திரைப்பட விழாவில் பார்த்தது: இங்கே போல அங்கேயும்...!

திரைப்பட விழாவில் பார்த்தது: இங்கே போல அங்கேயும்...!

எப்போதுமே ஈரானியத் திரைப்படங்களுக்குப் பெருத்த வரவேற்பு உண்டு; அந்த வகையில் வெளியான "லண்டௌரி' என்ற இந்தப் படம் சென்னைத் திரைப்பட விழாவில் மிகப்பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

எப்போதுமே ஈரானியத் திரைப்படங்களுக்குப் பெருத்த வரவேற்பு உண்டு; அந்த வகையில் வெளியான "லண்டௌரி' என்ற இந்தப் படம் சென்னைத் திரைப்பட விழாவில் மிகப்பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. வளரும் நாடுகளில் இன்னும் பெண்களின் நிலை தாழ்ந்தே உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. இத்தகைய சூழலே இப்படத்தின் கரு. பெண்களுக்கு எதிரான திராவக வீச்சை மையமாகக் கொண்டதாகும்.
இக்கதையில் வரும் மரியம் என்ற நடுத்தர வயதுடைய பெண், சமூகச்சேவையில் நாட்டமுள்ள பத்திரிகையாளர். குறிப்பாக ஈரானின் "கண்ணுக்குக் கண்' எனப்படும் சட்டத்தை எதிர்ப்பவர். அவரை எதிர்பாராவிதமாகச் சந்திப்பவன் பாஷா என்னும் பேட்டை ரௌடி, வழித்திருடன். இவ்விருவருக்குமிடையேயான கதையே "லண்டௌரி' எனப்படும் இத்திரைப்படம்.
இக்கதைச் சூழலில் பல திரைப்படங்கள் தமிழில் வந்திருந்தாலும், இப்படத்தில் அழுத்தமாகச் சொல்லப்பட்ட விதமும், அது ரசிகர்களின் மனங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் சொல்லில் அடக்கிவிட இயலாது.
மரியம் என்ற அந்தப் பெண்ணும், பாஷா என்ற திருடனும், தங்கள் முன் ஏற்பட்ட அனுபவங்களால், தங்கள் இயல்பு நிலையிலிருந்து முரண்படுவது இப்படத்தின் போக்கை வலுப்படுத்துகிறது எனலாம். மரியம் பார்த்தவரையெல்லாம் வசீகரிக்கக் கூடிய கண்களையும் தோற்றத்தையும் கொண்டவள். எங்கெல்லாம் பழிவாங்கும் முனைப்பில் சட்டம் திருத்தப்படுகிறதோ, அங்கெல்லாம் தன் குரலை எழுப்புபவள். பாஷாவோ வழிப்பறி செய்யும் தொழிலைக் கொண்டவன். அவனும் அவன் கூட்டாளிகளாக மேலும் இரு ஆண்களும் ஒரு பெண்ணும் சேர்ந்து வழிப்பறி செய்யும் ஒரு குழு. அந்தக் குழு "லண்டௌரி' என்றழைக்கப்படுகிறது. அச்சொல்லுக்கான பொருள் கொசு.
மரியத்தை எதேச்சையாகப் பார்க்கும் பாஷா அவள்மேல் ஒருதலைக் காதல் கொள்கிறான். ஆனால் மரியம் அவன் ஒரு கொள்ளைக்காரன் என்பதை அறிந்துகொண்டு, அவனைத் தன்னுடைய பத்திரிகை ஆய்வுகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கிறாள். அந்த நெருக்கத்தைத் தவறாகப் புரிந்து கொண்ட பாஷா, அவள் தன்னை உண்மையிலேயே காதலிக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் வேளையில், மரியம், வேறொரு நபரிடம் பழகுவது தெரிய வருகிறது. காதலில் மனம் மயங்கிக் கிடக்கும் பாஷா. மரியத்திடம் மன்றாடுகிறான்; அவள் மறுக்கின்றாள். ஒரு நாள் அவள் எதிர்பார்க்காத தருணத்தில் அவள் முகத்தில் திராவகத்தை ஊற்றிவிடுகிறான். தான்தோன்றியாகக் கிடந்த பாஷா தன் வன்மையை எல்லாம் துறந்து தன் குணத்தையே மறந்து காதலில் வயப்பட்டு தன்னிலை இழப்பதே முன்கதை.
கதையின் பிற்பாதி முழுக்க முழுக்க மரியத்தை மையமாகவே வைத்து அமைகிறது. இதுவரை "கண்ணுக்குக் கண்' என்னும் சட்டத்தை எதிர்த்துவந்த மரியம், திராவகத் தாக்குதலால், தன் பார்வை இழந்து, தன் முகம் சிதைந்த நிலையில், பாஷாவைச் சட்டம் மூலம் பழிவாங்கத் துடிக்கிறாள். அவள் விருப்பத்திற்கிணங்க நீதிமன்றம் பாஷாவின் கண்களைச் சிதைக்கலாம் என்று நீதி வழங்குகிறது. பின்னர் அதன்படி நடக்கிறதா என்பதே இப்படத்தின் உச்சக்கட்டம்.
பெரும்பாலான தவறுகள் கண நேர உந்துதலால்தான் நடைபெறுகின்றன என்பதால் அவ்வகை வழக்குகளில் தவறு செய்தவர்களுக்கு அவர் திருந்தி வாழ வழிசெய்தல் வேண்டும் என்பது ஒருபக்கக் கூற்றாக இருந்தாலும், அத்தகைய செயல்களுக்குக் கடுமையான தண்டனைகளை அளித்தால் மட்டுமே அவை சமுதாயத்தில் திரும்பத் திரும்ப நடக்காது என்ற நிலை வரும் என்று வாதாடும் மறுபக்கக் கூற்றும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
படம் முழுவதும் கதையின் பாத்திரங்களும், அப்பாத்திரங்களின் நண்பர்களும் மாறி மாறி விவரித்துச் செல்வதைப்போன்ற நடை பயன்படுத்தப்படுகிறது. படம் தொடங்கி பத்து நிமிடத்துக்குள் பார்க்கும் நம்மை அக்கதைக்குள் இழுத்துக் கொள்ளும்விதமாக கதையின் போக்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் ஆழமான ஒரு கருத்தை, மிக அழுத்தமான இயக்கத்தால், நம் மனக்கண்களுக்கு முன்னர் விரித்துச் செல்லும் இயக்குநரின் முயற்சி பாராட்டத்தக்கது.
இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப் பெற்ற திரைப்
படங்களில் முதன் மூன்று தரமானவற்றுள் ஒன்றாய் இது அமையும் என்பது திண்ணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com