்ணெதிரிலேயே என் மேட்டரின் மீது கண்களை மேய விடுவார். படித்துக்கொண்டு வரும்போதே பல வரிகளை பேனாவால் அடிப்பார். அப்படி எடிட் செய்து விட்டு மேட்டரை என்னிடம் திருப்பித் தந்து "கம்போஸிங்குக்கு அனுப்பிடுங்க' என்பார். நான் எழுதிய வரிகளைவிட அவற்றின் மீது அவர் அடித்த கோடுகள்தான் அதிகமாகப் பரவிக் கிடக்கும். அடிக்கப்பட்டவை நீங்கலாக மற்ற வரிகளைப் படித்துப் பார்த்தால் ஓர் உண்மை உறைக்கும்.
 ""இந்த மேட்டரை இவ்வளவு சுருக்கமாகத்தானே நீ எழுதியிருக்க வேண்டும்... பின் ஏன் வளவளவென்று நான்கு பக்கம்? இப்போ பார்... எவ்வளவு ட்ரிம்மாக இருக்கு...''
 இன்று ஒருவருடன் நான் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தால், அதில் எதை எதை மட்டும் எழுதினால் போதும் என்பது எனக்குத் தெரியக் காரணம், அன்று சாவி ஸார் பல வரிகளை பேனாவால் அடித்துச் செய்த எடிட்டிங்தான்.
 பத்திரிகை அலுவலகம் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்பதில் சாவி ஸாருக்கு நம்பிக்கை இருந்ததில்லை. அண்ணா நகரில் அவரது வீட்டு கார் ஷெட்டிலேயே பல மாதங்கள் சாவி அலுவலகம் இயங்கியதுண்டு. ஆனாலும் கலகலப்புக்குக் குறைவிருக்காது.
 ஒரு நாற்காலியில் கே.வைத்தியநாதன் (தினமணியின் இன்றைய ஆசிரியர்), இன்னொன்றில் அபர்ணா நாயுடு (சி.ஆர்.கண்ணன்), ஒரு பக்கம் லே அவுட் ஆர்ட்டிஸ்ட் மோகன், இன்னொரு பக்கம் லெட்டரிங் ஆர்ட்டிஸ்ட் ராஜேந்திரன், கார்ட்டூனிஸ்ட் ஹரன், ரமணீயன் என்று இப்படி பல அரிய திறமைசாலிகளின் செயல்படு முறையை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.
 ஒவ்வொரு வாரமும் கேள்வி - பதில் பகுதி சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் தனி அக்கறை காட்டியவர் சாவி ஸார். ஒவ்வொரு கேள்விக்கும் சாவி ஸார் எழுதுகின்ற பதில் "பளிச்'சென அமையும்.
 சாவி அவர்கள் சிறந்ததொரு கலா ரசிகர். வீட்டில் கர்நாடக இசை நாடாக்கள் போட்டு நிறையக் கேட்பார். எம்.எஸ்.அம்மா மீது பெருமதிப்பு. மணி கிருஷ்ணசாமி, சுதாராணி ரகுபதி போன்ற பலர் இவருக்குக் குடும்ப நண்பர்கள்.
 சாவி ஸாரின் அண்ணா நகர் வீட்டில் ஒரு முறை மதுரை சோமு அவர்கள் வந்து ஹாலில் அமர்ந்து மைக் இல்லாமல் நட்பு முறையில் ஒரு மினி கச்சேரி செய்ததுண்டு.
 பயணப் பிரியர். ஒரு மூன்று மாதம் தொடர்ந்து சென்னையில் இருந்துவிட்டால், அவருக்குக் கால்கள் பரபரக்கும். எங்காவது போய் வர வேண்டும். அவர் அதிகமாகச் சென்று வந்தது அநேகமாக சிங்கப்பூராக இருக்கும். நான் அவருடன் பழகத் தொடங்கிய பிறகு அவர் மேற்கொண்ட அனைத்து வெளிநாட்டுப் பயணங்களுக்கும் என்னை தன் செலவில் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.
 ""ராணி.. இந்த டிராவலாக்கை நீங்கதான் எழுதறீங்க'' என்பார். அவரை விடவா நான் எழுதி விடப் போகிறேன்? இருந்தாலும் பயணக் கட்டுரை எழுதும் பயிற்சியை எனக்குக் கொடுக்கும் விதத்தில் அவர் அப்படிப் பல வாய்ப்புகளை எனக்குத் தந்திருக்கிறார்.
 புரட்சிகரமான சிந்தனையாளர். தன் மகள்கள் இருவருக்கும் சாவி ஸார் செய்து வைத்த மறுமணம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
 அவர் சைவம். நான் சுத்த அசைவம். அவருடன் பயணம் செய்யும்போது நான் அசைவம் சாப்பிடுவதில்லை. "போர்டிங் பாஸ்' வாங்கும்போதே ரொம்பவும் கவனமாக "வெஜ்' என்று கவுண்டரில் சொல்லிவிடுவேன். ஆனால் உணவு பரிமாறப்படும்போது எனக்குத் தரப்படுவது அசைவமாக இருக்கும். ""நான்தான் ஏர்-ஹோஸ்டஸிடம் உங்க உணவை "நான் வெஜ்'ஜாகத் தரும்படி கேட்டுக் கொண்டேன். எனக்காக ஏன் உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்?'' என்று கேட்பார்.
 ஜாதி மத வேறுபாடுகளில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாதவராகவே சாவி ஸார் வாழ்ந்தார். வெளிநாடுகளில் அவருக்கு இஸ்லாமிய நண்பர்கள்தான் அதிகம். சிங்கப்பூரில் யாகூப், முஸ்தபா, ஹாங்காங்கில் அயூப், ரபியுதீன், பாங்காக்கில் இலியாஸ் என்று பலர்.
 சிங்கப்பூரில் எப்போதும் யாகூப் வீட்டில்தான் தங்குவார். யாகூப் அங்கே ஒரு வெற்றிகரமான மணி சேஞ்சர். காலையில் கடைக்குக் கிளம்பும்போது வீட்டுச்சாவியை என்னிடம் கொடுத்துவிடுவார். சாவி ஸார் ரொம்ப நன்றாகச் சமைப்பார் என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம்.
 ""ஃப்ரிஜ்ல் என்னென்ன இருக்கு பாருங்க'' என்பார்.
 பார்த்துச் சொல்வேன்.
 ""இன்னிக்கு சாம்பார், உருளைக்கிழங்கு வறுவல்.. இதுதான் மெனு.. ஆரம்பிப்போமா?'' என்றபடியே யாகூப் வீட்டுச் சமையலறையில் ஒரு நாற்காலி போட்டு அமர்ந்து கொள்வார்.
 கத்தரிக்காயை எந்த சைஸில் எப்படி வெட்ட வேண்டும், உருளைக்கிழங்கை எவ்வளவு தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும், எப்போது கேஸ் ஸ்டவ்வை "ஸிம்' பண்ண வேண்டும், எப்போது "ஹை'யில் வைக்க வேண்டும் என்பதை ஸ்டெப் பை ஸ்டெப் சொல்லிக்கொண்டே வருவார். நான் செய்துகொண்டே வருவேன்.
 சாப்பிட்டுவிட்டு நாங்கள் ஷாப்பிங்கிற்கோ, ஊர் சுற்றவோ கிளம்பி விடுவோம்.
 கோபக்காரர். அவருடன் நெருங்கிப் பழகிய வரையில் அவருக்கு இரண்டு விதமாகக் கோபம் வரும். ஒன்று தன் வீட்டாருடன். இன்னொன்று சாவி பத்திரிகை தொடர்பானவர்களுடன்.
 குடும்பத்தாருடன் அவருக்கு வரும் கோபத்திற்குப் பெரிய காரணம் இருக்காது. சின்ன விஷயமாக இருக்கும். ஆனால் கோபம் கொப்பளிக்கும். தான் குடிக்கும் சூட்டிற்கு ஏற்ப காபியை ஆற்றித் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
 இம்மியளவு அந்தச் சூடு கூடினாலோ குறைந்தாலோ,
 ""என்ன காபி தர்றே நீ?'' என்று மனைவியிடம் கோபம் காட்டுவார்.
 அலுவலக ஊழியர்கள் அல்லது சாவி பத்திரிகையுடன் தொடர்பு கொண்டவர்களிடம் கோபித்துக் கொண்டால் அதற்குக் காரணம் இருக்கவே செய்யும். "சாவி' பத்திரிகையின் பெயரை வெளியில் யாரேனும் தவறாகப் பயன்படுத்துவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து "வாங்கு வாங்கென்று' வார்த்தைகளால் வாங்கி விடுவார். தொடர்கதை எழுதுபவர் நேரத்திற்கு அத்தியாயத்தை அனுப்பவில்லை என்றால் அவர் தொலைந்தார். அவரிடம் திட்டு வாங்காத ஒருவன் நான் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.
 ""பேட்டி எடுக்கறதுங்கறது சாதாரண விஷயம் இல்ல. நெறய ஹோம் வொர்க் பண்ணனும்.. தெரியுதா?.. எப்படி பேட்டி எடுக்கணும்னு தெரிஞ்சிக்க நீங்க குமுதத்தில் பால்யூ எடுக்கற பேட்டிகளைப் படிக்கணும்.. இன்டர்வ்யூன்னா அப்படி இருக்கணும்'' என்று ஒருமுறை சற்றுக் கோபமாக என்னிடம் சொன்னது தவிர, வேறு எப்போதும் சாவி ஸார் என்னிடம் கோபித்துக் கொண்டதில்லை.
 தன் எடிட்டிங்கால், தன் ரசிப்புத் தன்மையால், தன் பயணங்களால், தன் புரட்சிகரமான சிந்தனைகளால், தன் கோபத்தால், தன்னுடன் நெருங்கியிருந்தவர்களுக்குப் பாடங்கள் பலவற்றை வகுப்பெடுக்காமல் போதித்த அற்புதமான ஆசான் சாவி ஸார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com